விதைகளின் உள்ளே .......
முதல் பாகம்
- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
ஆசிரியர் உரை ....
தேவ வார்த்தைகளை விதைகளுக்கு வேதாகமம் ஒப்பிடுகின்றது. இயேசு கிறிஸ்துவும் தனது விதைக்கின்றவன் உவமையில் இதனைக் குறிப்பிடுகின்றார். தேவ வார்தைகளாகிய விதைகளை நாம் விதைக்கும்போது அவை உடனேயே பலன் தரவில்லையாயினும் எப்போதாவது அது வளர்ந்து பயன் தரும். அது என்றுமே வீண் போகாது.
"உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்." ( பிரசங்கி 11 : 1 ) என்று வேதம் கூறுகின்றது. மேலும், "காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்." ( பிரசங்கி 11 : 4 ) என்றும் வேதம் கூறுகின்றது. அதாவது சூழ்நிலைகளைப் பார்த்தோமானால் நம்மால் வேதாகம வார்த்தைகளை மக்களிடம் விதைக்க முடியாது.
வேதாகம வார்த்தைகள் எனும் விதைகளில் சில உடனே பொருள் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கும் அல்லது ஒரே வசனத்தினுள் ஆவிக்குரிய வேறு அர்த்தங்கள் இருக்கும். பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு இவைகளைச் சுவைக்கவேண்டுமானால் அவற்றின் கடினமான ஓடுகளை உடைத்து உள்ளே இருப்பவற்றைச் சுவைக்கவேண்டும்.
இந்த நூலில் அதுபோல கடினமான ஓட்டினை உடைத்து எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை படிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
இந்த வசன தியானங்கள் முகநூலிலும் (Facebook ) "வாட்ஸாப்" பிலும் (WhatsApp) தினசரி தியானமாக வெளிவந்தவை. இவை பலருக்கும் பயனுள்ளதாக இருந்ததால் இவற்றைத் தொகுத்து இந்த முதல் தொகுதியைப் பிரசுரிக்கின்றேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகின்றேன். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கின்றேன்.
-சகோ. எம் ஜியோ பிரகாஷ்
புன்னை நகர் , நாகர்கோயில் தொடர்புக்கு :- 9688933712
1
"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)
படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல் அடிகள் இங்கு விளக்குகின்றார். அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலை. ஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள்.
இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது.
தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர் "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32)
அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே உலகம் இன்று விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல் ஆசைகொள்வதே. எந்த சூழ்நிலையிலும் தேவனே போதுமென வாழ்வோம். நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார். ஆமென்
2
"கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் " (பிலிப்பியர் -4:4)
எப்போதும் சந்தோசமாய் இருப்பது எப்படி?
உலகத்தில் நமக்கு பாடுகளும்,வேதனைகளும் தொடரத்தான் செய்யும். அதனால் நமது மனம் துவண்டு வேதனைப் படுவதுண்டு. கஷ்டமான சூழ்நிலையில் மகிழ்ச்சியாய் சந்தோசமாய் நாம் இருக்க முடியாதுதான். மிகப் பெரிய இழப்போ நமக்கு வேண்டியவரது மரணமோ ஏற்படும்போது நாம் மகிழ்ச்சியாய் இருக்க முடியாதுதான். இயேசு கிறிஸ்து கூட தனது சிநேகிதன் லாசர் மரித்ததைக் கேள்விப்பட்டு கண்ணீர் சிந்தினார் என நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து தந்தையின் சித்தம் செய்ய விருப்பமுடையவராகவே இருந்தார்.
அப்படியானால் இந்த வசனம் ஏன் இப்படிக் கூறுகின்றது?
சரியாகக் கவனித்தால் அது புரியும். வசனம் என்ன கூறுகின்றது? "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் ".
நமக்கு பாடுகள், வேதனைகள், பிரச்சனைகள் எல்லாம் உண்டு ஆனால் கர்த்தரை விட்டு பின்மாறிடக் கூடாது. பிரச்னை வந்தவுடன் தேவனை முறுமுறுப்பது , ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? நான் தேவனிடம் எவ்வளவோ நம்பிக்கையாய் இருந்தேன், என் நம்பிக்கை பொய்த்துவிட்டது.....என்பன போன்ற எண்ணங்கள் நமது தேவன் மீதான நம்பிக்கையை சேதப்படுத்த விட்டுவிடக் கூடாது. இதுவே கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பது. ..
"நான் எந்த நிலையில் இருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் ." (பிலிப்பியர் -4:11,12) எனப் பவுல் அடிகளைப் போல அறிக்கையிடுவது...
யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் துன்பப்பட்டபோது அரற்றினார், புலம்பினார் . அது அவரது மனித பாடு. ஆனால் அவர் தேவனோடு ஆவிக்குரிய உறவில் இருந்ததால் மகிழ்ச்சியோடு கூறினார் , " என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன் " (யோபு-19:25,26)
இதுவே கர்த்தருக்குள் சந்தோசமாய் இருப்பது. எந்த நேரத்திலும், பிரச்சனையிலும் தேவனை விட்டுப் பின் மாறிடாமல் இருப்பது. இரத்த சாட்சிகளது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. முதல் இரத்த சாட்சியான ஸ்தேவான் ஒரு உதாரணம். அவரைக் கல் எறிந்து கொல்வதற்கு கொண்டு செல்லும்போதும் அவர் மனம் கலங்கவில்லை. தேவனது மகிமையைக் கண்டு களிகூர்ந்தார்.
இன்று நமக்குப் பாடுகளும் துன்பங்களும் வரும்போது யோபுவைப் போலும், பவுலைப்போலும் , ஸ்தேவானைப் போலும் நம்மால் இருக்க முடியாவிட்டாலும் தேவனை முறுமுறுக்காமலாவது இருப்போம். தேவனோடு அதிக ஜெப வாழ்வில் நெருங்கி நாம் வாழும்போது அது நமக்கு முடியும். யோபுவைவிட பெரிய துன்பம் ஒன்றும் நமக்கு வந்துவிடவில்லை. எனவே கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.
3
"அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே ருக்கிறார்" (1. யோவான் - 4:7, 8)
உலகினிலே வந்து நமக்காகப் பாடுகள்பட்டு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கின்ற நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்பின் நிறைவாகவே இருக்கிறார். எனவே அவரைத் தொழுது கொள்ளுகிற அனைவரும் அந்த அன்பினைப் பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடனான யோவான் எனவே, "தேவனிடத்தில் அன்பு கூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும் தன் சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்? (1. யோவான் -
4:20) எனக் கேள்வி எழுப்புகிறார்.
நாம் காணும் அனைவரும் தேவனால் படைக்கப்பட்டவர்கள்தான். எனவே ஜாதி, மதம், இனம், மொழி இவை அன்பிற்குத் தடையாக இருக்கக் கூடாது. இவற்றின் அடிப்படையில் ஒருவன் மனிதர்களை எடைபோடுவானென்றால் அவன் தேவனை அறிந்தவனோ அல்லது தேவனால் அறியப்பட்டவனோ அல்ல.
யோவான் எழுதிய முதல் நிருபம் அன்பின் நிருபம் என்றே அழைக்கப்படுகிறது. அந்த நிருபத்தைத் தியானியுங்கள். இன்றய சூழலில் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடைபெறும் செயல்களை பொறுமையோடு தாங்கிக்கொள்ள அது நமக்கு வழிகாட்டும். அப்போஸ்தலரான பேதுரு கூறுகிறார், "ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதனால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதன் நிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். " (1.பேதுரு -4:16)
"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப் படுகிறார். " (1.பேதுரு -4:14)
அன்பில்லாதவன் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பணக்கார வீடுகளில் சங்கிலியால் கட்டிப்போட்டு அல்லது கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் நாயைப் போல இருக்கிறான். அவனது செல்வமும் செல்வாக்கும் அவனுக்கு மெய் விடுதலையைத் தராது.
மெய்யான அன்பினைப் பிரதிபலித்திட :-
யாராவது உங்களிடம் உதவி கேட்கும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் அவருக்கு உதவுங்கள், யாராவது உங்களுக்கு இக்கட்டில் உதவி செய்யும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் இருங்கள். ,யாராவது உங்களைத் துன்புறுத்தும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் இருங்கள்.
இயேசு கிறிஸ்துக் கூறினார், "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால் அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்" (யோவான் -
13:35)
ஆம், நாம் இந்த உலகில் கிறிஸ்துவின் சீடர்கள் என்று சான்று பகரவே அழைக்கப்பட்டுள்ளோம்.
4
" அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு -5:7)
மருத்துவ கல்லூரியில் படிக்க ஆசைப்பட்ட ஒரு மாணவிக்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பணம் இல்லாததால் அவள் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அவளைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது ஒரு மிகப் பெரிய தொழில் அதிபர் அவளுக்கான படிப்பு செலவு அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உதவ முன்வந்தார். இப்போது அந்த மாணவி எந்தக் கவலையுமில்லாமல் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அந்த மாணவியின் பணக் கவலைகளையெல்லாம் தொழிலதிபர் எடுத்துக்கொண்டார்.
இதுபோலவே தேவன் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நமது கவலைகளையெல்லாம் எடுத்துக்கொள்வார். நமது நம்பிக்கையை விசுவாசத்துடன் அவர்மேல் வைத்துவிடவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரையே பற்றிக்கொண்டால் நிச்சயம் அவர் நம்மைக் கைவிடமாட்டார்.
மேலே குறிப்பிட்டுள்ளது ஒரு உதாரணம் மட்டுமே. ஆனால் தேவன் நாம் மனிதர்கள்மேல் நம்பிக்கை வைப்பதை விரும்புவதில்லை. வேதம் கூறுகிறது, "மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம் " (சங்கீதம் - 118:8) மனிதர்க்கள் மாறக்கூடியவர்கள். அல்லது ஒரு எதிர்பாரா சூழல் எற்பட்டு நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்கள் உதவ முடியாமல் போகலாம்.
தேவ பக்தியுள்ள ஒரு பொறியாளரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நான் படித்திருக்கிறேன். ஒரு முறை நெடுஞ்சாலைத்துறை சாலையை அகலப்படுத்தியபோது சாலையோர மரங்களை வெட்டி அகற்றவேண்டிய பொறுப்பை அவரிடம் விட்டது. அவர் தலைமையில் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட மரத்தினருகே வந்தபோது அந்த மரத்தின் கிளைகளில் ஒரு குருவிக் கூடு இருப்பதை அவர் கண்டார். மரத்தில் ஒரு மனிதனை ஏறச் சொல்லி கூட்டினுள் பார்க்கச் சொன்னார். அங்கு சில குருவிக் குஞ்சுகள் இருந்தன.
அவற்றின்மீது பரிவுகொண்ட அந்தப் பொறியாளர் தனது உதவியாளர்களிடம் நாம் இப்போது இந்த மரத்தை வெட்ட வேண்டாம். மற்ற மரங்களை வெட்டிவிட்டு பிற்பாடு இதை வெட்டலாம். இன்னும் பத்து அல்லது பதினைந்து தினங்களுக்குள் குருவி குஞ்சுகள் பறந்து சென்றுவிடும் அதன்பின்பு வந்து இதனை வெட்டலாம் என்றார்.
அப்படியே அந்த மரத்தை விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டினர். பத்து பதினைந்து தினங்களுக்குப் பிறகு அந்த மரத்தை வெட்ட வந்தனர். அன்று அந்தப் பொறியாளர் மிகுந்த மனச் சோர்வுடன் இருந்தார். ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு பலனும் ஏற்படவில்லையே... பல பிரச்சனைகள் தொடரத்தானே செய்கின்றன எனும் சோர்வு அவருள் இருந்தது. உதவியாளர் மரத்தில் ஏறிப் பார்த்தபோது கூட்டினுள் குருவிக் குஞ்சுகள் இல்லை. எனவே மரத்தை வெட்டிவிடுமாறு கூறினார் அந்தப் பொறியாளர் மரம் வெட்டப்பட்டு கீழே விழுந்தபோது அவர் ஏதோ ஆவலில் சென்று அந்தக் குருவிக் கூட்டினை எடுத்துப் பார்த்தார். அங்கு அவர் முதலில் கண்டது ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வேத வசனம். அது :- " அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு -5:7)
ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக் குழந்தைகள் எழுதிய வசனம் அது. கூடு கட்டிய குருவி அந்தத் தாளையும் எடுத்துவந்து கூடு காட்டியுள்ளது. அது அவரது ஆவிக்குரிய வாழ்வில் மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. எழுதப்பட்ட வேத வசனமோ அதன் அர்த்தமோ தெரியாமல் கூடுகட்டிய குருவியை அந்த வசனத்தின்படி பாதுகாத்த தேவன் நமது துன்பங்களை போக்கி நம்மைப் பாதுகாக்க மாட்டாரா? எனும் எண்ணம் அவருக்குள் வந்தது . அவரது ஆவிக்குரிய வாழ்வு மேம்பட்டது.
உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
5
"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28)
என எழுதுகிறார் பவுல் அடிகள். ஒரு மனிதனை கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மனிதனாக மாற்ற வேண்டுமானால் அவனுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும். அவர் செய்த அற்புதத்தையல்ல.
இன்று பல போதகர்கள் ஏதாவது செய்து மக்களை ஆதாயப்படுத்த விரும்புகிறார்கள். இப்படி மக்களை ஆதாயப்படுத்தினால் அவர்கள் வெறும் அரசியல் தலைவனை ஏற்றுக்கொள்வதைப்போல கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்களே தவிர அவரை ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது இன்று அல்ல தொடக்க காலத்திலும் இருந்தது . எனவே தான் பவுல் அடிகள், " யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள் , கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாகவும் கிரேக்கருக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்." (1 கொரிந்தியர் - 1:22,23)
மேலும் பவுல் அடிகள் கூறும்போது, " என் பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராமல் ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. " (1 கொரிந்தியர் - 2:5) என்று கூறுகிறார். நய வசனமும் அதிசயமும் தேவையற்றவை. ஒரு ஊழியரிடம் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பெலன் இருக்குமானால் அவனது சுவிசேஷ அறிவிப்பே வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் துரதிருஷ்ட வசமாக இன்று ஊழியம் செய்யும் பிரபல ஊழியர்கள் அனைவருமே நய வசனிப்பில் நிறைந்தவர்களாக இருக்கிறார்களே தவிர தேவ ஆவியின் பெலன் அற்றவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர்.
இன்று சுவிசேஷ அறிவிப்பு என்பது பத்தில் ஒரு பங்கு காணிக்கை கொடுத்தால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் என்பதும் , கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார் என்பதும், ஆசீர்வதிப்பார் என்று கூறுவதும் தானேதவிர மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன என்பதோ கர்த்தர் அந்த மெய் ஆசீர்வாதத்தை யாருக்கு அளிப்பர் என்பதோ, தேவ ஆசீர்வாதத்தை பெற கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வாக்குத்தத்தங்களுக்கு முன் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளோ, தேவனுக்கு ஏற்புடையோராய் வாழாவிட்டால் என்ன நேரும் என வேதத்தில் கூறப்பட்டுள்ள சாபங்களோ பெரும்பாலான ஊழியர்களால் கூறப்படுவதில்லை. கூறினால் அவர்களுக்கு கூடும் அந்தப் பெரிய கூட்டத்தின் பெரும்பகுதி இடத்தைக் காலிசெய்துவிட்டு ஓடிவிடும்.
கிறிஸ்துவை இதுவரை அறியாதவர்களை அப்படி அறியாமையிலேயே வைத்திருக்கிற முதல் எதிரியும் சாத்தானும் பிரபல ஊழியர்கள் நடந்தும் கிறிஸ்தவ டி .வி . நிகழ்ச்சிகளே. இவற்றைப் பார்த்து எவரும் கிறிஸ்துவை அறிய முடியாது. அவர்கள் அறிவிப்பது " இன்னொரு கிறிஸ்துவை" அல்லது "வேறொரு கிறிஸ்துவை ". எனவே கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை தேர்தெடுத்துப் பாருங்கள். டி .வி . நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு முன் சுவிசேஷத்தைக் கவனமாக படியுங்கள். நீங்கள் படித்த சுவிஷேஷத்துக்கு விரோதமாக போதிக்கும் போதகர்களது நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள்.
அன்பானவர்களே நீங்கள் இன்னும் அற்புதங்கள் வழியாகவே கிறிஸ்துவைத் தேடுகிறவர்களாக இருந்தால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாகவே இருப்பீர்கள். அப்போஸ்த்தலாரான பேதுரு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டவராகவே பிரசங்கித்தார். "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசு வையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாகினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்". (அப்.பணி - 2;36) என்று பேதுரு பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆம் , அவர்கள் அற்புதத்துக்காக கிறிஸ்துவிடம் வரவில்லை.
கிறிஸ்து சிலுவையின் வழியைத்தான் மீட்பின் வழியாக கொடுத்தாரே தவிர ஆசீர்வாத வழியையல்ல. ஒருவன் தன் சிலுவையை அனுதினமும் சுமந்துகொண்டு தன்னைப் பின்பற்றவேண்டும் என்றார் அவர். சிலுவை சுமப்பவனே கிறிஸ்தவன்.
6
"இதோ சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது " (வெளி - 23:12)
இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டபோது அவரது தலையில் கட்டப்பட்டிருந்தத் துணி பற்றி சமீபத்தில் ஒரு உண்மையை அறிய முடிந்தது. அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இயேசு கிறிஸ்துவை யூதர்களின் முறைப்படி சுகந்த வர்க்கங்களுடன் துணியில் சுற்றிக்கட்டி அடக்கம் செய்தனர். அவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்ததை யோவான் நற்செய்தி தெளிவாக விளக்குகிறது. மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்து பார்த்து கல்லறை வாயிலை மூடியிருந்த கல் புரட்டப்பட்டடிருந்ததைக் கண்டு ஓடி சீடர்களிடம் தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து சம்பவம் பின்வருமாறு வேதாகமத்தில் விளக்கப்பட்டுள்ளது.
"அப்போது பேதுருவும் மற்ற சீடனும் கல்லறைக்குப் போகும்படி புறப்பட்டு இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப் பார்க்கிலும் மற்றச் சீடன் துரிதமாய் ஓடி, முந்தி கல்லறைக்கு வந்து அதற்குள்ளே குனிந்து பார்த்து துணிகள் கிடந்ததைக் கண்டான். ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன் பேதுரு அவனுக்குப் பின் வந்து கல்லறைக்குள்ளே பிரவேசித்து துணிகள் கிடக்கிறதையும் அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்ற துணிகளுடன் இராமல் தனியே ஒரு இடத்தில சுற்றி வைத்திருக்கிறதையும் கண்டான்." (யோவான் - 20:3-7)
இச் செய்தி முக்கியமான ஒரு உண்மையை விளக்குவதாக வேத அறிஞர்கள் கூறுகின்றனர்.
யூத முறைமையில் தலைவன் ஒருவன் உணவு உண்ண அமரும்போது அந்த உணவு "டேபிள்" சிறப்பாக துணிகள் விரிக்கப்பட்டு உணவுகள் முறையாக பரிமாறப்பட்டிருக்கும். உணவு பரிமாறும் வேலைக்காரன் உணவுகளை ஆயத்தப்படுத்தி எடுத்து வைத்துவிட்டு அப்புறம் சென்றுவிட வேண்டும். தலைவன் உணவு உண்ணும்போது அவன் அதனை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. தேவை ஏற்பட்டு தலைவன் அழைத்தால்தான் அங்கு அவன் வர வேண்டும்.
உணவு உண்டத் தலைவன் தனது கைகளையும் வாயையும் தாடியையும் துணியால் துடைத்துவிட்டு துணியை தூர எறிந்துவிட்டுச் செல்வான். அதன்பின்பு வேலைக்காரன் உள்ளே சென்று அனைத்தையும் சுத்தம்பண்ணுவான். சில வேளைகளில் சாப்பிடும்போது அவசரமாக தலைவன் எதற்காவது வெளியே செல்லவேண்டியிருந்தால் துணியைத் தூர எறியாமல் அதனை மடித்து சுற்றி சாப்பிட்ட இடத்தில் தனியே வைத்துவிட்டுச் செல்வான். அப்படிச் செய்வது தான் மீண்டும் திரும்ப வருவேன் என்பதை வேலைக்காரனுக்கு உணர்த்துவதாகும். அப்படியானால் வேலைக்காரன் தலைவனுக்காகக் காத்திருப்பான்.
ஆச்சரியமாக இல்லையா? வேதம் இதனால்தான் இந்தத் துணி பற்றிய விசயத்தை தெளிவாகப் பதிவுசெய்துள்ளது. ஆம் இயேசு கிறிஸ்து தான் கூறியதுபோன்றே திரும்பவும் வருவதை இந்த சுருட்டி வைக்கப்பட்ட தலைத் துணி மூலம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறார்.
"இதோ சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது " (வெளி - 23:12)
"இவைகளை சாட்சியாக அறிவிக்கிறவர்; மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென் , கர்த்தராகிய இயேசுவே வாரும்" (வெளி - 23:20)
7
"இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது". ( ஏசாயா 59 : 1, 2 )
ஏதாவது பிரச்னை அல்லது துன்பம் வரும்போது பலரும் , "நான் எவ்வளவோ ஜெபித்தேனே, இந்தக் கடவுளுக்குக் கண் இல்லையா..? அல்லது காதுதான் இல்லையா? என் ஜெபத்தை அவர் ஏன் கேட்கவில்லை? எனப் புலம்புகின்றனர். ஆவிக்குரிய வாழ்வு வாழும் பலரும் கூட சில வேளைகளில் மனம் கலங்கித் தவிக்கின்றனர்.
தேவனோடு தொடர்புகொண்டு ஆவிக்குரிய வாழ்வு வாழ்வோருக்கு ஜெபத்துக்கு தேவன் உடனடி பதில் தராவிட்டாலும் அவர் வேறு நோக்கம் வைத்திருப்பார். அதனை நாம் பெறும் வரைப் பொறுமையோடு காத்திருக்கவேண்டும். அல்லது தேவ சித்தம் எதுவோ அது நடக்கட்டும் என தேவனிடமே விட்டுவிடவேண்டும்.
ஆனால் பெரும்பாலும் தேவன் மக்களது ஜெபத்துக்கு பதில் கொடுக்காமல் இருக்கக் காரணம் பாவங்களே. மனிதர்களுடைய பாவங்களே தேவன் செவிகொடுக்காதபடி அவரது முகத்தை மறைகின்றது. இருவருக்கிடையில் ஒரு திரையோ சுவரோ இருக்குமானால் எப்படி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதோ அதுபோல மனிதர்களுடைய பாவங்கள் தடுப்பாக நின்று தேவ முகத்தை மறைகின்றன.
"கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்." ( நீதிமொழிகள் 20 : 12 )
"காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?" ( சங்கீதம் 94 : 9 )
காதையும் கண்ணையும் உண்டாக்கினவர் நிச்சயமாய் நம்மைக் காண்கிறார், நமது புலம்பலைக் கேட்கிறார். ஆனால் நமது அக்கிரமங்கள் தேவன் செயல் பட முடியாதவாறு அவரைத் தடுக்கின்றன.
இன்று ஊழியர்கள் பலரும் மக்களிடம் ஜெபியுங்கள், ஜெபியுங்கள் என ஜெபத்தை வற்புறுத்துகின்றனர். ஜெபத்தில் பல வகைகளை உண்டாக்குகின்றனர். நள்ளிரவு ஜெபம், உபவாச ஜெபம், சங்கிலி ஜெபம், 24 X 7 தொடர் ஜெபம், இன்னும் பல்வேறு ஜெபக் குறிப்புகளுக்கான ஜெபம் என ஜெபத்தை வலியுறுத்துகின்றனரே தவிர முதலில் ஜெபத்தை தேவன் கேட்கும் நிலைக்கு மக்களை வழிநடத்தத் தவறுகின்றனர்.
ஜெபத்தைவிட ஜெபிப்பவரது மன நிலையை தேவன் முதலில் பார்க்கின்றார். நமக்கும் தேவனுக்கும் தகப்பன் மகன் / மகள் உறவு வர வேண்டும். அதன் பின்தான் எல்லா ஜெபங்களும்.
" என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவி கொடார்" (சங்கீதம் - 66:18)
மேலும், பெருமை உள்ளவர்களின் ஜெபம் (உதாரணம் -ஆயக்காரனும் பரிசேயனும் ஜெபித்த ஜெபம்) , பாவிகளின் ஜெபம், இரத்தம் சிந்தும் கைகளை உடையோரது ஜெபம் (ஏசாயா -1:15), உலக இச்சைகளை நிரைவேற்றிட வேண்டி ஜெபிக்கும் ஜெபம் (யாக்கோபு - 4:3) பொய் பேசுகிறவர்கள், இரத்தப் பிரியர், சூதுள்ள மனிதன் இவர்களை தேவன் அருவருப்பதால் அவர்களது ஜெபம் (சங்கீதம் - 5:6) இவைகளை தேவன் கேட்பதில்லை.
மாறாக, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது" (யாக்கோபு -5:16)
அன்பானவர்களே, ஜெபம் வல்லமையுள்ளது, தேவனோடு நம்மை நெருங்கிய உறவில் வளர்ச்சி பெறச் செய்வது . ஆனால் நமது வாழ்வும் மனமும் எப்படிப் பட்டதாய் இருக்கிறது? என்பதை முதலில் நிதானித்து அறிவோம். எல்லோரும் ஜெபிக்கலாம். திருடன் கூடத் திருடச் செல்லுமுன் ஜெபித்துவிட்டுதான் செல்கின்றான். நாம் எப்படி எந்த நிலையில் இருந்து ஜெபிக்கின்றோம்?
தேவனுக்கு முன் நமது பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவாவோம். அநியாய அக்கிரமங்களை நம்மைவிட்டு அகற்றுவோம். நமது ஜெபம் தேவனால் கேட்கப்படும் ஜெபமாக அமையட்டும்.
8
"போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்." ( லுூக்கா 3 : 14 )
யோவான் ஸ்நானன் மனம் திரும்புதலுக்கான
ஞானஸ்நானத்தைக் கொடுத்தபோது பலரும் அவரிடம் வந்து ஞானஸ்நானம் பெற்றனர். அப்போது
போர் சேவகரும் அவரிடத்தில் வந்து நாங்கள் என்னச் செய்யவேண்டுமெனக் கேள்வி
எழுப்பினர். அவர்களுக்குப் பதிலாக யோவான் ஸ்நானன் மேற்படி பதிலைக் கூறுகின்றார்.
இப்போது போலீசார் செய்யும் பணியைத்தான் அக்காலத்தில் போர்ச் சேவகர்கள்
செய்து வந்தனர். போர் இல்லாத காலங்களில் அவர்களுக்கு இந்தப் போலீசார்
பணியும் கொடுக்கப்பட்டு வந்தது. அவர்களிடம்தான் யோவான் இப்படிக்கு
கூறுகின்றார். இங்கு மூன்று காரியங்களை யோவான் கூறுகின்றார் .
1. ஒருவருக்கும் இடுக்கண் (துன்பம்) செய்யாதீர்கள்
2. பொய்க் குற்றம்
சாட்டாதீர்கள்
3. உங்கள் சம்பளமே போதும் என
நிறைவுடன் இருங்கள் (லஞ்சம் வாங்காதிருங்கள் )
இந்த மூன்று காரியங்களையும் இன்றய போலீசார் செய்கின்றனர்.
இந்த விசயத்தில் நம்மையும் நாம் சீர் தூக்கிப் பார்க்கவேண்டி இருக்கிறது. நாம் அனைவரும் போலீசார் அல்லதான். ஆனால் இந்தத் தவறுகள் நம்மில் பலரிடமும் இருப்பதை மறுக்க முடியுமா? நாம் என்னென்ன விஷயங்களில் பிறருக்கு துன்பம் தருகின்றோம்? தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கச் சொன்ன அன்பு தகப்பனின் பிள்ளைகள் அல்லவா நாம் ? வேலை பார்க்கும் அலுவலகங்களில் , பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கு துன்பம் செய்வோர் நம்மில் உண்டு. அதுபோல பொய் குற்றம் சாட்டுவது சிலருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.
மூன்றாவதாக யோவான் குறிப்பிடும்
காரியம் லஞ்சம். இன்று கிறிஸ்தவ அதிகாரிகள் (கிறிஸ்தவ பெயரைக்
கொண்ட) பலரும்கூட லஞ்ச ஊழலில் கையும் களவுமாகப் பிடிபடும் செய்தி
பத்திரிகைகளில் அதிகமாக வெளிவருவதைப் பார்க்கலாம்.
இதற்கெல்லாம் காரணம் பண ஆசையும் இச்சையும் தான். கண்ணில் கண்ட உலக
பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கவேண்டுமெனும் ஆசை, அதனை அடைய எப்படியாவது
பணத்தைத் தேடுகிறது.
அன்று யோவானிடம் போர் சேவகர்கள் ஞானஸ்நானம் பெறச் சென்றதுபோல இன்றும் மக்கள் ஆவிக்குரிய சபைகளில் சென்று ஞானஸ்நானம் பெற விரும்புகின்றனர். இவர்களில் பலரும் பாரம்பரிய சபை ஆராதனையில் ஒரு மாறுதலை விரும்புவதால் ஆவிக்குரிய சபைகளுக்குச் செல்கின்றனர். சிலர் வாரத்துக்கு ஒரு சபைக்குச் செல்கின்றனர். ஆனால் பலரது மனம் மாறவில்லை. இதுவரை வாழ்ந்த வாழ்வையே தொடர்கின்றனர். இதனால் பொதுவாக மக்களிடம் எல்லா சபையும் ஒன்றுதான் எனும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய மக்களைப் பார்த்துதான் யோவான் விரியன் பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? ( லுூக்கா 3 : 7 ) எனக் கேள்வி எழுப்பினார். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ( லுூக்கா 3 : 8 )
அதாவது நாங்கள் ஆவிக்குரிய சபை மக்கள் என்று கூறிக்கொள்ளுமுன் அதற்குரிய வாழ்க்கைக்குத் திரும்புங்கள். தேவன் எந்த சபையிலும் தனக்கு ஏற்ற மக்களை எழுப்ப வல்லவராய் இருக்கிறார். மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்க முயல்வோம். தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம் .
9
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் செருகிறவன் அவர் உண்டென்றும் , அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்" (எபிரேயர் - 11:6)
முன்னொருகாலத்தில் அமெரிக்காவில் அர்னால்டு எனும் ஒருவர் இருந்தார். அவர் சாகசங்கள் செய்வதில் வல்லவர். ஒருமுறை அவர் இரு பெரும் மலைச் சிகரங்களுக்கு இடையே ஒரு இரும்பு கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையின் ஒருபுறமிருந்து மறுபுறம் நடக்கப் போகிறேன் என அறிவித்தார்.
அதனை வேடிக்கைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இரு மலைகளுக்கிடையே இருந்த பள்ளத்தாக்கு இரண்டாயிரம் அடி ஆழமாக இருந்தது. அவர் வந்து நின்று , " இந்த அர்னால்டு கயிற்றில் நடந்து மறுபுறம் சென்று விடுவான் என நம்புகிறீர்களா?" என்று கூட்டத்தினைப் பார்த்துக் கேட்டார்.
"ஆம், நம்புகிறோம்..நம்புகிறோம்.." என்றது கூட்டம். அவர் அப்படியே நடந்து மறுகரையினை அடைந்தார். பின் ஒரு நாற்காலியைத் தன தலையின்மேல் தூக்கிப் பிடித்தபடி, "இந்த அர்னால்டு நாற்காலியைத் தூக்கிப் பிடித்தபடி கயிற்றில் நடந்து மறுபுறம் சென்று விடுவான் என நம்புகிறீர்களா?" என்று கூட்டத்தினைப் பார்த்துக் கேட்டார். கூட்டத்தினர், "ஆம், நம்புகிறோம்..நம்புகிறோம்.." என்றனர். அவர் அப்படியே நடந்து மறுகரையினை அடைந்தார்.
மூன்றாவதாக அவர் "இந்த அர்னால்டு நாற்காலியின்மேல் ஒரு மனிதனை வைத்து தூக்கிப் பிடித்தபடி கயிற்றில் நடந்து மறுபுறம் சென்று விடுவான் என நம்புகிறீர்களா?" என்று கேட்டார். "ஆம், நம்புகிறோம்..நம்புகிறோம்.." என்றனர் மக்கள். அர்னால்டு கூட்டத்தினரைப் பார்த்து , "அப்படியானால் உங்களில் யாராவது ஒருவர் வாருங்கள், நான் அப்படித் தூக்கிச் செல்கிறேன் என்றார்."
அர்னால்டுவின் திறமையைப் பார்த்துக் கைதட்டிப் பாராட்டிய ஒருவர்கூட முன்வரவில்லை. மட்டுமல்ல, வேடிக்கைப் பார்த்த பலர் கூட்டத்தைவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இன்று தேவனிடம் மக்கள் கொண்டுள்ள விசுவாசமும் இப்படித்தான் இருக்கின்றது. தேவன் வல்லவர், அதிசயங்களைச் செய்கிறவர் என விசுவாசிப்பதாக பலரும் சொல்லிக் கொள்கின்றனர். சிறு சிறு உலகத் தேவைகளுக்காக ஜெபித்து அவை கிடைத்தவுடன் சாட்சி சொல்கின்றனர். பிறர் அதிசய அற்புத சாட்சிகளைப் பகிர்ந்துகொள்ளும் போது கைகளைத் தட்டி, "அல்லேலூயா" என ஆர்பரிக்கின்றனர். ஆனால், தங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது தேவன்மேல் உள்ள விசுவாசம் காணாமல்போய்விடுகின்றது. அர்னால்டை விட்டு மக்கள் பின்வாங்கியது போல பின்வாங்குகின்றனர்.
" அந்தக்கால மக்கள் தேவனை முகமுகமாய் தரிசித்தார்கள்..அதனால் விசுவாசித்தார்கள் நாம் அப்படியா?" என்கின்றனர். "தேவன் இதனைச் செய்வார் என விசுவாசிக்கிறேன்....ஆனால் .." என இழுக்கின்றனர்.
