Sunday, May 14, 2017

இயேசு கிறிஸ்துவின் தலைத் துணி


இயேசு கிறிஸ்துவின் தலைத் துணி


இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டபோது அவரது தலையில் கட்டப்பட்டிருந்தத் துணி பற்றி சமீபத்தில் ஒரு உண்மையை அறிய முடிந்தது. அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.   

இயேசு கிறிஸ்துவை யூதர்களின் முறைப்படி சுகந்த வர்க்கங்களுடன் துணியில் சுற்றிக்கட்டி அடக்கம் செய்தனர். அவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததை யோவான் நற்செய்தி தெளிவாக  விளக்குகிறது. மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து பார்த்து கல்லறை வாயிலை மூடியிருந்த கல் புரட்டப்பட்டடிருந்ததைக் கண்டு ஓடி சீடர்களிடம் தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து சம்பவம் பின்வருமாறு வேதாகமத்தில் விளக்கப்பட்டுள்ளது.

"அப்போது   பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போகும்படி புறப்பட்டு இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப் பார்க்கிலும் மற்றச் சீடன் துரிதமாய் ஓடி, முந்தி கல்லறைக்கு வந்து அதற்குள்ளே குனிந்து பார்த்து துணிகள் கிடந்ததைக் கண்டான். ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.  சீமோன் பேதுரு அவனுக்குப் பின் வந்து கல்லறைக்குள்ளே பிரவேசித்து துணிகள் கிடக்கிறதையும் அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி  மற்ற  துணிகளுடன் இராமல் தனியே ஒரு இடத்தில சுற்றி வைத்திருக்கிறதையும் கண்டான்." (யோவான் - 20:3-7)

இச் செய்தி முக்கியமான ஒரு உண்மையை விளக்குவதாக வேத அறிஞர்கள் கூறுகின்றனர். 

யூத முறைமையில் தலைவன் ஒருவன் உணவு உண்ண அமரும்போது அந்த உணவு "டேபிள்" சிறப்பாக துணிகள் விரிக்கப்பட்டு உணவுகள் முறையாக பரிமாறப்பட்டிருக்கும். உணவு பரிமாறும் வேலைக்காரன் உணவுகளை ஆயத்தப்படுத்தி எடுத்து வைத்துவிட்டு அப்புறம் சென்றுவிட வேண்டும். தலைவன் உணவு உண்ணும்போது அவன் அதனை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது.  தேவை ஏற்பட்டு தலைவன் அழைத்தால்தான் அங்கு அவன் வர வேண்டும்.

உணவு உண்டத்  தலைவன் தனது கைகளையும் வாயையும் தாடியையும் துணியால் துடைத்துவிட்டு துணியை தூர எறிந்துவிட்டுச் செல்வான். அதன்பின்பு வேலைக்காரன் உள்ளே சென்று அனைத்தையும் சுத்தம்பண்ணுவான்.  சில வேளைகளில் சாப்பிடும்போது அவசரமாக தலைவன் எதற்காவது வெளியே செல்லவேண்டியிருந்தால்  துணியைத் தூர எறியாமல் அதனை மடித்து சுற்றி சாப்பிட்ட இடத்தில் தனியே வைத்துவிட்டுச் செல்வான்.  அப்படிச் செய்வது தான் மீண்டும் திரும்ப வருவேன் என்பதை வேலைக்காரனுக்கு உணர்த்துவதாகும்.   அப்படியானால் வேலைக்காரன் தலைவனுக்காகக்  காத்திருப்பான். 

ஆச்சரியமாக  இல்லையா?    வேதம் இதனால்தான் இந்தத் துணி பற்றிய விசயத்தை தெளிவாகப் பதிவுசெய்துள்ளது. ஆம் இயேசு கிறிஸ்து தான் கூறியதுபோன்றே திரும்பவும் வருவதை இந்த சுருட்டி வைக்கப்பட்ட தலைத்   துணி மூலம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறார்.

"இதோ சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது "  (வெளி  - 23:12)

"இவைகளை சாட்சியாக அறிவிக்கிறவர்; மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென் , கர்த்தராகிய இயேசுவே வாரும்"  (வெளி  - 23:20)


  
  

No comments: