சாகப் பிறந்தவர்

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை 

சாகப் பிறந்தவர் 

- சகோ. எம்.ஜியோ பிரகாஷ்  

ந்த உலகத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுமே  வாழ்வதற்காகவே பிறக்கின்றன. அதாவது அந்தக் குழந்தை வளர்ந்து அதற்காகக் குறிக்கப்பட்டப் பணியைச் செய்து முடிக்கவே பிறக்கின்றன. இந்த உலகத்தில் சாதித்து சிறப்பாக வாழ்பவர்களை உலகமானது பொதுவாக , "அவன் வாழப் பிறந்தவண்டா.. " எனப் பெருமையாகக் கூறுவதுண்டு. ஒவொருவருக்கும் வாழ்வில் ஒரு நோக்கம் உண்டு. மருத்துவராகவேண்டும், பொறியியல் வல்லுநராகவேண்டும், பெரியத் தொழிலதிபராகவேண்டும் ...இப்படிப்  பல நோக்கங்கள்..   ஆனால் சாவதற்காகவே பிறந்த ஒரு குழந்தை உண்டு. அதன் நோக்கமே சாவுதான்.

ஆம் கிறிஸ்து இயேசு உலகினில் வந்த நோக்கமே சாவதற்குத்தான். ஆனால் இன்று  இந்தச் சத்தியம் பெரும்பாலும் மறக்கடிக்கப்பட்டுள்ளது.  பிரபல ஊழியர்கள் இன்று "இயேசு கிறிஸ்து அதிசயம் அற்புதம் செய்ய" வந்ததாக பொய்த் தோற்றத்தை மக்களிடம் பரப்பி வருகின்றனர். பல வருடங்கள் இறையியல் கல்லூரியில் படித்து குருக்களாகவும் ஆயர்களாகவும் இருக்கும் மேதைகளுக்குக்  கூட இந்தச் சத்தியத்தை மக்களுக்கு அறிவிக்கவேண்டுமென்ற ஆர்வம் இல்லை இந்தச் சத்தியம் தெரியவும் இல்லை. "எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியனின் மடியினிலே புதல்வனாயினார்" என வேத அடிப்படையற்ற ஒரு பாடலைக் கூட இவர்களால் தவறு எங்க கண்டுபிடித்து புறந்தள்ள முடியவில்லை !

அதிசயம் அற்புதம் செய்து மக்களை மயக்க மந்திரவாதி போதும் மேஜிக் நிபுணர் போதும். கிறிஸ்து உலகில் வரவேண்டிய அவசியமில்லை.

இயேசு கிறிஸ்து உலகினில் வாழ்ந்தபோதே தான் வந்த நோக்கத்தைத்  தெளிவாகக்   குறிப்பிட்டார்:- "அப்படியே மனுஷ குமாரனும் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கும்படியாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்" (மத்தேயு - 20:28). 

தேவ ஆட்டுக்குட்டி என்றே இயேசு குறிப்பிடப்படுகிறார். அதாவது தேவனுக்குப் பலியிடப்படவேண்டிய ஆடு அவர். அவரது இரத்தம் சிந்தப்படவேண்டும். அந்த இரத்தத்தால்   மனு குலத்துக்கு இரட்சிப்பு கிடைக்கவேண்டுமென்பதே தேவ திட்டம்.  கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் எழுநூற்று ஐம்பது வருடங்களுக்குமுன் ஏசாயா தீர்க்கதரிசி இதனைப் பின்வருமாறு தீர்க்கதரிசனமாக குறிப்பிடுகிறார் :-

"மெய்யாகவே அவர் நமது பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார், நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு,  நம்முடைய  அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய  அக்கிரமத்தையும் அவர்மேல் விழப் பண்ணினார்." (ஏசாயா - 53:4-6)     

இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தபோது பல வேளைகளில் இதனைத் தனது  சீடர்களுக்கு விலக்கிக் கூறினார். "அதுமுதல் இயேசு தான் எருசலேமுக்குப் போய் மூப்பராலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபாரகர்களாலும் பல பாடுகள் பட்டு கொலையுண்டு மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்  தொடங்கினார்" (மத்தேயு - 16:21)

" நான் என்  ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியால் பிதா என்னில்  அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன். அதைக்  கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு" (யோவான் - 10:17,18)

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போகக் காரணம் மனிதனது பாவமே.  இந்தப் பாவங்கள் கழுவப்பட்டு தேவனோடு ஒப்புரவாகவேண்டும். அப்போதுதான் தடை நீங்கி தேவத்  தொடர்பு ஏற்படும். பாவங்கள் இரத்தத்தினால் மட்டுமே சுத்திகரிக்கப் பட முடியும். காரணம் " இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் - 9:22)  ஏனெனில் மனிதனது உயிர் இரத்தத்தில் இருக்கிறது என வேதம் தெளிவாகக்  கூறுகின்றது.

"மாம்சத்தின்  உயிர் இரத்தத்தில் இருக்கிறது." (லேவியராகமம் -17:11)

"சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராயிருக்கிறது. இரத்தம் ஜீவனுக்குச் சமானம். ஆகையால் எந்த   மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதன் இரத்தமே"  (லேவியராகமம் -17:14)

மனிதன் பாவம் செய்யும்போது ஆத்தும மரணம் ஏற்படுகின்றது. எனவேதான் வேதம், " பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் - 6:23) எனக் கூறுகிறது. மனிதனது உயிர் இரத்தத்தில் இருப்பதால் பாவத்தால் மரணமடைந்த ஆத்துமாவை மீட்க இரத்தம் கொடுக்கப்படவேண்டும். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை.  

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவ நிவாரணத்துக்காக மனிதர்கள் ஆடு; மாடு; காளை இவற்றைப் பலியிட்டு வந்தனர். லேவியராகமத்தில் இதுகுறித்த தெளிவான விளக்கத்தை நாம் காணலாம். ஆனால் மிருகங்களின் இரத்தம் மனிதனை முற்றும் முழுவதுமாக பாவத்திலிருந்து விடுவிக்கவில்லை. எனவே ஒருதரம் பலியிட்ட மனிதன் தன்னில் பாவம் உண்டு எனும் உணர்வு தொடர்ந்து இருப்பதால் வருடம்தோறும் மீண்டும் மீண்டும் பலி செலுத்தி வந்தான். இதுகுறித்து எபிரேயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கிறோம்;

"..........வருஷம்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப் படுத்துமானால் ஆராதனைச் செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப் பட்டபின்பு  இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி   அவர்களுக்கு இல்லாதிருப்பதினால் அந்தப் பலிகளைச் செலுத்தப்படுவது நிறுத்தப்படுமல்லவா?  அப்படி நிறுத்தப் படாதபடியால் பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவு கூருதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும் காளை வெள்ளாட்டுக் கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமாட்டாதே" (எபிரேயர் - 10:1-4)

இப்படி காளை வெள்ளாட்டுக் கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமாட்டாதே போனதால் பாவமில்லாத கிறிஸ்து தனது சொந்த இரத்தினால் பாவ நிவாரணத்தை ஏற்படுத்தினார். இதனை எபிரேயர் நிருபம், " கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படி ஒரேதரம் பலியிடப்பட்டு.." (எபிரேயர் -  9:28) எனக் கூறுகிறது

மேலும் , "இயேசு கிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதனால் அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் (எபிரேயர் -  10:10)

இயேசு கிறிஸ்து உலகினில் வந்த நோக்கமே இதுதான். தனது சொந்த இரத்தத்தைச் சிந்தி  மானுக் குலத்துக்கு இரட்சிப்பை அளிக்கவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  அன்பானவர்களே, நமது பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட வேண்டும். அதற்கு நமது பாவங்களை அவரிடம் முழு மனதுடன் அறிக்கையிடவேண்டும்.  அப்படி அறிக்கையிடும் போது கிறிஸ்து நமக்குள் வருவதையும் நமது வாழ்வு மாறுவதையும் நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்துகொள்ள முடியும்.  இதுவே இரட்சிப்பின் அனுபவம் - மறுபடியும் பிறக்கும் அனுபவம். இந்த அனுபவத்தைப் பெறாமல் ஒருவன் தேவனுக்காக எதனையும் செய்யமுடியாது, தேவன் அதனை அங்கீகரிக்கவும் மாட்டார்.

யோவான் மூன்றாவது அதிகாரத்தில் நிக்கோதேமு எனும் யூத குருவைப் பற்றி பார்க்கிறோம். அவர் கிறிஸ்து தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்பதை அறிந்திருந்தார். அவர் இயேசுவிடம், "ரபீ , நீர்  தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கின்றோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய மாட்டான் என்றான் " (யோவான் - 3:2)  அவனுக்கு இயேசு கிறிஸ்து கூறிய பதிலைப் பாருங்கள் :-

" ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் " என்றார்.  (யோவான் - 3:3) அன்பானவர்களே தேவனுடைய வேத ஆகமங்களை படித்து ,  தேவனை போதித்து வாழ்ந்த ஒரு குருவுக்கு மறுபடி பிறக்க வேண்டியது அவசியமானதாக இருக்குமேயானால், நமக்கு அது எவ்வளவு அவசியம் என்று எண்ணிப்பாருங்கள்! இயேசு தேவனுடைய குமாரன் என்று வாயினால் சொன்னால் மட்டும் போதாது, மறுபடி பிறக்கவேண்டும்.  இன்று நாமும் ஆலயங்களுக்குச் செல்லலாம், தேவனுக்கென்று அரிய பல செயல்களை செய்யலாம்,  ஆனால் மறுபடி பிறந்த அனுபவம் இல்லாவிட்டால் அனைத்துமே வீண்தான்.

கிறிஸ்து உலகினில் வந்தபோது உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை. "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர்மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை" (யோவான் - 1:10) எனக் கூறுகிறது வேதம். அன்பானவர்களே இன்றும் உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை.  அப்படி அறியாததனால்தான் இன்று அவரை அதிசயம் செய்ய வந்தார், அற்புதம் செய்ய வந்தார் என மந்திரவாதியாக அல்லது ஒரு மேஜிக் நிபுணனாக பார்க்கின்றனர். இப்படி கிறிஸ்தவ தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் , ஜெபக் கூட்டங்களிலும் கிறிஸ்துவை காண்பிப்பதால் மற்ற மக்கள் கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை.

இந்தக் கிறிஸ்துமஸ் நாளில் நாம் செய்யவேண்டியது இதுதான் .. கிறிஸ்து நமது உள்ளத்தில் பிறக்க இடம் கொடுக்கவேண்டும் வெறும் வெளி ஆடம்பரங்களல்ல ..நமது உள்ளம் புதிதாக்கப்பட்டு நாம் புதுப் பிறப்படையவேண்டும். அதற்கு நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது பரிசுத்த இரத்ததால் கழுவப்பட வேண்டுவோம். அப்போது அந்த மேலான அனுபவம் நமக்கு கிடைக்கும்.

கிறிஸ்து என்ற பெயருக்கு அர்த்தமே இரட்சகர் என்பதே. "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை  நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு - 1:21)  

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது ..." (1 தீமோத்தேயு - 1:15)   

" நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் " (யோவான் - 14:6) என்றார் கிறிஸ்து. ஆமென்  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்