Sunday, June 26, 2016

யோகா கிறிஸ்தவத்துக்கு ஏற்புடையதா ?


யோகா கிறிஸ்தவத்துக்கு 

ஏற்புடையதா?  

                      - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


யோகா பற்றியச் செய்திகளும் யோகா செய்தால் உடலும் உள்ளமும் தூய்மையாகும் எனும் பிரச்சாரமும் இன்று அதிகமாகப் பரவி, பல கிறிஸ்தவர்கள்  கூட அதில் இழுப்புண்டு போயினர். பலரும் இதனால் ஏமாற்றப்பட்டுத் தங்கள் குழந்தைகளை யோகா வகுப்புகளுக்கு அனுப்பும் நிலையும் உள்ளது. 

யோகா செய்வதால்  மனிதனது உடலும் மனமும் அவர்கள் கூறுவது போல் தூய்மை அடையுமானால்  இன்று யோகா செய்யும் பெரிய பெரிய அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நடிகர் நடிகைகள் இவர்களெல்லாம் தூயவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? லஞ்ச ஊழல்கள் அவர்களிடம் காணப்படக்கூடாதே ? யோகா செய்யும் சினிமா நடிகர் நடிகைகளும் பெரிய பெரிய தொழில் அதிபர்களும் தங்களது அசுத்த வாழ்க்கையை விட்டு வெளியே வந்திருக்க வேண்டுமே? இன்று இவை எதுவுமே நடக்கவில்லை. இதுவே அவர்கள் கூறுவது சரியல்ல என்பதை மெய்ப்பிக்கின்றது.

பொதுவாக அனைத்து மதங்களும் உடல் தூய்மைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. கடவுளை வழிபட உடல் தூய்மையாக இருக்கவேண்டும் என்று அவை கருதுகின்றன. கடவுளை வழிபடும் முன் குளிக்கவேண்டும், பாதங்களைக் கழுவ வேண்டும் என்றும் மேலும் பல்வேறு உடல் சார்ந்த சடங்கு ஆச்சாரங்களையும்  பல மதங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் கிறிஸ்தவம் உடல் தூய்மைக்கல்ல மனத்துக்கே முக்கியத்தும் அளிக்கின்றது.

அன்று பரிசேயர்களும் இப்படிப் பல சடங்காச்சாரங்களைக் கடைபிடித்து வந்தனர். அவர்களைப் பார்த்துதான் இயேசு கிறிஸ்து வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகள் என்றார். அவர்கள் உடல்சார்ந்த சுத்தத்தை வலியுறுத்தினரேதவிர தேவனுக்கேற்ற உள்ள பரிசுத்தத்தைக் கடைபிடிக்கவில்லை. கல்லறையானது வெளியே அழகுடன் திகழ்ந்தாலும் உள்ளே அழுகிய உடலின் பாகங்கள் தான் இருக்கும். எனவே உடல் பரிசுத்தத்தைவிட மன சுத்தமே முக்கியம்.

மேலும் இயேசுகிறிஸ்து கூறினார், "மனிதனது உள்ளிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில் மனிதனது இருதயத்தினுள்ளிருந்து  பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசையும், துஷ்டத்தனங்களும், கபடும்,   காமவிகாரங்களும், வன்கண்ணும், தூஷணமும்,  பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும்.   பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும்" (மாற்கு - 7:20-23)

இன்று யோகா உள்ளத்தைத்  தூய்மைப்படுத்தும் எனக் கூறி அதற்கு ஆதரவு கருத்துக் கூறி வரும் தினசரி யோகா செய்யும் எத்தனைபேரிடம் மேற்கூறிய குணங்கள் இல்லாமலிருக்கிறது ? கிறிஸ்தவர்கள் சிந்திக்கவேண்டும்.

மேலும் யோகாவை ஆதரிக்கும் பல கிறிஸ்தவர்கள் இது சாதாரண உடற்பயிற்சி போன்றதுதான். எனவே யோகா  செய்வது தவறில்லை என எண்ணிக்கொள்கின்றனர். வெறும் உடற்பயிற்சி  என்றால் செய்வதில் தவறில்லை. ஆனால் யோகா கிறிஸ்தவ  மத நம்பிக்கையைப்  புறக்கணிப்பது. கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டு நம்மைப் பிரிப்பது.

வேத அடிப்படையில், ஒருவர் மறுபிறப்படைந்து தேவனுடைய ஆவியால் நடத்தப்படும் அனுபவம் பெறும்போதே மேற்படி பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியும். உள்ளத் தூய்மை மறுபடி பிறந்த ஒருவரிடம்தான் இருக்க முடியுமே தவிர குறுக்கு வழியில் அதனைப் பெற முடியாது. எனவே யோகா உள்ளத்தைத்  தூய்மையாக்கும் என்பது நம்பமுடியாதது. உள்ளத்தில் அழுக்கு மூட்டையை சுமந்துகொண்டு யோகா என்னை தூய்மையாக்கிவிட்டது என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் -14:6) என்றார் இயேசு கிறிஸ்து. பிதாவினிடம் சேருவதே கிறிஸ்தவன் லட்சியமாக இருக்கவேண்டும். அதற்கு வழியாக கிறிஸ்து இருக்கிறார். யோகா போன்ற செயல்கள் மேலெழுந்தவாரியாக சில செயல்களைச் செய்வதன் மூலம் கடவுளை அடையலாம் என கூறுவதாகும். அதாவது வாயிலை விட்டு சுவரேறிக் குதித்து உள்ளே நுழைய முயலும்  திருட்டு வழியாகும். "ஆட்டுத் தொழுவத்தினுள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்" (யோவான் - 10:1) என்றார் இயேசு கிறிஸ்து.

ஆதியில் இருந்த பாம்பு 

யோகாவின்   அடிப்படை பாம்பு உரு. யோகாவின் பல முத்திரைகள் பாம்பின் அடிப்படையானவை. ஆதியில் ஏவாளை வஞ்சித்த பாம்புதான் அது. எத்தனை சரியாக வேதம் கூறுவது இன்றும் பொருந்துகிறது பாருங்கள். இன்று பாம்பின் தந்திரம்  யோகா வழியாக கிறிஸ்தவர்களை வஞ்சிக்கப் பார்க்கின்றது.

ஏதேனில் இருந்த நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் என்று ஆதாம் ஏவாளை விலக்கியிருந்தார் தேவன். அதனைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என எச்சரிக்கையும் செய்திருந்தார். (ஆதியாகமம்    - 2:17) ஆனால் பாம்பு ஏவாளிடம், "நீங்கள் சாகவே சாவதில்லை நீங்கள் இதை புசிக்கும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள்" என்றும் கூறி ஏமாற்றியது . (ஆதியாகமம்    - 3:4,5)

இன்று யோகா செய்வதால் உள்ளம் தூய்மை அடையும் என்று கூறுவது ஆதி பாம்பின் தந்திரமே. அது உள்ளம் தூய்மை அடைய தேவன் குறித்துள்ள வழியை விட்டு மக்களை திசைதிருப்புவதாகும். அதனை பின்பற்றி உள்ளத்  தூய்மை அடைய முயல்வது   ஆதி பெற்றோர் அடைந்த ஏமாற்றத்தையே நமக்கும் கொண்டு வரும்.

நல்லவர்கள் உலகில் எங்கும் உள்ளனர். எல்லா மதத்திலும் உள்ளனர். ஆனால் நல்ல  செயல்கள் செய்வதால் மட்டும் ஒருவர் தேவனுக்குமுன்  நல்லவராக முடியாது.  நாம் உலகினில் பார்க்கும் பல மோசமான மனிதர்களிடம் கூட நல்ல குணங்களும் பல உண்டு. எனவே நல்ல செயல்கள் செய்யும் முன்பே ஒருவர் நல்லவராக இருக்க வேண்டியது அவசியம். பல மோசமான அரசியல் தலைவர்கள் நல்ல செயல்கள் செய்யவில்லயா? அவர்கள் அனைவரும் பரிசுத்தரா? நல்லவர்களா?

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதிமொழிகள் - 28; 13) யோகா பாவங்களை கழுவவும் முடியாது பாவ கண்ணியிலிருந்து நம்மை விடுவிக்கவும் முடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தமே நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க முடியும். ஏனெனில் அவரே பாவமில்லாமல் பிறந்து பாவமில்லாமல் வாழ்ந்தவர். தனது இரத்தத்தால் பாவ மன்னிப்பை உண்டாக்கியவர்.  ஆம் "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்" (1 யோவான் - 1:7)

எனவே அன்பானவர்களே, உண்மையாகவே நீங்கள் ஒரு விடுதலை வாழ்வை விரும்புவீர்களென்றால் இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் வாருங்கள். குறுக்கு வழி சறுக்கு  வழி. பாம்பின் வழி நமக்கு வேண்டாம். பாம்பின் தலையை நசுக்கிய ஜெய கிறிஸ்துவின் வழியே நமக்கு வழி. 

No comments: