Friday, May 23, 2014

உலகத்தை ஜெயித்தல்

உலகத்தை ஜெயித்தல் 

(இந்தக் கட்டுரை ஆதவன் பிப்ருவரி 2014 இதழில் பிரசுரமானது)

                     - - ஜியோ பிரகாஷ், ஆசிரியர், ஆதவன்  


லகத்தை வெல்ல வேண்டும் எனும் ஆசை பல மன்னர்களுக்கு இருந்தது. அந்த ஆசையே அவர்களது நிம்மதியைக் கெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் தொடர்ந்து பக்கத்துக்கு நாட்டுடன் போரிட்டுத் தங்கள் வாழ்கையை நிம்மதியின்றித் தொலைத்தனர். மாவீரன் அலெக்சாண்டர் ,நெப்போலியன் போன்றோர் பல நாடுகளைக் கைப்பற்றி வெற்றி சிறந்தாலும் அவர்களது வாழ்வின் இறுதி கவலையும் சஞ்சலமுமாகவே இருந்ததாகச்  சரித்திரம் கூறுகிறது. 

Alexander
இன்றும் மனிதர்களிடையே அந்த ஆசை அதிக அளவில் இருக்கிறது. அன்றைய நாடு பிடிக்கும் ஆசை இன்று உலக சாதனை புரிந்து யாரும் அடையாத இலக்கை அடைய வேண்டும் எனும் புதிய வடிவில் மனிதர்களை ஆட்டிப்  படைக்கிறது. 
இன்று கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறவேண்டுமென்றும் அவரவர் விரும்பும் துறையில் சாதனைகள் புரிய வேண்டுமென்றும் மனிதர்கள் ஏங்குகின்றனர். அப்படியே சிலர் சாதனைகளும் புரிகின்றனர். ஆனால் உலக சாதனை புரிந்தவர்கள் அனைவரும் உலகை ஜெயித்தவர்களல்ல. மாறாகத் தாங்கள் சார்ந்துள்ளத் துறையில் வெற்றி பெற்றுள்ளனர் அவ்வளவே. 


Nepolian
ஆனால் அமைதியின் அண்ணலாக வாழ்ந்து காட்டிய அன்பு ஆண்டவர் இயேசு கிறிஸ்து "நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) என்று அறிக்கையிட்டார். மட்டுமல்ல தன்னை விசுவசிப்போர்களும் தன்னைப்போல வெற்றி பெற முடியும் என்று கூறினார். அதனை விசுவசித்து ஏற்றுக்கொண்ட அவரது சீடர்கள் அதே வெற்றியை அடைந்தனர். அந்தத் துணிவில்தான் அவரது அன்புச் சீடர் யோவான் "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவசிப்பவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" (1 யோவான் 5:5) என்று கேள்வி எழுப்புகிறார்.

இந்த வசனம் இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவசிப்பவன் மட்டுமே உலகத்தை ஜெயிக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. விசுவாசித்தல் எனபது வெறும் வார்த்தையால் இயேசுவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதல்ல. வாழ்க்கையால் அவரைப் பிரதிபலிப்பதையே கூறுகிறது. அதாவது அவரது வசனத்தின் படி வாழ வேண்டும்.

உலகத்தை ஜெயித்தல் எனபது ஆவிக்குரிய விதத்தில் வேறு பொருள் கொண்டது அதாவது உலக ஆசை,; இச்சை, புகழ், பெருமை, பாவம் இவற்றை வெல்வது. இப்படி உலகை வெல்பவனே வெற்றியாளன். எனவேதான் வேதம் கூறுகிறது "உலகமும் அதன் இச்சையும் ஒழிந்து போம் தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் பிழைத்திருப்பான்" (1யோவான் 2:17)

சாதாரண மனித முயற்சியால் உலகில் பொருள், புகழ், அந்தஸ்து, அதிகாரம் இவற்றைப் பெறலாம். ஆனால் இது உலகை வெல்வது அல்ல. காரணம் இத்தகைய உலக வெற்றியாளர்கள் பலரும் வாழ்க்கையில் தோல்வியாளர்களே. பல புகழ் பெற்ற நபர்கள், குறிப்பாகத்  திரைப்பட நடிக நடிகைகள் தங்களது துறையில் சாதனை புரிந்து புகழும் பணமும் அந்தஸ்த்தும் சேர்த்திருந்தாலும் நிம்மதியின்றித் தற்கொலை எனும் விபரீத முடிவை எடுக்கின்றனர். காரணம் அவர்கள் குறிப்பிட்டத் துறையில் வெற்றி பெற்றுள்ளனரே தவிர உலகை வெல்லவில்லை.

"தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான். என்னிமித்தமாகவும் சுவிஷேசத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதனை இரட்சித்துக்கொள்ளுவான்" (மாற்கு-8:35) என்றார் இயேசுக்கிறிஸ்து. ஆம் தன் சுய ஆசையை நிறைவேற்றி வெற்றி பெற முயல்பவன் அப்படியே தன் வாழ்க்கையை இழந்து போவான்.

விதையானது மண்ணில் விழுந்து அழிவுற்றால்தான் அது மரமாகி நூறாகவும் ஆயிரமாகவும் பலன் தர முடியும். இதுதான் மனித வெற்றிக்கு அடிப்படை என்றார் இயேசு.

"கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும் " (யோவான் -12:24)

சுயம் சாகவேண்டியதே உலகை வெல்ல அடிப்படைத் தேவையாகும். பொருள் ஆசை, புகழ், மோகம், இச்சை, பெருமை இத்தகையக் குணங்கள் அழிவுற வேண்டும். இவற்றை அழிக்காதவன் தன்னைக் கிறிஸ்தவன் என்று கூறுவது பொய்யாகும்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் விசுவாசிகளில் பலரும் ஊழியர்கள், பாஸ்டர்கள், ரெவரென்ட்கள், கன்வென்ஷன் பிரசங்கிகள் பலரும் பணம், பொருள், புகழ், ஆசை, இச்சைகளை வைத்துக்கொண்டு பிற மதத்தினரும் கூட அருவருக்கும் செயல்பாடுகளையும் செய்கின்றனர்.

சினிமா நடிகர்களைப் போல தங்களுக்குத் தாங்களே போஸ்டர்களும் டிஜிட்டல் பேனர்களும் அடித்துப் பகட்டாகத் தங்களை வெளிப்படுத்தும் ஊழியர்கள் இன்னும் சுயத்தை அழிக்காதவர்களே. சாதாரண  மனிதருக்குள்ள தாழ்மை கூட இல்லாத இவர்கள் எப்படி ஒரு வெற்றி வாழ்க்கைக்கு விசுவாசிகளை வழி நடத்த முடியும்? உலகத்துக்குரிய செயல்களையே செய்து உலக ஆசீர்வாதத்தையே  இவர்கள் போதிக்கின்றனர். காரணம் "அவர்கள் உலகத்துக்குரியவர்கள். ஆகையால் உலகத்துக்குரியவைகளையே பேசுகிறார்கள்" (1 யோவான் - 4:5)

இந்தியாவின் நம்பர் ஒன் வார இதழாக இருந்த "குமுதம்" அன்று வாரம் 10 லட்சம் பிரதிகள் விற்பனையானது. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் திரு. சின்ன அண்ணாமலை என்பவர். ஆனால் அவர் இறந்த பின்புதான் அவரது முகம் பொது மக்களுக்குத் தெரிய வந்தது. அதுவரை அவர் தன்னை மறைத்துத் தாழ்மையாய் வாழ்ந்தார். ரேஷன் கடைக் கியூ வில் கூட அவரே காத்து நின்று பொருட்களை வாங்குவாராம். காரணம் பகட்டு ஆடம்பரம் இல்லாமலிருந்தால்தான் மக்களைப் படிக்க முடியும் என்றார் அவர். ஆனால் இன்று கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்க வேண்டிய ஊழியர்கள் பலர் ஆயிரம் பிரதி கூட விற்பனை ஆகாதத் தங்கள் பத்திரிகையின் அட்டையில் வருடம் இரு முறையாவது தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் வெளிச்சம் போட்டுக் காட்டி பெருமையடைந்து கொள்கின்றனர்.

ஊழியக்காரர் கூறும் கருது விசுவாசிகளுக்கு வேண்டியதே தவிர ஊழியக்காரரது குடும்பத்தைப் பற்றி அறிய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி அறிவிக்க முயல்வது பெருமையின் அடையாளமும் வாரிசு ஊழியத்தின் அடிதளமிடுவதுமேயாகும்.  

"உங்களை சுற்றிலும் இருக்கிற புற ஜாதிகளுடைய நீதி நியாயங்களின்படியாவது நடக்க வேண்டாமா?" (எசேக்கியேல் -5:7). அதாவது நம்மைச் சுற்றி வாழும் பிற மத மக்களுக்குள்ள நீதிகள் கூட இல்லாமல் இருந்துகொண்டு எப்படி கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்? ஏற்கெனவே அவர்கள் உங்களைவிட நற்குணங்கள் உள்ளவர்களாகத்தானே இருக்கின்றனர்? "இந்தியாவை இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்" எனக் கூச்சலெழுப்பும் இவர்களே இன்னும் இயேசுவுக்குச் சொந்தமாகவில்லையே?

