தங்களை இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஆலய ஆராதனைகளுக்கும் பக்தி சார்ந்த சில செயல்பாடுகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து அதுவே கிறிஸ்தவ வாழ்வு என்று எண்ணிக்கொள்கின்றனர். இவர்கள் கிறிஸ்தவத்தை ஒரு மதமாகப் பார்க்கின்றனர் என்றுதான் கூறவேண்டும். ஒவ்வொரு மதத்திலும் ஆராதனைக்குரிய சில சட்டதிட்டங்களும் கடைபிடிக்கவேண்டிய சில சம்பிரதாயங்களும் உண்டு. பல கிறிஸ்தவர்களும் கிறித்தவத்தை மதமாகவே பார்ப்பதால் இப்படியே ஒருசில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு அவற்றைக் கடைபிடிப்பதே கிறிஸ்தவ வாழ்வு என எண்ணிக்கொண்டு செயல்படுகின்றனர்.
அரசியல் தலைவனுக்கு அவன் வரும்போது அவனைப் புகழ்ந்து ஆரவாரக் குரலெழுப்பினாலே போதும், அவன் உள்ளம் மகிழுவான். ஆனால் தேவன் உலக அரசியல் தலைவர்களைப் போன்றவரல்ல; அவர் உள்ளான மனித மனங்களைப் பார்கின்றவர். எனவே, வெற்றுப் புகழ்ச்சிக் கீதங்களும் அல்லேலூயா அலறல்களும் அவரை மகிழ்ச்சியடையச் செய்யாது.
தேவன் ஒருவரது மேம்போக்கான ஆராதனை முறைமைகளைப் பார்ப்பதில்லை. தனது வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பார். நடுங்குகிறவன் என்றால் குளிரால் நடுங்குவதுபோல நடுங்குவதல்ல, தேவனது கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டுமெனும் அச்ச உணர்வுடன் செயல்படுவது; பாவம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்போது தேவனுக்கு அஞ்சி அவற்றில் ஈடுபடாமல் இருப்பது. சின்னக் கற்பனையோ பெரிய கற்பனையோ என்று பார்க்காமல், தேவன் விரும்பாத எந்தச் செயலையும் செய்யாமல் தவிர்ப்பதையே தேவன் விரும்புகின்றார்.
சவுல் அமெலேக்கியரை எதிர்த்துப் போரிடச் சென்றான். அப்படிச் செல்லும்போது, அமெலேக்கியரை வெற்றிகொள்ளும்போது அவர்களையும் அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தேவன் சாமுவேல் தீர்க்கத்தரிசி மூலம் சவுலுக்குச் சொன்னார். ஆனால் சவுல் போரில் வெற்றி பெற்றபோது தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வில்லை. தரமான ஆடு மாடுகளை தனக்கென்று உயிரோடு வைத்துக்கொண்டு அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டான். சாமுவேல் அதுபற்றிக்கேட்டபோது சவுல், ஆடுமாடுகளில் நலமானவைகளை தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்ததாகக் கூறினான். ( 1 சாமுவேல் 15 : 15 )
அதற்கு மறுமொழியாகவே சாமுவேல், "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." என்று கூறுகின்றார்.
கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மனிதரில் பெரும்பாலானவர்களும் இன்று இப்படியே இருக்கின்றனர். காணிக்கைகளையும், ஆலய காரியங்களையும், ஊழியங்களுக்கு, ஊழியர்களுக்கு, மிஷனரி பணிகளுக்கு அள்ளிவழங்குவதையும் தாராளமாக, பெருமையாகச் செய்கின்றனர். ஆனால் தேவனது வார்த்தை இவர்களது வாழ்வில் செயலாவதில்லை. தாழ்மை, பொறுமை, அன்பு, விட்டுக்கொடுத்தல் என்று எந்த கிறிஸ்தவ பண்புகளும் பலரிடம் இருப்பதில்லை.
தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவக் குடும்பங்களிலும்கூட இப்படிப்பட்ட நிலைமையே இருக்கின்றது. தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஊழலிலும் லஞ்சத்திலும், அடிதடி அரசியலிலும், கணவன் மனைவி சண்டையிலும் ஈடுபட்டுக்கொண்டு ஞாயிறு ஆராதனையில் உருக்கமுடன் வேண்டுதல் செய்வது, பாடுவது கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? வீட்டில் சொந்த தாய் தந்தையரைச் சரிவர கவனிக்காமல் இருக்கும் பலர் ஆலய ஆராதனையில் ஆவியில் நிறைந்து துள்ளிக் குதிக்கின்றனர்.
ஆராதனைகளையல்ல, வாழ்க்கை முறைகளிலான மாற்றத்தையே தேவன் அதிகம் விரும்புகின்றார். வாழ்க்கை மாற்றமில்லாத ஆராதனைகள் தேவனுக்கு ஏற்புடைய ஆராதனைகளல்ல. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் இவற்றைக் கண்டுகொள்வதுமில்லை, விசுவாசிகளுக்கு எடுத்துச் சொல்வதுமில்லை. காரணம் , இத்தகைய தவறுகளை எடுத்துச் சொன்னால் அவர்கள்மூலம் வரும் காணிக்கை வராமல்போய்விடும் எனும் பயம்.
"நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண்காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்...........உங்கள் சபைக் கூட்டத்தையும் நான் சகிக்கமாட்டேன்." (ஏசாயா - 1 : 12, 13 ) என்கின்றார் கர்த்தராகிய பரிசுத்தர்.
ஆனால், தேவனுக்கு வாழ்க்கை வாழ உண்மையிலேயே விரும்பும் மக்களுக்கு தேவன் அதற்கான ஆற்றலைக் கொடுக்கின்றார். ஏனெனில் மனிதன் இயற்கையிலேயே பலவீனமானவன் என்பது தேவனுக்குத் தெரியும். அப்போஸ்தலரான பவுல் இதனால்தான் தனது பலவீனங்களைக் குறித்துப் பின்வருமாறு எழுதுகின்றார்:-
"எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
எனவே, "இரட்சிக்கப்பட்டேன், இரட்சிக்கப்பட்டேன்" எனக் கூறிக்கொண்டும் அடிப்படை கிறிஸ்தவ உபதேசங்களையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டும் ஒரே இடத்தில நாம் நின்றுவிடாமல் பூரணத்தைநோக்கி நாம் கடந்து செல்ல வேண்டியது அவசியம். அந்த பூரணம்தான் பாவம் செய்யும் மன நிலையிலிருந்து நாம்மை விடுவித்து இரட்சிப்புக்கு நேராக நம்மை நடத்தும். இதனைத்தான் எபிரேய நிருபத்தில் நாம் பின்வருமாறு வாசிக்கின்றோம்:-
"ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. ( எபிரெயர் - 6 : 1, 2 )
ஆம், இரட்சிப்பு ஒருநாள் அனுபவம் என்று எண்ணி நின்ற இடத்திலேயே நின்று பாவத்தில் மரித்திடாமல் பூரணத்தை நோக்கி நமது அனுதின பயணத்தைக் தொடருவோமாக.
,
No comments:
Post a Comment