Monday, July 31, 2017

ஆவிக்குரிய துணுக்கு சிந்தனைகள்




ஆவிக்குரிய துணுக்கு சிந்தனைகள் 



றும்பு ஒன்று இமய மலையைப் பார்க்கச் சென்றது. அடிவாரத்தில் மலையின் மேல் நின்றுகொண்டு தன்னால் முடிந்தமட்டும் பார்த்தது. ஆனால் அதன் சிறிய கண்ணுக்கு ஒரு அங்குல தூரம்தான் பார்க்க முடிந்தது. எறும்பு சொன்னது, "எல்லோரும் உலகிலேயே பெரிய மலை இமய மலை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு மலையே இல்லை. நான் நன்றாகப் பார்த்துவிட்டேன்." இப்படித்தான் மனிதன் கடவுளை பார்ப்பதும் உள்ளது. தனது மட்டமான அறிவினைக் கொண்டு கடவுளைப் பார்க்க முயலுகிறான். ஆனால் அந்தக் கடவுள் தன்னிலும் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அவனால் காண முடிவதில்லை. மனிதன் தனது இயலாமையை தனது தகுதியின்மையை ஒப்புக்கொண்டு தன்னை அவருக்கு ஒப்புவித்தால் தேவன் அவனுக்கு வெளிப்படுவார்.


கிறிஸ்துவுக்குள் உண்மையாய் நடக்க முயன்றாலும் துன்பங்கள் ஏன் தொடர்கின்றன? எனப் பலரும் எண்ணி சோர்ந்து போவதுண்டு. சாது சுந்தர் சிங் அவர்களுக்கு கிறிஸ்து இதனைப் பின்வருமாறு வெளிப்படுத்திக் கொடுத்தார். 
கசப்பான கனிகளைத் தரும் மரம் நல்ல கனிகளைத் தரவேண்டுமானால் கசப்பான மரத்தின் கிளைகளை வெட்டிச் சரிப்படுத்தி இனிப்பான கனி தரும் மரத்தின் கிளைகளுடன் ஒட்டுப் போடவேண்டும். இப்படி ஒட்ட வைப்பதில் இரண்டு மரங்களும் வலியை அனுபவித்ததாக வேண்டும். மனிதனும் தன்னிலுள்ள கசப்பான கெட்டக் குணங்கள் மாறி ஆவிக்குரிய பரிசுத்த ஜீவனாகி கனிகளைத் தரவேண்டுமானால் கிறிஸ்து நமக்காகத் துன்பங்களை அனுபவித்ததுபோல கிறிஸ்து தரும் சிலுவையின் துன்பங்களை அனுபவிக்கவேண்டியது அவசியமாகிறது.

Wednesday, July 19, 2017

தேவனுக்கு உகந்த ஊழியராக.........


தேவனுக்கு உகந்த ஊழியராக.....

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ ஊழியர்கள் பலரது வாழ்க்கை சாட்சியற்றதாக இருக்கக் காரணங்கள்  பல உண்டு. இப்படி கிறிஸ்தவ ஊழியர்கள் இருப்பதால் இவர்களே கிறிஸ்தவத்துக்கு தடைக் கற்களாக இருக்கின்றனர். எனது இருபத்திநான்கு  கால ஆவிக்குரிய வாழ்க்கையில் பல ஊழியர்களோடு பழகியும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்த அனுபவத்திலும் பல காரியங்களை கண்டறிந்துள்ளேன்.    அதன்மூலம் ஒருவர் சிறப்பான ஊழியராக இருக்க வேண்டுமானால் அவரிடம் சில அடிப்படைக் காரியங்கள் அல்லது தகுதிகள்  இருந்தாக வேண்டும் என்பதை அனுபவம் மூலம்  அறிந்துகொண்டேன்.   அவை என்னவென்றால்...

1. தனிப்பட்ட ஜெபம் ஊழியர்களுக்கு மிக மிக அவசியம். ஒருவர் தனியாக எந்த அளவு ஜெபிக்கிறாரோ அதனைப் பொறுத்துதான்  அவரது ஊழியம்  இருக்கும். கடமைக்காக பிரசங்கிக்கச் செல்லும் முன் மட்டும் ஜெபித்துச் செல்லும் ஊழியன் அற்ப ஊழியனாக தானாகவே தன்னை வெளிப்படுத்திவிடுவான். 

2. கடமைக்காக வேதத்தைப் படிக்காமல் தேவனை அறியும் ஆவலில் அதனைப் படிக்கும் ஊழியனிடம்தான் தேவ வெளிப்படுத்தல்கள் இருக்கும். அத்தகைய ஊழியன்தான்  மனிதர்களை திருப்திப்படுத்தப் போதிக்காமல் தேவன் சொன்னதைப்  போதிப்பவனாக இருப்பான். 

3. தான் வாழும் சமூகத்தில் நல்ல ஒரு சாட்சி உள்ள வாழ்க்கை வாழ்பவனாக இருக்கவேண்டும். தாறுமாறான வாழ்க்கை வாழ்பவனை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

4. ஊழியன் தனது உடை விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தரமான எளிய உடையே போதும். சினிமா நடிகர்களைப்போல உடை உடுத்தவேண்டும் எனப் பல ஊழியர்களும் எண்ணுகின்றனர்.  பிரபல ஊழியர்களின் இந்த பகட்டு இன்று பல சிறிய ஊழியர்களிடமும்  பரவியுள்ளது. கிறிஸ்துவை உண்மையாய் போதிப்பவன் இந்தப் பகட்டுக்கு அப்பாற்பட்டவனாகவே இருப்பான். 

5. இயல்பாக பேசுவதைவிட பல ஊழியர்களும் செயற்கையான முறையில் பேசி தங்களை உயர்ந்தவர்களாக கட்டிக்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய மாய்மால பேச்சை பேசுவதை தவிர்த்தல் வேண்டும். 

6. சில ஊழியர்கள் தங்களது அங்க சேஷ்டைகள் மூலம் தங்களை சிறந்த போதகர் என வெளிக்காட்ட முயல்கின்றனர். (கண்களை உருட்டுதல், புருவத்தை வளைத்து நடித்தல், தோள்பட்டையை குலுக்குதல், கைகளை அபிநயித்து பேசுதல் போன்ற செயல்கள்) இது பல வேளைகளில் கேலிக்  கூத்தாக  இருக்கிறது. உண்மைக்கு நடிப்பு தேவையில்லை. எனவே அங்க சேஷ்டைகளைத் தவிர்த்தல் வேண்டும்.

7. உண்மையைப் பேசுங்கள். பிறர் உங்களை வல்லமை உள்ளவர்கள் என எண்ண வேண்டுமென பொய் தரிசனங்களையும் பொய் அனுபவங்களையும் கூறாதிருங்கள்.

8. அடுத்தவர் சட்டைப் பையில் உள்ளதற்கு ஆசைப் படாதிருங்கள். இன்று பல ஊழியர்களும் அப்படி ஆசைப் படுவதால் தான்  அவர்களது பிரசங்கத்தில் தேவ செய்தியைவிட காணிக்கை பற்றிய உபதேசமே மேலோங்கி நிற்கிறது.

9. பிற ஊழியர்களைக் காப்பியடிக்காதிருங்கள். இந்தக் காப்பியடித்தல்தான்  கிறிஸ்தவ ஊழியத்தினை இன்று  கெடுத்திருக்கிறது. நாம்  காப்பியடிக்க வேண்டியது கிறிஸ்துவை மட்டுமே. 

10. உண்மையாய், நேர்மையாய், போதுமென்ற மன நிறைவுடன் வாழுங்கள்.