மேலும் விசுவாசிகளில் பலருக்கும் தேவன் தங்களது பாவ குணங்களை மாற்ற வல்லவர் எனும் நிச்சயம் இருப்பதில்லை. இரட்சிக்கப்பட்டேன் எனக் கூறும் பலரும்கூட தொடர்ந்து சில பாவ காரியங்களில் தொடர்கின்றனர். உதாரணமாக, இச்சை எனும் பாவத்தைக் குறித்து பேசினால், அது நமக்குள் இருக்கத்தான் செய்யும்...முற்றிலும் மாற்ற முடியாது என்கின்றனர்.
வேதாகாமச் சாட்சிகளை தேவன் நமக்கு முன் உதாரணமாக வைத்துள்ளார். மனிதர்களாகிய நாம் மாறுகின்றோமே தவிர அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார்.
"ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;" (எபிரெயர் 12 : 1 )
விசுவாசத்தை ஒரு வரம் என வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 12:9) பல்வேறு வரங்களுக்காக ஜெபிக்கும் நாம் முதன் முதலில் இந்த விசுவாச வரம் நமக்கு கிடைத்திட ஜெபிப்போம். ஏனெனில், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.
10
" மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ , அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் - 8:14)
தேவனுடைய ஆவியினால் நடத்தப்படும் அனுபவத்தைப் பற்றி பவுல் அடிகள் இங்கு விளக்குகிறார். இயேசு கிறிஸ்துவும்கூட தான் உயிரோடு இருந்தபோது தனது சீடர்களிடம் இது பற்றி கூறினார். " நான் பிதாவை வேண்டிக்கொள்வேன் அப்போது என்றென்றேய்க்கும் உங்களோடுகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்' (யோவான் - 14:16)
மேலும் இயேசு கிறிஸ்து கூறினார், " அவர் வந்து பாவத்தைக் குறித்தும் , நீதியைக் குறித்தும், நியாயத் தீர்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்" (யோவான் - 16:8)
அதாவது பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தரப்படுவதன் நோக்கம் நாம் பாவத்தையும், நீதியையும் அறிந்து ஒரு ஆவிக்குரிய வாழ்வு வாழவேண்டிதான். ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் நடப்பதென்ன?
ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் பலரும் பரிசுத்த ஆவியினால் அல்ல பாஸ்டர்களால் நடத்தப்படும் ஒரு வாழ்வுதான் வாழ்கின்றனர். சில ஆவிக்குரிய சபைக்குச் செல்லும் மக்களிடம் பேசிப்பார்த்தால் இது புரியம். வார்த்தைக்கு வார்த்தை எங்கள் பாஸ்டர் கூறினார் என்றுதான் கூறுவார்கள். அல்லது பிரபலமான ஊழியக்காரர் பெயரைக் குறிப்பிட்டு அவர் கூறினார் என்பார்கள்.
இத்தகைய மக்கள் ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, காணிக்கை செலுத்துவது, உபவாசம் இருப்பது மற்றும் வேதாகம சம்பவங்களுக்கு விளக்கம் சொல்வது எல்லாமே பாஸ்டர் கூறுவதை அடிப்படையாகக் கொண்டுடோ பிரபல ஊழியக்காரர் கூறுவதைக் கொண்டோதான்.
பிரபல ஊழியரோ, பாஸ்டரோ, ஆயரோ, பேராயரோ அல்லது பல ஆண்டுகள் இறையியல் பேராசிரியராக பணியாற்றியவரோ கூறும் சத்தியத்தைவிட தெளிவான அருமையான விளக்கத்தை ஒன்றும் படிக்காத கூலி வேலை செய்யும் ஆவிக்குரிய மனிதன் கூற முடியும். காரணம் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு. ஆனால் மக்கள் சொல்லப்படும் சத்தியத்தைவிட சொல்லும் மனிதனைத்தான் பார்க்கின்றனர். அதனால் அவர்கள் தெளிவடைய முடியாமல் இருக்கின்றனர்.
இப்படிக் கூறுவதால் பாஸ்டர்கள் கூறுவதோ பிரபல ஊழியர்கள் கூறுவதோ தவறு என்றோ அதனைக் கேட்கக் கூடாது என்றோ பொருளல்ல. கண்மூடித்தனமாக அவர்கள் கூறுவதை நம்பாமல் அவர்கள் கூறுவது வேதம் கூறும் சத்தியத்துக்கு ஒத்து உள்ளதா என்று நிதானித்துப் பார்த்து ஏற்றுக்கொள்வதே நலம்.
இன்று அந்த நிலைமை இல்லாததால்தான் முட்டாள்தனமான , வேதம் கூறாத பல காரியங்களை பிரபல ஊழியர்கள் புகுத்தி மக்களைக் குழப்பியுள்ளனர். வேதாகமத்தை ஆவியின் துணையோடு வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத மக்களும் அவர்கள் கூறுவதை அப்படியே நம்பி ஏமாந்து போகின்றனர்.
ஆவியின் வல்லமை வேண்டும் வல்லமை வேண்டும் என ஜெபிக்கும் மக்கள் பலரும் நினைப்பது வல்லமை என்பது நோய்களைக் குணமாக்குவதும் பேய்களை ஓட்டுவதும் என்று எண்ணித்தான் கேட்கின்றனர். ஆனால் ஆவியின் வல்லமை என்பது முதலில் பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று அந்தப் பாவத்தை மீண்டும் செய்யாமல் விலகி வாழ்வதுதான்.
எனவேதான் வேதம் கூறுகின்றது, " ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை (ரோமர்-8:1)
ஆம், "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவன் அல்ல" (ரோமர்-8:9)
அன்பானவர்களே பிரபல ஊழியரோ, பாஸ்டரோ, ஆயரோ, பேராயரோ அல்லது பல ஆண்டுகள் இறையியல் பேராசிரியராக பணியாற்றியவரோ நம்மை வழிநடத்திடாமல் பரிசுத்த ஆவியானவரே நம்மை வழி நடத்த ஒப்புக்கொடுப்போம்.
11
" நாங்கள் மனுஷருக்கல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம் ' (1 தெசலோனிக்கேயர் -2;4)
இந்த வசனம் இன்றய ஊழியர்களை நம் கண்முன் நிறுத்துகிறது. இன்று பிரபலமான ஊழியர்கள் மற்றும் கன்வென்சன் பிரசங்கிகள் யாரை பிரியப்படுத்தப் போதிக்கின்றார்கள்?
தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிப்பதைவிட தங்களை, தங்கள் மகிமையை பிரசங்கிக்கும் போதகர்களே அதிகம். இவர்களது கூட்டங்களில் ஆசீர்வாத மழை பொங்கிப் பொழிவதைக் காணலாம். "கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார், இன்று முதல் நீ அசீர்வாதமாக இருப்பாய்..." என அலறுவதும் ஆசீர்வாத உபதேசங்களும் இன்றயைக் கூட்டங்களில் நிரம்பி வழிவதைக் காணலாம். ஆசீர்வாத ஜெபக் கூடுகைகள் , வியாபாரிகள் ஆசீர்வாத கூடுகைகள், திரைப்பட நடிகர்கள் ஆசீர்வாதக் கூடுகைகள் என அமர்க்களப்படுகின்றன.
பொதுவாக மனிதர்கள் தங்கள் குறைகளை, குற்றங்களை பிறர் சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. மாறாக அவர்களுக்குச் சாதகமாகப் பேசினால் ரசிப்பார்கள். மேலும் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு தேவ வார்த்தை என இந்தப் போதகர்கள் மனோதத்துவ முறையில் ஆறுதல் அளிக்க முயலுகிறார்கள்.
ஆனால் தேவன் கூறும் ஆசீர்வாத முறை இதுவல்ல. இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தைத் தொடங்கியது குறித்து மத்தேயு நற்செய்தி கூறுகிறது, "அதுமுதல் இயேசு " மனம்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசிங்கிக்கத் துவங்கினார்" (மத்தேயு - 4:17). மனம்திரும்புதலே ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆனால் அதனைப் போதித்தால் தங்களது வரும்படி பாதிக்கும் என இந்தப் போதகர்கள் நினைப்பதே அவர்கள் பாவ மன்னிப்பைக் குறித்து பேசாததற்குக் காரணம்.
"மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 18 : 32 )
மனம்திரும்பாமல் செத்து நரகத்துக்குச் செல்லக்கூடிய மக்களைப் பற்றியக் கவலையே இல்லாமல் "அதிசயம் ...அற்புதம்" என மக்களை மயக்கி தங்களது வயிற்றுப பிழைப்பை தேடும் போதகர்களை நோக்கி பேதுரு கூறுகின்றார்:- ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன் " (1 பேதுரு - 4:11)
என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். ( எரேமியா 23 : 1 )
"Woe be unto the pastors that destroy and scatter the sheep of my pasture! saith the LORD." ( Jeremiah 23 : 1 )
அன்பானவர்களே அதிசய அற்புத ஆசீர்வாதப் போதிக்கும் போதகர்களுக்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடலாம். வேதம் கூறுகிறது "இடுக்கமான வாசல் வழியே உட்பிரவேசியுங்கள் கேட்டுக்குச் செல்லும் வாசல் விசாலமானது ". கேட்டுக்கான வாசலை விசாலமாகத் திறந்து வஞ்சிக்கும் போதகர்களைப் புறக்கணித்து வேதம் கூறும் இடுக்கமான சரியான வழியில் நடப்போம். பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துணை நிற்பாராக.
12
"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள், அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை ". (ஏசாயா - 45:22)
நோக்கிப் பார்த்தால் உறவு வளரும். நமது வீட்டிற்கு வருபவரை நாம் நோக்கிப் பார்க்காமல் அவர்கள் வரும்போது வேறு எங்கேயோ நோக்கி வேறு ஏதாவது பணியில் இருந்தால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன எண்ணுவார்கள்? அதன் பிறகு நமது வீட்டிற்கு வருவார்களா?
நோக்கிப் பார்த்தல் என்பது மெய்யான உறவுக்கு அடையாளம். திருடர்களும் திருட்டு புத்தி உள்ளவர்களும் பிறரை முகத்துக்கு முகம் பார்ப்பதில்லை. ஏனென்றால் அவர்களது இருதயமே அவர்களை குத்தும். தேவன் கூறுகின்றார், உங்களிடம் குறைகள் குற்றங்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும் ..ஆனால் என்னை நோக்கிப் பாருங்கள், அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்.
சங்கீதம் 121:1 கூறுகிறது, "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்". பர்வதம் என்பது மலை. நாம் சில வேளைகளில் எவரிடமாவது உதவி கேட்கும்போது , " இந்தக் காரியத்தில் நான் உங்களைத்தான் மலைபோல நம்பியுள்ளேன்" என்று கூறுவதுண்டு. இங்கே சங்கீதக்காரன் தேவனை தனக்கு ஒத்தாசை தரும் மலையாகப் பார்க்கின்றார்.
ஆபிரகாம், மோசே , யோசேப்பு, தானியேல்...இன்னும் வேதத்தில் அனைத்துப் பரிசுத்தவான்களுமே இப்படி தேவனை நோக்கிப் பார்த்தவர்கள்தான். எனவேதான் தாவீது கூறுகின்றார், "அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள் ..அவர்கள் முகங்கள் வெட்கப்பட்டுப்போகவில்லை" (சங்கீதம் - 34:5)
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களது வாழ்க்கையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார்கள். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது அவர் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு ஏழை மனிதன் தினம்தோறும் ஒரு குறிப்பிட்ட சாலை ஓரம் நின்றுகொண்டு அவரது கார் எப்போது வரும் என அவரைப் பார்க்க நின்றுகொண்டு இருப்பானாம். இதனை எம்.ஜி.ஆர். அவர்கள் பல நாட்களாகக் கவனித்து வந்திருக்கின்றார். ஒருநாள் தனது கார் ஓட்டுனரிடம் தனது காரை அவனருகில் நிற்பாட்டச்சொல்லி அவனைக் கூப்பிட்டு விசாரித்திருக்கின்றார்.
அவன் சொன்னான், "ஐயா வேறு ஒன்றுமில்லை. நான் உங்கள் ரசிகன். உங்கள் முகத்தை தினமும் பார்க்கவேண்டுமென்றுதான் நான் இங்கே நிற்கின்றேன். உங்கள் கார் இந்த இடத்தைக் கடந்து சென்ற பின்பு உங்கள் முகத்தைப் பார்த்த திருப்தியோடு எனது அடுத்த வேலைகளைக் கவனிக்கச் செல்வேன்".
இந்தப் பதில் எம்.ஜி.ஆர். அவர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர் உடனே தனது உதவியாளரிடம் அந்த மனிதனைப் பற்றிய விபரங்களை சேகரித்துக்கொண்டு அவனையும் கூட்டிவா என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அந்த உதவியாளர் அதுபோல அவனைக் கூட்டிக்கொண்டு அவனைப் பற்றிய செய்தியினை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். அவனது தேவைகளை அறிந்த எம்.ஜி.ஆர். அவன் எதிர்பார்த்திராத ஒரு பெரிய தொகையினைக் கொடுத்து அவனை அனுப்பிவைத்தாராம்.
அன்பானவர்களே ஒரு சாதாரண உலக அதிகாரமுள்ள ஒரு மனிதனது முகத்தை நோக்கிப்பார்த்த மனிதன் இப்படி ஒரு உலக ஆசீர்வாதத்தைப் பெற்றானென்றால், அண்டசராசரங்களைப் படைத்தது ஆளும் தேவாதி தேவனை தினமும் நோக்கிப் பார்க்கும் நாம் எத்தகைய ஒரு மேலான ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ முடியும் என எண்ணிப்பாருங்கள் !
வேதாகமம் முழுவதும் பல நூறு சம்பவங்கள் இப்படி தேவனை நோக்கிப் பார்த்த மக்கள் அடைந்த ஆசீர்வாதத்தைக் குறிப்பிடுகின்றன.
அன்பானவர்களே, நமக்காக இரத்தம் சிந்தின இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள் .......
ஆணிகளால் கடாவப்பட்ட அவரையே நோக்கிப் பாருங்கள் ....
முதுகெல்லாம் காசை அடிகளால் உழப்பட்ட அவரை நோக்கிப் பாருங்கள் ......
நாம் உயிர் பெற வேண்டி தன்னுயிர் கொடுத்தவரை நோக்கிப் பாருங்கள் .....
மரித்து உயிர்த்து ஒருபோதும் சாகாமை உள்ளவராய் ஜீவித்திருக்கும் தேவாதி தேவனை நோக்கிப் பாருங்கள் ..... அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்
13
"கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தை பிரசிங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்திப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் கர்த்தருடைய அனுகிரக வருஷத்தைப் பிரச்சித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்" (லூக்கா - 4:18,19 & ஏசாயா - 61:1,2)
இந்த வசனத்துக்கு உலகப் பொருள்கொண்டு இயேசு கிறிஸ்து ஒரு இடது சாரி சிந்தனையுள்ள மனிதன் (கவனிக்க, மனிதன்) என்று எண்ணி அதற்கேற்ப சம்பவங்களை வேதாகமத்திலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும் சில போதகர்கள் சில கிறிஸ்தவ சபைப் பிரிவுகளில் இருக்கின்றனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் இறையியல் கல்லூரியில் பயின்றவர்கள் இவர்கள். இறையியல் படிப்பதால் ஒருவன் தேவனை அறிய முடியாது என்பதற்கு இவர்கள் சாட்சிகளாக உள்ளனர்.
இந்த ஊழியக்காரர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள்களின் கணக்குப்படி இன்று சமூக சேவை செய்யும் பலரும் கிறிஸ்துவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வெறும் ஜெபம் ஆராதனையைவிட இத்தகைய இரக்கச் செயல்பாடுகளே போதும் எனப் போதனைவேறு செய்கின்றனர்.
வேதம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து ஒரு தெளிவான பார்வை இருந்தாலே இத்தகைய வேதப் புரட்டர்களுக்குப் பதில் கூற முடியும். நம் நீதிச் செயல்களால் மட்டும் நாம் நீதிமானாக முடியாது என வேதம் கூறுகிறது.
இன்று சமூக சேவை செய்கிறோம் என்று கூறிக்கொள்பவர்களில் எத்தனைபேர் அதனை ஒரு சேவையாகச் செய்கின்றனர்? சமூக சேவை மற்றும் மக்களுக்கான விடுதலைச் சேவைகளில் ஈடுபடும் சேவை நிறுவனத் தலைவர்கள் எதற்காக அந்தச் சேவையில் ஈடுபடுகின்றனர் என்று பார்த்தால்:-
வெளிநாட்டிலிருந்து அல்லது உள் நாட்டிலிருந்து பண உதவி கிடைப்பதால் அப்படிச் செய்கின்றனர், அப்படிச் செய்வதால் தங்களது பெயர் பிரபலமடைவதால் செய்கின்றனர், ஏழை மக்களை முன்னிறுத்தி சேவை செய்வதால் தங்களது பிழைப்பு நடக்கிறது, எனவே சேவை செய்கின்றனர்.
இன்று சமூக சேவை எனும் பெயரில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று தங்களது குடும்பத்தை வளர்த்துக்கொள்ளும் பலரை நாம் பார்க்கிறோமே? சுனாமி இந்தியாவைத் தாக்கியபோது மக்களுக்காக வந்த பணத்தைச் சுருட்டி கார் பங்களா என வாங்கி குவித்த தொண்டு நிறுவனங்கள் எத்தனை எத்தனை?
ஆம் கிறிஸ்து ஒருவனுக்குள் உருவாக்காவிட்டால் அவன் இப்படிக் கொள்ளைக்காரனாகத்தான் இருப்பான். நமது நல்லச் செயல்களல்ல, செயல் செய்யப்படும் நோக்கத்தை தேவன் பார்க்கிறார்.
ஆம் மனிதனது நினைவுகள் அவன் சிறு வயது துவங்கி பொல்லாதவைகளாகவே இருக்கின்றன. கிறிஸ்துவின் ஒளி ஒரு மனிதனுக்குள் வரும்போது மட்டுமே அவன் தனது சுய ஆளுகையிலிருந்து விடுபட முடியும். எனவேதான் பரிசுத்த பவுல் அடிகள், "மனுஷன் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினால் அல்லாமல் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் " (ரோமர்- 3:28) என்று கூறுகிறார். நியாயப் பிரமாணம் உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரு என்று கூறுகிறது. அன்பினால் நான் ஏழைக்குச் செய்கிறேன் என்று ஒருவன் கூறினாலும் அது அவன் கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவனாக மாறினால் மட்டுமே பூரணமாகும்.
வை செய்வது, ஏழைகளுக்கு கொடுப்பது, உதவுவது நல்லதுதான் என்றாலும் ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் ஆட்கொள்ளப் பட்டால்தான் அது பூரணப்படும். நம்முடைய இருதயத்தில் தேவனுடைய அன்பின் ஆவியானவர் ஊற்றப்படவேண்டும். அப்போது சுய லாப நோக்கங்கள் அழிந்துவிடும்.
கிறிஸ்து உலக ஆசீர்வாதத்துக்காக உலகினில் வரவில்லை. கிறிஸ்து மக்களை தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்புடையவர்களாக மாற்றிட வழி காட்டிடவும் அதற்காக தனது இரத்தத்தைச் சிந்தி மறுபிறப்பு எனும் இரட்சிப்பின் வாசலைத் திறந்திடவும் வந்தார்.
நிக்கொதேமு எனும் யூத போதகரிடம் இயேசு கிறித்து கூறினார், " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் - 3:3) பல வருடங்களாக மக்களுக்கு தேவனைப் பற்றி போதித்த ஒரு மிகப் பெரிய யூத போதகருக்கே மறுபடி பிறக்கவேண்டியது அவசியமானதாக இருக்குமானால் நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை?
கிறிஸ்துவின் மறுபிறப்பு எனும் இரட்சிப்பை ஒருவன் பெற்றால் மட்டுமே அவன் கிறிஸ்துவுக்கு ஏற்ற ஊழியனாக இருக்க முடியும். அத்தகையவனே கிறிஸ்துவின் அன்புடன் சேவை செய்ய முடியும்.
14
"உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்திலே ஆளுகை செய்து தமக்குச் சித்தமானவனை அதன்மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல் - 5:21).
தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவ சபை எனக் கூறிக்கொள்ளும் பல சபைகளும் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்களென்றும் கூறிக்கொள்ளும் பல சபைகளின் விசுவாசிகளும் இன்று செயல்படும் விதங்கள் இவர்கள் சரியான கிறிஸ்தவ வழிகாட்டுதல் உள்ளவர்கள்தானா, கிறிஸ்தவ அடிப்படை போதனைகள் இந்தச் சபைகளில் போதிக்கப்படுகின்றதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
பல ஆவிக்குரிய சபைப் போதகர்களும் விசுவாசிகளும் சமூக வலைத் தளங்களில் வெளியிடும் கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணான கருத்துகளேயாகும். சாமீப காலங்களில் இன்றய ஆளும் பாரதீய ஜனதா கட்சி செயல்படும் முறையினை வைத்து இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் சிலவற்றைப் பாப்போம்.
"பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்து முற்றிலும் அகற்றப்பட உபவாசமிருந்து ஜெபிப்போம்" என ஒரு பதிவு ....
"அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் தோல்வி அடையவேண்டி உபவாசம் "
"கிறிஸ்தவர்களுக்கு எதிரான சக்திகள் அழித்து ஒழிக்கப்பட உபவாசம்"
இந்தக் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் தங்களை கிறிஸ்தவர்களின் பாதுகாவலர்கள்போல காண்பித்துக் கொண்டாலும் பொதுவாக இவர்கள் அனைவரும் ஆவிக்குரிய வழிநடத்துதல் உள்ளவர்கள் கிடையாது. ஏனெனில் இவர்கள் ஜெபம், உபவாசம் இவை பற்றி கொண்டுள்ள கருத்துக்களும் இவர்களது செயல்களும் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணானவையாகும்.
ஜெபத்தில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய காரியங்கள் பல உள்ளன.
முதலாவது ஜெபிக்கும் நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாகும். தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அல்லது ஆவியின் வழிநடத்துதல் இல்லாத ஓர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஜெபிப்பதால் எந்த பயனும் இல்லை. அது வெறும் வார்த்தை அலங்காரமாக மிருக்குமே தவிர தேவனுக்கு ஏற்புடையது ஆகாது. மத வைராக்கியம் கொண்டு நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மனதில்கொண்டு ஜெபிப்பதும் தேவனுக்கு ஏற்புடைய ஜெபமல்ல.
இந்த ஆவிக்குரிய சபைகள் ஜெபத்தை செய்வினை அல்லது பில்லி சூனியம் வைப்பதுபோல பயன் படுத்த முயலுவது தவறான காரியமல்லவா? நமக்கு விருப்பமில்லாதவர்கள் அல்லது நமக்கு எதிராக இருப்பவர்கள் அழிந்து ஒழிந்திட வேண்டுமென்று ஜெபிப்பது என்ன ஜெபம்?
உலகத்தில் ஒருவனுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பதும் அதனை எடுப்பதும் தேவனது சித்தம். "உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்திலே ஆளுகை செய்து தமக்குச் சித்தமானவனை அதன்மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல் - 5:21). அதாவது இன்று ஒருவர் தேசத்தின் தலைவராக இருக்கிறாரென்றால் அவர் தேவனுக்கு உகந்தவராக இல்லாவிட்டாலும் தேவனுக்குச் சித்தமானவர்தான். இந்த மக்களை இப்போது ஆள இவர் போதும் என்பவரை தேவன் ஆட்சியில் அமர்த்துகின்றார்.
"தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்துக்கு எதிர்த்து நிற்கிறான்" (ரோமர் - 13:1, 2)
மேலும் இயேசு கிறிஸ்து நாம்மைத் துன்பப்படுத்திக்கிறவர்கள் அழிய வேண்டுமென்றோ தோல்வியடையவேண்டுமென்றோ ஜெபிக்க நமக்கு கற்றுத்தரவில்லை. "நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு " (மத்தேயு - 5:39) என்றே கூறினார். "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்" (மத்தேயு - 5:44) என்றார். இதனைச் செயலிலும் காட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசை அப்போதும்கூட, "சிநேகிதனே" (மத்தேயு - 26:50) என்றே அழைத்தார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டி ஜெபித்தார். (லூக்கா - 23:34)
ஜெபத்தில் இரண்டாவது கவனிக்கவேண்டியது, தேவனது சித்தம் மட்டும் நிறைவேறிட ஜெபிப்பது. இதுவே மேலான ஜெபம். இயேசு கிறிஸ்து தான் பாடுபடுவதற்கு முந்தின இரவில் இப்படித்தான் ஜெபித்தார். "பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படிச் செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது" (மத்தேயு - 26:39) இதுவே மேலான ஜெபம். தேவனது சித்தம் யார் ஆட்சி செய்யவேண்டுமோ அவரை ஆட்சியில் அமர்த்தும்.
அன்பானவர்களே, ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகள் இந்தப் போதனைகளை மறந்துவிட்டார்களா அல்லது இந்த கிறிஸ்துவின் போதனை இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று முடிவுக்கு வந்துவிட்டார்களா?
ஒருவன் கிறிஸ்தவனாகி விட்டதால் அவனது துன்பங்கள் மாறிவிடும் என்று வேதம் கூறவில்லை. எனவே அப்படி ஒருவன் போதித்தால் அவன் பொய்யன். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் - 16:33) என இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார். ஆனால் கிறிஸ்தவனுக்குள்ள மேன்மை அனுபவம் என்ன? அது சோதனை ஏற்படும்போது அதனைத் தாங்கும் வலிமையையும் அதிலிருந்து விடுபடும் வழியை தேவன் தருவார். (வாசிக்க 1 கொரிந்தியர் - 10:13)
அன்பானவர்களே, ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகள் கூறும் தவறான உபவாச ஜெபங்களில் ஈடுபட்டு தேவனுக்கு எதிராகச் செயல்படாதிருங்கள். தேவ சித்தம் நிறைவேற ஜெபியுங்கள்.
15
" அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 )
"He was in the world, and the world was made by him, and the world knew him not."( John 1 : 10
இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரது அன்புச் சீடர் யோவான் குறிப்பிடும் உண்மை இது. இயேசு கிறிஸ்து உலகினில் இருந்தபோது எப்படி மக்கள் அவரை அறியாமல் இருந்தார்களோ அதுபோலவே இன்றும் பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்.
பல கிறிஸ்தவர்களும் இன்று இயேசுவை அற்புத அதிசயங்களை செய்யும் ஒரு மந்திரவாதியாக, நோய் ஏற்படும்போது ஒரு மருத்துவராக, தாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டை பாதுகாத்திடும் ஓர் காவல்காரனாக இப்படிப் பல விதங்களில் அவரைப் பார்க்கின்றனர். அவரை தேவாதி தேவனாக, மகத்துவமுள்ள…கர்த்தாதி கர்த்தராக, இரக்கமுள்ள ஒரு தகப்பனாக பார்ப்பவர்கள் வெகு குறைவான மக்களே.
ஒரு காதலன் அல்லது காதலி எப்படி தனது துணையிடம் பேசி உறவாட விரும்புவார்க்ளோ அதுபோல எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் இயேசுவை இயேசுவுக்காகவே அன்புசெய்யும் உள்ளங்கள் வெகு சொற்பமான மக்களே. ஆனால் இயேசு அப்படிப்பட்ட உள்ளங்களுக்காக தாகத்தோடு காத்திருக்கின்றார்.
இயேசு உலகினில் வாழ்ந்தபோது யூதர்கள் பலரும் அவரை தேவ குமாரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை அவர்கள் மரியாளின் மகனாக, யோசேப்பின் மகனாகத்தான் பார்த்தனர். அதற்குமேல் அவரை அவர்களுக்குத் தெரியவில்லை.
"இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6 : 3 )
அன்பானவர்களே , இன்றும் நாம் இயேசுவை இப்படிப் பார்த்தோமானால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாக இருப்போம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்த ஒரு சாதாரண மனிதனாக அவரை எண்ணிக்கொண்டதையே அது குறிக்கும் . அப்படியானால் நாம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக ஒரு பெயர் கிறிஸ்தவராகவே இருப்போம்.
"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 2,3 ) என வேதம் தெளிவாகக் கூறுகின்றது. அப்படியானால் அவர் எந்த ஒரு மனிதப் பிறவியோடும் ஒப்பிடமுடியாதவராகவே இருக்கிறார்.
அவர் ஆபிரகாமுக்கு முன்பே உள்ளவர். "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 8 : 58 ) என்று மிகத் தெளிவாகவே யூதர்களுக்கு அறிக்கையிட்டவர்.
அன்பானவர்களே , தேவனை அறியும் அறிவு இல்லையானால் இன்னும் நாம் யூதர்களைப்போலவே இருப்போம். தேவனிட ம் மெய்யான அன்பும் விசுவாசமும் நமக்குள் வராது. பெயரளவில் அவரை கடவுள் என்று கூறிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத குருட்டு வழிபாடுகளைக் கடைபிடித்துக் கொண்டிருப்போம். அவரை அறியும் ஞானத்தை பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தந்திட வேண்டுவோம். கிறிஸ்துவை சர்வ வல்லமையுள்ள தேவனாக ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே நமது ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாறுதல்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழமுடியும் .
16
"பொல்லாங்குச் செய்கிறவன் எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்காதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்". (யோவான் - 3:20)
ஒளியை விரும்பும் உயிரினங்களுக்கும் இருளை விரும்பும் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு. ஆந்தை, கூகை, தேள் கரப்பான், பூரான் இவைபோன்ற உயிரினங்கள் ஒளியை விரும்புவதில்லை. அவை எப்போதும் இருளான இடங்களையே தேடி பதுங்கி உயிர்வாழும். கற்களின் அடியிலும், மரப் பொந்துகளிலும் அவை தங்கியிருக்கும். அவை மறைந்திருக்கும் கற்களை அகற்றினால் அவை உடனே இருளைத் தேடி ஓடும்.
திருடர்களைப் பாருங்கள் அவர்கள் எங்கே திருடச் சென்றாலும் அங்குள்ள விளக்குகளைத் தான் முதலில் அணைப்பர். ஒளியான இடத்தில இருளின் உயிர்களுக்கு இடமில்லை.
உலக முடிவிலும் இருளான வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இதுவே நடக்கும். தேவன் இருளான நரகத்தில் தள்ளுமுன் பாவிகளின் பாவ வாழ்க்கையே அவர்களை இருளை நாடி ஓடச் செய்யும்.
இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். ஒரு திருமண வீட்டில் மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்கும்போது நல்ல ஆடையை அணிந்துள்ள விருந்தினர்கள் மேடையில் ஏறி நேரடியாக மணமக்களை வாழ்த்துவார்கள். மேடை வண்ண விளாக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு அரைகுறை ஆடையுடனோ நிர்வாணமாகவோ ஒரு மனிதன் வர நேர்ந்தால் அவன் மேடையில் வருவானா ? வெட்கப்பட்டு தன் மானத்தை மறைக்க இருளான இடத்தைத் தேடி ஓடுவானல்லவா?
ஒளியான வாழ்க்கையைப் பகைத்து இருளான பாவ வாழ்க்கையில் வாழும் மனிதன் இப்படியே இருப்பான். இரட்சிப்பின் ஆடை அணிந்தவர்கள் மணவாளனான இயேசுவிடம் நெருங்கி உறவாட , அந்த ஆடையில்லாத நிர்வாண மனிதன் தானாகவே தனக்கும் பிசாசுகளும் ஆயத்தம்பண்ணப்பட்ட இருளைத் தேடி ஓடுவான். ஆம் ஒளிக்கும் இருளுக்கும் சாம்மந்தமேது ?
"ஒளியானது உலகத்தில் வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினை தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது" (யோவான் -3:19)
"உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் -1:9) மெய்யான அந்த ஒளியிடம் வரும்போது எந்த மனுஷனும் பிரகாசமடைவான்.
சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது. ஆனால் அது சூரியனுடைய ஒளியை வாங்கி பூமிக்கு ஒளி கொடுக்கிறது. அதுபோலவே கிறிஸ்து இல்லாத மனிதன் கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும்போது நீதியின் சூரியனான அவரது ஒளியைப் பெற்று பிறருக்கு ஒளிகொடுப்பவனாக மாறுகின்றான். "நான் உலகத்திலிருக்கையில் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன் " (யோவான் 9:5) என்று கூறிய இயேசு கிறிஸ்து "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்" (மத்தேயு - 5:14) என்று இதனால்தான் கூறினார்.
நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்து நம்மை ஒளிரடையச் செய்ய நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்படைப்போம். மேலும் நாம் அவரது ஒளியைப் பெற்றுக்கொண்டவர்களாக இருந்தால் அது இருளடைந்திடாமல் பாதுகாப்போம். இயேசு கிறிஸ்து கூறுகின்றார், " உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு " ( லூக்கா - 11:35)
17
"சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." ( மத்தேயு 5 : 5 )
நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகள் ஒரு மாபெரும் அஹிம்சாவாதியாக மாறிடக் காரணம் மேலே குறிப்பிட்டுள்ள வசனம் என்று கூறுகிறார். சாந்தகுணமுள்ளவர்கள் இந்தப் பூமியையே சுதந்தரிக்க முடியுமென்றால் நான் ஏன் இந்தியாவை இந்தக் குணத்தால் சுதந்தரிக்க முடியாது? எனும் கேள்வியே அவரை அஹிம்சை முறையினைப் பின்பற்றச் செய்தது. அதுபோல அவர் இந்திய மக்களது இதயங்களைச் சுதந்தரித்துக் கொண்டார்.
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சந்தகுணத்தால் இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் சுதந்தரித்துக் கொண்டதை நாம் பார்க்கின்றோம். சாந்த குணத்துடன் வாழ அவர் பல அறிவுரைகளைக் கூறினார். உதாரணமாக:-
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு". ( மத்தேயு 5 : 39, 40 )
இயேசு கிறிஸ்து இவற்றைச் சொல்ல மட்டும் செய்யவில்லை செயலிலும் செய்து காட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசை அப்போதும்கூட, "சிநேகிதனே" (மத்தேயு - 26:50) என்றே அழைத்தார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டி ஜெபித்தார். (லூக்கா - 23:34) அதனால்தான் கிறிஸ்து உலகை சுதந்தரித்து நமக்கு மீடப்பையும் உண்டாக்கினார்.
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். ( சங்கீதம் 37 : 11 )
இன்று உலகினில் சண்டைகளும் பிரச்சனைகளும் ஏற்படக் காரணம் மக்களிடையே சாந்த குணம் இல்லாததினால்தான். ஒரு அடி நிலத்துக்காக பல தலைமுறைகளாக கோர்ட் வாசலுக்கு நடையாய் நடக்கும் குடும்பங்கள் பல. அந்த நிலத்தைத் தாங்களும் அனுபவிக்காமல் தங்கள் சந்ததிகளும் அனுபவிக்காமல் செத்து அழிகின்றனர். மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் சமாதானத்தையும் இழக்கின்றனர்.
வேதம் கூறுகின்றது "சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்."
(
சங்கீதம் 25 : 9 ) ஆம் அன்பானவர்களே, சாந்தகுணத்தோடு இருந்தோமானால் தேவ வழிகளை நமக்குப் போதித்து நடத்துவார்.
பொறுமை, அன்பு, தாழ்ச்சி போன்ற குணங்களை வாழ்வில் கடைபிடித்து தேவ வழியை அறிந்து நடக்க தூய ஆவியின் வழிநடத்தலை வேண்டுவோம் .
18
"சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி , அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார் ; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." ( தானியேல் 6 : 22 )
மேற்கண்ட தானியேலின் அறிக்கை, ஜெபம் மட்டுமல்ல சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை அதைவிட முக்கியம் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
தரியு ராஜா, தானியேலின் விரோதிகளின் நிர்பந்தத்தால் தானியேலை சிங்கக் கெபியினுள் போட்டாலும் அவனது மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அன்று இரவு ராஜாவுக்குத் தூக்கமும் வரவில்லை. மறுநாள் அதிகாலையில் ராஜா, "கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்."( தானியேல் 6 : 20 )
ராஜாவுக்குத் தானியேலின் ஜெப வாழ்க்கைத் தெரிந்திருந்தது. எனவேதான் இப்படிக் கேட்டான். அவனுக்கு மறுமொழியாகத் தான் தானியேல் மேற்கண்ட பதிலைக் கூறினார். இங்குத் தானியேல் கூறும் பதிலிலுள்ள அர்தத்தைப் பாருங்கள், "அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை"
அதாவது ராஜாவே நான் ஜெபித்தத்தினால் மட்டுமல்ல , நான் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்தேன், ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் (அதாவது உலக காரியங்களிலும் ) குற்றமற்றவனாக காணப்பட்டேன். எனவே சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்.
இதுவே நாம் அறியவேண்டிய சத்தியம் . ஜெபிப்பதோடு நமது வாழ்க்கை உண்மையுள்ளதாக இருக்கவேண்டும்.
கடவுளுக்குமுன்பாக உண்மை
உலக காரியங்களில் உண்மை
ஆனால் இன்று ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களிடம் இவை இரண்டும் இல்லை. அவர்கள் நன்றாக ஜெபிக்க அறிந்திருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து சில மணி நேரம் ஜெபிக்கிறார்கள். ஆனால் தேவனுக்கு முன்பாக உண்மையில்லை. பல பாவ பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதுபோல உலக காரியங்களிலும் உண்மையில்லாதவர்களாக பொய், லஞ்சம், செய்யும் வேலையில் உண்மையில்லாத தன்மை இவைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அன்பானவர்களே இப்படி ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஜெபம் மட்டுமே நம்மைக் காப்பாற்றும் என எண்ணிக்கொண்டிருந்தோமானால் நிச்சயமாக ஏமாந்துபோவோம்.
ஜெபம், வாழ்க்கை இரண்டும் கிறிஸ்தவ வாழ்வின் இரு கண்கள். ஜெபம் எனும் கண்ணை வைத்துக்கொண்டு வாழ்க்கை எனும் மறு கண்ணை இழந்து ஒற்றைக் கண்ணர்களாக வாழ்வது பரிதபிக்கத்தக்கது.
19
"அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல". ( 1 யோவான் 4 : 18 )
திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலம் அது.
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் ஒரு திரைப்படத்தில் நடித்தார். தான் நடித்ததை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று நேரடியாக அறிந்துகொள்ள திரை அரங்கத்தினுள் மாறுவேடத்தில் வந்து அமர்ந்திருந்தார்.
திரையில் அவர் தோன்றியவுடன் மக்கள் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தனர். திரையில் ஹிட்லர் என்ன செய்தாலும் அதனை ரசித்துக் குரல் எழுப்பினர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் மெதுவாகத் தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம், " இந்த ஹிட்லர் அப்படி என்ன பிரமாதமாக நடிக்கிறான்? அவனுக்கு ஏன் இப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் ?" என்று கேட்டார்.
அவருக்கு மறுமொழியாக அந்த மனிதன், " ஐயா, நீங்கள் வெளிநாட்டவர் என எண்ணுகிறேன். இங்கு ஜெர்மனியில் ஹிட்லர் என்ன செய்தாலும் அதனைப் பாராட்டவேண்டும். இல்லையானால் அவன் நம்மைச் சுட்டுக் கொன்று விடுவான்" என்று பதில் கூறினார்.
இன்று பல கிறிஸ்தவர்கள் தேவனிடம் ஜெபிப்பது, காணிக்கை கொடுப்பது, வேதம் வாசிப்பது எல்லாமே இப்படி ஒரு மனநிலையில்தான். அன்று மக்கள் எப்படி ஹிட்லருக்கு பயப்பட்டனரோ அதுபோல ஓர் வித பயத்தினால் தேவனை வழிபடுகின்றனர். ஒருவேளை நாம் இவைகளை செய்யவில்லையானால் தேவனது சாபத்தையும் கோபத்தையும் பெற்றுவிடுவோம் எனும் பயத்தால் செய்கின்றனர். தங்களது ஆசீர்வாதங்களை இழந்துவிடுவோமோ எனும் பயத்தில் செய்கின்றனர். தங்களது சுய ஆசை இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள தேவனைத் தேடுபவர்கள் இப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை.
"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் ; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை " (1 யோவான் - 2:15)
பழைய ஏற்பட்டு பக்தர்கள் தேவனை தகப்பனாக பார்க்கவில்லை. அவர்கள் அவரைச் சேனைகளின் கர்த்தராக, கண்மலையாக, கோட்டையாக, பட்சிக்கிற அக்கினியாகப் பார்த்தனர். ஆனால் தேவன் நமது தகப்பன். தேவனை அப்பா எங்க கூப்பிட இயேசு நமக்குக் கற்றுத் தந்துள்ளார். தகப்பனாக தேவனை நாம் பார்ப்போமானால் தேவையற்ற பயங்கள் நம்மைவிட்டு அகலும்.
தேவனை நாம் ஒரு தந்தைக்குரிய பாசத்துடன் நெருங்கவேண்டும். அது எப்போது முடியும்? அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளும்போதுதான். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூருவதாகும், அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல "
(1 யோவான் - 5:3)
தகப்பனுக்குரிய அன்போடு தேவன் நம்மை அணைத்துக்கொள்ள நாம் இடம்தருவோம். பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
நம்முடைய பலவீனங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும் . எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர் அவர். ஆனால் பாவமில்லாதவர். ஆதலால் அவரிடம் இரக்கம்பெற நாம் பயப்படாமல் தைரியமாய் அவரது கிருபாசனம் அருகே செல்வோம்.
"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்."
( எபிரெயர் 4 : 15, 16
)
20
"............பூரணராகும்படி கடந்துபோவோமாக." (
எபிரெயர் 6 : 2 )
நாம் பூரணமாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். தேவன் எதிலுமே ஒரு நிறைவை அல்லது ஒரு முழுமையை விரும்புகின்றார். அன்பில், பரிசுத்தத்தில், நீதியில் எல்லாவற்றிலும் ஒரு முழுமை வேண்டுமென விரும்புகிறார். ஒரு சில வேளைகளில் மட்டும் இவைகளில் நிலைத்திருப்பது போதாது.
இன்று ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் பலர் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளிலும் ஒருசில சடங்குகளைக் கைக்கொள்வதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர அதற்குமேல் செல்லத் துணிவதில்லை. அல்லது அதுபற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். ஜெபங்கள், உபவாசம், வேத வாசிப்பு, ஆராதனைகளில் பங்கேற்பது, இவையே போதும் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இவை மட்டும் போதாது என வேதம் கூறுகின்றது. எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார் :-
"ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக".
( எபிரெயர் 6 : 1, 2 )
பழைய ஏற்பட்டு கால ஆசாரிப்புக் கூடாரத்தைக் கொண்டு பூரணத்தை விளக்கலாம். ஆசாரிப்புக் கூடாரத்தில் மூன்று பிரிவுகள் இருந்தன. வெளிப் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்தஸ்தலம். வெளிப் பிரகார தண்ணீர்த்தொட்டியில் தங்களை கழுவி பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்தனர். அங்கு தேவ சமூகத்து அப்பங்களும், எரிகின்ற குத்துவிளக்கும் , நறுமண தூப பீடமும் இருந்தன. அதக்குப் பின் மகா பரிசுத்த ஸ்தலம் இருந்தது. அது ஒரு திரைச் சீலையால் பிரிக்கப்பட்டிருந்தது.
இன்றய புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இவை முறையே ஞானஸ்நானம் (தண்ணீர்த்தொட்டியில் கழுவுதல்), தேவனின் வார்த்தை (தேவ சமூகத்து அப்பம்), பரிசுத்த ஆவியின் அபிஷேகம் (எரிகின்ற குத்துவிளக்கு) நறுமண தூபம் (துதி ஆராதனை) இவைகளைக் குறிக்கின்றன. இவைகளையே ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு அப்பால் உள்ளதுதான் மகா பரிசுத்த ஸ்தலம்.
முற்காலத்தில் பிரதான ஆசாரியன் ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளாட்டுக்கடா, காளையின் இரத்தத்தால் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு இதனுள் நுழைவான். ஆனால் கிறிஸ்து இயேசுவால் நாம் இன்று மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடிகிறது. கிறிஸ்து மரித்தபோது தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழாக கிழிந்தது இதனை உணர்த்தவே. பரிசுத்த ஸ்தலத்துக்கு மகா பரிசுத்த ஸ்தலத்துக்குமிடையே இருந்த திரை அவரால் விலகியது.
"வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."
( எபிரெயர் 9 : 12 ) என்று வாசிக்கிறோம்.
இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைவதே நம்மைப் பூரணப்படுத்தும். அங்குள்ள கிருபாசனத்திலிருந்து தேவன் பிரதான ஆசாரியனிடம் பேசினார். இன்றும் இந்த அனுபவத்தில் நாம் வரும்போது தேவ சத்தத்தைக் கேட்கலாம். அவர் நம்மை வழி நடத்த அவரோடு நடக்கலாம். பாவங்களிலிருந்து முற்றிலும் ஜெயம் கொள்ளுகிற ஒரு வாழ்க்கை வாழ அவர் நமக்கு உதவுவார். இப்படிச் செல்வதே பூரணத்தை நோக்கி கடந்து செல்வது.
" மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல்" என்று வேதம் கூறுவதால் இவை அஸ்திபார உபதேசங்கள் என்பது புரியும். அஸ்திபாரம் மட்டும் போதாது, அதற்குமேல் நாம் கட்டப்படவேண்டும்.
தேவனது கிருபையைப் பெற்று தூய ஆவியின் வழிநடத்துதலில் நடக்கவேண்டும். தேவையற்ற பல்வேறு உபதேசங்களைப் பிடித்துக்கொண்டு இருப்போமானால் பழைய ஏற்பாட்டுக்கால பரிசேயரைப்போலவே இருப்போம். எனவே பூரணராகும்படி கடந்துபோவோமாக.
21
"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது."
( மத்தேயு 15 : 8 )
ஏசாயா தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகளை (ஏசாயா - 29:13) இயேசு இங்கு மேற்கோள்காட்டிப் பேசுகின்றார். பெரும்பாலான ஊழியர்களும் மக்களும் இதுபோலவே இருக்கின்றனர்.
இந்த மக்களது வாயில் தேவனைத் துதிக்கும் துதிகளும் வேத வசனங்களும் இருக்கும், காணிக்கைகள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள், மிகுதியாய் ஜெபிப்பார்கள், உபவாசமிருப்பார்கள், ஜெபக் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள், ஆனால் அவர்களது இதயமோ தேவனைவிட்டுத் தூரமாகி இந்த உலக இச்சைகளில் மூழ்கி இருக்கும்.
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியம்செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான் அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைப் பண்ணுவான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது." (மத்தேயு - 6:24) என்றார் இயேசு கிறிஸ்து . ஆனால் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களும் அவர்களை பின்பற்றுகின்ற மக்களும் மிகத் தாராளமாக இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கின்றனர்.
ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, உபவாசிப்பது இவை எளிது. யாரும் செய்யலாம். எல்லா மத மக்களும் இத்தகையைச் செயல்பாடுகளை தங்கள் தங்கள் மதத்துக்குரிய முறைமைகளின்படி செய்கின்றனர். எனவே இவைகளைக் கொண்டு ஒரு மனிதனை நாம் ஆவிக்குரிய மனிதன் என எடைபோட முடியாது.
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் , அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் " (மத்தேயு - 5:8) என்றார் இயேசு கிறிஸ்து . நமது இருதயத்தில் பொய் , புரட்டு, வஞ்சகம், வேசித்தனம், ஏமாற்று போன்ற குணங்களை வைத்துக்கொண்டு வாயினால் தேவனைத் துதிப்பதும் அவரை ஆராதிப்பதும் வீண். இத்தகையக் குணங்கள் தேவனை நம் இருதயத்தை நெருங்க முடியாதவாறு தடுக்கின்றது . நமது இருதயம் தேவனை விட்டுத் தூரமாய் விலகிப் போகின்றது . எனவேதான் இயேசு கிறிஸ்த்துக் கூறினார்:-
"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
( மத்தேயு 18 : 3 ) சிறு பிள்ளைகளுக்கு பொய் , புரட்டு, வஞ்சகம், வேசித்தனம், ஏமாற்று போன்ற குணங்கள் இருப்பதில்லை. எனவேதான் இயேசு இப்படிக் கூறினார்.
அன்பானவர்களே, வெறும் ஜெபம், வேத வாசிப்பு, உபவாசம், காணிக்கை அளித்தல், ஜெபக் கூட்டங்களில் பங்கெடுத்தல் இவை மட்டும் போதாது, நமது இருதயம் தேவனுக்கு நெருக்கமாக வேண்டும். நம்மை நாமே வஞ்சித்திடாமல் நமது குற்றங்குறைகளை உணர்ந்து திருந்துவோம்.
வாயினால் தேவனிடத்தில் சேர்ந்து, உதடுகளினால் தேவனைக் கணம் பண்ணி நம் இருதயம் தேவனுக்குத் தூரமாக இருக்குமேயானால் நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை.
22
"நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு."
( மத்தேயு 6 : 17 )
இன்று கிறிஸ்தவர்கள் செய்யும் வேதத்துக்கு முரணான முக்கியமான செயல்களில் ஒன்று மேற்கண்ட வசனத்தை மீறுவது. இது இயேசு கிறிஸ்து கூறிய ஓர் சிறிய கட்டளை. ஆனால் இந்தச் சிறிய கட்டளையைக் கூட ஊழியர்கள் கடைபிடிப்பதில்லை.
உபவாசமிருப்பது நமது தனிப்பட்ட - நமக்கும் தேவனுக்குமான செயல். எனவேதான் இயேசு கிறிஸ்து அது மறைவாய் இருக்கவேண்டுமென்று கூறினார். ஜெபம், காணிக்கை அளித்தல் , உபவாசம் இவை அனைத்துமே அந்தரங்கத்தில் நமக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டிய காரியங்கள்.
ஆனால் இன்று நடப்பதென்ன? உபவாச ஜெபம், உபவாச காத்திருப்புக் கூட்டம் என போஸ்டர் ஒட்டி உபவாசமிருக்கின்றனர்.
"நீ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக" என்றார் இயேசு. ஆனால் இவர்களோ போஸ்டர் ஒட்டி விளம்பரப் படுத்தி உபவாசமிருக்கின்றனர்.
"நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
( மத்தேயு 6 : 16 )
மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் கூறுகின்றார், "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை."(
1 கொரிந்தியர் 8 : 8 ) சாப்பிடாமல் இருக்கிறான் என்பதற்காக தேவன் நமது விண்ணப்பத்தைக் கேட்டுவிடுவதில்லை. முதலாவது நமது மனமானது தூய்மையாக வேண்டும்.
"போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே."
( எபிரெயர் 13 : 9 )
இப்படிச் சொல்வதால் உபவாசம் இருக்கவேண்டாம் என்று பொருளல்ல. உபவாசமிருப்பதை ஒரு ஞாயப்பிராமணக் கட்டளைபோல அனுசரிப்பது சரியல்ல. சில வேளைகளில் தேவனே நமக்கு உணர்த்துவார். (தேவன் நமக்கு உணர்த்துவதை புரிந்துகொள்ளும் நிலைக்கு முதலில் வரவேண்டும்.) அப்படி உணர்த்தப்படும் போது கண்டிப்பாக அதனைக் கடைபிடிக்க வேண்டும். நமது தனிப்பட்ட ஆவிக்குரிய காரணங்களுக்காக தேவன் அதனை நமக்கு நியமிக்கலாம். மாறாக, சாப்பிடாமல் இருந்தால் நமது ஜெபம் கேட்கப்படும் என எண்ணுவதோ, "நான் உபவாசமிருக்கிறேன்" என ஊர் அறிய தண்டோரா போடுவதோ கிறிஸ்து கட்டிய வழியல்ல.
அனைத்து மத மக்களும் உண்ணா நோன்பு இருக்கின்றனர். ஆனால் போஸ்டர் அடித்து கூட்டம்போட்டு அதனை விளம்பரப் படுத்துவதில்லை.
இறுதியாக தேவனுக்கு உகந்த உபவாசம் எது என்பதை ஏசாயா பின்வருமாறு கூறுகின்றார்:-
"பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்."
( ஏசாயா 58 : 7 )
உபவாசமிருக்கும்போது இதனையும் கருத்தில் கொள்வோம் .
23
"தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்."
( 2 கொரிந்தியர் 10 : 18 )
தற்புகழ்ச்சி சிலருக்குத் தாராளமாக வரும். வார்த்தைக்கு வார்த்தைத் தங்களது பெருமைகளைக் கூறி மகிழ்வர். ஆனால் ஒன்று... தற்பெருமைக்காரன் பேச்சை வேறு வழியின்றி கேட்பவர்கள் பின்பு அதனை தங்களுக்குள் சொல்லிச் சிரிப்பர் என்பது தற்பெருமை பேசுபவனுக்குத் தெரியாது. அரசியல்வாதிகள் தற்பெருமையில் கைதேர்ந்தவர்கள்.
ஆனால் வேதம் கூறுவதுபோல தற்பெருமை பேசும் மனிதன் உத்தமனாய் இருப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் ஆலயங்களுக்கு ஏதாவது சிறிய அன்பளிப்பு அளித்திருந்தாலும் அதில் பெரிய எழுத்துக்களில் தங்களது பெயரை பொறித்திடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஒரு ஆலயத்தில் நான் பார்த்த ஒரு காரியம், ஒருவர் மின் விசிறி ஒன்று காணிக்கை அளித்துள்ளார். அதில் மூன்று இறக்கைகளிலும் ஒன்றில் அவரது பெயர், மற்றொன்றில் மனைவி பெயர், இன்னொன்றில் தனது மகள் பெயர் எனப் பொறித்திருந்தார். இவர்களை புத்தியில்லாதவர்கள் என்று வேதம் கூறுகின்றது.
"........தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
( 2 கொரிந்தியர் 10 : 12 ) எனக் கூறுகின்றார் பவுல் அடிகள்.
கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்பவனுக்குக் கிறிஸ்துவின் தாழ்மை வேண்டாமா? இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் கூட பெருமைக்கு அடிமையாகி தங்களைக் குறித்து, தங்கள் வல்லமைப்பிரதாபத்தைக் குறித்து பெருமை பாராட்டுவதற்கு அளவே இல்லை. தங்களுக்குத் தாங்களே , " தீர்க்கதரிசன வரம் பெற்றவர்"
," குணமாக்கும் வரம் பெற்றவர்", "அப்போஸ்தலர்" போன்ற பட்டங்களைக் கொடுத்து போஸ்டர் அடித்து விளம்பரம் தேடுகின்றனர். பலருடைய ஆடை அலங்காரம் வேறு சினிமா நடிகர்களை மிஞ்சுகிறது. இவை பிற மத மக்கள் மத்தியில்கூட கேலிபேசப்படுகிறது.
கிறிஸ்துவின் தாழ்மை குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்."
( பிலிப்பியர் 2 : 6 - 8 )
தேவாதி தேவன் தன்னைத் தான் படைத்த மனிதனுக்கு ஒப்பாக மாற்றி அந்த மனிதர்கள் கையால் மரிக்கவும் முன்வந்தார். ஆனால் அற்ப மனிதர்கள் பெருமைபேசி அழிக்கின்றனர். ஆம், 'அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
( நீதிமொழிகள் 16 : 18 )
Pride goeth before destruction, and an haughty spirit before a fall. (
Proverbs 16 : 18 )
தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார் என வேதம் கூறுகின்றது. அற்பத்தனமாக நம்மை நாமே உயர்வாகப் பேசிப் பேசி தாழ்ந்து போய்விடக் கூடாது .
........"ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர் களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்."
( 1 பேதுரு 5 : 5 )
அன்பானவர்களே, தாழ்மையை அணிந்துகொண்டு தேவ கிருபையைப் பெற்று ஆவிக்குரிய வாழ்வில் வளர்வோம் . அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார், " கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார் " (யாக்கோபு - 4:10)
24
"அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நானளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது" (வெளிப்படுத்தின விசேஷம் - 22:11,12)
ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "இந்த வசனம் தவறு போல இருக்கிறது. அது எப்படி கடவுள் அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் அசுத்தனாயிருக்கிறவன் இன்னும் அசுத்தனாயிருக்கட்டும் என்று கூறுவார்?" என்று கேட்டார். அவர் கேட்டது சரிபோல தெரிந்தாலும் இந்த வசனம் கூறும் செய்தி நம்மைச் சிந்திக்கச் செய்வதாகும்.
இந்த வசனம் உண்மையில் தேவனுடைய மன ஆதங்கத்தினை உணர்த்துகிறது. ஆதியாகமம் முதல் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேஷம் வரை எவ்வளவோ நீதியுள்ள கட்டளைகளை தேவன் நமக்குத் தந்துள்ளார். மட்டுமல்ல இந்தக் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்ந்த பரிசுத்தவான்களது சாட்சிகளையும் நமக்குத் தந்துள்ளார்.
"இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே ஜாதியும் ஏது ?" (உபாகமம் - 4:8) என தேவன் கேட்கிறார்.
அதாவது இவ்வாவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்ற நீங்கள் இன்னும் திருந்தவில்லையானால் அப்படியே இருந்து அழிந்து போங்கள் என்பது பொருள்.
ஒரு ஆசிரியர் மாணவனுக்குப் பாடங்களைப் போதித்து, வீட்டுப் பாடங்களையும் கொடுக்கிறார். பல மாணவர்கள் அதற்குக் கீழ்ப்படிகின்றனர். ஒரு சில அடங்காத மாணவர்கள் எதற்கும் கீழ்ப்படிவதில்லை. பாடங்களையும் படிப்பதில்லை. ஆசிரியரையும் கேலி கிண்டல் செய்வர். அந்த ஆசிரியர் இறுதியில் பொறுக்கமுடியாமல் அவர்களைப் பார்த்துக் கூறுவார், "என்னால் முடிந்தவரை நான் முயன்றுவிட்டேன்..இனி படித்தால் படியுங்கள் அல்லது எக்கேடும் கெட்டுப்போங்கள். இறுதித் தேர்வில் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்". தேவன் கூறுவதும் இதுதான்.
"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.."....( எபிரெயர் 1 : 2 )
பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலம் பல்வேறு வகைகளில் பேசிய தேவன் இறுதியில் தனது குமாரனான இயேசு கிறிஸ்து மூலம் மக்களிடம் பேசினார். அவர் பல்வேறு அற்புதங்கள் மூலம் தான் கூறுவது மெய் என்பதை நிரூபித்தார். " நான் சொல்வதை நம்புங்கள், இல்லையானால் என் கிரியைகளின் நிமித்தமாவது என்னை நம்புங்கள் " என்றார். இப்படி முயன்றும் இன்னும் திருத்தமாட்டோம் என பிடிவாதத்தால் இருக்கும் மக்களை பார்த்தே, "அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்", என்று கூறப்பட்டுள்ளது.
நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், என்று கூறியபடி நாம் முயல்வோம். இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் அவரோடுகூட வருகிறது.
25
"கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 17 )
ஒருவன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெறவேண்டுமானால் முதலில் தான் ஒரு அடிமை என்பதை உணரவேண்டும். மட்டுமல்ல, ஒரு உரிமைக் குடிமகனுடைய அதிகாரம், உரிமைகள் என்னென்ன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியா அடிமைப்பட்டிருந்தபோது சுதந்திர போராட்டத் தலைவர்கள் அந்தப் பணித்தியைத்தான் செய்தார்கள். மஹாத்மா காந்தி மட்டுமல்ல அனைத்து இந்தியாவிலும் பல தலைவர்களும் எழுத்தாளர்களும் இருந்து மக்களை உணர்வடையச் செய்தனர். தமிழகத்தில் மகாகவி பாரதியார், வ.உ .சி ., கல்கி போன்றோரை நாம் குறிப்பிடலாம்.
இதுபோல ஆத்தும விடுதலை மக்களுக்குத் தேவையாய் இருந்தது. மக்கள் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் அறியாதவர்களாக இருந்தனர். பாவத்தைக் குறித்து அறியாத யூதர்களிடம் இயேசு கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 )
நாங்கள் யாருக்கும் இதுவரை அடிமையாகவில்லை என்று கூறிய யூதர்களிடம்தான் இயேசு கிறிஸ்து இப்படிக் கூறினார். மட்டுமல்ல, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகும் வழியையும் கூறினார்;- "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்." ( யோவான் 8 : 32 )
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று கூறிய இயேசு கிறிஸ்துதான் சத்தியம். சத்தியமான அவரை அறியும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்து விடுதலை அடைய முடியும். "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," ( யோவான் 8 : 36 )
இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னிக்கிறவர் மட்டுமல்ல பாவ பழக்கத்திலிருந்து விடுதலையும் தருபவர்.
பழைய ஏற்பட்டு மக்கள் பாவ மன்னிப்புபெற கிடா அல்லது காளைகளைப் பலியிட்டு வந்தனர். ஆனால் மன்னிப்பு பெற்றபின் திரும்பத் திரும்ப அதே பாவத்தைச் செய்து மறுபடி மறுபடி பலியிட்டு வந்தனர். ஆம் அந்தப்பலிகள் மனிதரைப் பூரணப் படுத்த மாட்டாது. ".....வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது."( எபிரெயர் 10 : 1 )
அன்பானவர்களே நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றால் மட்டும் போதாது பாவத்திலிருந்து முழு விடுதலையும் பெற வேண்டும். அந்த விடுதலை நமது விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம் மட்டுமே உண்டு. பாவ மன்னிப்புக்காக மட்டும் ஜெபிக்காமல் ஆண்டவரே நான் இன்னின்ன பாவ சுபாவங்களை விட முடியாமல் இருக்கிறேன் அவற்றிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என வேண்டினால் மட்டுமே விடுதலை வாழ்வைப் பெற்று மகிழமுடியும் .
ஆம், குமாரன் (இயேசு கிறிஸ்து ) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," ( யோவான் 8 : 36 )
26
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்."( 1 பேதுரு 5 : 8 )
அப்போஸ்தலனாகிய பேதுரு பிசாசின் குணத்தைப்பற்றி தெளிவாக விளக்குகின்றார். ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளைக் கவிழ்த்துப்போட்ட பிசாசு தனது தந்திரங்களை இன்னும் நிறுத்தவில்லை. பெருமையினால் தான் இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் அனுபவித்து விடக்கூடாது என்பதில் அவன் வைராக்கியமாக இருக்கின்றான். இதனால்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகின்றான்.
இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது பிசாசின் தலையை நசுக்கினார். அதனால் தலை நசுக்கப்பட்ட ஆதி சர்ப்பம் இப்போது வலு இழந்தவனாக இருக்கிறான். தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு வாழ்க்கை வாழும்போது சிங்கம் போன்ற பிசாசு நம்மைவிட்டு ஓடிப் போவான்.
"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )
ஆனால் மனிதர்கள் நாம் மாறி நிற்கின்றோம். பிசாசைக் கண்டு பயந்து ஓடுகின்றோம் ஆனால் பாவத்துக்கு எதிர்த்து நிற்க முயன்று பாவத்தில் விழுகின்றோம். காரணம் நாம் பல பாவ காரியங்களைப் பாவம் என்று எண்ணுவதில்லை. பிசாசு நமது மனதை மயக்கி வைத்துள்ளான். "இதெல்லாம் பெரிய பாவமா?" எனும் எண்ணத்தை நம்மில் விதைப்பதே பிசாசுதான். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். ( யோவான் 8 : 44 )
இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்துள்ளார். போர் செய்பவன் எப்படி தன்னைப் பாதுகாத்திட சில கவசங்களையும் எதிரியைத் தாக்கிட சில ஆயுதங்களையும் வைத்திருப்பானோ அதுபோல நமக்கும் தேவன் சில பாதுகாப்புக் கவசங்களையும் ஆயுதங்களையும் தந்துள்ளார். இதனைப் பவுல் அடிகள்,
"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". ( எபேசியர் 6 : 11 )
"ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" ( எபேசியர் 6 : 13 ) என்று கூறுகின்றார். அவை என்ன கவசங்கள், ஆயுதங்கள் ?
சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் , இரட்சணியமென்னும் தலைச்சீராய், தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் ( எபேசியர் 6 : 14-17 )
மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக்கு கவசங்களையும், போர் ஆயுதங்களையும் நாம் கையாண்டால் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியம் பிசாசு நம்மை விட்டு ஓடுவான்.
இந்தக் கவசங்களும் ஆயுதங்களும் நம்மிடம் எப்போதும் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும். அன்பானவர்களே பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பலத்துடன் வாழ்ந்து ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெறுவோம்.
27
"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."
( சங்கீதம் 34 :
19 )
ஒருவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ கல்லூரிப் பேராசிரியராகவோ ஆகவேண்டுமென்றால் நேரடியாக அப்படி ஆகிட முடியாது. ஒவ்வொரு வகுப்பாக தேர்வு எழுதி வெற்றிபெற்று, இறுதியில் போட்டித் தேர்வு, இன்டெர்வியூ எனப் பல கட்டங்களைத் தாண்டியே அப்படி ஆக முடியும். இந்தத் தேர்வுகளைப் போலவே நமது வாழ்க்கையிலும் நாம் ஆவிக்குரிய சிறந்த மனிதனாக மாறப் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. இந்தத் தேர்வுகளைப் போன்றவையே துன்பங்கள்.
ஒருவன் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டவனாக, நீதிமானாக இருப்பதால் அவனுக்குத் துன்பங்கள் வராது என வேதம் கூறவில்லை. மாறாக நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்றே கூறுகிறது. துன்பங்களும் பாடுகளும் உலகத்தில் பிறந்த ஒவொருவருக்கும் உண்டு. நீதிமானுக்கு அதிகம் உண்டு. ஆனால் கிறிஸ்து அதனைத் தாங்கக்கூடிய பலத்தினை அவரை விசுவாசிப்போருக்குத் தருகின்றார். இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் , "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் - 16:33)
நீதிமானுக்கு ஏன் அதிக துன்பம் என்று நாம் பார்ப்போமானால் , உலகத்திலிருந்து நீதிமான்களை தேவன் பிரித்து நடத்துவதால்தான். இயேசு கிறிஸ்துக் கூறினார், " நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாரா யிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." ( யோவான் 15 : 19 ) அப்படி உலகம் பகைப்பதால் தான் நீதிமானுக்குத் துன்பங்கள் அதிகம்.
நான் இவ்வளவு ஜெபித்தும் , தேவனிடம் பற்றுதலாயிருந்தும் ஏன் எனக்கு இதனைத் துன்பங்கள் எனக் கலங்கிடவேண்டாம். உபாத்திரவத்தின் வழியே சென்று ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவன் நமது உபத்திரவத்தை நாம் மேற்கொள்ள உதவாமல் கைவிட்டுவிடுவதில்லை. 1 கொரிந்தியர் -10:13 கூறுகிறது, உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடம்கொடாமல் சோதனையைத் தங்கத் தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்.
ஆம், "நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்."
( சங்கீதம் 34 :
17 ) மேலும் வேதம் கூறுகிறது, "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது." சங்கீதம் 34 : 15 )
தாவீது சிறு வயது துவங்கி தேவனால் நடத்தப்பட்டவர். ஆரம்பம் முதல் பல சோதனைகளைக் கடந்து வந்தவர். சவுல் பல முறை அவரைக் கொல்ல முயன்றும் தேவன் அவரை சவுலின் கைகளுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. மேலும் அவர் ராஜாவாக இருந்து பல பொருளாதார நிலையிலிருந்த மக்களைக் கண்டிருக்கிறார். அவரது அனுபவத்தால் துணிந்து பின்வருமாறு கூறுகின்றார்...
"நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." ( சங்கீதம் 37 : 25 )
ஆம், தேவன் நம்மை சோதித்தாலும் ஒரேயடியாக கைவிட்டுவிடமாட்டார். நமது சந்ததியினையும் ஆசீர்வதிப்பார்.
28
"நமது கைகளோடுகூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்! (புலம்பல் - 3:41)
ஜெபத்தைக் குறித்து பல காரியங்களைக் கூற முடியும். இன்றய சிந்தனையில் நமது தனிப்பட்ட ஜெபம் பொதுவான ஜெபம் இவை இரண்டிலும் நாம் எப்படிக் கவனமாக இருக்கவேண்டும் என சில கருத்துக்களைப் பார்ப்போம்.
முதலாவது மேற்படி வசனம் கூறுவதுபோல, நமது இருதயம் பரலோக தேவனை நோக்கியே இருக்க வேண்டும். தேவன் வெறும் வார்த்தை அலங்காரத்தைப் பார்த்து ஜெபத்தை அங்கீகரிப்பவரல்ல. (சங்கீதம் - 66:18).
அக்கிரம சிந்தை - அதாவது தேவனுக்கு விரோதமான எண்ணங்கள், சக மனிதர்களுக்கு விரோதமான எண்ணங்கள், நீதி நியாயமற்ற மன எண்ணங்கள், துன்மார்க்க எண்ணங்கள், இம்மாதிரியான எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு நாம் எவ்வளவு ஜெபித்தாலும் பயனில்லை. முதலில் அத்தகைய எண்ணங்களை தேவன் மாற்றும்படியும், ஒரு தூய உள்ளத்தினை நமக்குத் தரும்படியும் வேண்டுதல் செய்து ஒப்புரவாகவேண்டும்.
மேலும் ஜெபம் நமது இருதயத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும். வாய் வார்த்தைகளில் மட்டுமல்ல. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" என இயேசு கிறிஸ்து கூறியதுபோல நமது ஜெபமானது இருதயத்தின் நிறைவினால் வர வேண்டும். எனவே வீண் வார்த்தைகள் தேவனுக்குத் தேவையில்லை.
சிலர் பொதுவான ஜெபத்தில் வசனங்களுக்குமேல் வசனமாகச் சொல்லி ஜெபிப்பர். அப்படி ஜெபித்தால்தான் தேவன் கேட்பார் என எண்ணி வசனமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் பலரும் தங்களது அறிவால், தாங்கள் படித்த வசனங்களை சொல்கிறார்களே தவிர இருதய பூர்வமாக ஜெபிப்பதில்லை. இதயபூர்வமான ஜெபம் உண்மையில் வசனங்களை அடுக்க நினைக்காது.
ஆனால் தேவைக்கேற்ப ஆவியானவர் வசனங்களைத் தரும்போது நமது ஜெபத்தில் வசனங்கள் வெளிவரும். உண்மையில் இது ஆவிக்குரிய ஜெபம் செய்வோருக்குப் புரியும். நமது ஜெபத்துக்கான பதிலையும் தேவன் தாமே சில வசனங்கள் மூலம் தருவார்.
வெறுமனே வசனங்களை அடுக்கி ஜெபிப்பது ஒருவிதத்தில் பெருமையின் அடையாளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தாங்கள் ஜெபிப்பது வல்லமையுள்ள ஜெபம் எனப் பிறருக்குத் தெரியவேண்டும் எனும் எண்ணத்தில் ஜெபிப்பர். அத்துடன் தாங்கள் ஜெபிப்பது சிறப்பான ஜெபம் என பிறர் எண்ண வேண்டுமென்று வசனங்களை அடுக்குவர். தங்களை அறியாமலே இவர்களது மனம் பிறர் நமது ஜெபத்தைக் கவனிக்கிறார்கள்
பொது ஜெபத்தில், எவ்வளவு சுருக்கமாக ஜெபத்தை முடிக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கமாக முடிக்க வேண்டும். இல்லையானால் மக்கள் வெறுப்படைந்து இவர் எப்போது இந்த ஜெபத்தை முடிப்பார் எனும் எண்ணத்தில் இருப்பார்களேதவிர ஜெபத்தோடு ஒன்றிணைய மாட்டார்கள்.
நமது கைகளோடுகூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கும்போது நமது ஜெபம் வித்தியாசமான ஆவிக்குரிய ஜெபமாக அமையும்.
29
"நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்; அவர் தம்மைத்தான் மறுதலிக்க மாட்டார்" (2 தீமோத்தேயு - 2:13)
மனிதர்கள் நாம் பல வேளைகளில் உண்மையற்றவர்களாக இருக்கின்றோம். சில வேளைகளில், நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க முயன்றாலும் சூழ்நிலைகள் நம்மை நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். உதாரணமாக ஒரு தகப்பன் தனது மகளது திருமணத்தில் வரதட்சணையாக குறிப்பிட்ட அளவு நகை போடுவதாக வாக்களிக்கின்றார் என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவர் உண்மையுள்ளவராக இருந்தாலும் சூழ்நிலை அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து விடுகிறது. ஆனால் தேவன் அன்றும் இன்றும் என்றும் வாக்கு மாறாதவராக இருக்கின்றார்.
கிறிஸ்துவை அறிந்த ஆரம்ப காலத்தில் என்னை வழி நடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்களது வாழ்வில் நடந்த சம்பவத்தை அவர் ஒருமுறை என்னிடம் கூறினார். சென்னைத் துறைமுகத்தில் நல்ல வேலையில் இருந்த அவரைத் தேவன் தனது முழுநேர ஊழியத்துக்கு அழைத்தார். ஆனால் பல காலம் அதற்குக் கீழ்ப்படியாமல் இருந்துள்ளார். இறுதியில் தேவன் அவரைத் திட்டவட்டமாக வேலையை விட்டுவிட்டு ஊழியத்துக்கு வருமாறு அழைக்கவே அவரும் அப்படியே தனது வேலையே ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்துக்கு வந்துவிட்டார்.
ஆனால் ஊழியத்துக்கு வந்தபின் மாத வருமானமில்லாததால் வறுமை வாட்டத் துவங்கியது. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை. ஒருமுறை அவரது வேஷ்டி சட்டையைத் துவைக்க சோப்பு வாங்கக்கூட காசு இல்லாத நிலை. அவருக்கு மறுநாள் ஒரு கூட்டத்தில் செய்தி வேறு கொடுக்கவேண்டியிருந்தது. அன்று வீட்டுமுன் வராண்டாவில் அமர்ந்து கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டிருந்தார்.
"ஆண்டவரே, நான் வசதியோடு வாழ்ந்து வந்தேன். நீர் என்னை உமது ஊழியத்துக்கு அழைத்து , நான் உன்னை நடத்துவேன் என்று வாக்களித்தீரே... இன்று இப்படி துணி துவைக்க சோப்பு வாங்கக்கூட முடியாத வறுமை நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டீரே.." என்று சொல்லிக் கண்ணீரோடு ஜெபித்தார். கண்களில் வழிந்த கண்ணீரைத் தனது தோளிலிருந்து துண்டால் துடைத்தார். அப்போது "டக் " எனும் ஓசையுடன் ஏதோ அவர்முன் விழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது அவர்முன் ஒரு சோப்புத் துண்டு கிடந்தது. அருகிலிருந்த வேப்பமரத்திலிருந்து காகம் ஒன்று அதனைக் கீழே போட்டுள்ளது .
இந்த சம்பவம் அவரது விசுவாசத்தைப் பெரிதும் வளர்க்க உதவியது. மட்டுமல்ல ஊழியத்தில் வந்த கஷ்டங்களை விசுவாசத்தோடு கடந்திட உதவியாக இருந்துள்ளது. தேவன் அவரைப் பிற்பாடு படிப்படியாக உயர்த்தினார். இந்த சம்பவம் எலியாவுக்குக் காகங்கள் உணவளித்த சம்பவத்தை ஒத்துள்ளதல்லவா? "காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தன.."( 1 இராஜாக்கள் 17 : 6 )
அன்பானவர்களே வேதம் கூறுகின்றபடி, நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். எனவே தேவனிடம் கிட்டிச் சேர்த்துவிடீர்களென்றால் நாம் அவரது பிள்ளைகளாக மாறிவிட்ட உரிமை வந்துவிடுகிறது. ஒரு தாயும் தகப்பனும் பாதுகாத்து உதவுவதுபோல அவர் நமக்கு உதவுவார். எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தைவிட்டு விலகிடாமல் நம்மால் வாழமுடியும்.
30
"சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்." ( சங்கீதம் 41 : 1 )
நமது சமுதாயத்தில் ஏழை எளியவர்கள் எங்கும் நிறைந்துள்ளனர். நம்மால் எல்லோருக்கும் உதவிடமுடியாது. ஆனால் நம்மால் முடிந்தளவு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவிட முடியும். நாம் உண்ணும்போது, ஆடை அணியும்போது, வாழ்ந்திட ஒரு வீடு அமையும்போது இவை ஏதுமில்லாத வறியவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். கூடுமானால் அவர்களுக்கு உதவிட வேண்டும்.
தெருவில் பிச்சை எடுக்கும் மக்கள் எப்படியாவது தங்கள் வயிற்றை இரந்து நிரப்பிவிடுகின்றனர். ஆனால் நமது ஊரில் சில குடும்பங்கள் உண்ண உணவின்றி வாழ்வதுண்டு . அவர்களுக்கு யாரிடமும் உதவி கேட்கக் கூட முடியாதபடி தன்மானம் தடுக்கிறது. மிகக் கொடிய வறுமையில் அவர்கள் தவிக்கின்றனர். மேலும் இந்தக் கொரோனா காலத்தில் வேலையில்லாத பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. இவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, இவர்களது வறுமையை நமக்குள் பேசி விமர்சிக்காமலிருப்போம்.
ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான். ( நீதிமொழிகள் 17 : 5 )
சிலர் தங்களிடம் உதவிகேட்டு வரும் பிச்சைக்காரர்களிடம் உதவி ஏதும் செய்யாமல், " நல்ல உடல் சுகத்தோடுதானே இருக்கிறாய்? வேலைக்குப் போனால் என்ன? எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வரியா? எனக் கேள்வி எழுப்புவதுண்டு. அன்பானவர்களே, சிலர் அப்படி வேலை செய்ய மனதில்லாமல் பிச்சை எடுப்பதே சுகம் என்று எண்ணி வாழலாம். ஆனால் எல்லோரும் அப்படியல்ல. பார்ப்பதற்கு திடமுள்ளவர்கள்போல இருந்தாலும் சிலருக்கு வேறு நோய்கள் பிரச்சனைகள் இருக்கும். நமக்குத் தெரியாது. எனவே கொடுக்க மனமிருந்தால் கொடுங்கள் . கேலியான கேள்விகள் வேண்டாம். ஏனெனில் வேதம் கூறுகின்றது, "தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். ( நீதிமொழிகள் 28 : 27 )
பழைய ஏற்பட்டுக் காலத்திலும்கூட ஏழைகளுக்குக் கொடுப்பது நியாயப்பிரமாணக் கட்டளைகளில் ஒன்றாக இருந்தது "தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்." ( உபாகமம் 15 : 11 )
தேவன் ஏழைகளுக்கு இரங்குவதை மிக சிறந்த காரியமாகப் பார்ர்கிறார். எனவேதான் வேதம் கூறுகிறது, "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். ( நீதிமொழிகள் 19 : 17 ) அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். ( 2 கொரிந்தியர் 9 : 7 )
31
"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28)
இன்றைய பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகளில் கிறிஸ்துவை ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதைவிட அவர் ஒரு அற்புதர் என்றே அறிவிக்கப்படுகிறது. கிறிஸ்து ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதை பல சுவிஷேஷகர்கள் விரும்புவதில்லை. காரணம் அப்படி போதித்தால் மக்கள் கூட்டம் சேராது. அற்புதம் என்றால் தான் கூட்டம் சேரும்.
இப்படிக் கிறிஸ்துவை ஒரு அதிசயம் செய்யும் மந்திரவாதியாகவே பல ஊழியர்களும் அறிவிக்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மக்களும் பிற மத மக்களும் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒருமுறை வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் ஒரு பிராமண சகோதரர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்தவத்தைப்பற்றி பல விசயங்களை கேட்டார். அவர் பல கிறிஸ்தவ பத்திரிகைகளையும் பல ஊழியர்களது பிரசங்கங்களையும் கேட்டவர். அவர் என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னார், "இந்து மத போதனைகளில் உள்ளான மனித மாற்றத்தைப் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளன. ஆன்மிகம் என்பது உலக விசயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உங்கள் கிறிஸ்தவத்தில் அதுபோல எதுவும் இல்லையே. வெறும் அற்புதம் அதிசயம் பற்றித்தானே கூறுகிறார்கள், எழுதுகிறார்கள் " என்றார் அவர்.
அவரிடம் நான் மெய்யான கிறிஸ்தவ போதனைகளை பற்றி சொன்னபோது இதுவரை நான் இவைகளை அறியவில்லை. எனக்கு இவைகள் அறிவிக்கப்படவும் இல்லை என்றார். இதுதான் உண்மை. ஆம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை யோர்கூட சரியான சுவிசேஷ அறிவைப் பெறவில்லை.
"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28) என எழுகிறார் பவுல் அடிகள். ஒரு மனிதனை கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மனிதனாக மாற்ற வேண்டுமானால் அவனுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும். அவர் செய்த அற்புதத்தையல்ல.
இன்று சுவிசேஷ அறிவிப்பு என்பது பத்தில் ஒரு பங்கு காணிக்கை கொடுத்தால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் என்பதும் , கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார் என்பதும், ஆசீர்வதிப்பார், ஆசீர்வதிப்பார் எனத் திரும்பத் திரும்பக் கூறுவதும் தானேதவிர மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன என்பதோ கர்த்தர் அந்த மெய் ஆசீர்வாதத்தை யாருக்கு அளிப்பர் என்பதோ, தேவ ஆசீர்வாதத்தை பெற கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வாக்குத்தத்தங்களுக்கு முன் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளோ, தேவனுக்கு ஏற்புடையோராய் வாழாவிட்டால் என்ன நேரும் என வேதத்தில் கூறப்பட்டுள்ள சாபங்களோ பெரும்பாலான ஊழியர்களால் கூறப்படுவதில்லை. கூறினால் அவர்களுக்கு கூடும் அந்தப் பெரிய கூட்டத்தின் பெரும்பகுதி இடத்தைக் காலிசெய்துவிட்டு ஓடிவிடும்.
இன்று கிறிஸ்தவ கூட்டங்களில் மக்கள் எதற்க்காக கூடுகிறார்கள்? உலக ஆசீர்வாதத்திற்காகவும், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கவேண்டுமென்பதற்காகவும், கடன் பிரச்சனை தீரவும், நோய் குணமாகவும், தொழில் விருத்தியடைய வேண்டுமென ஊழியரை ஜெபிக்கச் சொல்வதற்கும் மட்டுமே. இங்கு கிறிஸ்து எங்கு இருக்கிறார்?
அன்பானவர்களே நீங்கள் இன்னும் அற்புதங்கள் வழியாகவே கிறிஸ்துவைத் தேடுகிறவர்களாக இருந்தால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாகவே இருப்பீர்கள். அப்போஸ்த்தலாரான பேதுரு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டவராகவே பிரசங்கித்தார். "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசு வையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாகினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்". (அப்.பணி - 2;36) என்று பேதுரு பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆம் , அவர்கள் அற்புதத்துக்காக கிறிஸ்துவிடம் வரவில்லை. கிறிஸ்து சிலுவையின் வழியைத்தான் மீட்பின் வழியாக கொடுத்தாரே தவிர உலக ஆசீர்வாத வழியையல்ல.
குருடருக்கு வழி காட்டும் குருடர்களால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவ விசுவாசிகள் ஊழியர்களிடமும் பாஸ்டர்களிடமும் வைக்கும் நம்பிக்கையை கிறிஸ்துவின்மேல் என்று வைக்கிறார்களோ அப்போதுதான் சரியான சத்தியத்தை அறிய முடியும் பிறருக்கும் அறிவிக்க முடியும்.
ஆசீர்வாத செய்திகள் சிலுவை உபதேசத்தை மறுதலிக்கின்றன. அவற்றைக்கேட்பவர்கள் கெட்டுப்போவார்கள். இரட்சிக்கப்படு கிறவர்களுக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. அவர்கள் பெலத்தின்மேல் பெலனடைவார்கள்.
ஆம், "சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது , இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் -1:18)
32
"சிலர்
இரதங்களைக்குறித்தும்,
சிலர் குதிரைகளைக் குறித்தும்
மேன்மைபாராட்டுகிறார்கள்;
நாங்களோ எங்கள் தேவனாகிய
கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே
மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )
வேதாகமம் எழுதப்பட்டக் காலங்களில்
இப்போதுள்ளதுபோல வாகனங்கள் கிடையாது.
போக்குவரத்துக்கு மிருகங்களையே அவர்கள்
நம்பி இருந்தனர். ஏழைகள்
வசதி குறைந்தவர்கள் கழுதைகளைப்
பயன்படுத்தினர். கொஞ்சம் வசதி
படைத்தவர்கள் ஒட்டகங்களையும், குதிரைகளையும் பயன்படுத்தினர். பிரபுக்களும்
அரச குடும்பத்தினரும் ரதங்களைப்
பயன்படுத்தினர். இப்போது சொந்தக்
கார் வைத்திருப்பவர்களைப் போல
குதிரைகளையும் ரதங்களையும் வைத்திருப்பவர்கள் இருந்தனர்.
வசதி படைத்தவர்கள் சிலரிடம்
ஒன்றுக்கு மேற்பட்டக் குதிரைகளும்
ரதங்களும் இருந்தன. அது
அவர்களுக்குப் பெருமைக்குரிய காரியமாக
இருந்தது.
தேவனோடு நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்த தாவீது ராஜா இதனைக் கண்டதால்
இப்படிக் கூறுகின்றார். நீங்கள்
உங்களது செல்வச் சிறப்புகளை
எண்ணிப் பெருமை பாராட்டுங்கள், நாங்களோ
தேவனை அறிந்திருப்பதை நினைத்தே
பெருமைப்படுவோம்.
தேவனை அறியும் அனுபவம்
மிக உன்னதமான அனுபவம்.
அது வெறும் ஜெபத்தினாலோ,
வேதம் படிப்பதாலோ, ஆலயங்களுக்குத் தவறாமல்
செல்வதாலோ, ஜெபக் கூட்டங்களில்
கலந்து கொள்வதாலேயோ கிடைத்திடாது.
ஒருவர் வேதாகமக் கல்லூரியில்
பல ஆண்டுகள் படித்துக்
குருவாக ஆகிவிட்டதால் அவர்
தேவனை அறியும் அறிவினைப்
பெற முடியாது. அவர்கள்
தேவனைப் பற்றி வேண்டுமானால்
அறியலாம்.
தேவனை அறிவதற்கும் தேவனைப்
பற்றி அறிவதற்கும் வித்தியாசம்
உண்டு. இதனை சிறு
உதாரணம் மூலம் விளக்கலாம்.
கண் பார்வையற்ற மனிதர்கள்
நிறங்களின் பல்வேறு பெயர்களை
அறிந்திருக்கலாம். சிகப்பு, நீலம்,
மஞ்சள், கருப்பு என
நிறங்களின் பெயர்களை மட்டும் சொல்லலாம். ஆனால்
அது நிறத்தைப் பற்றி
அறிவது மட்டுமே. பல்வேறு
நிறங்களையும் அவற்றின் அழகின்
மகிமையையும் அறிய ஒரு
கண் பார்வை கொண்ட
மனிதனுக்கே முடியும். இதுவே
நிறங்களை அறிவது. அதாவது
கண் பார்வை இல்லாத
மனிதர்கள் நிறத்தைப் பற்றி
அறிந்துள்ளனரே தவிர நிறத்தை
அறியவில்லை. இதுபோலவே தேவனை
அறிவதும் தேவனைப் பற்றி
அறிவதும்.
வேதாகமம் முழுவதும் படித்துப்
பார்த்தால் அனைத்து இடங்களிலுமே
"தேவனை அறியும் அறிவு"
எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்
பட்டிருக்குமே தவிர "தேவனைப் பற்றி அறியும்
அறிவு" என்று குறிப்பிடப்பட்டிருக்காது.
அன்பானவர்களே ! நாம் ஒருவேளை
வசதி வாய்ப்புக்கள் இல்லாத
நிலையில் இருக்கலாம். ஆனால்,
நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம்
உடையவர்களாகி , மீட்பின் அனுபவம்
பெற்றிருந்தோமானால் அந்தத் தேவனை அறியும் அறிவு, செல்வங்கள் தரும்
மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை
நமக்குக் கொண்டு வரும்.
எனவேதான் தாவீது கூறுகிறார்,
" அவர்களுக்குத் தானியமும்
திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின்
சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக
சந்தோஷத்தை என் இருதயத்தில்
தந்தீர்."( சங்கீதம்4:7)
ஆம், மீட்பு அனுபவத்தைப்
பெற்றிருப்பவர்கள் உலக செல்வதில்
குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
ஆனால் தங்களிடம் அதிக
பொருள் இருப்பதால் பெருமை
அடைந்து தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வோர்
பரிதபிக்கத்தக்கவர்கள்.
எனவேதான் ஏசாயா தீர்க்கதரிசி,
"சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை
நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும்,
எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள்
அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி,
குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை
நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு
ஐயோ!" ( ஏசாயா31:1) என்று
குறிப்பிடுகிறார். இங்கு எகிப்து
என்பது பாவ வாழ்க்கையைக்
குறிக்கிறது.
அன்பானவர்களே, எகிப்து எனும்
பாவ வாழ்க்கையை விட்டு
இஸ்ரவேலின் பரிசுத்தரான கர்த்தரை
நோக்கிப் பார்ப்போம். நமது
பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுவோம்.
தேவன் தன்னை அறியும் அந்த உன்னத
அனுபவத்தை நமக்குத் தருவார். நமது பாவங்கள்
மன்னிக்கப்பட்டு தேவனை அறியும்
அறிவில் வளர்வோம்.
33
"ஆவியின்
கனியோ,
அன்பு,
சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான
பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )
ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் மாலை உணவருந்த சென்றிருந்தபோது ஒரு கிறிஸ்தவ ஊழியரும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். "பேமிலி ரூம்" என தனியே குறிக்கப்பட்டிருந்த அந்த அறையினுள் பலர் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தனர். ஊழியர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்ததும் அவர் எல்லோரும் பார்த்திருக்க ஜெபம் செய்யத் துவங்கிவிட்டார். அதனை எல்லோரும் கவனித்தனர். உணவு பரிமாற அங்கு நின்று கொண்டிருந்த ஹோட்டல் பணியாளர்களும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஜெபம் முடிந்தபின் பின் சாப்பிட ஆரம்பித்தனர். நான் அந்த ஊழியரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த ஊழியர் உணவு பரிமாறக்கூடிய பணியாளர்களிடம் கடுகடுப்பாகவே பேசிக்கொண்டிருந்தார். நானும் இந்த ஊழியர் இப்படி சப்தம்போட்டுக் கொண்டிருக்கிறாரே எண்ணிக்கொண்டிருந்தேன்.
ஒருகட்டத்தில் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டோம். அந்த ஊழியர் தனது ஜிப்பாவின் கையைச் சுருட்டிவைத்துக்கொண்டு எழுந்துநின்று ஒரு ஹோட்டல் பணியாளரை அடிப்பதற்குப் பாய்வதுபோல நின்றுகொண்டு இருந்தார். பெரிய சத்தத்தில் திட்டிக்கொண்டிருந்தார்.
காரணம்,
அந்தப்
பணியாளர் சாம்பாரை ஊற்றியபோது கவனக்குறைவாக சிறிது சாம்பார் ஊழியரது ஆடையில் பட்டுவிட்டது. பிறகு அங்கு பணியிலிருந்த மேலாளர் வந்து சமாதானப் படுத்தினார்.
பல
மதங்களிலுள்ள மக்களும் அங்கு இருந்தோம். இந்த ஊழியர் முதலில் ஜெபிக்காமல் சாப்பிட்டிருந்தால்கூட யாருக்கும் இவரை யார் என்று தெரிந்திருக்காது. முதலில் ஜெபித்துத் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்றுக் காண்பித்து தனது சாட்சியற்ற செயலால் மற்றவர்கள் முன் கிறிஸ்துவை அவமானப்படுத்திவிட்டார் இவர். !
ஒரு
ஆவிக்குரிய மனிதன் என்பது நமது வெள்ளை ஆடையிலோ, ஜிப்பாவிலோ அல்ல, நமது சாட்சியுள்ள செயல்களில் விளங்கவேண்டும். இந்த சாட்சியுள்ள குணங்களையே கனிகள் என்று வேதம் கூறுகிறது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்...கனிகளால் மரத்தை அறிவர் என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?.
உள்ளான
மனிதனில் மாற்றம் வராமல், வெளி அலங்காரங்களும், ஆவிக்குரிய மனிதன் என நம்மைக் காண்பிக்க நாம் எடுக்கும் முயற்சிகளும் தோல்வியாகவே முடியும். நல்ல குணம் என்பது இயற்கையாக வெளிவரும். அதற்கு முயற்சிகள் தேவையில்லை. நான் மேலே குறிப்பிட்ட ஊழியரைவிட அமைதியாக சாந்தமாக செயல்படும் கிறிஸ்துவை அறியாத மக்கள் பலரை நான்பார்த்திருக்கிறேன்.
நான்
இடதுசாரி ஈடுபாட்டாளனாக இருந்தபோது பல கம்யூனிஸ்ட் இயக்க நண்பர்களுடன் பழகியிருக்கிறேன். உண்மையிலேயே அவர்களில் பலர் நான் மேலே குறிப்பிட்ட ஊழியரைவிட நூறு சதம் நல்லவர்கள், அமைதியானவர்கள். குறிப்பாக அவர்கள் ஹோட்டல் பணியாளர் போன்ற இம்மாதிரியான அடித்தட்டு பணியாளர்களிடம் இன்னும் அதிக அன்போடுசெயல்படுவார்கள்.
அன்பானவர்களே ! நமது வாழ்க்கையே சுவிசேஷ அறிவிப்பு. பக்கம் பக்கமாக எழுதுவதாலேயோ, நீண்ட சொற்பொழிவுகளை கவர்ச்சியான முறையில் செய்வதாலேயே கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. இன்று கிறிஸ்தவ ஊழியர்களைவிட மக்களைக் கவரக்கூடிய முறையில் பேசக்கூடிய அரசியல்வாதிகள் பலர் நமது நாட்டில் உள்ளனர்.
ஆவிக்குரிய மனிதன் என்பது நமது செயல்களால் மக்களுக்குத் தெரிய வேண்டும். உதாரணமாக 50 பேர் பணிபுரியும் இடத்தில இருக்கிறீர்களா ? நீங்கள் ஆவிக்குரிய மனிதனானால் உங்கள் குணம் அந்த 50 பேரிலிருந்து வேறுபட்டுத் தெரியவேண்டும்.
"ஆவியின்
கனி,
சகல
நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். ( எபேசியர் 5 : 9 )"
கனி
நிறைந்த
ஒரு
வாழ்க்கை வாழ தேவனிடம் நம்மை ஒப்படைத்து ஜெபிப்போம். நமது கனிகளைக் கொண்டு பிறரை ஆதாயமாக்கிக்
கொள்வோம் !
34
"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்." ( சங்கீதம் 65 : 2 )
நமது தேவன் ஜெபத்தைக் கேட்கிற தேவன். இதுவே நம்மை கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலை நிற்கச் செய்கிறது. நமது தேவன் ஊமையான ஒரு விக்கிரகம் அல்ல. "கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்." ( சங்கீதம் 72 : 12 )
ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்துக் கொண்டிருப்பதை பார்த்து சிரித்துகொண்டு இருந்தார். தகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே என்று ஜெபித்தீர்கள் அந்த பரமண்டலம் எங்கேஇருக்கிறது? என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார்.மேலே பரமண்டலத்தில் இருக்கிற பிதாவுக்குஇங்கு இருந்து நீங்க செய்கிற ஜெபம் எப்படிகேட்கும்? பக்கத்திலிருக்கிற எனக்கே கேட்கமாட்டேங்கிறது என்று பரியாசமாய் கேட்டார். அதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு, "ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும்" என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார்.
மார்க்கோனி ரேடியோ கண்டுபிடித்தபின் தன்னுடைய சொந்த ஊரிலே நடந்த பாராட்டு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினாராம்:-
"என்னுடைய சிறுவயதிலே என் தந்தையிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்டவர் என் வழியாகவே எனக்கு பதில் சொல்லிவிட்டார். எப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவை ரோமில் வைத்து கேட்கும்போது முன்னூற்றுஇருபது கி.மீ தொலைவில் இருக்கும் மிலனிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்த நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறதோ அதே நேரத்தில் ரோமிலும் கேட்கமுடியும். சாதாரண ஆறறிவுள்ள மனிதனாகிய நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவே இப்படிகேட்கும்போது என்னை படைத்த ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கமாட்டாரா? நிச்சயமாகக் கேட்பார். என் தகப்பன் செய்த ஜெபத்தைக் கேட்டு என்னைத் தன்னை அறியவைத்தாரே?
தேவனோடு
நாம்
நெருங்கிய ஒரு உறவு வைத்திருந்தோமானால் அவர் நமது ஜெபத்துக்குப் பதில் தருவதை நமது வாழ்வில் அனுதினமும் கண்டு மகிழலாம்.
நான்
மார்க்சீய இயக்கத்தில் இருந்து பல்வேறு இடதுசாரி சிந்தனை நூல்களைப் படித்தவனாதலால் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பக் காலத்தில் தேவனைக் குறித்தும் வேதாகம சத்தியங்களைக் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் அடிக்கடி எழுவதுண்டு. சில நேரங்களில், "நாம்தான் கடவுள் கடவுள் எனக் கூறிக் குழம்பிப்போயுள்ளோம்
ஒன்றுமே
கிடையாது " எனப் பழைய எண்ணங்கள் எனக்குள் வருவதுண்டு. ஆனால் நான் அப்படி சந்தேகங்களும் குழப்பங்களும் வரும்போது எந்த மனிதனிடமோ, பாஸ்டர்களிடமோ விளக்கம் கேட்காமல் வேதாகமத்தை ஒதுக்கி வைத்துவிடுவேன். குறைந்தது ஐந்து முறையாவது இப்படி நடந்துள்ளது. எனக்கு இந்த குழப்பத்துக்கு "நீர் பதில் தரும்வரை நான் இந்த வேதாகமத்தைப் படிக்கமாட்டேன்." என வைராக்கியமாக இருப்பேன். ஆனால் இரண்டு நாட்கள்கூட அப்படி தொடர முடியாதவாறு தேவன் எனக்குப் பதில் தருவார்.
பல்வேறு சிக்கலான குழப்பமான சந்தேகங்கள். ஆனால் தேவன் அனைத்து சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் பதில் தந்தார். 18.11.1993 அன்று தேவனை எனது வாழ்வில் அறிந்தேன். இந்த 27 ஆண்டுகளாக தேவன் என்னை வழிநடத்துவதைஉணர்ந்து வருகிறேன்.
அன்பானவர்களே! தேவனை விட்டு எந்த சூழ்நிலையிலும் நான் பிரிந்திடக் கூடாது எனும் எண்ணம் உண்மையாகவே உங்கள் மனதில் இருந்தால் தேவன் கைவிடமாட்டார். நம்முடைய ஆண்டவர் ஜெபத்தை கவனித்து கேட்கிறவர் என்பதில் நிச்சயம் கொண்டவர்களாக இருப்போம்! வெறும் உலக காரியங்களுக்காக அவரைத் தேடாமல் அவருக்காக அவரைத் தேடுவோம். தேவன்தாமே நம்மைத் தொடர்ந்து வழிநடத்துவாராக.
35
."....பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."( சகரியா 4 : 6 )
மனிதன் அற்பமான பிறவி. நமது உடல் கூட அற்பமானதுதான். இந்த அற்பமான உடலை வைத்துக்கொண்டு மனிதன் ஆட்டம்போடுகிறான். சராசரி மனிதனது உடல் சூடு 98.6 டிகிரி F. இந்த உடல் சூடு 0.4 டிகிரி அதிகரித்து 99 டிகிரியாகிவிட்டால் நம்மால் எழுந்து நடமாட முடியாது. காய்ச்சல் என்று சோர்ந்து படுத்துவிடுவோம். இவ்வளவுதான் நமது பலம்.
ஆனால் மனிதர்கள் இதனை எண்ணுவதில்லை. தாங்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம் என எண்ணி இறுமாப்பாய் அலைகிறார்கள். இப்படி இறுமாப்பாய் இருந்த நமது அரசியல் தலைவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதை நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம்.
முதல் முதலாக, ஆதியாகம சம்பவங்களில் தேவன் வலிமை மிக்க மனிதர்களது கைக்கு வலிமை அற்றவர்களை விடுவித்து என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்பதை மனிதர்களுக்குப் புரிய வைத்தார். மோசே எனும் ஒற்றை மனிதனைக் கொண்டு பார்வோன் மன்னனின் பெரிய ராணுவத்தைக் கவிழ்த்துப் போட்டார்.
பார்வோனின் படை வீரர்களும் குதிரைகளும் போர் செய்வதற்குப் பழக்கப்பட்டவை. பல போர்களை சந்தித்து வெற்றிகண்டவை. ஆனால் அந்தச் சேனையின் பலம் பார்வோனுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. தேவனுடைய ஆவியைப் பெற்று இருந்த மனிதனாகிய மோசேயின் முன் அந்தச் சேனையால் நிற்க முடியவில்லை. ஆம் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே எல்லாம் கூடும் என்பதற்கேற்ப வெற்றி மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு கிடைத்தது.
அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் நாம் இதனை மறந்துவிடக் கூடாது. நமக்குவேண்டுமானால் நமது பிரச்சனைகள் மலைபோலத் தெரியலாம். தேவனிடம் அதனை ஒப்புவித்துவிடும்போது அது அற்பமான பிரச்னையாக மாறி நமக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பிரச்னை , குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பிரச்னை......ஐயோ நான் இதனை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் எனப் புலம்பிப் பயப்படவேண்டாம். தேவனுடைய ஆவியினால் நம்மை விடுவிக்க முடியும்.
அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் இதனால்தான் துணித்து கூறுகிறார், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 ) எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியும் பலமும் தந்து தேவன் நம்மை நிலை நிறுத்த வல்லவர்.
தேவனுடைய எண்ணங்களுக்கும் மனிதர்களுடைய எண்ணங்களுக்கும் வித்தியாசம் உண்டு மனிதர்கள் பலம்தான் வெற்றிதரும் என எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் பலவீனமானவைகளையும் அற்பமாய் எண்ணப்படுபவைகளையும் தான் பயன்படுத்துகின்றார்.
மீதியானியர் கைகளுக்கு இஸ்ரவேல் மக்களை விடுவித்தக் கிதியோன் மேலும் ஒரு உதாரணம். மீதியானியர் போரில் வல்லவர்கள். ஆனால் கிதியோனிடம் இருந்த மக்களோ அற்பமான சாதாரண மனிதர்கள். ஆனால் மீதியானியரை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தேவன் கிதியோனிடம் போரிடச் செல்லும் மக்களது எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லுவதை பார்க்கலாம். உன்னுடன் வரும் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள் நீங்கள் வெற்றிபெற்றால் எங்கள் கை பலம்தான் எங்களுக்கு வெற்றி தந்தது என மக்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசுவார்கள். எனவே உன்னோடுகூட போரிட வரும் உன் மக்களது எண்ணிக்கையைக் குறை என்கிறார் தேவன். இறுதியில் 300 பேரைத் தேவன் கிதியோனோடு செல்ல அனுமதித்தார். அந்த 300 பேரைக் கொண்டு கிதியோன் மீதியானியரை வெற்றி கொண்டார். (நியாயாதிபதிகள் -7) எண்ணிக்கை தேவனுக்குப் பெரிதல்ல , பிரச்சனையின் அளவு தேவனுக்குப் பெரிதல்ல.
"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 27 )
ஆம்
அன்பானவர்களே, உங்கள் பகுதியில், உங்கள் ஊரில் நீங்கள் பொருளாதாரத்திலோ, பதவியிலோ, பிறரைவிட அற்பமானவர்களாக இருக்கலாம். ஆனால் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தப் போகிறார். அப்போது உங்களை ஏழனமாய்ப் பார்த்தவர்கள் உங்களைப் பார்த்து ஆச்சரியத்தால் வாய்பிளப்பார்கள்.
வண்ணத்துப் பூச்சி அற்பமான புழுவாக, அவலட்சணமானக் கூட்டுப் புழுவாக இருந்துதான் அழகிய கண்கவரும் வண்ணத்துப் பூச்சியாக வானில் பலரும் பார்க்கும்படி சிறகடித்துப் பறக்கின்றது. மனம் சோர்ந்துபோக வேண்டாம்.
ஆம், "என்னுடைய ஆவியினாலேயே ஆகும்" என்று சேனைகளின் கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்."
36
" நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"( 1 கொரிந்தியர் 3 : 16 )
ஒருமுறைப் பேருந்தில் பயணம் செய்தபோது எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சப்தமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தது எனக்கு கேட்டது. அவர்கள் உறவினர் ஒருவரைப்பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அவரைப்பற்றி மோசமாக பேசியதுமட்டுமல்லாமல் அடிக்கடி கெட்ட வார்த்தைகளையும் உச்சரித்துக்கொண்டனர். ஆனால் பேருந்து செல்லும் வழியில் தேவாலயங்களைக் கண்டவுடன் பேச்சை நிறுத்தி ஆலயத்தைப் பார்த்து வணக்கம் செலுத்தினர். நெற்றியில் சிலுவை வரைந்துகொண்டனர். பின் தொடர்ந்து தங்கள் அவலட்சணக் கதைகளைத் தொடர்ந்தனர். எனக்கு அவர்களது செயல்பாடு விசித்திரமாய் இருந்தது . இப்படி ஆலயங்களைப் பார்த்து வணங்கும் கிறிஸ்தவர்களையும் , இந்து கோவில்களை பார்த்து வணங்கும் இந்து சகோதரர்களையும் பல முறைப் பார்த்துள்ளேன்.
இப்படி வணங்குவது ஒரு பக்தி செயல்பாடாக மட்டும் இருக்கிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் அது எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. காரணம் இத்தகைய மனிதர்கள் ஏதோ தொலைவிலிருக்கிற ஆலயத்திலோ, கோவிலிலோ தேவன் இருக்கிறார் என நம்புகின்றனர். ஆனால் வேதம் கூறுகிறது, "உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) அண்ட சராசரங்களையும் படைத்தாளும் உன்னதமான தேவன் நான்கு சுவர்களுக்குள் இருப்பவரல்ல.
தேவன் மக்களோடு மக்களாக வாழ விரும்புபவர். ஏதேனில் ஆதாம் ஏவாளுடன் பகலின் குளிர்ச்சியான நேரங்களில் உலாவிய தேவன் , அவர்களோடு பேசிய தேவன், இஸ்ரவேல் மக்களது பாளையத்தில் மக்களோடு மக்களாக உலாவியவர். இன்றும் அதுபோல மக்களோடு மக்களாக இணைந்து வாழவே விரும்புகிறார். அவருக்கு ஏற்புடையோராய் வாழ்வோமானால் நாமே அவரது ஆலயமாய் இருப்போம். "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 )
இன்று கிறிஸ்தவர்கள் என்றுத் தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் பல்வேறு பாவச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். விபச்சாரம், கற்பழிப்பு, பொய், களவு, லஞ்சம், ஊழல், கொலை, பிறருக்கு எதிரான அவதூறு, மொட்டைக் கடிதம் எழுதி பிறரைக் கெடுப்பது, அநியாய சொத்துச் சண்டைக்காக கோர்ட் வாசலுக்கு அலைவது, தற்பெருமை, போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு ஆலயத்துக்கு வந்து முழந்தாழ்ப்படியிட்டு வணங்கி, பின் தொடர்ந்து அதே செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு மன உறுத்தலோ,தாங்கள் செய்வது தவறு எனும் மனச்சாட்சியோ இவர்களுக்கு இருப்பதில்லை. இதுதான் தேவனது ஆலயத்தைக் கெடுப்பது.
"அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைப் பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். ( தீத்து 1 : 16 )
அன்பானவர்களே, வெளிச்செயல்பாடுகள் மனிதர்கள்முன் நம்மை பரிசுத்தவானாகக் காட்டலாம் ஆனால் உள்ளங்களைப் பார்க்கும் தேவனுக்கு முன் நாம் அருவருக்கத்தக்கவர்களாக இருப்போம். தேவனை நமக்குள் இருப்பவராக உணரும்போது மட்டுமே நாம் இதுபோன்ற தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் இருந்து விடுபடமுடியும். தேவன் நமது உள்ளத்தில் வந்து அமர்ந்து நமது உடலையே ஆலயமாக மாற்ற விரும்புகிறார். ஆனால் அவர் மனிதனது தனித் தன்மையையும் சுதந்திரத்தையும் மதிப்பதால் நமது அனுமதிக்காகக் காத்திருக்கின்றார்.
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )
கதவைத் தட்டும் தேவனது குரலுக்குச் செவி கொடுத்து அவரை உள்ளத்தில் அழைப்போம். ஆண்டவரே நீர் என் பாவங்களை மன்னித்து, என்னைப் புதுப்பிறப்பாக மாற்றும். என்று அழைப்போம். தேவன் நமது உள்ளத்தில் வந்து நம்மோடு உணவருந்தும் அனுபவத்தைப் பெறும்போது நாம் அவரது ஆலயமாக மாறுவோம். பழையன எல்லாம் ஒழிந்து எல்லாம் புதிதாகும் .
37
"முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்." ( சங்கீதம் 71 : 9 )
இன்று நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. வளர்த்து ஆளாக்கின பெற்றோரை கவனிப்பது ஒரு சுமையாகத் தெரிவதால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுவிடுகின்றனர் சிலர். அந்தப் பெற்றோரது மன நிலையை எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இப்படி பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு தவிக்கும் முதியோர்களுக்கு வாழ்க்கையில் என்ன நம்பிக்கைதான் இருக்கும்? எதிர்காலமே சூனியமாகி ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்கிறார்கள்.
தினசரி பத்திரிகையில் சமீபத்தில் படித்தச் செய்தி ஒன்று முதியோர்களது நிலையை விளக்குவதாக உள்ளது. "பிள்ளைகள் கவனிக்காததால் பெற்றோர் தற்கொலை. எங்களது இறுதிச் சடங்கை எங்களது பிள்ளைகள் செய்யக்கூடாது எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த பரிதாபம் ! " என்று கூறியது அந்தச் செய்தி.
எனவேதான் வேதத்தின் மத்திய வசனம் கூறுகிறது, "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.( சங்கீதம் 118 : 8 )
பிள்ளைகளாய் இருந்தாலும் மனுஷனான அவர்களை நம்புவதைவிட கர்த்தர்பேரில் பற்றுதலாய் இருப்பது நல்லது. நமது மகனோ மகளோ எப்போதும் நம்மீது ஒரே அளவு பற்றுதலாய் இருப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. அளவுக்கு மிஞ்சி அப்படி நம்பிக்கைவைத்தால் அந்த நம்பிக்கை பொய்யாகப் போகும்போது தாங்கமுடியாத சோகத்தைக் கொண்டுவந்து விடுகிறது. ஆனால் நமது தேவன் அப்படி நம்மைக் கைவிட்டுவிடுபவரல்ல.
"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 10 )
ஒருவேளை பிள்ளைகளும் உறவினர்களும் நம்மைக் கை விடலாம் . ஆனால் வாக்கு மாறாத கர்த்தர் அப்படிக் கைவிட்டுவிடுபவரல்ல . எனவேதான் இன்றைய சிந்தனைக்குரிய வசனம் நாம் நமது வயதான காலத்துக்காகவும் தேவனிடம் ஜெபிக்கவேண்டுமென நமக்கு உணர்த்துகிறது. இங்கு சங்கீதக்காரன் முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் என வேண்டுகிறார்.
எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் ஒரு வயதுக்குப் பின் பெலன் ஒடுங்கும்போது சிறு பிள்ளைகளைப்போல மாறி அனைத்து காரியங்களுக்கும் பிறரை நம்பித்தான் வாழவேண்டும்.
பிரபல வங்கி ஒன்றின் டயரக்டராக இருந்த ஒருவர் , பகட்டாக காரில் வலம் வந்தவர், பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில். வேலைக்காரர்கள் பராமரிப்பில் அவரை விட்டிருந்தனர். அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது இயற்கை உபாதைகளைக் கூட கட்டிலிலேயே கழித்து துர்நாற்றமுடன் அனாதைபோல படுத்திருந்தார். நம்பமுடியாத சோகம்தான் .
அன்பானவர்களே! இதுபோன்ற மனிதர்களை நீங்களும் பல வேளைகளில் சந்தித்திருக்கலாம். தேவனை நாம் சார்ந்து கொள்ளவேண்டும் என்பதற்கு இவர்கள் நமக்கு ஒரு எச்சரிப்பு. மட்டுமல்ல, நமது முதிர் வயதுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டுமென்பதற்கு நமக்கு ஒரு உதாரணம். எதிர்காலத்துக்கு என சொத்து சேர்த்துவைப்பதைவிட இது முக்கியமான காரியம்.
நமது முதிய வயது பராமரிப்புக்காகவும் தேவனிடம் நமது ஜெபத்தில் வேண்டுவோம். கர்த்தர் நம்மோடு இருந்து நமது பிள்ளைகள் உறவினர்கள் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்வார்.
38
"கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்".( சங்கீதம் 125 : 1 )
சிறுவயதில் புவியியல் வகுப்பில் இந்தியாவின் வடஎல்லை இமய மலைத் தொடர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது என நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள். மலைகள் இயற்கை பாதுகாப்பு அரண்கள். பெரு வெள்ளமோ, புயலோ மலைகளை நகர்த்திட முடியாது. நமது நாட்டின் இமயமலையைப் போல இஸ்ரவேல் நாட்டில் சீயோன் மலை சிறப்புவாய்ந்த மலையாக உள்ளது. இந்தமலை ஜெருசலேம் நகரைச் சுற்றி மதில்போல அமைந்துள்ளது. எனவேதான் அடுத்த வசனம் கூறுகிறது:-
"பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." ( சங்கீதம் 125 : 2 )
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். இன்று பிரபல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்களைப் பாதுகாக்க கறுப்புப் பூனைப் படை வீரர்களை வைத்துள்ளனர். அதற்காகக் கோடிக்கணக்கானப் பணத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் ஒருவனைக் கர்த்தர் பாதுகாக்காவிட்டால் எந்தப் பாதுகாப்பும் அவனைப் காக்க முடியாது. "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலர் விழித்திருக்கிறது விருதா " (சங்கீதம் - 127:2). நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது மரணம் எப்படி சம்பவித்தது தெரியுமா? தனது பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஒரு ராணுவ வீரன்தான் அவரைச் சுட்டுக் கொன்றான். ஆம் மனிதன் நம்பும் பாதுகாப்பு இப்படித்தான் விபரீத பாதுகாப்பாக இருக்கும்.
நமது தேவன் நம்முடைய தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நாம் வறுமையிலோ, நோயிலோ, அல்லது எதிரிகள் குறித்த பயத்தாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நமக்கு நிச்சயம் விடுதலை உண்டு. மனிதர்கள் நாம் செல்வந்தர்களையும் நல்ல வசதி படைத்தவர்களையும்தான் நமது நினைவில் வைத்திருப்போம். யாராவது நம் வீட்டிற்கு அடிக்கடி பிச்சைக் கேட்டு வரும் பிச்சைக்காரரை நினைவில்வைத்துக் கொண்டிருப்போமா? அவர்கள் பிச்சைக் கேட்கும்போது கொடுத்துவிட்டு அப்படியே அவர்களை மறந்து விடுவோம்.
ஆனால் தேவன் அப்படியல்ல. அவர் நமது எந்தவித தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ( சங்கீதம் 136 : 23 ) என வேதம் கூறவில்லையா?
தேவன் நம்மை நினைப்பதால், அவரோடு நெருங்கிய தொடர்பில் நாம் இருப்போமானால் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்போம். எந்த விதப் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள், வந்தாலும் நமது உள்ளம் கலங்காது , அசையாது.
நமக்கு நித்திய ஜீவனை வாக்களித்து, அதனை நாம் உரிமையாக்கிக்கொள்ள இரட்சிப்பின் வழியையும் தந்துள்ள மீட்பராம் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நாம் பாக்கியமுள்ளவர்கள். ஆம்,
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
( சங்கீதம் 144 : 15 ) மலைபோன்ற பாதுகாப்பு நிச்சயம் நமக்கு உண்டு.
39
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 )
ஒருமுறை கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். தங்கம் குகையிலிருந்து வெட்டி எடுக்கும்போது நாம் பார்க்கும் தங்கத்தைப்போல பளபளப்பாக அழகாக இருக்காது . மாறாக வெறும் மண்ணாகத்தான் இருக்கும். சாதாரண மண்ணுக்கும் அதற்கும் வித்தியாசமில்லாமல் வெறும் மண்போலவே இருக்கும். அதாவது மண்ணோடு மண்ணாக இருக்கும். அதனை பிரித்தெடுக்க உலையில் சூடாக்கி உருக்கி பல பல்வேறு கட்டங்களுக்கு உட்படுத்தி அதிலுள்ள மண்ணைப் பிரித்தெடுப்பார்கள். பின்னர் அது நகையாக மாறவேண்டுமானால் மீண்டும் தங்க ஆசாரி அதை நெருப்பிலிட்டு உருக்கி சுத்தியலால் அடித்து வளைத்து நகையாக மாற்றுகின்றார். நகைக்கடையில் அலமாரிகளில் இருக்கும் பளபள தங்க நகைகள் அதுவரை கடந்து வந்த பாதை நமக்குத் தெரியாது.
பழைய ஏற்பாட்டு பக்தனான யோபு இதனை தெளிவாக அறிந்திருந்தார். எனவேதான், "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." ( யோபு 23 : 10 ) என்று கூறுகின்றார்.
தேவன் மனிதர்களைத் தம்மைப்போல மாற்றிட அவர்களைப் புடமிடவேண்டியது அவசியமாகிறது. தங்கம் எப்படி மண்ணிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறதோ அதுபோல தேவன் தமக்கு ஒருவரை ஏற்புடையவராக மாற்றிட உலக மனிதர் மத்தியிலிருந்து பிரித்தெடுத்து புடமிட்டு மாற்றுகிறார். தேவன் அப்படி நம்மைப் பிரித்தெடுப்பது தான் நமது உலக துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறது. மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தங்கம் பிற்பாடு எப்படி மண்ணோடு ஒட்டாதோ அதுபோல தேவனால் உலக மக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மனிதனால் அவர்களோடு ஒத்துப்போக முடியாது, அவர்கள் செயல்படும் முறையில் செயல்பட முடியாது. இதுவே தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ விரும்புபவர்களது துன்பத்துக்குக் காரணம்.
"நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." ( யோவான் 15 : 19 ) என்று இயேசு கிறிஸ்து கூறியது இதனால்தான்.
அன்பானவர்களே! நான் தேவனுக்கு ஏற்புடையவனாகத் தானே வாழ்கிறேன் எனக்கு ஏன் இந்தத் துன்பம் எனக் கலங்குகிறீர்களா? துன்மார்க்கமாக வாழும் மனிதர்கள் செழிப்போடு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என எண்ணி உங்கள் உத்தமத்திலிருந்து விலகிட எண்ணுகிறீர்களா? தேவன் உங்களை புடமிடுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். துன்மார்க்கன் செழிப்பான் என்று வேதம் கூறுகிறது. (சங்கீதம் - 73:3-7) அது புல்லைப் போன்ற செழிப்பு. ஆனால் "நீதிமான் பனையைப்போல செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான்" (சங்கீதம் -92:12)
"வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்." ( நீதிமொழிகள் 17 : 3 ) சோதனைகளைக் கண்டு துவண்டிடாமல் இருதயங்களைச் சோதிக்கும் கர்த்தருக்குமுன் உண்மையுள்ளவர்களாக வாழ்வோம் . கர்த்தர்தாமே நம்மை பொன்னாக மாற்றி பயன்படுத்துவார்.
40
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )
பொதுவாக மனிதர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக்கொள்வதில்லை. மட்டுமல்ல அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டினால் கோபப்பட்டு அப்படிச் சுட்டிக்காட்டிய அந்த மனிதரிடம் பேசுவதையே நிறுத்திவிடுவார். ஆனால் எந்தப் பாவமாக இருந்தாலும் தேவனுக்குமுன் அதனை மறைந்திட முடியாது. நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டால் இரக்கம் பெறுவோம்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."( 1 யோவான் 1 : 9 )
நான் தேவனை அறிந்த ஆரம்பகாலத்தில் ஒருமுறை எனது தந்தையின் வயதுடைய ஒரு ஆசிரியர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசும்போது எப்படியோ வேதாகமம் பற்றிய விஷயத்துக்குப் பேச்சுத் திரும்பியது. அவர் என்னிடம், "என்ன தம்பி பாவம் பாவம் என்று எப்போதும் கூறுகிறீர்களே, பாவம் என்றால் என்ன? என்று கேட்டார். நான், " தேவனுடைய கட்டளைகளை மீறுவது பாவம்" என்று கூறினேன். அவர் என்னிடம் கிண்டலாக, " பத்துக் கட்டளைகளா , திருச்சபைக் கட்டளைகளா ? , பங்கு சாமியாருடைய கட்டளைகளா?" என்றார்.
நான் அவரிடம் வேதாகமத்தில் பல்வேறு பாவப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது , உதாரணமாக, 1 கொரிந்தியர் 6:9,10 இப்படிக் கூறுகிறது , "அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்....." என்று கூறவும் அவர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்.
" சின்னப் பயலே உனக்கு என்னைப்பற்றி என்னடா தெரியும், ஆண்புணர்ச்சி அது இது என என்னென்னவோ பேசுறாய்? ..நீ பார்த்தியாடா? பார்த்தியாடா ? உன் அப்பன் வயசுடா எனக்கு. ..சின்னப்பயலிடம் பேசியது என் தப்பு " என்றபடி கோபமாக சென்றுவிட்டார். பின்னர்தான் தெரியும் அவருக்கு அந்தப் பாவப் பழக்கம் இருந்தது என்று.
இப்படித்தான் பலரும் அவர்களது பாவங்களைப் பிறர் கூறும்போது கோபப்படுகிறார்கள் .
நமது சில பாவங்களை பிறர் நம்மிடம் கூறுகிறார்கள் என்றால் அது உண்மையா என்று நாம் தேவனுடைய முன்னிலையில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் . உண்மையானால் திருத்திக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். தேவன் சில வேளைகளில் பிறர் மூலம் நம்மிடம் பேசி நமது பாவங்களை உணர்த்துவார்.
இன்றைய வசனம் மிகக் கடுமையாக, "பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" என்று கூறுகிறது. அதாவது இது ஒரு சாபம் போல இருக்கிறது. தேவன் வாழ்வடையமாட்டான் என்று ஒருவனைப் பார்த்துக் கூறினால் அவன் வாழ்வடையவே மாட்டான்.
அன்பானவர்களே ! நமது பாவங்களை பிறரிடம் மறைக்கலாம். ஆனால் தேவனிடம் மறைக்க முடியாது. உண்மையான மனதுடன் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கைசெய்வோம். யாருக்கும் தெரியாத மறைமுக பாவங்கள் இருந்தாலும் அதனை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கும்போது அதனை தேவன் நிச்சயம் மன்னிப்பார். மட்டுமல்ல அந்தப் பாவங்களை நாம் மீண்டும் செய்யாதபடி நம்மை அந்தப் பாவ பழக்கத்திலிருந்து விடுதலையும் ஆக்குவார்.
"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," ( யோவான் 8 : 36 )
41
"ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,...." ( எசேக்கியேல் 5 : 7 )
ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்தான் ஆவிக்குரிய வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆவிக்குரிய கிறிஸ்தவர்களிடம் உலக மக்களிடம் உள்ள நீதியோ நியாயங்களோ இருப்பதில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் பலர் கூட ஜெபத்தையும் வேதம் வாசித்தலையும் வலியுறுத்துகிறார்களே தவிர உண்மை, நீதி, நியாயத்தோடு வாழவேண்டிய வாழ்க்கையை வலியுறுத்துவதில்லை.
பிற மத சகோதரர்களும் கடவுள் மறுப்பு எண்ணம்கொண்ட சகோதரர்களும் பலர் எனக்கு உண்டு. ஆனால் அவர்களில் பலர் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களைவிட பல விதங்களில் நீதி நியாயம் உள்ளவர்களாக இருக்கின்றனர். எனது ஆரம்பகால கிறிஸ்தவ வாழ்க்கையில் என்னை அதிகம் குழப்பியது இந்த நிலைதான். பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன் எனக் கூறிக்கொள்ளும் பலரும், பல ஊழியர்களும்கூட ஏமாற்று பித்தலாட்டம், காமவிகாரச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்..
எனக்குத் தெரிந்த தாசில்தார் ஒருவர் ஊழியம் செய்துவந்தார். அவரது அலுவலகத்திலேயே வருகிறவர்களிடம் ஆண்டவரைப்பற்றி பேசி ஜெபித்தார் என்று அவர்மேல் குற்றச்சாட்டு உண்டு. அவருக்கு எதிராக புகார் மனுக்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த மனிதன் பெரிய ஏமாற்றுப் பேர்வழி என்பது பலருக்குத் தெரியாது. இந்த மனிதர் ரிட்டயர்டு ஆனபின்பு முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டுவந்தார்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இவரிடம் நிலம் ஒன்று விலைக்கிராயம் செய்து முடித்தார். ஆனால் தாசில்தாராக இருந்ததால் பல முறைகேடுகளைப் பயன்படுத்தி அவர் ஏமாற்றி விற்பனைசெய்த நிலம் என்பது நிலம் வாங்கிய நண்பர் நிலத்துக்கு வேலிபோட சென்றபோதுதான் தெரியவந்தது. பிரச்னை பெரிதாகவே தாசில்தார் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.
ஒரு மூன்றாம் ரக அயோக்கியனைப்போல செயல்படும் இவரைவிட தேவனை அறியாத பலர் உண்மையும் உத்தமுமாக வாழவில்லையா? இது ஒரு உதாரணம் மட்டுமே . என்னால் இப்படிப் பல ஊழியர்களை உதாரணம் கூறமுடியும்.
அதேநேரம் கடவுள் மறுப்புக் கொள்கைகொண்ட எனது ஆசிரிய நண்பர் ஒருவர் 100% உண்மையுள்ளவராக இருக்கிறார். மிகச் சிறிய காரியமாக இருந்தாலும் அவர் உண்மையோடு வாழ்கின்றார். உதாரணமாக, நமது வீட்டுக்கு யாராவது திருமண அழைப்பிதழ் தந்தால் நாம் என்ன சொல்வோம்? கண்டிப்பாக வருகிறேன் என்றுதானே? ஆனால் அவரோ அதில்கூடப் பொய் சொல்லக்கூடாது என எண்ணுபவர். காலண்டரைப் பார்த்து விட்டு, எனக்கு அன்று வேறு ஒரு பணி இருக்கிறது எனவே வர வாய்ப்பு இல்லை" என்பார். பலரும் அவரை அதிகப் பிரசங்கி என்பார்கள். பள்ளியில்கூட அவரது செயல்பாடு நிர்வாகத்துக்குப் பிடிக்காததால் ரிட்டயர்டு ஆகும்வரை அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அன்பானவர்களே, தேவனுக்கு ஊழியம் செய்யும் ஏமாற்று தாசில்தார் தேவனுக்கு ஏற்புடையவரா? இல்லை இந்த கடவுள் மறுப்புக்கு கொள்கை கொண்ட இந்த ஆசிரியர் ஏற்புடையவரா?
எனவேதான் , உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதி நியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே உங்களை நிர்மூலமாக்குவேன் என்று கூறுகிறார் தேவன்.
அன்பானவர்களே, கண்ணை மூடி முட்டாள்தனமாக இராமல் நம்மைச் சுற்றியுள்ள பிற மக்களைப் பார்த்து கற்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அந்த நீதி நியாயங்களின்படியாவது வாழ்ந்து காட்டினால்தான் நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களே தவிர வெள்ளை உடை தரித்து வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு அலைவதால் நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. ஜெபிப்பதோடு நீதி நியாயங்களோடு வாழவும் செய்வோம். அதுவே நற்செய்தி அறிவித்தல்தான்.
42
"தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்."( லுூக்கா 17 : 33 )
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த சாது சுந்தர் சிங் அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வசனம் எப்படி தனது வாழ்வில் நிறைவேறியது என்பதே அது.
ஒருமுறை சாது சுந்தர்சிங் அவர்களும் அவருடன் இன்னொரு துறவியும் திபெத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு சுவிசேஷம் அறிவிக்க பனிமலை பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். இரவுக்கு முன் சென்றுவிடவேண்டும் என அவர்கள் துரிதமாக நடந்துகொண்டிருந்தனர் . கடுமையான குளிர். கை விரல்களும் காது மடல்களும் மரத்துப்போனதுபோல இருந்தன. குளிர் மிக அதிகமாக இருந்தது. அப்போது அவர்கள் சென்ற பாதையில் ஒரு மனிதன் குளிர் தாங்க முடியாமல் விழுந்துகிடந்தான். சாது சுந்தர்சிங் அவன் அருகே சென்று உயிர் இருக்கிறதா என்று பார்த்தார். அவன் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.
சாது சுந்தர்சிங் தன்னுடன் வந்த துறவியிடம், "வாருங்கள் நாம் இருவரும் சேர்ந்து இவரைத் தூக்கிக் கொண்டு போவோம்" என்றார். ஆனால் மற்ற துறவியோ, "உமக்குப் பைத்தியமா பிடித்துள்ளது? நாம் தப்பிப் பிழைப்பதே கடினமாக இருக்கிறது இவனையும் தூக்கிச் சுமந்து சென்றால் மூவரும் சாகவேண்டியதுதான் என்றார்". சாது சுந்தர்சிங் அவரிடம், " அப்படியல்ல, இவருக்கு உயிர் இருக்கிறது. ஒரு மனித உயிரை நாம் காப்பாற்றாமல் செல்லக் கூடாது" என்றார். ஆனால் அந்தத் துறவியோ சம்மதிக்கவில்லை. "என்னால் உம்மோடு சேர்ந்து இவனைத் தூக்கிச் சுமந்து சாக முடியாது. நீர் வேண்டுமானால் அவனைத் தூக்கி வாரும்" என்று கூறி நடையைக் காட்டினார்.
சாது சுந்தர்சிங் அந்த மனிதனைத் தனது தோளில் தூக்கிபோட்டுக்கொண்டு நடந்து சென்றார். நாம் கடின வேலை செய்யும்போது நமது உடல் சூடு அடையுமல்லவா? அப்படி சூடு உடம்பில் வந்து சாது சுந்தர்சிங் தெம்படைந்துவிட்டார். சிறிது தூரம் நடக்கவே தோளில் கிடந்த மனிதனிலும் அசைவு தெரிந்தது. மீண்டும் கொஞ்ச நேரத்தில் அவன் ஓரளவு உயிர்பெற்றுவிட்டான். நடந்தது என்ன? உடலும் உடலும் உரசியதால் வந்த வெப்பம் அந்த மனிதனையும் உயிர் பெறச் செய்துவிட்டது.
சாது சுந்தர்சிங் தொடர்ந்து நடந்து சென்றார் . சற்று தொலைவில் ஒரு மனிதன் விழுந்து கிடைப்பதைப் பார்த்தார். கிட்டே சென்று பார்த்தபோது அது தன்னோடு வந்த அந்த இன்னொரு துறவி என்று தெரிந்தது. அவரோ குளிர் தாங்க முடியாமல் இரத்தம் உறைந்து செத்துக் கிடந்தார். அப்போது தேவன் சாது சுந்தர்சிங்கிடம் இந்த வசனத்தால் பேசினார். "தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்." எத்தனை உண்மையான தேவ வார்த்தைகள்.
அன்பானவர்களே! நமது சுகத்தை மட்டுமே பார்த்து அல்லது நாம் மட்டும் எப்படியாவது இந்தச் சிக்கலான சூழலில் இருந்து தப்பிவிடவேண்டும் பிறர் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை என்று வாழ்வோருக்கு இது ஒரு எச்சரிக்கை. பிறருக்கு உதவுதல் எப்படியாவது நமக்கு நன்மையாக முடியும். மாறாக நாம் மட்டும் தப்பிவிடவேண்டும் எனும் எண்ணத்தோடு செயல்படும்போது அது நமக்கே சிக்கலாகக் கூட முடியும்.
இயேசு கிறிஸ்து கூட மக்களது இரட்சிப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்தார். ஆனால் தேவனோ அவரை உயிர்தெழச் செய்து எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்தார். இதனைப் பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்:-
"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். ( பிலிப்பியர் 2 : 9 -11 )
தன்னலத்தை மட்டுமே நோக்காமல் நமக்கு துன்பம் வந்தாலும் பிறருடைய நலத்தையும் நோக்குவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
43
"ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்". ( 2 தீமோத்தேயு 4 : 2, 3 )
அப்போஸ்தலரான பவுல் அடிகள் தீர்க்கதரிசனமாகக் கூறிய வசனம் இது . "மக்கள் தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு", என்கிறார். அதாவது தேவனது ஆசை அல்லது விருப்பம் ஒன்று உள்ளது ஆனால் மக்களோ அதற்கு மாறாக தங்களது விருப்பத்துக்கேற்ற போதகர்களைத் தெரிந்து கொள்வார்கள். இதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது.
தேவனது விருப்பம் அல்லது திட்டம் என்ன? அதனை அப்போஸ்தலனான யோவான் பின்வருமாறு கூறுகிறார். சுவிசேஷம் எழுதப்பட்டதன் நோக்கமும் அதுதான் :-
"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன" ( யோவான் 20 : 31 )
அதாவது நாம் தேவனுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன்மூலம் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதற்காகவே சுவிசேஷம் எழுதப்பட்டது. ஆனால் இன்றுள்ள பெரும்பாலான போதகர்களும், பிரபல ஊழியர்களும் இதுபற்றி பேசுவது கிடையாது . அவர்கள் என்ன போதிக்கின்றனர் என்றால் வெறும் உலக ஆசீர்வாதங்களே . "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார், நீ மேலும் மேலும் விருத்தியாவாய், நீ தசமபாக காணிக்கையைச் செலுத்தினால் பத்து மடங்காக அதனைத் திருப்பித் தருவார் .." இதுபோன்ற போதனைகள்தான் இன்றய சுவிஷேச அறிவிப்பு!
மக்கள், ஆரோக்கியமான இரட்சிப்பின் சுவிஷேசத்தைவிட இந்த ஆசீர்வாத போதனைகளைத்தான் கேட்க ஓடுகிறார்கள். மெய்யான சுவிசேஷம் அவர்களுக்குக் கசப்பாக இருக்கின்றது.
நாம் எத்தனை விரும்புகிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும். ஆசீர்வாத உபதேசத்தைக் கேட்க ஓடுபவனுக்கு அதுதான் கிடைக்கும் . நித்திய ஜீவனுக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை. ஆனால் நித்திய ஜீவனை வாஞ்சித்து வேண்டுபவனுக்கு அதற்கேற்ற போதகர்களை தேவன் கொடுப்பார் .
"உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்."
( எரேமியா 3 : 15 ) என்கிறார் தேவன். தேவனது இருதய விருப்பத்துக்கேற்ப நாம் வாழ விரும்பும்போது தேவன் தனது இதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களை நமக்கு கொடுப்பார். அவர்கள் நம்மை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.
ஆனால் தங்கள் சுய இச்சைகளை நிறைவேற்ற விரும்பும் அற்ப விசுவாசிகளுக்கு தேவன் அதற்கேற்ற அற்பமான போதகர்களைக் கொடுப்பார். அவர்கள், "சத்தியத்துககு மக்களது செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகச் செய்யும் காலம் வரும் " என்று பவுல் அடிகள் சொல்வதுபோல மக்களை கட்டுக்கதைகளை ஆசீர்வாதம் எனப் போதித்து அழிவுக்கு நேராக நடத்துகிறார்கள்.
இது இன்று அல்ல, பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் நடந்துள்ளது . இதனைக் கண்டு மன வேதனையில் சங்கீதம் ஆக்கியோன் கூறுகிறார்,
"உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது." (
சங்கீதம் 119 : 136 ) மனுஷர் தேவனது விருப்பதின்படி நடவாதபடி அக்கால போதகர்களும் அவர்களைக் கெடுத்துள்ளனர்.
அன்பானவர்களே, இன்று பிரபல ஊழியர்கள் எல்லோருமே இப்படி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதனைகளைக் கொடுகிறார்களே தவிர தேவனது விருப்பத்துக்கேற்ற போதனைகளைக் கொடுக்கவில்லை. இவர்களது பிரசங்கங்களைக் கேட்க அதிக அளவில் மக்கள் கூடலாம். ஆனால் தேவன் கூறுகிறார் கேட்டுக்குச் செல்லும் வாயில் அகன்றது அதன் வழியே நுழைபவர் அநேகர்.
இன்று நாம் செய்யவேண்டியது மக்களை அழிவுக்கு நேராக நடத்தும் இந்தப் பிரபல ஊழியர்கள் மனம் திரும்ப ஜெபிக்கவேண்டியது தான். இந்த ஊழியர்கள் மனம் திருந்திட ஜெபிப்போம் .
44
"சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே." ( 2 கொரிந்தியர் 2 : 11 )
சில ஆண்டுகளுக்குமுன் நான் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபோது ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அது இந்த வேத வசனத்தை எனக்கு நினைவு படுத்தியது.
அந்தத் தொண்டு நிறுவனத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கல்வி அளிப்பது இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன்படி இத்தகைய பெண்கள் அலுவலகத்துக்கு வருவதுண்டு. அவர்களுக்கு பாலியல் தொழிலாளர்கள் (Commercial Sex Workers - CSWs) என்று பெயர். அப்படி வரும் பெண்களிடம் நான் சிலவேளைகளில் தேவனைப் பற்றி பேசுவதுண்டு.
ஒருமுறை ஒரு பெண்ணிடம் அப்படிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பாவம் பற்றி பேச்சு வந்தது. அந்தப் பெண் என்னிடம், "நான் பாவி என்று கூறுகிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "நீங்கள் பாவி என்று நான் கூறவில்லை. உலகில் பிறக்கும் அனைவருமே பாவ சுபாவத்தோடுதான் பிறக்கின்றோம். தேவனது பார்வையில் நாம் அனைவருமே பாவிகள்தான்..ஆனால் தேவனிடம் நம்மை ஒப்படைக்கும்போது அவர் நம்மை புதுப் படைப்பாக மாற்றி பயன்படுத்துவார்" என்றேன்.
இப்போது அந்தப் பெண் நான் கூறுவதைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்தார். நான் கூறுவதை ஆமோதிப்பதைப்போல தலையை ஆட்டி ஆட்டி கவனித்தார். நான் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் பெண் தேவனுடைய வார்த்தைகளை இருதயத்தினில் வாங்கிக்கொண்டிருக்கிறார் என மகிழ்ந்தேன். அந்தப் பெண் அடிக்கடி சில சந்தேகக் கேள்விகளையும் கேட்டார். அது எனது நம்பிக்கையை அதிகமாகியது. சிறிது நேரத்துக்குப் பின் அந்தப்பெண் என்னிடம் , "பிரதர், நீங்கள் எனக்கு நல்ல விஷயங்களையெல்லாம் சொல்லித் தந்துளீர்கள்...உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. வேண்டுமானால் இன்று இரவு என்னோடு தங்குங்கள். நீங்கள் எனக்குப் பணம் ஒன்றும் தரவேண்டாம்" என்றார். இந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்பானவர்களே! இதுதான் சாத்தானுடைய தந்திரம். நாம் பேசுவது நல்ல விஷயம் என்று ஒரு மாயத்தை உண்டுபண்ணி நம்மைப் பாவத்துக்கு நேராக நடத்துவதில் சாத்தானுக்கு நிகர் சாத்தான்தான். எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், " அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். ( யோவான் 8 : 44 )
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சோதித்துப் பார்த்தவன் சாத்தான். நம்மை அவன் சோதிப்பது ஒன்றும் புதிதல்ல. நன்மையானவைகளைப் பேசுவதுபோல பேசி நம்மைத் தீமைக்கு நேராக நடத்துவது அவனது தந்திரம். ஆவிக்குரிய மனிதர்களை சாத்தான் பிற உலக மனிதர்கள் மூலமும் சோதனைக்கு உள்ளாக்குவான். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் நமக்கு ஒரு எச்சரிப்புக்காக இந்த வசனத்தைக் குறிப்பிடுகின்றார்.
அன்பானவர்களே, ஒரு ஆண் பிற பெண்ணோடோ பெண் பிற ஆணோடோ பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். எனக்குத் தெரிந்து பல பாஸ்டர்கள் , சுவிசேஷகர்கள் ஜெபிக்கச் செல்கிறேன் என்று சில வீடுகளுக்குத் தனியே ஜெபிக்கச் சென்று விபச்சாரப் பாவத்தில் விழுந்துள்ளார். கிறிஸ்தவ ஊழியர்களுக்கு எனது அறிவுரை இதுதான்: வீடுகளுக்கு ஜெபிக்கச் செல்லும்போது தனியாகச் செல்லாதீர்கள். மற்றும் ஜெபிக்கச் செல்லும் வீடுகளில் வேறு நபர்களும் இருக்கும்போது செல்லுங்கள்.
மேலும் வேதம் கூறுவதைப்போல , " நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ( எபேசியர் 6 : 11 )
தனது சுய பலத்தின்மேல் நம்பிக்கைகொண்டு இருப்போர் சாத்தானுடைய தந்திரத்தில் விழுவது நிச்சயம். அன்பானவர்களே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருந்தால் மட்டுமே நாம் அவனை மேற்கொள்ள முடியும். தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம் ..தேவனுடைய ஆவியார் நம்மை தூய வழியில் நடத்துவார்.
45
"அவர்கள் என்னைப்
பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும்
பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும்
பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள்
இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய
அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும்
திரும்பும்படிக்கு நீ
அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு,
இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு
அனுப்புகிறேன் என்றார்."
( அப்போஸ்தலருடைய நடபடிகள்
26 : 18 )
தேவன் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளை ஊழியத்துக்கு அழைத்தபோது கூறிய வார்த்தைகள்தான் இவை. ஒரு உண்மையான ஊழியக்காரரது பணி என்ன என்பதை தேவன் தெளிவாக இங்குக் குறிப்பிடுகின்றார். அதாவது தேவனை அறியாமை எனும் இருளிலிருந்து தேவனை அறியும் ஒளிக்கு நேராக மக்களை வழி நடத்தவேண்டும். சாத்தானுடைய செயல்பாடுகளில் சிக்கிக் கிடைக்கும் அவர்களைத் தேவனது வழிகளுக்கு நேராகத் திருப்பவேண்டும்.
ஆனால் பெரும்பாலான ஊழியர்கள்
இந்தப் பணியைச் செய்யவில்லை.
இன்று இந்தியாவிலும் தமிழகத்திலும்
சுவிஷேசம் அறிவிக்கும் பல
ஊழியர்களும் மக்களை இருளிலிருந்து
மேலும் அந்தகார இருளுக்கும்,
சாத்தானுடைய செயல்பாடுகளில் இருந்து
மேலும் அதிக சாத்தானுடைய
செயல்பாட்டுக்கும் நேராக
நடத்துகிறார்கள்.
இயேசு கிறிஸ்துக் கூறினார்,
" நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,
என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே
நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்
என்றார்." ( யோவான் 8 : 12 ) ஒருவன்
கிறிஸ்துவை அறிந்தால்தான் அவன்
ஒளியில் நடக்க முடியும்.
ஆனால் கிறிஸ்துவை அறிவிப்பதைவிட
உலக ஆசீர்வாதங்கள் தான்
இன்று சுவிசேஷமாக் அறிவிக்கப்படுகின்றன.
எனவே மக்கள் ஒளியை
அறிய முடியவில்லை.
ஒளியினை அறிந்த மனிதனிடம் மாபெரும் வித்தியாசம் காணப்படும். அவனால் உலக மக்களைப்போல வாழ முடியாது. ஆனால் இன்று சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களும் சரி அவர்களை பின்பற்றும் மக்களும் சரி உலக மனிதர்களைவிட மிக மோசமானவர்களாக வாழ்கின்றனர். கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே சண்டை , சபைக்குள்ளே சண்டை, சொத்துச் சண்டை , மட்டுமல்ல இந்த சண்டைக்கு நியாயம் கேட்டு கோர்ட் வாசற்படியை மிதிக்கிறார்கள் ஊழியர்கள். இதுதான் இன்று நாம் காணக்கூடிய காட்சி.
உண்மையான நல்ல ஊழியர்கள் இல்லாமலில்லை . ஆனால் அவர்கள் மிகச் சொற்பபேர்தான். ஆனால் பிற மக்களுக்கு கண்களில் யார் தெரிவார்? வெள்ளை ஆடையில் கருப்பு ஒரு துளியாக இருந்தாலும் அதுதான் பிறர் கண்களுக்கு பளிச்சென்று தெரியும்.
முதல் முதல் அந்தியோக்கியாவில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் எனும் பெயர் வழங்கலாயிற்று என அப்போஸ்தலர் பணியில் வாசிக்கின்றோம் (அப்போஸ்தலர் - 11:26). அதாவது ஒரு சீடத்துவ வாழ்வு வாழ்ந்தவர்களைத்தான் பிறர் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். அத்தகைய வாழ்வு வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இதற்கு நேராக மக்களை வழிநடத்துபவன்தான் உண்மையான ஊழியக்காரன். அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார், 'தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; "இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. ( 1 யோவான் 1 : 5 ) எவ்வளவேனும் இருளில்லாத தேவனுக்கு நேராக மக்களை அதுபோல மாற்றி நடத்துபவன்தான் மெய்யான தேவ ஊழியன்.
இன்று சினிமா நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பதுபோல பல் கிறிஸ்தவர்கள் குருட்டுத்தனமாக சில பிரபல ஊழியர்களுக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களுக்கு இந்த ஊழியன் என்ன கூறினாலும் அது வேதவாக்கு போல இருக்கிறது.
அன்பானவர்களே, வேதாகமத்தை நீங்களே
சுயமாக தேவ வழிநடத்துதலோடு
படியுங்கள். அதில் கூறியுள்ள
சத்தியத்தின்படி ஊழியர்கள்
போதிக்கிறார்களா என்று
பாருங்கள். அவர்களது செயல்பாடுகளைப்
பாருங்கள். நான் உங்களை ஒவ்வொரு ஊழியரையும்
பார்த்து நியாயம் தீர்க்கச்
சொல்லவில்லை. ஆனால் பரிசுத்த
ஆவியின் வழிநடத்துதல் உங்களுக்கு
இருக்குமானால் சரியான
சத்தியத்தையும் சரியான
ஊழியர்களையும் இனம்
கண்டுகொள்வீர்கள்.
46
"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்," ( எபேசியர் 3 : 16 )
நாம் ஆவிக்குரிய வாழ்வில் பலப்படவேண்டியது மிகவும் அவசியம். நாம் தேவனை அறியும் ஆரம்ப நாட்களில் ஆரம்பப் பள்ளியில் படிப்பதுபோன்ற ஒரு அனுபவத்தினுள் வாழ்கின்றோம். அங்கு அப்போதுதான் எழுத்துச் சொல்லித் தருவார்கள். ஆனால் நாம் அப்படியே இருப்பதில்லை. படிப்பில் ஒவ்வொரு வகுப்பாக படித்து எம்.எ., எம்.பி .பி .எஸ் ., பொறியியல் படிப்பு என ஒரு மேலான படிப்பு நிலைக்கு வருகின்றோம்.
அதுபோலவே ஆவிக்குரிய வாழ்வும். நாம் கிறிஸ்துவை அறிந்த ஆரம்ப நிலையிலேயே இருந்துவிடக் கூடாது. கிறிஸ்து இயேசுவில் நாம் பலப்படவேண்டும் . பவுல் அடிகள் கூறுகிறார், "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்." ( எபேசியர் 6 : 10 )
வல்லமை என்றதும் கிறிஸ்தவர்கள் பலரும் நினைப்பது அதிசயங்கள் அற்புதங்கள் செய்வதும், நோய்களைக் குணமாக்கும் வரம் கிடைப்பதும்தான் என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் இன்றைய ஊழியர்கள்தான். அதிசயம் அற்புதம் என மக்களை மயக்கி வைத்துள்ளனர். ஆனால் உண்மையான வல்லமை என்பது பாவத்திலிருந்தும் பாவ பழக்கங்களிலிருந்தும் முற்றிலும் நாம் விடுதலை பெறுவதுதான்.
எனவேதான் பவுல் அடிகள் "அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்" என்று கூறுகிறார். நாம் பார்ப்பது ஒவ்வொரு மனிதனின் வெளி நிலைமையைத்தான். ஆனால் தேவன் பார்ப்பது நமது உள்ளான நிலைமையை. அந்த உள்ளான மனிதன் தேவ வல்லமையினால் பலப்படவேண்டும். ஆவியின் வல்லமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. நமது மனது வாஞ்சிக்கும் அளவுக்கும் தேவனது சித்தத்தின்படியும் தேவன் நம்மை தமது வல்லமையினால் நிரப்புவார்.
நாம் இன்னும் நமது
மாம்ச எண்ணங்களிலேயே இருந்தால்
நாம் பலம் அடையவில்லை
என்று பொருள். பவுல்
அடிகள் கூறுகிறார், "நீங்கள்
பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப்
போஜனங்கொடாமல், பாலைக்
குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும்
நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும்
உங்களுக்குப் பெலனில்லை." ( 1 கொரிந்தியர்
3 : 2 )
"பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ( 1 கொரிந்தியர் 3 : 3 )
மாம்ச எண்ணங்களான இச்சை, பொறாமை, காய்மகாரம், போன்றவை அழிந்து நாம் கிறிஸ்துவின் வல்லமையினால் பலப்படவேண்டும். நாம் பல விதங்களில் சுவிஷேசம் அறிவிக்கலாம். தேவ வார்த்தைகளை அற்புதாமாகப் பேசலாம், எழுதலாம் ஆனால், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 ) ஆம் மெய்யான வல்லமை தேவனுடைய ஆவியின் பலத்தினால் உண்டாயிருக்கிறது. அன்பானவர்களே, தேவனுடைய ஆவியின் பலம் நம்மைத் தாங்கி வழிநடத்த வேண்டுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்கிறவர்களாக மாற முடியும்.
47
"ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு இரெண்டு மைல் தூரம் போ " (மத்தேயு -5:41)
இந்த வசனத்தின் உள்ளான
கருத்து ஒருவன் உன்னிடம்
எதையாவது கேட்டால் அவனுக்கு
அதனைக் கொடுத்துவிடு என்பதாகும்.
மட்டுமல்ல அவன் விரும்பியதற்கும்
அதிகமாகவும் அவனுக்குக் கொடு.
இது நடைமுறையில் கடைபிடிக்க மிகவும்
சிரமமான செயல். ஆனால்
தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை
வாழும்போது அப்படி நாம்
கொடுப்பதை தேவன் நமக்குத்
திருப்பித் தருவார். இந்த
விஷயத்தில் நான் இன்னும்
முழுமை அடையவில்லை. அதாவது
நான் அப்படிக் கொடுப்பதில்லை.
என்றாலும் தேவன் இந்த
வசனம் உண்மை என்பதை
எனது ஆவிக்குரிய வாழ்வின்
ஆரம்ப காலத்தில் எனக்கு
மெய்பித்துக் காட்டினார்.
1994 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது . அப்போது நான் ஒரு பழைய ராஜ்தூத் பைக் வைத்திருந்தேன். லிட்டருக்கு பதினெட்டு அல்லது இருபது கிலோமீட்டர்தான் அது ஓடும். தவிர எனக்கும் அப்போது வேறு வருமானம் கிடையாது. எனவே மிகச் சிக்கனமாகவே அதனைப் பயன்படுத்துவேன். நாகர்கோவில் வேப்பமூடு அருகிலுள்ள ஒரு சர்ச் காம்பவுண்டினுள் அதனை நிறுத்திவிட்டு அருகிலுள்ள பிற இடங்களுக்கு பேருந்தில் செல்வேன். திரும்பிவந்து அதனை எடுத்து வீட்டிற்குச் செல்வேன். ஒருமுறை அப்படி பைக்கை நிறுத்திவிட்டுச் செல்லும்போது எனது ஆவிக்குரிய நண்பர் ஒருவர் வந்து உங்கள் பைக்கில் பெட்ரோல் இருக்கிறதா? என்று கேட்டார். அவர் கேட்ட தோரணை அவர் வேறு எங்கோ செல்லத் திட்டமிட்டு கேட்பதுபோல இருந்தது. 'பெட்ரோல் இல்லை என்று கூறிவிடுவோமா?' என எண்ணினேன். பின்னர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, "பெட்ரோல் இருக்கிறது" என்றேன். அப்படியானால் பைக்கை எடுங்கள் எனக்கு சமீபத்தில் ஒரு இடம்வரைப் போகவேண்டும் என்றார். எனக்கு மனமில்லை. ஆனால் அவரோ விடவில்லை.
இறுதியில் அவரது வற்புறுத்தலை மறுக்க முடியாமல், சரி,' தேவன் பார்த்துக்கொள்வார்' எனும் எண்ணத்தில் பைக்கை எடுத்துவிட்டு இருவரும் சென்றோம். திரும்பிவந்தபின் வீட்டிற்குச் செல்லுமுன் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் சென்று ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டேன். பைக்கை நிறுத்திவிட்டு கவுண்டரில் சென்று ஒரு லிட்டருக்கான பணத்தைச் செலுத்திவிட்டுத் திரும்பிவந்தேன். (அப்போதெல்லாம் கவுண்டரில்தான் பெட்ரோலுக்கு பணம் செலுத்த வேண்டும்) அப்போது அந்த பெட்ரோல் நிலைய பணியாளர் ஒரு சிறிய அளவையில் பெட்ரோலை வைத்துக்கொண்டு என்னிடம் , "சார் பெட்ரோல் டேங்கை திறவுங்கள் இதனை ஊற்றவேண்டும் என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. "ஏன்? முதலில் அளவு குறைவாக ஊற்றிவிட்டீர்களா?" என்றேன்.
அவர் கூறினார், "இல்லைசார் ஒரு புல்லட்க்காரர் வந்து பெட்ரோல் போட்டார். டேங்க் நிரம்பிவிட்டது. அவர்தான் உங்களது பைக்கைக் குறிப்பாகக் காண்பித்து மீதமுள்ள பெட்ரோலை இந்த பைக்கிற்கு போடுங்கள் என்று கூறிச் சென்றார்" என்று கூறினார். எனக்கு அப்போது ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் வீட்டிற்கு வரும்போது தேவன் என் உள்ளத்தில் உணர்த்தினார். " பார்த்தாயா? இந்தச் சின்ன விஷயத்தில் கூட நான் உனக்கு உதவிடவில்லையா? இதுபோல தொடர்ந்து உண்மையாய் இரு"
ஒருவேளை நான் அந்த நண்பர் என்னை அழைத்தபோது "பெட்ரோல் இல்லை" என்று கூறி அவருடன் அவர் அழைத்த இடத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்த அனுபவம் எனக்கு கிடைத்திருக்காது என எண்ணிக்கொண்டேன். மேலும், மறுநாள் இந்த சம்பவத்தை அந்த நண்பரிடம் நான் கூறியபோது அவர் சொன்னார், "உங்களிடம் பெட்ரோல் இல்லை என்று நீங்கள் கூறியிருந்தால் உங்களுக்கு ஒருலிட்டர் பெட்ரோல் நான் போடலாம் என்றுதான் டேன்" என்றார்.
எப்படியிருந்தாலும் நான் "எனது பைக்கில் பெட்ரோல் இல்லை" என்று ஒரு சிறிய பொய்யை நான் அந்த நண்பரிடம் சொல்லியிருந்தால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்காது. ஆம் சிறு விஷயங்களில் நாம் உண்மையாய் இருப்பதைக்கூட தேவன் பார்த்து நம்மைக் கனம் பண்ணுகிறார். சிறிய விஷயம்தான் ஆனால் தேவன் ஒரு பெரிய பாடத்தை கற்பித்துவிட்டார்.
வாக்குமாறாத தேவன் நாம் பேசும் ஒவ்வொரு பேச்சையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கேற்ற கைமாறும் செய்கிறார்.
அன்பானவர்களே! வேதத்திலுள்ள ஒவ்வொரு கட்டளையும் இதுபோல உண்மையுள்ளவை, ஜீவனுள்ளவை . அவை ஏட்டுச் சுரைக்காய் அல்ல. இச் சம்பவம்போல பல சம்பவங்களை தேவன் எனது வாழ்வில் நிகழ்த்தியுள்ளார். வேத வசனங்களை விசுவாசித்து தேவனது கற்பனைகளுக்கு உண்மையாய் நாம் கீழ்ப்படியும்போது தேவனது அதிசய அற்புதங்களை நமது அன்றாட வாழ்வில் ருசித்து மகிழலாம்.
தேவனுக்குமுன் உண்மையாய் வாழ்வோம் மெய்யான அதிசயங்களை வாழ்வில் பெற்று தேவ வார்த்தைகளுக்கு சாட்சிபகிர்வோம் .
48
"மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." ( லுூக்கா 15 : 31 )
லூக்கா 15 ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துக் கூறிய இந்த உவமை மிகச் சிறப்பானது. இதனை ஊதாரி மைந்தன் உவமை என்றும் நல்ல தகப்பன் உவமை என்றும் கூறுவார்கள்.
பொதுவாக இந்த உவமை
தகப்பனின் அன்பை விளகுவதாக
உள்ளது என்பது நமக்குத்
தெரியும். தவறு செய்த
மகனிடம் தகப்பன் எப்படி
அன்பாயிருந்து அவன்
எப்போது மனம் திரும்பி
வருவான் என ஏக்கத்தோடு
காத்திருக்கிறான். இது,
தேவன் நாம் மனம்
திரும்பி அவரிடம் வர
விரும்புவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைக்
குறிக்கிறது.
ஆனால் இந்த உவமையில் வேறொரு மேலான கருதும் அடங்கியுள்ளது. அதாவது இளைய மகன் தகப்பனைவிட, தகப்பனோடுள்ள உறவைவிட, தகப்பனது சொத்துக்களை அதிகம் விரும்பினான். அவனுக்கு முதலில் தெரியவில்லை தகப்பனோடு உறவாய் இருந்தாலே அந்த சொத்துக்கள் எல்லாம் தனக்கு கிடைக்கும் என்று. வறுமை வாட்டியபின்னரே தெரிந்தது.
தகப்பனிடம் உள்ள சொத்துக்களை பாகம் பிரித்து வாங்கிவிட்டு, அயலூருக்குச் சென்று அதனை ஊதாரித்தனமாக செலவழித்து பின் வறுமை வாட்டியபின் மனம் திரும்பி தகப்பனிடம் வருகிறான்.
இன்று கிறிஸ்தவர்கள் பலரும் இந்தத் தவறையே செய்கின்றோம். தேவனை விட, அவரோடுள்ள உறவைவிட அவர் தரும் உலக ஆசீர்வாதங்களையே விரும்புகின்றோம். பல கிறிஸ்த ஊழியர்களும் ஆசீர்வாதம் என்று இதனையே குறிப்பிடுகின்றனர். ஆனால் தேவனோ நாம் அவரோடு உறவுடன் வாழவேண்டுமென விரும்புகின்றார். ஒரு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் வீட்டிலுள்ளவர் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசி உறவாடி இருப்பதுதானே மகிழ்ச்சியைக் கொடுக்கும்? தேவன் நாம் அவரோடு ஒரு உறவுடன் வாழ வேண்டுமென விரும்புகின்றார்.
இன்று பலரது ஜெபங்களும் வேண்டுதல்களும் தேவனை உள்ளத்தில் தேடுவதாக இருப்பதில்லை. அவர்கள் ஜெபங்கள் இந்த ஊதாரி மைந்தனைப்போல தகப்பன் சொத்துக்களைக் குறிவைத்தே உள்ளன. உலக ஆசீர்வாதங்களைப் பெறவே ஜெபிக்கின்றனர். அதற்காகவே தேவனைத் தேடுகின்றனர். அவர் இரக்கமுள்ள தகப்பனாக இருப்பதால் நமது வேண்டுகோளை ஏற்று நமது ஜெபத்துக்குப் பதில் அளிக்கலாம். ஆனால் அது ஊதாரி மைந்தன் பெற்ற செல்வத்தைப் போலவே இருக்கும். தேவன் இந்தத் தகப்பனைபோல நமக்காக காத்திருக்கின்றார். நாம் அவரோடு நீடித்த உறவில் வாழ வேண்டுமென விரும்புகின்றார்.எப்போது நீ என்னை விரும்பி வருவாய்? என ஏக்கத்தோடு காத்து இருக்கிறார்.
அப்படி நாம் வரும்போது அவர் மகிழ்ச்சியுடன் மூத்த மகனிடம் கூறியதுபோல நம்மைப் பார்த்தும் கூறுவார். " மகனே, மகளே , நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது"
தேவனது மெய்யான மொத்த ஆசீர்வாதத்தையும் பெறுவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) தேவனைத் தேடினாலே அவரது ஆசீர்வாதங்கள் தாமாக நம்மைத் தேடிவரும்.
நாமாக பாகம் பிரித்து தேவனிடம் கேட்டு அற்ப ஆசீர்வாதங்களை பெற்று வருந்துவதைவிட சகல ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய அவரையே பற்றிக்கொள்வோம். கர்த்தர்தாமே நம்மை இம்மை மற்றும் மறுமைக்குரிய ஆசீர்வாதங்களால் நிரப்புவார்.
49
"உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 )
வேதாகம வசனங்களுக்கும் உலக புத்தகங்களிலுள்ள வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. உலக கவிஞர்களும் ஞானிகளும் மக்களுக்குப் பல அறிவுரைகளைக் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் அதில் எத்தனை சதவிகிதத்தினை அவர்கள் கடைபிடித்தனர் என்று பார்ப்போமானால் மிக குறைவாகவே இருக்கும். ஏனேனில் பிறருக்கு அறிவுரை கூறுவது எளிது. ஆனால், அவற்றினைக் கடைபிடிப்பது கடினம்.
ஆனால் நாம் பேசுவதை வாழ்வில் கடைப்பித்து பேசுவோமானால் அந்த வார்த்தைகள் உயிருள்ள வார்த்தைகளாக இருக்கும். பிரபலமாக உள்ள அரசியல்வாதிகளைப் பாருங்கள் அவர்கள் பேசுவதற்கும் அவர்களது செய்கைகளுக்கும் சம்மந்தமே இருக்காது. ஏழைகளைப் பற்றியும் வறுமையினைப் பற்றியும் அழகாகப் பேசுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் செல்வச் செழிப்பில் புரள்பவர்களாகவும் ஏழைகளை அவமதிப்பவர்களாகவுமே இருப்பார்கள்.
நாம் இப்படி இருக்கக் கூடாது என்று பவுல் அடிகள் கூறுகிறார். "இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்". என்கிறார். மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக நடத்தவேண்டுமானால் முதலில் நாம் போதிக்கும் போதனைகளுக்கு ஏற்றபடி வாழும் அனுபவத்தினுள் இருக்கவேண்டும். இல்லையெனில் நமது பேச்சு அற்பமான அரசியல்வாதியின் பேச்சுபோலவே இருக்கும். அந்தப் பேச்சு மற்றவர்கள் இருதயத்தில் செயல்புரியாது.
தமிழகத்தின் பிரபல கவிஞர் ஒருவர் விபச்சாரத்திலும் மது மயக்கத்திலும் வாழ்வைக் கழித்தார். ஆனால் அவர் மதுவையும் விபச்சாரத்தையும் பிறர் கைக்கொள்ளக் கூடாது எனப் போதித்தார். பல பாடல்கள் எழுதினார். இதுபற்றி அவரிடம் கேட்போருக்கு , "எனது அனுபவத்திலிருந்து பேசுகிறேன் என்பார்". அவர் மதுவையும் மாதுவையும் முழுவதும் அனுபவித்தார். ஆனால் பிறர் அவற்றை அனுபவிக்கக் கூடாது எனப் போதித்தார். ஆனால் அவரது அந்தப் போதனையின் பயன் என்ன? அவருக்கும் பயனில்லை மற்றவர்களுக்கும் பயன்படவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அந்தப் பேச்சு நிலை நின்றது. உலக நீதி நூல்கள் அனைத்துமே இத்தகையவையே. தமிழில் உள்ளதுபோல நீதி நூல்கள் வேறு எந்த மொழிகளிலுமே இல்லை. ஆனால் பயன் என்ன?
இயேசு கிறிஸ்து, "முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துவிட்டு பிறன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுக்க வழிப்பார்" என்றார். பிறர் கண்ணிலிருக்கிற துரும்பை எடுப்பது நல்ல செயல்தான். ஆனால் அதற்குமுன் நமது கண் சுத்தமாக இருக்கவேண்டியது முக்கியம்.
பவுல் அடிகள் மேற்படி வசனங்களை தனது சீடனான திமோத்தேயுவுக்கு எழுதினார். சுவிஷேச அறிவிப்பின் நோக்கமே பிறரை இரட்சிப்பில் நடத்துவதுதான். அந்த நோக்கம் நிறைவேறவேண்டுமானால் தான் போதிப்பதை கடைபிடித்து போதிக்கவேண்டும். இன்றய பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகள் பயனற்றுப் போவதற்கு காரணம் அதனை அறிவிப்பவர்கள் எந்த ஒரு போதனையிலும் சுய அனுபவமோ அவற்றைக் கடைபிடித்தோ போதியாமல் இருப்பதுதான்.
பெரிய போதகர்களுக்கு மட்டுமல்ல,
நாம் எல்லோருக்குமே இது
பொருந்தும். அன்பானவர்களே, வேத
வசனங்களை வாழ்வில் கடைபிடிக்க
முயற்சி செய்யுங்கள். அப்போதுமட்டுமே
நாம் பிறருக்கு வெளிச்சமாக
முடியும். நமது செயலைப்
பார்த்தே மற்றவர்கள் கிறிஸ்துவை
அறிந்து இரட்சிப்புக்கு நேராக
வருவார்கள்.
50
" பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடன் களிகூருங்கள்" (சங்கீதம் - 2:11)
கர்த்தரை நாம் நமது தகப்பனாகப் பார்த்தாலும் அவரை நாம் பயத்துடன் சேவிக்கவேண்டியது அவசியம். பயத்துடனே என்றவுடன் ஒரு ஆசிரியரைப் பார்த்து மாணவன் பயப்படுவதுபோல அல்ல. அதாவது அவருக்கு உரிய கனத்தை நாம் கொடுக்கவேண்டும். தேவனது சன்னதியில் வரும்போது மகிழ்ச்சியால் களிகூரலாம் ஆனால் அது ஒரு இரவு விடுதியில் களிப்புடன் மகிழ்ச்சியில் இருப்பதுபோல அல்ல.
நீதிமொழிகள் 8:13 சொல்கிறது, "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" தேவன் நாம் நடக்கவேண்டிய வழிமுறைகளை நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார். நன்மையான காரியங்கள் தீமையான காரியங்கள் எவை என்று தெரியும். கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மைத் தீமையை வெறுக்கச் செய்யும்.
இன்று சில சுவிசேஷ கூட்டங்களில் ஆட்டமும் பாட்டமும் நடனமும் மிகுந்து காணப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும் பிற மத சகோதரர்கள் இடறுவதற்கு ஏதுவாகிறது. பிரபல ஊழியர்கள் "வாலிபர் கொண்டாட்டம்" என போஸ்டர் போட்டு கூட்டங்கள் நடத்துகின்றனர்.
கர்த்தரது திருமுன் நாம்
மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமே
தவிர அது இரவு
கேளிக்கை விடுதி போன்ற
மகிழ்ச்சியாய் இருக்கக்
கூடாது.
அன்பானவர்களே, தேவன் அன்பாகவே
இருக்கிறார் என்று கூறும்
வேதம் "அவர் பட்சிக்கும்
அக்கினி" என்றும் கூறுகிறது
மறுக்க முடியாத உண்மை.
தகப்பனுக்குரிய அன்போடு
தேவனை நெருங்குவோம் ஆனால்
ஒருவித பயத்துடனே தான்
தேவனோடு இடைப்படவேண்டும். தீமையை
முற்றிலுமாக நம்மைவிட்டு நீக்கிவிட்டால்
கர்த்தாரிடமுள்ள பயம்
நம்மைவிட்டு விலகும்.
நமது தேவன் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணர் என வேதம் கூறுகிறது. எனவே அனைத்துத் தீமையான காரியங்களையும் நம்மைவிட்டு விலக்குவோம்
பயத்துடனே கர்த்தரைச் சேவித்து
நடுக்கத்துடன் களிகூருவோம்
51
"அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்".( ரோமர் 12 : 20 )
இயேசு கிறிஸ்து மலைப் பிரசங்கத்தில் கூறிய கருத்தை பவுல் இங்கு விபரித்துச் சொல்கிறார். இன்று பழிக்குப் பழி வாங்கும் காரணத்தால் கொலைகளும் தேவையில்லாத பிரச்சனைகளும் அதிகம் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டின் வட மாவட்டப் பகுதிகளில் இத்தகைய பழி வாங்கும் எண்ணம் அதிகம்.
தகப்பனைக் கொலை செய்தவனைப்
பழிவாங்கவேண்டும் எனும்
எண்ணத்தை சிறு குழந்தையாக
இருக்கும்போதே ஆண்
பிள்ளைகளின் மனதில் பதிய
வைத்துவிடுவார்கள். அந்தக்
குழந்தை வளரும்போது அதே
பழிவாங்கும் எண்ணத்தில் வளர்ந்து
அப்படியே பழிக்குப் பழி
வாங்குகின்றன.
ஆனால் தேவன் சொல்கிறார், "பழிவாங்குதல் எனக்குரியது".
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா? ( மத்தேயு 5 : 46 ) எனக்குத் தெரிந்த ஒருவர் மனைவிக்குத் தெரியும்படியே சின்னவீடு வைத்திருந்தார். சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அவளிடம் கொண்டு கொடுப்பார். அவரது மனைவியும் பிள்ளைகளும் வறுமையால் வாடினர். ஆனால் இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டபோது அவரைக் கவனித்தது அவரது மனைவிதான்.
மனைவியைப் பார்க்கும் போது
அவர் கூனிக் குறுகி
ஒரு நாய் உணவு
உண்பதுபோல மனைவியிடம் உணவு
வாங்கி உண்டார். ஆனால்
அவரது மனைவி அவரை
மதிப்போடுதான் நடத்தினார்.
அவர் முன்பு செய்த
தவறு அவரது மனச்
சாட்சியை உறுதியதால் அவரால்
மனைவியிடம் இயல்பாகப் பழக்க
முடியவில்லை. ஆம் இதுதான்
அக்கினித்தழலை தலையின்மேல்
குவிப்பது.
அன்பானவர்களே, நாம் எல்லோருக்கும் நன்மையே செய்வோம். நம்மை விரோதிப்பவர்களுக்கும் நன்மையே செய்வோம். மற்றவற்றை தேவன் பார்த்து பதில் செய்வார்.
52
"சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே
தஞ்சமானவர்". ( சங்கீதம் 9 : 9 )
தாவீது
தனது அனுபவத்திலிருந்து பேசும்
வார்த்தைகள் இவை. சிறு வயது துவங்கி சிறுமைப்படுத்தப்பட்டு நெருக்கப்பட்டு வாழ்ந்தவர் தாவீது. அவர் தனது அனுபவத்தில் உணர்ந்துகொண்டது கர்த்தர் சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவர் என்பது.
இன்று
உலக மக்கள் யாரை ஆதரிக்கின்றனர்? வசதியுள்ளவர்களையும் சமூகத்தில் பெயரும் புகழும் உடையவர்களையும்தானே? அப்படி
வசதியும் பெயரும் புகழும் உடையவர்கள் தங்களது
நண்பர்களாக இருப்பது பலருக்கும் பெருமை. இன்று பேஸ்புக், டுவிட்டர் போன்ற
சமூக தளங்களில் வரும்
புகைப்படங்களை பாருங்கள். பிரபலமானவர்களுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பலரும் பெருமைபட்டுக் கொள்கின்றனர்.
ஆனால்
நமது கர்த்தர் சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவர் என்கிறார் தாவீது.
உள்ளத்தில் ஏழ்மையும் நொறுங்குண்ட ஆவியும் உடையவர்களுக்கு கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். "சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை அவர் மறவார்." ( சங்கீதம் 9 : 12 )
அன்பானவர்களே, நீங்கள் இன்று யாரும் கவனிக்காத நிலையில், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் கர்த்தரை வாழ்வில் நோக்கிப் பாருங்கள். அப்போது பிரகாசமாவீர்கள். செல்வமும் வசதிவாய்ப்புகளையும் உள்ளவர்களை மக்கள் மதித்து பெருமையாகப் பேசலாம்.
ஆனால் தேவன் யாரைப் பெருமையாக எண்ணுகிறாரோ அவர்தான் பாக்கியவான்.
"கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்."( சங்கீதம் 9 : 10 )
தனது
தகப்பனுக்கு எட்டாவது மகனாகப்
பிறந்து, தகப்பனாலும் சகோதரர்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தாலும் தேவன் தாவீதைக் கைவிடவில்லை. காரணம் தாவீது தேவனை அறிந்திருந்தார். அவரையே
நம்பியிருந்தார். சவுல் பல முறை தாவீதைக் கொலைசெய்ய முயன்றும் தேவன் தாவீதை சவுலிடம் ஒப்படைக்கவில்லை. இறுதியில் தேவன்
தாவீதை மொத்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக்கி 40 ஆண்டுகள் ஆட்சிசெய்ய வைத்ததுமன்றி மீட்பராம் இயேசுவை
தாவீதின் சந்ததியில் பிறக்கச் செய்து ஆசீர்வதித்தார்.
அன்பானவர்களே நெருக்கப்படும் காலங்களில் கர்த்தரையே பற்றிக்கொள்வோம், கர்த்தர் ஒருபோதும் நம்மைக்
கைவிடமாட்டார் !
53
"அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று
அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது." ( மல்கியா 3 : 16 )
நான்
தேவனை அறிந்த ஆரம்பநாட்களில் நடந்த சம்பவம் ஒன்று மல்கியா தீர்க்கதரிசியின் மேற்படி
வசனத்தை உறுதிப்படுத்துவதாக இருந்தது.
தேவனை
அறிந்த அந்த நாட்களில் (1993) நான் பல்வேறு ஆலயங்களுக்கு ஞாயிறு
ஆராதனைக்காக மாறிமாறிச் சென்று
வந்தேன். காரணம், ஆலயங்களில் போதகர்கள் போதிக்கும் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையனவாக இருக்கவில்லை. நான்
வேதத்தில் படித்த சத்தியங்களுக்கு ஏற்றபடி போதியாமல் உலக ஆசீர்வாதங்களையே ஆசீர்வாதம் எனப்
போதித்துவந்தனர்.
இறுதியில் நானும் எனது நண்பர் பிருந்தா அவர்களும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியிலுள்ள ஐ.பி .சி . சர்ச் பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்களை சத்தியத்தின்படி போதிக்கும் போதகராகக் கண்டுபிடித்தோம். வயதான
அந்த பாஸ்டர் தீர்க்கதரிசன வரங்களும் நிறைந்தவர். ஆனால் அதுபற்றி பெருமைபாராட்டுவது கிடையாது. அவர் மூலம் வேதத்தின் பல
சத்தியங்களை நாங்கள் அறிந்துகொண்டோம்.
ஒரு
வியாழக்கிழமை மாலை எனது வீட்டு வராண்டாவில் அமர்ந்து நானும்
நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது
நான் எனது நண்பரிடம், "எனக்கொரு சந்தேகம்...பாஸ்டர் ஐயாவுக்கு வயதாகிவிட்டது. அவர் இறந்துபோனால் நமக்கு
யார் இப்படி சத்தியங்களைச் சொல்லித்தருவார்?" என்றேன். அதற்கு எனது நண்பர் பிருந்தா, " நானும் அப்படி எண்ணுவதுண்டு, இப்படிப்பட்ட பாஸ்டர்கள் வேறு எங்கும் இல்லை" என்றார்.
இது எங்களுக்குள் நடைபெற்ற சிறிய உரையாடல். ஆனால் தேவன் இதனைக் கேட்டுள்ளார். நாங்கள்
அந்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்குச் சென்றோம். ஆராதனை வேளையில் பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்கள் நாங்கள் பேசியதை நேரில் கேட்டதுபோல பின்வருமாறு தீர்க்கதரிசனமாக அறிவித்தார்:-
"இங்கு அமர்ந்திருக்கும் இரண்டு
தம்பிகளுக்கு ஒரு சந்தேகம். பாஸ்டர் வயதானவர். இவர் இறந்துவிட்டால் நம்மை யார் வழிநடத்துவார்கள் என்று
பேசிக்கொண்டிருக்கிறார்கள்...தம்பிகளா, நான்
மட்டுமல்ல, தேவன் நினைத்தால் என்னைப்போல பல
ஊழியர்களை உங்களுக்குத் தர
முடியும். கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களைத் தோன்றச்செய்பவர் அவர். நீங்கள் எனக்கு ஏற்புடையவர்களாக வாழ,
"உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள்
உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்."
( எரேமியா 3 : 15 ) என்றார்.
இவ்வளவு
துல்லியமான தீர்க்கதரிசனம். நாங்கள்
வியாழக்கிழமை வீட்டில் பேசியதை
தேவன் கேட்டு ஞாயிற்றுக்கிழமை அதற்கான பதிலை பாஸ்டர்மூலம் தந்தார்.
இன்று உலக ஆசீர்வாதங்களுக்காக ஊழியர்களைத் தேடி
ஓடும் மக்களுக்கு இத்தகைய
மேலான அனுபவங்கள் கிடைப்பதில்லை. உலக ஆசீர்வாத போதகர்கள் "கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்" என்ற ஒரே பல்லவியை மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை
நரகத்துக்கு நேராக நடத்துவார்கள். நமது சொல் செயல் இவற்றை தேவன் கவனிக்கிறார் எனும் எண்ணம் வரும்போதே நாம்
மெய்யான ஆவிக்குரிய ஒரு
வாழ்க்கை வாழ முடியும்.
ஆம்
அன்பானவர்களே, நமது பேச்சு செயல் அனைத்தையும் தேவன் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஏற்றபடி
வாழும்போது நம்மை நடத்தாமல் இருப்பாரா? கர்த்தர் நிச்சயம் நடத்துவார். விசுவாசமாயிருங்கள்.
54
"இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு
யாரை நிகராக்குவீர்கள்? என்று
பரிசுத்தர் சொல்லுகிறார்."( ஏசாயா 40 : 25 )
தேவனுக்கு நிகரானது உலகத்தில் எதுவுமே
இல்லை. படைக்கப்பட்ட எந்த
ஒரு பொருளும் தேவனுக்கு நிகர் இல்லை. ஆனால் இன்று மக்கள் தேவனுக்கு நிகராக
பல்வேறு உலக ஆசீர்வாதங்களையும் சொத்துக்களையும் மதிக்கிறார்கள்.
தேவன்
பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோது, "மேலே
வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு
விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;"( யாத்திராகமம் 20 : 4 ) என்று
அறிவுறுத்தினார்.
இதனை
மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று
தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் "நாங்கள் சிலை வணக்கம் செய்யவில்லை" என்று தங்களை நியாயப் படுத்திக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், பல
ஆவிக்குரிய கிறிஸ்தவர்களும் சிலை
வணக்கத்தில்தான் மூழ்கி இருக்கின்றனர். தேவனைவிட நாம்
எத்தனை அதிகம் அன்பு செய்தாலும் அது
விக்கிரக ஆராதனைதான்.
"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே."( எபேசியர் 5 : 5 ) மேற்படி வசனம் பொருளாசை ஒரு
விக்கிரக ஆராதனை என்று கூறுகிறது.
நாம்
உலகத்தில் வாழ்வதற்கு பொருள்
தேவை. மறுக்கவில்லை. ஆனால்
பொருள் மட்டுமே போதும் எனும் எண்ணமே விக்கிரக ஆராதனையாக நம்மை மாற்றுகின்றது. தேவனைவிட உலக பொருளை அதிகம் விரும்புவது விக்கிரக ஆராதனையாக மாறுகிறது. ஒருவனுக்கு கோடி கோடியாக சொத்து இருந்தாலும் அது
அவனுக்கு மன அமைதியையோ நிம்மதியையோ தராது.
பெரிய பெரிய பதவி வகிப்பவர்களும், கோடி
கோடியாக பணம் சேர்த்து வைத்துள்ள பலரும்
தற்கொலை செய்து மடிகிறார்கள்? காரணம் என்ன? அந்த பதவியும் சொத்துக்களும் அவர்களுக்கு நிம்மதி தரவில்லை என்றுதானே பொருள்?
அன்பானவர்களே, இன்றய ஊழியர்கள் பெரும்பாலும் மக்களை விக்கிரக ஆராதனைக்கு நேராகவே நடத்துகிறார்கள். பிரபல
ஊழியர்கள் பலரும் தேவனைவிட உலக பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தசம பாக காணிக்கை கொடுத்தால் கர்த்தர் உங்களை உயர்த்துவார் எனும்
போதனையைக் கொடுத்து அழிவுக்கு நேராக நடத்துகிறார்கள்.
"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள்
அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான்
இனிச் சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 ) என்று
பரிசுத்தர் சொல்கிறார்.
தேவனுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது. அன்பானவர்களே மெய்யான ஆசீர்வாதம் பெற
விரும்பினால் நீரேபோதும் எனும்
எண்ணத்தில் வாழ்வோம். கர்த்தர் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்.
55
"கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்." ( கலாத்தியர் 5 : 6 )
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருக்கிறார் என்று
வேதம் கூறுகிறது. தேவன் மோசே மூலம் பல்வேறு நியாயப்பிரமாணக் கற்பனைகளைக் கொடுத்தார். அந்தக் கற்பனைகள் நல்லவைதான். ஆனால்
யூதர்கள் அதனை வெறும் கற்பனைகளாகப் பார்த்தனரே தவிர அன்பையும் நீதியையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். இதனை
இயேசு கிறிஸ்து பல
முறை கண்டித்தார். உதாரணமாக யூதர்கள் ஓய்வு நாளை அனுசரிப்பதில் அதிக
ஆர்வம் காட்டினர். ஆனால்
அந்த ஓய்வு நாளில் இயேசு கிறிஸ்து செய்த பலவித நல்ல செயல்களை (குறிப்பாக வியாதியிலிருந்து மக்களை விடுவித்ததை) அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவேதான் பவுல் அடிகள், "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." ( ரோமர் 10 : 4 ) என்று குறிப்பிடுகிறார். இன்றய தியானத்துக்குரிய வசனம் இதைத்தான் விளக்குவதாக உள்ளது. விருத்தசேதனம் என்பது ஒரு நியாயப்பிரமாணக் கட்டளை. இங்கு பவுல் அடிகள் கூறுவது, நீ விருத்தசேதனம் செய்துள்ளாயா இல்லையா என்பது முக்கியமல்ல கிறிஸ்து இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் பிறக்கும் அன்பினால் நீ செயல்படுவதே முக்கியம் என்பதுதான்.
இன்று ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல சபைகளும் இந்த அனுபவத்தினுள் வரவில்லை. அவர்கள் இன்னும் நியாயப்பிரமாண கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர். அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டு பல்வேறு சபை போதனைகளை பிடித்துக்கொண்டு மக்களைக் குழப்புகின்றனர். காணிக்கை அளிப்பதில்கூட தேவனிடத்தில் உண்மையான அன்புடன் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தாமல், நியாயப்பிரமாண விதியினைப்புகுத்தி பத்தில் ஒருபங்கு காணிக்கை அளித்தால் மட்டுமே நீ ஆசீர்வதிக்கப்படுவாய் என்று போதிக்கின்றனர்.
இன்று தன்னை தமிழக கிறிஸ்தவர்களுக்குப் பிரதிநிதியாக எண்ணிக்கொள்ளும் பிரபல ஊழியர் ஒருவருக்கு இதுவே முக்கிய போதனை. ஏனெனில் அவரது பிழைப்பே மக்களது காணிக்கையினை நம்பியே உள்ளது. எங்கு கூட்டம் நடத்தினாலும் அவர் பத்தில் ஒன்று காணிக்கை அளிப்பதை பற்றி பேசாமல் இருக்கமாட்டார். இது எதனைக் குறிக்கிறது என்றால் இவர்கள் இன்னும் நியாயப்பிரமாணத்தைவிட்டு கிறிஸ்துவின் கிருபையினிடத்தில் திரும்பவில்லை என்பதையே.
ஆம், "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 ) இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டான கிருபையினையும் சத்தியத்தினையும் அறியாதவன் இன்னும் பழைய ஏற்பாட்டுக்கால போதகனே. அத்தகைய போதகர்கள் நம்மை சரியான பாதையில் நடத்திட முடியாது. எச்சரிக்கையாய் இருந்து சத்திய கிறிஸ்துவின் வழியில் நடந்திட நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தர்தாமே நம்மை நீதியின் பாதையில் நடத்துவார்.
56
" கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர்
உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார், உன்
வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே
காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் - 37:4 & 5)
இன்று
பலரும் கர்த்தரிடம் விசுவாசமும் நம்பிக்கையுமாய் இருப்பது பெரும்பாலும் வாழ்வில் நல்லதே தொடர்ந்து நடக்கும்போதுதான். எதிர்மறையான வாழ்க்கை சூழல் ஏற்படும்போது பெரும்பாலும் பலரும்
நிலைகுலைந்து விடுகின்றனர். நான்
எவ்வளவோ ஜெபிக்கிறேன், தேவனுக்கு ஏற்றபடிதான் வாழ்கின்றேன், எனக்கு
ஏன் இந்தத் துன்பம்? ஏன் எனக்கு மட்டும் பிரச்சனைமேல் பிரச்னை வருகின்றது? என தேவனையே கேள்விகேட்கத் துணிந்துவிடுகின்றனர்.
ஆனால்,
வேதாகம பக்தர்கள் பலரும்
உயர்வோ தாழ்வோ வறுமையோ இல்லாமையே எதுவாக
இருந்தாலும் கர்த்தரே போதும்
என்று வாழ்ந்தனர்.
ஆபகூக்
தீர்க்கதரிசி "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என்
இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக்
3 : 17, 18) என மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.
கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருத்தல் என்பது என்ன வந்தாலும் அவர்மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல் அவரையே
நம்பி வாழ்வது. பக்தனான யோபு கூறுவதுபோல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று
துணிந்து நிற்பது.
அடுத்து
இங்குக் கூறப்பட்டுள்ள இன்னொரு
விஷயம், வெறும் விசுவாசம் மட்டுமல்ல, 'உன்
வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து' என்று கூறப்பட்டுள்ளபடி நமது
வழிகள் கர்த்தரது வழியாக
இருக்கவேண்டியது அவசியம். நமது
வாழ்வை அவரது வழியில் நடத்த ஒப்புவித்துவிடவேண்டும்.
இறுதியாக, இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. நமது
இருதயத்தின் வேண்டுதல்கள் தேவனுக்கேற்ற வேண்டுதல்களாக இருக்கவேண்டும். அப்போது
அவர் அவற்றை நிறைவேற்றுவார். அதற்குமேலும் நிறைவேற்றுவார்.
அன்பானவர்களே, நான் இப்படிக் கூறுவது
பலருக்கும் வெற்று உபதேசம்போல இருக்கலாம். ஆனால்
எனது அனுபவத்திலிருந்து கூறப்பட்டுள்ள வார்த்தைகளே இவை. எனது ஆவிக்குரிய 27 வருட வாழ்வின் அனுபவத்தில் கண்டு
உணர்ந்தவை. துன்பங்கள் வரும்போது மனது சோர்ந்துபோவது தவிர்க்கமுடியாதது. நானும் மனம் சோர்ந்து போயிருக்கிறேன். ஆனால்
தேவன்மேல் அவிசுவாசம் வந்து
நம்மை தேவனைவிட்டுப் பிரித்திடாமல் காத்துக்கொள்ளவேண்டும். யோபு கூட மனம் சோர்ந்துபோனார். ஆனால் விசுவாசத்தை விட்டு விலகவில்லை. நமது வாழ்வை தேவனிடம் முழுவதும் ஒப்புவித்து மனமகிழ்சியோடிருந்து தேவ
ஆசீர்வாதங்களை பெற்று மகிழுவோம்.
ஆம்,
"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர்
உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்". தேவ வசனம் பொய்யாய் இராது.
57
"தேவனே தம்முடைய தயவுள்ள
சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்."( பிலிப்பியர் 2 : 13 )
இந்த
வசனம் மூலம் பவுல் அடிகள் ஒரு மேலான ஆவிக்குரிய அனுபவத்தை விளக்குகின்றார். நாம் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு
வாழ்வு வாழும்போது தேவனுடைய ஆவியானவர் நமது இருதயத்தில் செயல் புரிகின்றார். நாம் செயல்படுவதற்கு அவர் நமது இருதயத்தில் சில
விருப்பங்களையும் செயல்களையும் உண்டாக்குகின்றார்.
சிலர்
தாங்களாகத் தங்கள் உள்ளத்தில் எதையாவது நினைத்துக்கொண்டு அதனை நிறைவேற்ற தீவிரமாகச் செயல்படுவார்கள். ஒருவேளை அந்தச் செயலில் வெற்றியும் பெறுவார்கள். ஆனால், இப்படிச் செயல்படுவதற்கும் தேவனுடைய ஆவியானவர் ஒருவரது
உள்ளத்தில் உணர்த்திச் செயல்படுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
உதாரணமாக, இன்று கிறிஸ்தவர்களில் பலரும்
மிஷனரி ஊழியங்களுக்கு பணம்
அனுப்புவதில் தீவிரம் காட்டுகின்றனர். அதாவது வட இந்தியாவில் ஊழியம்
செய்பவர்களுக்குப் பண உதவி செய்வது சிறந்த செயல் என்று எண்ணி பணம் அனுப்புகின்றனர். ஆனால்
இப்படி உதவுபவர்கள் தங்கள்
அருகிலிருக்கும் ஏழை மக்களுக்கோ, ஏழை ஊழியர்களுக்கோ ஐந்து காசு உதவ மாட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டு விருப்பத்தையும் செய்கையையும் இவர்களில் உருவாக்கியிருப்பாரென்றால் முதலில் அருகில் தேவையில் இருப்பவர்களுக்கு உதவியிருப்பார்கள். கண்ணில் காணும் பக்கத்துச் சகோதரனை
அன்பு செய்து உதவாதவன் கண்ணில் காணாத வட இந்திய மிஷனரிக்கு எப்படி
உண்மையில் உதவிட முடியும்?
இதற்கு
காரணம் இல்லாமலில்லை. வட இந்தியாவில் ஊழியம் செய்பவர்களுக்கு பொருளுதவி செய்வது
ஆசீர்வாதம் என்று இவர்களது போதகர்கள் போதித்துள்ளார். ஞாயிறுதோறும் இந்தப் போதனைகளைக் கேட்டுக் கேட்டு
இந்த மனிதர்களது மனம்
வட இந்திய ஊழியத்துக்கு உதவுவதுதான் மிகச்
சிறந்த செயல் என்று தீர்மானித்துவிடுகிறது. (வட இந்திய ஊழியங்களுக்கு உதவுவது
தவறு என்று நான் கூறவில்லை. மாறாக
பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு உதவுங்கள் என்று
கூறுகின்றேன்)
மனித
போதனைகளுக்கும் தேவனுடைய வழிகாட்டுதலுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. தேவ வழிகாட்டுதலின்படி இவர்களது மன விருப்பமும் செயலும்
அமைந்திருக்குமானால் இந்தக் கிறிஸ்தவர்கள் செய்யும் உதவி மெய்யான தேவையில் உள்ளவர்களுக்கு கிடைத்திருக்கும். இதுபோலவே இன்று
காணிக்கை அளிப்பதிலும் மக்கள்
இருக்கின்றனர். தங்களுக்கு அருகிலிருக்கும் உண்மையான ஊழியர்களுக்குக் கொடுப்பதைவிட பிரபல ஸ்டார் ஊழியர்களுக்கு கொடுப்பது ஆசீர்வாதம் என்று எண்ணி அவர்களுக்கு தேவைக்கதிக பணத்தை
அனுப்புகின்றனர். அவர்களும் அதனை
ஊதாரித்தனமாக செலவிட்டு தேவ
நாமத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். தேவன் நமது மனதில் எண்ணத்தையும் செயலையும் உருவாக்குவாரென்றால் இத்தகைய செயல்பாடுகள் நடக்க வாய்ப்பிருக்காது.
அன்பானவர்களே! அப்போஸ்தலரான பவுல் அடிகள் குறிப்பிடுவதுபோல தங்களது
உலக ஆசீர்வாதத்துக்கோ, தங்களது
பெயர் பிரஸ்தாபத்துக்கோ செயல்படுபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.அவர்கள்,
"கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல்,
தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்." ( பிலிப்பியர் 2 : 21 ) எனவே, தேவனுடைய சித்தத்துக்கு ஏற்ப
நமது மன எண்ணங்களும் செயல்பாடுகளும் அமைந்திட முதலில் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். தேவன்தாமே நம்மை நீதியின் பாதையில் நடத்துவார்.
58
"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )
ஒருவன் தேவனால் தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்திற்குள் வரும்போது அவனது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதுகின்றார். இப்படித் தங்கள் பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களே தேவனது பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். இதனை வேதம் தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
"தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும்
அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம்
21 : 27 )
மேலும், "மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக
நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும்
வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். ( வெளிப்படுத்தின விசேஷம்
20 : 12 )
பவுல் அடிகளும் இதனைக் குறிப்பிடுகின்றார். "அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. ( பிலிப்பியர் 4 : 3 )
பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை அறிந்திருந்தார். இஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை செய்து 'இதுவே எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்' என வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார். அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார். அப்போது, "ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."( யாத்திராகமம் 32 : 32 )
அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப் பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது. "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்." ( யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.
அன்பானவர்களே ! வேதாகம பக்தர்கள் பலரும் மீட்கப்பட்ட மக்களது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தனர்.
இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளன. உதாரணமாக, பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவை. ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் நிலையே உள்ளது. அரசாங்கத்திடம் என்ன காரியத்துக்கு விண்ணப்பித்தாலும் ஆதார் பதிவு முக்கியமாக உள்ளது.
எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை
பிறந்த சில மாதங்களிலேயே பிறப்பு சான்றிதழை பெற ஓடுகின்றனர். ஆதார் அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர். அன்பானவர்களே, இதுபோலவே தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு முறையாக வைத்துள்ளார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது
பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது நிச்சயம். இது ஒருவிதத்தில் தேவனது ராஜ்யத்துக்கு நாம் உரிமையானவர்கள் எனும் பாஸ்போர்ட். இந்திய பாஸ்போர்ட் உள்ளவன் இந்திய குடிமகனாக உலக
நாடுகளால் என்றுகொள்ளப்படுவதுபோலத் தான்
இதுவும்.
இந்த உரிமையினை நாம்
பெறவேண்டியது அவசியமல்லவா? அன்பானவர்களே, தேவனிடம் நம்மைத் தாழ்த்தி ஜெபித்து நமது
மீட்புக்காக வேண்டுவோம். தேவன்தாமே நமது பெயரை ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார். அந்த
நிச்சயம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்.
59
"புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )
ஒருமுறை ஒரு குடும்ப விழாவில் நண்பர்கள் உறவினர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது மத
சம்பந்தமான பேச்சு எழுந்தது. அந்த விழாவில் கிறிஸ்தவத்தின் பல்வேறு
பிரிவினர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது
ஆவிக்குரிய சபைக்குச் செல்லும் சிலருக்கும் சி .எஸ் .ஐ , மற்றும் ஆர்.சி . சபைக்குச் செல்லும் சிலருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. இறுதியில் அது பெரிய சண்டையாக மாறி
பொதுவான மனிதர்கள் சிலர்
வந்து சமாதானப் படுத்தவேண்டியதாயிற்று. ஆவிக்குரிய சபை நண்பர் சாப்பிடாமல் கோபத்துடன் விழாவிலிருந்து வெளியேறினார்.
எதையும் வீண் வாக்குவாதத்தினால் அல்ல அன்பினால் செய்வதே உத்தமம். முதலில் நாம் பிறரது நம்பிக்கையை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். மதிப்பது என்பது ஒத்துப்போவதல்ல, ஒருவேளை நீங்கள் ஆவிக்குரிய உங்கள் போதனைதான் சரி என்று எண்ணலாம். அடுத்தவரும் அப்படித்தானே எண்ணுவார்? அதன் காரணத்தினால்தான் பிரச்சினையே எழுகிறது.
இயேசு கிறிஸ்து எந்த இடத்திலும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கவில்லை. காரணம் வாக்குவாதம் செய்வது பிரச்சனைக்கு தீர்வாகாது. எனவேதான் பவுல் அடிகள் தனது சீடனான தீத்துவுக்கு இப்படி அறிவுரை கூறுகின்றார். அவைகள் அப்பிரயோஜனமும் (எந்த பயனும் இல்லாததும்) வீணுமாயிருக்கும் என்கிறார்.
நமது செயல்பாடு நம்மை பிறருக்கு அடையாளம் காட்டவேண்டுமே தவிர நமது வாக்குவாதமல்ல. சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வேதத்திலிருந்து வசனங்களை அடுக்கிக்கொண்டிருந்தால் யாரும் நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
பொதுவாக ஆவிக்குரிய சபைகளுக்குச் செல்லும் சகோதரர்கள் மற்றவர்களைவிட வேத வசனங்களை அதிகம் அறிந்திருப்பார்கள். மட்டுமல்ல தாங்கள் செல்லும் சபைப் போதகர் கூறியுள்ள வேத விளக்கங்களையும் அறிந்திருப்பர். இது அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் ஒரு பெருமையை உண்டாக்கிவிடுகிறது. அவர்கள் தாங்கள் அறிந்ததை பெருமைக்காக பேசுவதும், வேத வசனங்களுக்கு விளக்கம் தங்களுக்குத் தெரிந்திருப்பதால் மற்றவர்களைவிடத் தாங்கள் மேலானவர்கள் என எண்ணிக்கொண்டு செயல்படுவதுமே வீண் வாக்குவாதங்களுக்குக் காரணமாகிறது.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டியது நமது கடமையே தவிர வாக்குவாதம் செய்வதல்ல. "கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்." ( 2 தீமோத்தேயு 2 : 23 )
அன்பானவர்களே! புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், வாக்குவாதங்களையும் விட்டு விலகி கிறிஸ்து இயேசுவை பிரதிபலிப்போம்; ஆத்துமாக்களை ஆதாயமாக்கிக்கொள்வோம்.
60
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )
கர்த்தருக்குக் காத்திருப்பது" என்பது ஒரு பேருந்துக்காகவோ ரயிலுக்காகவோ காத்திருப்பதுபோல சும்மா இருப்பதைக் குறிக்கவில்லை. அல்லது கர்த்தர் நன்மையானதைத் தருவார் எனப் பொறுமையாகக் காத்திருப்பதை மட்டும் குறிக்கவில்லை. இதற்கு மேலான ஒரு பொருள் உள்ளது.
எனது நண்பர் ஒருவர் எபிரேயம் நன்கு அறிந்தவர். அவர் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது மூல மொழியில் இந்த வசனம் குறிப்பிடும் உண்மை என்ன என்பதை எனக்கு விளக்கினார்.
"காத்திருத்தல்"
எனும் இந்த வார்த்தைக்கு
எபிரேய மூல மொழியில்
குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தை
"க்வாஹ்" (Quvah) என்பது.
இதற்கு இரண்டு பொருள் உண்டு.
ஒன்று , "பின்னுதல்" (பெண்கள்
தலையில் ஜடை பின்னுவது)
இன்னொரு பொருள் "ஒட்டுதல்"
(பைண்ட் செய்வது).
அதாவது இந்த வசனத்தின்
உண்மையான அர்த்தம், கர்த்தரோடு
கர்த்தராகத் தங்களைப் பின்னிக்கொண்டவர்கள்,
அல்லது கர்த்தரோடு கர்த்தராகத்
தங்களை ஒட்டிக்கொண்டவர்கள் புதுப்பெலனடைத்து,
கழுகுகளைப்போலச் செட்டைகளை
அடித்து எழும்புவார்கள் என்பது.
கர்த்தரோடு பின்னிக்கொள்வதும் அவரோடு ஒட்டிக்கொள்வதும் எப்படி? கர்த்தரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து என்ன துன்பம் வந்தாலும் கர்த்தர்மேல் உள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல், கர்த்தருக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடாமல் அவரே போதும் எனப் பொறுமையாக வாழ்வது.
இஸ்ரயேல் நாட்டிலுள்ள ஒரு கழுகு இனத்துக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் உடம்பிலுள்ள இறக்கைகள் உதிர்ந்து பறக்க இயலாத நிலை ஏற்பட்டுவிடுமாம். அப்போது அந்தக் கழுகுகள் மலை வெடிப்புகளில் போய் கண்களைமூடி ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்குமாம். ஒருசில நாட்களில் அவற்றின் உதிர்ந்த இறக்கைகள் மீண்டும் வளரத்துவங்கும். பின் அவை மீண்டும் புதுப் பொலிவுடன் வானத்தில் சிறகடித்துப் பறக்கும். துன்ப நேரங்களில் பொறுமையாக இந்தக் கழுகுகளைப்போல நாம் கர்த்தர்மேல்நம்பிக்கையுடன் அவரைவிட்டுப் பிரிந்திடாமல் அமர்ந்திருக்கவேண்டியது அவசியம்.
மேலும் இந்த வசனம், "ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" எனக் குறிப்பிடுகிறது. இது வாழ்க்கை ஓட்டத்தைக் குறிக்கிறது. கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொண்டால் பெரிய பிரச்சனைகள் நம்மை ஓடுவதுபோலத் துரத்தினாலும் சிறிய பிரச்சனைகள் அனுதினம் நம்மை துக்கத்தோடு நடக்கச் செய்தாலும் இளைப்படையவோ சோர்ந்துபோகவோ மாட்டோம். மேலும் சங்கீதம் 37:9 கூறுகிறது, "........ கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." ஆம், கர்த்தரோடு கர்த்தராக நம்மைப் பின்னிக்கொள்ளும்போது பூமியை உரிமையாக்கிக்கொள்ளலாம். அதாவது மக்களையும் சூழ்நிலைகளையும் நாம் நமக்காக ஆதாயமாக்கிக்கொள்ளலாம்.
அன்பானவர்களே! இந்த வேத
வசனங்கள் குறிப்பிடுவதுபோல கர்த்தரோடு
நமது வாழ்க்கையைப் பின்னிக்கொள்வோம்,
அவரோடு ஒட்டிக்கொள்வோம். இளைப்படையாமல்
சோர்ந்துபோகாமல் வாழ்வோம்.
61
"முந்தினவைகளை
நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச்
சிந்திக்கவேண்டாம். இதோ,
நான் புதிய காரியத்தைச்
செய்கிறேன்; இப்பொழுதே அது
தோன்றும்; நீங்கள் அதை
அறியீர்களா? நான் வனாந்தரத்திலே
வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும்
உண்டாக்குவேன்." ( ஏசாயா
43 : 18, 19 )
நமது வாழ்க்கையில் நடக்கும்
துன்பமான காரியங்களை நினைத்து
நாம் கலங்கிக்கொண்டிருக்கலாம். அல்லது,
'ஐயோ எனக்கு இதுவரை
நன்மையான எந்த காரியமும்
வாழ்க்கையில் நடக்கவில்லையே ' என்று
கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்துக்
கவலைபட்டுகொண்டடிருக்கலாம். இப்படிக்
கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் பலருக்கும்
இன்றைய வசனம் நபிக்கையூட்டுவதாக
உள்ளது.
கர்த்தர் சொல்கிறார், மகனே, மகளே நீ பழைய காலத்தையும் கடந்துபோன காலங்களையும் எண்ணிக் கலங்கவேண்டாம். இதோ உன் வாழ்க்கையில் நான் புதிய காரியத்தைச் செய்யப்போகிறேன்.
இஸ்ரயேல் மக்கள் கானானை
நோக்கிப் பயணித்தபோது வனாந்தரத்தில்
அவர்களை நடத்தியது கர்த்தரது
கரம். பாலைவனத்தில் தண்ணீர்
இல்லாமல் மக்கள் தவித்தபோது
அவர்களுக்குப் பாறையிலிருந்து
தண்ணீரை வரவழைத்து தாக்கம்
தீர்த்தவர் கர்த்தர். இன்று
பரம கானானை நோக்கிப்
பயணிக்கும் நம்மையும் நடத்துவார்
எனும் நம்பிக்கையை ஊட்டுகிறது
இந்த வசனம்.