எனவே சுயம் பகட்டு அழிய வேண்டும். அதுவே உலகை ஜெயிக்க அடிப்படையாகும் 

அன்று மோசே பார்வோனின் மகளின் மகனாக அரண்மனையிலேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் செல்வம், செழிப்பு, அதிகாரம், அந்தஸ்து எல்லாம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அதனைவிடத் தன்  மக்களுக்காக அனைத்தையும் இழக்கத் தயாரானார். ஆம் அவர் தன்  சுயத்தை அழித்தார். அநித்தியமான் உலக இன்பங்களைவிட மேலானவைகளையே நாடினார். கோதுமை மணியாக மடியத் தன்னை ஒப்புக்கொடுத்தார். அரண்மனை வாழ்கையைத் துறந்து வறண்ட பூமியில் ஆடு மேய்க்கும் தொழிலைத் தெரிந்துகொண்டார். இதனை வேதம் பின்வருமாறு கூறுகிறது:

"விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனின் குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையேத் தெரிந்துகொண்டு இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களை விட கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாகியமென்று எண்ணினான்." (எபிரெயர் - 11:24-26)

இந்த மோசே தான் தேவனால் வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்டார். "என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்" எனத் தேவனால் பாராட்டப்பட்டார். (எண்ணாகமம் 12:7) தேவன் அவரோடு முகமுகமாய்ப் பேசினார். அவர் தேவனுடையச் சாயலைக் கண்டார். "என் தாசனாகிய மோசே" என்று தேவனால் அழைக்கப்பட்டார்.  (எண்ணாகமம் 12:8) விதையாக மடியும்போதே விருச்சமாக எழ முடியும் எனும் இயேசு கிறிஸ்துவின் போதனைக்கு முன் உதாரணமானார்.  

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதற்கு மேலும் ஒரு உதாரணம். எல்லாவற்றுக்கும் மேலாக  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் சிலுவையின் மரணமட்டும் தன்னைத் தாழ்த்தியதால் தேவன் எல்லாவற்றுக்கும் மேலாக  அவரை உயர்த்தினார். (பிலிப்பியர் 2:8-9) எனவேதான் அவர் ஜெய கிறிஸ்துவாக நான் உலகை ஜெயித்தேன் என அறிக்கையிட்டார்.

அன்பானவர்களே நம்மிடம் உலகபிரகாரமாக பலத் திறமைகள் இருக்கலாம். இவற்றை பிறர் பாராட்டலாம் அரசு விருதுகள் கிடைக்கலாம் ஆனால் "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையாக எண்ணுகிறேன்" (பிலிப்பியர் 3:11) எனப் பவுல் அடிகளைப்போல விட்டு விடும் போதுதான் நாம் உலகை ஜெயிக்கிறோம். அப்போது நாமும் "நல்லப் போராட்டத்தைப் போராடினேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப் பட்டிருக்கிறது" (2 திமோத்தேயு 4:7;;,8) என விசுவாசத்தோடு கூற முடியும்.

ஜெயிப்பவனுக்கு இந்த உலகம் சான்றிதழ்கள் கோப்பைகள் பண முடிச்சுகள் பட்டங்கள் கொடுத்து கௌரவிக்கும். ஆவிக்குரிய ஜீவியத்தில் ஜெயிக்கிறவனுக்கு என்ன கிடைக்கும்? அதனை வேதம் பின்வருமாறு கூறுகிறது:

தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருச்சதின் கனி உண்ணக் கொடுக்கப்படும் (வெளி 2:7)

அவனை இரண்டாம் மரணம் சேதப்படுத்துவதில்லை (வெளி 2: 11)

இயேசு பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல அதிகாரம் கொடுக்கப்படும் (வெளி 2: 26) 

வெண் வஸ்திரம் உடுத்தப்படும் (வெளி 3: 5)   

ஜீவ புத்தகத்திலிருந்து அவனது பெயர் அழிக்கப்படமாட்டது (வெளி 3: 5)  

இயேசு கிறிஸ்து ஜெயம் பெற்று பிதாவினுடைய சிங்காசனத்தில் அவரோடு கூட இருப்பதுபோல ஜெயிப்பவனும் இயேசு கிறிஸ்துவோடு கூட சிங்காசனத்தில் உட்காரும்படி தேவன் அருள் செய்வார்  (வெளி 3: 21)

ஆம். "கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால் அவருடனே கூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்" (ரோமர் 6:8)       



     

                     

              
     

No comments: