தேவனையே பற்றிக்கொண்டு.........

ன்று கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தவறுதலாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கிறிஸ்தவம் எனபது ஒரு மதமாகவே பார்க்கப்படுவதால் அந்த மதத்துக்குரிய சில வழிபாட்டுச் செயல்பாடுகளைச் செய்துவிட்டால்  போதும் எனும் ஒரு எண்ணமே பலரிடமும் இருக்கிறது. ஞாயிறு ஆராதனை, வேதம் வாசிப்பது, உபவாசம், ஜெபம் எனும் பெயரில் ஏதோ அரற்றுவது இவை தவிர  அவ்வப்போது ஏசுவே ! கர்த்தாவே ! எனச் சொல்வது இவையே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் செய்வது. வேறு சிலர்  ஊழியம் எனச் சில செயல்பாடுகளைச் செய்வதால் தங்களை தேவனுக்கு நெருக்கமானவர்கள்  எனத்  தங்களை எண்ணிக்கொள்கின்றனர்.

இவை மட்டும் போதுமா என பலரும் சிந்திப்பதில்லை. தேவன் வெறும் பக்திச் செயல்பாடுகளைப் பார்த்து நம்மை எடை போடுவதில்லை. நமது அன்றாடச் செயல்பாடுகளை அவர்  பார்கிறார். அதன் அடிப்படையிலேயே நம்மை அவர் மதிப்பிடுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப்  பாருங்கள். அவர் தனது முப்பதாவது வயது வரை வெளி உலகம் அறியாதவராகத்தான் இருந்தார். ஆனால் அவர் பிதாவினால் அறியப்பட்டவராக, அவரதுச் சித்தம் செய்பவராக வாழ்ந்தார். அவர் ஒரு  தச்சுத் தொழிலாளியாக தொழில் செய்து தனது தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். இந்த முப்பது ஆண்டுகளும் அவர் எந்தப் பிரசங்கமும் செய்யவில்லை, எந்த மனிதரின் நோயையும் குனமாக்கவில்லை.. ஆனால் அவரது வாழ்க்கைத் தேவன் பார்த்தார்.. எனவேதான் "இவர் என் நேசக் குமாரன், இவர்மேல் பிரியமாயிருக்கிறேன்"  என பிதாவான தேவன் அறிக்கை செய்தார்.  

ஆம் ஊழியம் எனச் செய்யப்படும் செயல்பாடுகள் முக்கியமல்ல, நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாக, அவரதுச் சித்தம் செய்பவர்களாக எந்த அளவுக்கு வாழ்கிறோம் என்பதே முக்கியம். அதுபோல மதத்துக்குரிய சில வழிபாட்டுச் செயல்பாடுகளைச் செய்துவிட்டால்  போதும் என எண்ணுவதும் . ஞாயிறு ஆராதனை, வேதம் வாசிப்பது, உபவாசம், ஜெபம் போன்றச் செயல் பாடுகள் மட்டுமே போதும் என எண்ணுவதும் நம்மை ஆவிக்குரியவர்களாக மாற்றாது.
பிதாவாகிய தேவனுக்குரிய குணங்கள் நம்மிடம் வளர வேண்டும்.

சத்திய ஆவியான தேவன் மட்டுமே நம்மை சகல சத்தியத்துக்குள்ளும்  வழி நடத்திட  முடியும்.  நமக்கு  ஆவிக்குரிய உலக பாஸ்டர்களும் ஊழியர்களும் வழி காட்ட முடியும். ஆனால் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் மட்டுமே மிகச் சரியான வழியைக் காண்பிக்க முடியும். அன்பானவர்களே எந்த வேளையிலும் நமக்கு ஆறுதலும் சரியான வழியும் தேவன் ஒருவரே காட்ட முடியும். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்னாரே ?  தேவனையே பற்றிக்கொண்டு அவரையே நமது முன் மாதிரியாகக் கொண்டு வாழ்வோமெனில் நமது வாழ்வு பிறருக்குப் பயனுள்ள ஒரு வாழ்வாக அமையும். மாறாக ஊழியர்களைச் சார்ந்து அவர்களைப் பின்பற்றுவோமெனில் அந்த ஊழியனைப்போல மாற முடியுமே தவிர கிறிஸ்துவின் சாயலில் மாற முடியாது.

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்