அன்று இஸ்ரயேல் மக்களைப்
பார்த்து மோசே கூறினார், "ஆகையால்,
உன் தேவனாகிய கர்த்தரின்
வழிகளில் நடந்து, அவருக்குப்
பயப்படும்படிக்கு, அவருடைய
கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். " ( உபாகமம்
8 : 6 ) அதாவது பழைய காலத்தையும்
கடந்துபோன காலங்களையும் எண்ணிக்
கலங்காமல் கர்த்தரது கற்பனைகளை
கைக்கொண்டு நாட. அப்போது
"உன் தேவனாகிய கர்த்தர்
உன்னை நல்ல தேசத்திலே
பிரவேசிக்கப்பண்ணுவார்; அது
பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து
புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும்
ஏரிகளுமுள்ள தேசம்;" ( உபாகமம்
8 : 7 )
அன்பானவர்களே, கர்த்தர் கூறுவது
நமது வாழ்க்கையில் நிச்சயம்
நடக்கும். கர்த்தர் புதிய
காரியத்தைச் செய்யப்போகிறார். நமது
வாழ்க்கை எவ்வளவு பெரிய
வனாந்தர பாதையாக இருந்தாலும்
அவாந்திரவெளியாக இருந்தாலும்
கர்த்தர் அதனை மாற்ற
வல்லவர் என்பதை மட்டும்
உறுதியாக நம்புங்கள். ஐந்து
அப்பங்களையும் இரண்டு
மீன்களையும் கொண்டு ஐயாயிரம்
பேரை போஷித்த கரம்
கர்த்தரது கரம். கற்களிலிருந்தும்
ஆபிரகாமுக்கு மக்களை எழுப்ப
வல்லமையுள்ளது கர்த்தரது கரம்.
அந்தக் கரத்துக்குச் சொந்தமான
கர்த்தர் உங்களை பார்த்துச்
சொல்கிறார், " இதோ, நான்
புதிய காரியத்தைச் செய்கிறேன்;
இப்பொழுதே அது தோன்றும்".
நம்பிக்கையோடிருங்கள்.
62
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" ( சங்கீதம் 42 : 1 , 2 )
இன்று மனிதர்கள் எதற்காக தேவனைத் தேடுகிறார்கள் என்று பார்ப்போமானால் அவர்களது பதில் வித்தியாசமாக இருக்கும். நான் சிலரிடம் பேச்சுவாக்கில் இந்தக் கேள்விகளைக் கேட்பதுண்டு. "நீங்கள் எதற்காகக் கோவிலுக்குப் போகிறீர்கள் ? " அல்லது நீங்கள் தேவனிடம் என்ன வேண்டுவீர்கள்?"
இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலோனோர் கூறிய பதில்கள் :- *கோவிலுக்குச் செல்வது கடமை என்று செல்கிறேன்
*சிறுவயதுமுதல் பழகிவிட்டதால் போகவில்லையானால் மனது உறுத்தும் அதனால் போகிறேன்.
*எனது தேவைகளை ஆண்டவரிடம் கேட்பதற்குச் செல்கிறேன்
* நோய்கள் , கடன் பிரச்சனைகள், பிள்ளைகளின் திருமண காரியங்கள், வேலை வாய்ப்பு கிடைக்க, தேர்வில் வெற்றிபெற, நல்ல மதிப்பெண் கிடைக்க......இப்படியே தொடரும் அவர்களது பதில்கள்.
இதற்கு மேல் ஒருவர்கூட என்னிடம் வேறு பதில்கள் கூறவில்லை. அதாவது அனைவரும் தேவனைவிட தேவன் தரும் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது. தேவனே நம்மிடம் வருவது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்று ஒருவர்கூட நினைக்கவில்லை. எனவே தேவனே நீர் எனக்கு வேண்டுமென்றோ நீர் எப்போதும் என்னோடுகூட இருக்கவேண்டுமென்றோ வேண்டியதில்லை.
பவுல் அடிகள் தனது சீடனான தீமோத்தேயு குறித்துக் கூறும்போது "மற்றவர்களெல்லாரும் (தீமோத்தேயு தவிர மற்ற எல்லோரும்) கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்." ( பிலிப்பியர் 2 : 21 ) என்று கூறுகிறார். அன்பானவர்களே இதுவே இன்றும் தொடர்கிறது. மக்களை வழி நடத்தும் ஊழியர்களும் பெரும்பாலும் இப்படியே இருக்கின்றனர்.
கோடைகாலத்தில் தண்ணீர் தாகத்தால் தவிக்கும் மான் எப்படி தாகம் தீர்க்கும் நீரோடையை நாடி வாஞ்சித்து கதறுகிறதோ அதுபோல ஜீவனுள்ள தேவன்மேல் எனது இருதயம் தாகமாயிருக்கிறது என்று தாவீது ராஜா கூறுகிறார். ராஜாவாகிய அவருக்கும் பல உலகத் தேவைகள் இருந்தன. ஆனால் அவற்றைவிட அவரது மனமானது தேவனையே தேடியது. மட்டுமல்ல, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என ஏங்கினார் அவர். எனவேதான் தேவன் தாவீதைத் தனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டார்.
அன்பானவர்களே நமக்குத் பல பிரச்சனைகள் தேவைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகளுக்கு மூல தீர்வான தேவனைத் தேடுவதை விட்டுவிட்டு அவரிடமிருந்து பெறவேண்டியவைகளையே தேடுகிறோம்.
எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார்,"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )
63
"மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்." ( எஸ்தர் 9 : 4 )
தேவனுக்கு ஏற்புடையவனாக ஒருவன் வாழும்போது அவனை தேவன் எப்படி உயர்த்துகிறார் என்பதற்கு யோசேப்பைப் போல மொர்தெகாய் இன்னொரு உதாரணம்.
யூதனாகிய இந்த மொர்தெகாயின் ஆரம்ப வாழ்கையினைப் பார்த்தால் மிகவும் அற்பமானது. இவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகோனியாவைச் சிறைபிடித்துக்கொண்டு போனபோது அவனோடுகூட சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட ஒரு யூதன். பாபிலோனிலே அடிமையாக வாழ்ந்தவன்.
சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்தபின் ராஜாவாகிய அகாஸ்வேருவின் சூசான் அரண்மனையில் வாயில்காப்போனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். இந்த அகாஸ்வேரு ராஜா இந்தியாமுதல் எத்தியோப்பியா வரையிலான 127 நாடுகளை ஆட்சிசெய்தவன். (எஸ்தர் - 1:1)
இந்தச் சிறிய வேலையில் இருந்தாலும் மொர்தெகாய் தேவனுக்குமுன் உண்மையுள்ளவனாக இருந்தான். தனது சித்தப்பா மகள் எஸ்தரையும் இவன் வளர்த்துவந்தான். (எஸ்தர் ஆகமத்தைப் படித்து கதையினை அறிந்துகொள்ளுங்கள்)
அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்தபடியாக இருந்த மந்திரி ஆமான் என்பவனை மொர்தெகாய் வணங்காததுதான் பிரச்சனைக்குக் காரணமாயிற்று. அப்படித் தன்னை வணங்காததால் மொர்தெகாயை எப்படியாவது கொலை செய்துவிடவேண்டும் என ஆமான் தீர்மானித்தான். அதற்காக தந்திரமாக வேலைசெய்தான். ஒரு சாதாரண வாயில்காவலன் ராஜாவுக்கு அடுத்தபடியான அதிகாரத்திலுள்ள மனிதனை வணங்காதது தவறுதானே என நாம் எண்ணலாம். ஆனால் மொர்தெகாய் அப்படி ஆமானை வணங்காததற்குரிய காரணம் எஸ்தர் (கிரேக்கம்) நூலில் உள்ளது (விவிலியம் பொது மொழிபெயர்ப்பு).
அதில் மொர்தெகாயின் அருமையான ஒரு ஜெபம் உள்ளது. மொர்தெகாய் தேவனிடம் விண்ணப்பம் பண்ணும்போது பின்வருமாறு கூறுகிறான், " ஆண்டவரே, ஆமானுக்கு நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்குக் காரணம் செருக்கோ, இறுமாப்போ, வீண் பெருமையோ அல்ல என்பதையும் நீர் அறிவீர். இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக் கூட முத்தமிட்டிருப்பேன். ஆனால், கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு நான் நடந்துகொண்டேன். ஆண்டவரே, உம்மையைத்தவிர வேறு யாரையும் நான் வணங்கமாட்டேன்" (எஸ்தர் கிரேக்கம் - 4:17d , 17e )
மொர்தெகாய் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருந்தான். பதவியே போனாலும், உயிரே போனாலும் தேவனுக்கு கொடுக்கவேண்டிய மகிமையை மனிதனுக்குக் கொடுக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான்.
அன்பானவர்களே இப்படி நாமும் நம்மை ஆள்வோருக்கு வணக்கம் செலுத்தக்கூடாது எனப் பொருளல்ல. தேவனா, இல்லை மனிதனா அல்லது உலகப் பொருட்களா எனத் தேர்வு செய்யவேண்டிய நிலை வரும்போது தேவனுக்கே நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும். இப்படி உறுதியாக இருந்ததால் மொர்தெகாயை தேவன் மிகவும் உயர்த்தினார். சாதாரண வாயில் காவலனாக இருந்த "யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான். ( எஸ்தர் 10 : 3 )
வாயில் காவலனான மொர்தெகாய், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனாக மாறிவிட்டான் என்றால் அகாஸ்வேரு ஆட்சி செய்த 127 நாடுகளுக்கும் அவனும் அரசனுக்கடுத்த இரண்டாவது தலைவனாகமாறிவிட்டான். அன்பானவர்களே, தேவனுக்குமுன் உண்மையாய் வாழும்போது தேவன் ஒருவனை எப்படி உயர்த்துகிறார் பாருங்கள். எந்தவேளையிலும் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருப்போம். தேவன் நம்மை உயர்த்த அதுவே தகுதியாக அமையும்.
64
"அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?" ( லுூக்கா 16 : 11 )
இந்த வசனத்தின் அர்த்தம் அநீதியான அல்லது அற்பமான இந்த உலகப் பொருட்களில் அல்லது பண விஷயத்தில் உண்மையுள்ளவனாக இல்லாவிட்டால் நம்மை நம்பி ஒருவரும் பெரிய காரியங்களை ஒப்படைக்கமாட்டார்கள் என்பது.
ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவரது வாரிசு ஒரே ஒரு மகன்தான். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையானார். அவரது மகனோ சிறு வயது. அவனுக்குத் தொழிலில் முன் அனுபவமும் இல்லை. இது அந்தத் தொழிலதிபருக்கு மிகப் பெரிய மன வேதனையைத் தந்தது. நமக்குப்பின் நமது தொழில்களை யார் சிறப்பாகக் கவனிப்பார்? முன் அனுபவம் இல்லாத நமது மகனால் நிச்சயம் அது முடியாது. அவர் பலவாறு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
அவரது அலுவலகத்தில் கணக்குப் பராமரிப்புப் பிரிவில் ஒரு நபர் இருந்தார். குறைந்த சம்பளமே அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். அது பல முறை பல சிறிய சிறிய காரியங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நபர் இப்போது தொழிலதிபரின் நினைவில் வந்தார். நமது மகனுக்கு உதவியாக இருந்து உண்மையாகத் தொழிலை நிர்வகிக்க அவர்தான் சரியான நபர் என முடிவு செய்தார். அவரைக் கூப்பிட்டு அனுப்பினார். மறுநாளே அந்தத் தொழிலதிபரின் அனைத்து தொழில்களுக்கும் அவரைத் தலைவராக நியமித்தார். இப்போது அவருக்குக் கை நிறைய சம்பளம், கார், பங்களா, வேலைக்காரர்கள் .
அன்பானவர்களே! இதனைத்தான் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். உலக காரியங்களிலேயே உண்மையான மனிதனுக்கு இன்னொரு உலக மனிதனால் இப்படியொரு உயர்வு கிடைக்குமானால் தேவனுக்குமுன் உண்மையுள்ளவனாக நாம் வாழும்போது தேவன் எவ்வளவு பெரிய உயர்வை நமக்குத் தருவார்!
ஆனால் உலக மனிதர்களும் ஆவிக்குரிய மனிதர்கள் என்றுத் தங்களைக் கூறிக்கொள்வோர் பலரும் பண விஷயத்தில் பெரும்பாலும் உண்மையற்றவர்களாகவே இருக்கின்றனர். ஆவிக்குரிய ஆலயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நபர் லஞ்சம் வாங்கி கையேடு கையாக பிடிபடுகின்றார், அரசு வேலையில் இருந்துகொண்டே தங்கள் அலுவலக வேலையைச் சரியாகச் செய்யாமல் தங்களது சுய வேலையையும் தொழிலையும் பார்க்கும் பல ஆவிக்குரிய மனிதர்களை நான் பார்த்திருக்கின்றேன். தாங்கள் செய்வது தவறு எனும் கொஞ்சம் மனசாட்சிகூட இவர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் இவர்கள் ஆவிக்குரியவர்கள்!
இப்படிப்பட்ட மனிதர்களால்தான் சத்திய மார்க்கம் தூஷிக்கப்படுகிறது. தேவனை அறியாத மக்கள்கூட இவர்களைவிட எத்தனையோ மடங்கு உண்மையுள்ளவர்களாக இருக்கின்றனர். இத்தகைய மனிதர்கள் பேசாமல் ஊழியத்திலிருந்தும் ஆலய பணியிலிருந்தும் விலகி இருப்பது நல்லது. இல்லையானால் தேவனது கோபமும் சாபமும் இவர்களைத் தொடர்வது தடுக்கமுடியாதது.
"மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார்.?...." ( 1 சாமுவேல் 2 : 25 )
65
"நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன், அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்." ( யோபு 16 : 12 )
ஒரு மனிதனைத் தனக்கு முற்றிலும் ஏற்றவனாக மாற்றிட தேவன் செய்யும் செயலை மேற்படி வசனம் குறிப்பிடுகிறது. நாம் உலகத்துக்குமுன் நீதிமானாக நல்லவனாக வாழலாம். ஆனால் தேவனுக்கு அது போதாது. இந்த உலகத்தில் நீதியாக வாழ்பவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். மனிதன் தன்னை அறிந்து, மீட்பு அனுபவம் பெற்று முற்றிலும் வேறுபட்ட மனிதனாக மாறவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். நான் பரிசுத்தர் ஆகவே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தராய் இருங்கள் என்று பரிசுத்தர் கூறுகின்றார். நல்லவனாக வாழ்வது வேறு பரிசுத்தமாக வாழ்வது வேறு.
தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மனிதர்கள் இன்று தேவனுக்கென்று பல நல்ல காரியங்களைச் செய்கின்றனர். ஆனால் தேவனுக்கென்று செய்வது, வேறு தேவனை அறிந்து செய்வது வேறு. தேவனை அறியாமல் இருக்கும் மனிதன் தேவனுக்கென்று எதனைச் செய்தாலும் அதில் வீண் பெருமையும் தற்பெருமையும் கலந்துதான் இருக்கும். இன்று ஆலய காரியங்களில் முன்னே நின்று பணியாற்றும் எத்தனைபேர் புகழ்ச்சியை விரும்பாமல் தேவனுக்கென்று தேவ அன்புடன் செய்கின்றனர்?
இப்படி பெருமையோடிருக்கும் மனிதனை முற்றிலும் தனக்கு ஏற்புடையவனாக மாற்றிட தேவன் அவனை அடித்து நொறுக்கவேண்டியது அவசியமாகிறது. மிதிப்பட்ட களிமண் தான் குயவன் விரும்பும் பாண்டமாக முடியும். எனவே மனிதனது "சுயம்" அழியவேண்டியே தேவன் இப்படிச் செய்கின்றார். யோபுவை தேவன் அடித்து நொறுக்கி பொன்னைப்போல் புடமிடவேண்டியிருந்தது. எனவேதான் யோபு கூறுகின்றார், "நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்." ( யோபு 16 : 14 )
"பராக்கிரமசாலி" எனும் வார்த்தைக்கு ஆங்கில வேதாகமத்தில் Giant என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தேவன் ஒரு அரக்கனைப்போல என்மேல் பாய்ந்தார் என்று கூறுகின்றார். இப்படியே தேவன் தனக்கு ஏற்புடையவராக முன் குறிக்கப்பட்ட மக்களை நெருக்கி, பிடரியைப் பிடித்து, நொறுக்கி, தமக்கு இலக்காக நிறுத்துகிறார்.
அன்பானவர்களே, சில துன்பங்கள் தேவ நோக்கம் நம்மில் நிறைவேறிட தேவனால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. நமது மனச்சாட்சி நம்மைக் குற்றவாளி என்று தீர்க்காவிட்டால் பொறுமையாய் தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நாம்மில் குற்றம் இருக்குமானால் திருத்திக்கொள்வோம். அப்படி வாழும்போது தேவனே நமக்கு சாட்சி பகருவார். யோபு இந்த நம்பிக்கையினால் தான் , "இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்". ( யோபு 16 : 19 ) என்கிறார்.
நமது சாட்சி எங்கே இருக்கிறது? உலக மக்களது வீண் புகழ்ச்சியிலா ? இல்லை பரலோகத்திலா?
66
"தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்." ( செப்பனியா 2 : 3 )
கர்த்தருடைய கோபத்தின் நாளில் நாம் தப்புவிக்கப்பட செப்பனியா தீர்க்கதரிசி கூறும் ஆலோசனை முக்கியமானது. இங்கு அவர் மூன்று காரியங்களைக் கூறுகின்றார்.
1. கர்த்தரைத் தேடவேண்டும்
2. அவரது நீதியைத் தேடவேண்டும்
3. மனத்தாழ்மையைத் தேடவேண்டும்
முதலாவது கர்ததரைத் தேடவேண்டும். அதாவது நாட்டில் நடக்கும் காரியங்களைக் கண்டு பயந்து உலக மனிதர்கள் செய்வதுபோல பிரச்சனையிலிருந்து தப்பிக்க மனித முயற்சியிலான வழியைத் தேடக்கூடாது. கர்த்தரைத் தேடினால் அவர் பிரச்சனையிலிருந்து தப்புவிப்பார். கர்த்தரைத் தேடுவது என்பது நமது முழு இருதயத்தோடு கர்த்தரை நமக்குள் வர அனுமதிப்பது. தேவன் வலுக்கட்டாயமாக எந்த மனிதனது இருதயத்திலும் வருவதில்லை. நாம் நம்மை அவருக்கு முழுவதும் ஒப்புவித்துவிடும்போது நமது பாவங்களை மன்னித்து நமக்குள் வருகின்றார்.
இரண்டாவது அவரது நீதியைத் தேடுவது. அதாவது பாவங்கள் மன்னிக்கப்பட்டபின் பழைய நிலைக்குத் திரும்பிவிடாமல் தேவனது நீதிக் கற்பனைகளைக் கடைபிடித்து வாழ்வது.
மூன்றாவது மனது தாழ்மையுடன் நடந்துகொள்வது. வீண் பெருமைகளை விட்டு தேவனுக்கு முன்னும் மனிதர்களுக்கு முன்னும் தாழ்மையுடன் நடந்துகொள்வது. ஏனெனில் பெருமை தேவனுக்குமுன் மிகப் பெரிய பாவமாகும்.
"பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." (1.பேதுரு -5:5)
"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்" (யாக்கோபு - 4;10)
மேற்குறிப்பிட்ட காரியங்களை விட்டுவிட்டு நமது சொத்து, பதவி, அதிகாரம் இவற்றைமட்டுமே நம்பி வாழ்ந்தோமானால் கர்த்தருடைய கோபத்தின் நாளில் நாம் தப்ப முடியாது. இதைத் தான் நாம் இந்தக் கொரோனா காலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம், "கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது;" ( செப்பனியா 1 : 18 )
அன்பானவர்களே, செப்பனியா கூறுவதுபோல கர்த்தரையும் அவரது நீதியையும் தேடி மனத் தாழ்மையுடன் நடந்துகொள்வோம். அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவோம்.
67
"என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 )
தீமையான அனைத்தையும் நன்மையாக மாற்றுகின்ற தேவன், தாவீது செய்த பாவத்தின் மூலம் நமக்கு ஒரு சிறப்பான வேண்டுதல் சங்கீதம் கிடைக்கும்படிச் செய்துள்ளார். பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்த தாவீது நாத்தான் தீர்க்கதரிசி மூலம் தனது பாவத்தை உணர்ந்தபோது இயற்றிய 51 ம் சங்கீதம் சுமார் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகள் ஆனபின்பும் இன்றும் நாம் அனைவருக்கும் ஏற்புடைய வேண்டுதலாக உள்ளது.
"என் பாவத்தை நான் அறிந்திருக்கிறேன் " எனத் தாவீது கூறுவதுபோல நாமும் கூற முடியுமானால் நாம் மீட்பு அனுபவம் பெற தாமதமிருக்காது. ஆனால் இன்று நடப்பதென்ன? தன்னைப் பாவியென்று மனிதர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக்கொள்வதில்லை. தாங்கள் செய்த செயலுக்கு நியாயம் கற்பிப்பார்களேதவிர தங்களை பாவியென்று அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் ஒத்துக்கொள்வதில்லை.
நீதிமொழிகள் கூறுகிறது, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 ) இதுபோல தாவீது பாவம் செய்தாலும் அதனை மறைக்காமல் ஒத்துக்கொண்டார். மட்டுமல்ல அத்துடன் அத்தகைய பாவத்தையும் விட்டுவிட்டார்.
அதுமட்டுமல்ல, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தன்னுடன் இருந்து தன்னை வழிநடத்தவேண்டுமென்றும் தாவீது விரும்பினார். " உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
( சங்கீதம் 51 : 11 ) என வேண்டினார்.
ஒரு ராஜாவாக இருந்து ஆட்சிசெய்வதில் உள்ள மகிழ்ச்சியைவிட தேவனுடைய இரட்சிப்பு அனுபவம் அதிக சந்தோஷத்தை தாவீதுக்கு கொடுத்தது. அதனால்தான் , "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்," ( சங்கீதம் 51 : 12 ) என வேண்டுகிறார்.
அன்பானவர்களே, தாவீது பாடியுள்ள இந்த 51 ம் சங்கீதத்திலிருந்து நாம் அறிந்து திருந்த வேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு. வெறும் வாய்ப்பாடுபோல இந்த சங்கீதத்தை பெயரளவில் வாசித்தால் அல்லது பாடினால் போதாது.
நாம் நமது பாவங்களை உணர்ந்திருக்கின்றோமா? உணர்ந்த பாவ காரியங்களை விட்டுவிட்டோமா ? தேவனுடைய பரிசுத்த ஆவி நம்மை வழிநடத்தவேண்டுமெனும் ஆவலும் அதற்கான ஒப்புகொடுத்தலும் நமக்கு இருக்கிறதா? இரட்சிப்பின் சந்தோஷ அனுபவம் எனக்கு வேண்டும் எனும் ஆவல் உள்ளதா? அன்பானவர்களே, மேற்படி கேள்விகளுக்கு "ஆம்" எனும் பதில் கூறுவீர்களென்றால் உங்கள் இரட்சிப்பு சமீபத்திலுள்ளது.
68
"கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்". ( 1 சாமுவேல் 16 : 7 )
மனிதர்கள் ஒருவரைப் பார்க்கும் பார்வைக்கும் தேவனது பார்வைக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. மனிதர்கள் பொதுவாக ஒரு மனிதனது பணம், பதவி, ஆடை அலங்காரம், முக அழகு இவற்றைப் பார்த்து அவரை மதிக்கின்றனர். ஆனால் நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்த்தால் இத்தகைய வெளி அடையாளங்களைக் கொண்டு மதிக்கப்படும் மனிதர்கள் ஏழ்மையான , அழகற்ற மனிதர்களைவிட அதிக ஏமாற்றுக் காரர்களாகவும் உண்மையற்றவர்களாகவும் இருப்பதைக் காணலாம்.
மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் பலர் வேலையில் உண்மையுள்ளவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்பவர்களை பாருங்கள் அவர்கள் சமுதாயத்தால் மதிக்கப்படும் பணக்காரர்களும், தங்கள் அழகை மூலதனமாகக் கொண்டவர்களும்தான்.
ஈசாயின் புதல்வர்களுள் ஒருவரை சவுலுக்குப் பதிலாக ராஜாவாக அபிஷேகம் செய்ய தேவன் சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பினார். அவருக்கும் மனதில் ராஜா என்பவர் இப்படி இப்படி இருக்கவேண்டும் என மனிதர்கள் எண்ணுவதுபோன்ற எண்ணம் இருந்தது. ராஜா என்பவர் முக அழகு உடையவராக இருக்கவேண்டும், நல்ல உடல் வளர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் எனும் கற்பனையோடு இருந்தார். எனவே அப்படி இருந்த ஈசாயின் மகன் ஒருவனை இவன்தான் தேவன் தெரிந்துகொண்ட ராஜா என எண்ணினார். அப்போதுதான் தேவன், "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" என்ற இந்த அருமையான உண்மையை வெளிப்படுத்தினார்.
மனிதர்களை வேற்றுமைப்படுத்திப் பார்ப்பது , அதாவது மனிதர்களது தோற்றத்தைக்கொண்டு, ஆடை அலங்காரத்தைக்கண்டு அல்லது பதவியைக்கண்டு ஒருவருக்கு மதிப்பளித்து மற்றவரைப் புறக்கணிப்பது தேவனது பார்வையில் பாவமாகும்.
இதனால்தான் யாக்கோபு , "ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?
( யாக்கோபு 2 : 2-4 ) "பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள்." ( யாக்கோபு 2 : 9 )
அன்பானவர்களே, இப்படி யாரையாவது உங்கள் குடும்பத்திலோ, ஊரிலோ நீங்கள் அற்பமாக எண்ணியிருந்தால் தேவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். இப்படியுள்ள எண்ணங்களும் குணங்களும் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள்.
69
"கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்". ( எரேமியா 9 : 6 )
மேற்படி வசனம் தேவனுக்கு முன்னும் மனிதர் முன்பும் உண்மையாய் வாழும் தேவனால் மீட்பு அனுபவம் பெற்ற மக்களைப் பார்த்துத் தேவன் கூறுவது.
நாம் பெற்ற மீட்பு அனுபவத்தை பிறரும் பெறவேண்டுமென்று விரும்புகின்றோம். தேவனை இந்த உலக மக்கள் அறிந்திடவேண்டும் என ஆசைப்பட்டு ஊழியம் செய்கின்றோம். ஆனால் இந்த மக்களால் தேவனை அறிய முடியவில்லை. அது ஏன்? அதற்கான பதில்தான் இந்த வசனம். மகனே மகளே நீ கபடர்களின் மத்தியில் குடியிருக்கிறாய் , அந்த மக்கள் தேவனை அறியவேண்டுமென நீ விரும்புகிறாய். எல்லாம் சரிதான், ஆனால் அவர்கள் தங்கள் கபடத்தினால்தான் என்னை அறியாதிருக்கிறார்கள் என்கிறார் கர்த்தர்.
பொதுவாக இந்த உலகம் கபடத்தின் பிடியில்தான் உள்ளது. நம்மை ஆள்வோரும் ஆளத்துடிப்பவர்களும் கபட வார்த்தைகளைத்தான் பேசுகின்றனர். நம்மைச் சுற்றியுள்ள மக்களும், அலுவலகத்தில் அல்லது சமூகத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பெரும்பாலும் கபடமாகவே பேசுகின்றனர். அதாவது அவர்கள் தங்கள் மனதில் உண்மையில் எண்ணும் காரியத்தை மறைத்து, நமக்கு ஏற்றபடி மாற்றிப் பேசுகின்றனர். இது இன்று நேற்றல்ல, எரேமியா தீர்க்கதரிசியின் காலத்திலும் நடந்துள்ளது. எனவேதான் எரேமியா மூலம் தேவன் கூறுகின்றார்:-
"அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்". ( எரேமியா 9 : 8 )
தினசரி பத்திரிகையில் இரண்டு நாட்களுக்குமுன் ஒரு செய்தி படித்தேன். நண்பர்கள் சீட்டு விளையாடியபோது ஏற்பட்ட சண்டையில் இருவர் சேர்ந்து மற்றவனைக் கத்தியால் குதிக்க கொன்று அருகிலிருந்த குளத்தில் மூழ்கடித்துவிட்டனர். அப்படியானால் இவர்களது நட்பு கபட நட்புதானே ? இது ஒரு உதாரணம் மட்டுமே. இன்று பொதுவாக பலரும் பிறரைக் கொலை செய்யவில்லை எனினும் மனதினுள் வெறுப்புப் பாராட்டுகின்றனர் என்பது உண்மை.
இத்தகைய கபடத்தினால் தான் மனிதர்களால் தேவனை அறிய முடியவில்லை. அவர்கள் கோவிலுக்குச் செல்கின்றனர், ஜெபிக்கின்றனர், கர்த்தருக்கென்று ஊழியம் செய்கின்றனர் ஆனால் எல்லாம் வீணாயிருக்கின்றது. அவர்கள் தேவனை அறியவில்லை. அவர்களது வாயில் தேவனைத் துதிக்கும் துதியும் ஜெபமும் இருக்கும் ஆனால் அவர்கள் இருதயம் வாஞ்சிப்பது வேறு காரியங்கள்.
எனவேதான் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டிச் சொல்கின்றார், "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது". ( மத்தேயு 15 : 8 )
ஏனெனில் பெரும்பாலான மனிதர்களது இருதயத்தில் உண்மை இல்லை. இருதயத்தில் நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று.
அன்பானவர்களே, நமது இருதயத்தில் நினைப்பதை பிறரிடம் மறைக்காமல் அப்படியே பேசக்கூடிய மன நிலைக்கு நாம் வரவேண்டும். அப்படி வரும்போது மட்டுமே தேவனை நாம் அறியமுடியும். அல்லது ஆலயத்துக்கு வருவதும் சரி வெறும் மண் சுவரை நோக்கி ஜெபிப்பதும் சரி.
மாற்றிப் பேசுவது, மறைத்துப் பேசுவது, இட்டுக்கட்டிப் பேசுவது, கபடமாய்ப் பேசுவது இவை பிசாசின் குணங்கள். ஒருவன் பிசாசுக்கும் தேவனுக்கும் ஊழியம்செய்ய முடியாது. நமது பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் இருக்கட்டும். தேவனை அறிந்திட தடையான கபடகுணம் இருக்குமானால் அதனை மாற்றிடுவோம். அப்படியானால்தான் நாம் கர்த்தரை அறிய முடியும். கர்த்தரை அறிந்து அவரைத் தொழுது மகிழ்வோம்.
70
"மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்". ( லுூக்கா 6 : 31 )
பொதுவாக நாம் அனைவருமே பிறரிடமிருந்து நன்மையை எதிர்பார்க்கின்றோம். பிறர் நமக்கு ஏதாவது நன்மை செய்யும்போது மகிழ்ச்சி அடைகின்றோம். நமது பிறந்த நாளுக்கு பலர் நம்மை வாழ்த்தவேண்டும், பரிசுகள் தரவேண்டும், நமது வீட்டு நல்ல காரியங்களுக்கு அதிக மக்கள் வரவேண்டும் எனும் எண்ணம் நமக்கு இருக்கிறது. ஆனால் இதே எண்ணம் பிறர் விஷயத்தில் நமக்கு இருக்கிறதா?
இதே வசனத்தை மாற்றி சிந்தித்தால், பிறர் உங்களுக்கு எப்படி செய்யக் கூடாது என விரும்புகிறீர்களோ அப்படி நீங்களும் அவர்களுக்குச் செய்யாதிருங்கள். யாரும் நம்மைப் பிறர் ஏமாற்றவேண்டுமென்றோ நமக்கு வேறு தீமை செய்யவேண்டுமென்றோ எண்ணுவதில்லை. அப்படியானால் நாமும் பிறருக்கு அப்படிச் செய்யக்கூடாது.
இன்று உலகத்தில் நடக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் இந்த விதியை மனிதர்கள் மீறுவதால்தான்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார் என வேதாகமத்தில் வாசிக்கின்றோம். மக்களது பல்வேறு நோய்களைக் குணமாக்கினார், பேய்களை ஓட்டினார், நன்மை தவிர வேறு எதனையும் அவர் செய்யவில்லை. ஆனால் யூதர்கள் அவருக்கு அதற்கு மாறாகச் செய்தார்கள். அற்புதங்களும் அதிசயங்களும் செய்த கைகளில் ஆணியடித்து, எப்போதும் மக்களை கனிவுடன் நோக்கிய முகத்தில் எச்சிலைத் துப்பி, கைகளால் அடித்தார்கள்.
இதுவே இன்றும் தொடர்கிறது. மக்களுக்குப் பொதுவாக தங்களது குழந்தைகள், குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதே தவிர பிறரைப் பற்றி அக்கறை இல்லை. தங்களது வீட்டு மரங்கள் பக்கத்துக்கு வீட்டில் சாய்ந்து வளர்வதை பெரிதாக நினைக்காத சிலர், பக்கத்துக்கு வீட்டு மரத்தின் சிறு கிளை தங்களது வீட்டினுள் வந்துவிட்டால் வெட்டி எறிகின்றனர். இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. இப்படி அற்பத்தனமான விஷயத்தில் செயல்படுபவர்கள் எப்படி பெரிய காரியங்களில் விட்டுக்கொடுப்பார்கள்.?
ஒரு அடி நிலத்துக்கான சண்டையில் இரண்டு தலைமுறையாக கோர்ட் வாசல் ஏறி இறங்கும் குடும்பங்கள் பல உண்டு. தாங்களும் அனுபவிக்காமல் பிறரையும் அனுபவிக்கவிடாமல் நாய் பெற்ற தெங்கம்பழம் போல அனுபவிக்காமல் அழிந்து போகின்றனர்.
எந்த செயலிலும் நமக்கொரு நீதி பிறருக்கொரு நீதி எனப் பார்க்காமல் செயல்படுவதையே தேவன் விரும்புகின்றார். ஒரு பிரச்சனையில் கருத்துச் சொல்லும்போது, 'இதே கருத்தை நமது குடும்பத்தில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் சொல்வோமா' என சிந்தித்துப் பேசவேண்டும்.
இயேசு கிறிஸ்து கூறிய இந்தப் பொன் விதியை நாம் மதித்தால், மனுஷர் நமக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் அவர்களுக்குச் செய்வோம்.
71
"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 34 : 8 )
இன்று பல கிறிஸ்தவர்கள் கூட சிலவேளைகளில் கடவுள் நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர். ஆனால் தேவனது அன்பினை ருசித்துப்பழகிய மக்கள் அவ்வளவு விரைவில் விசுவாசத்தை இழந்துவிடுவதில்லை. ஏனெனில் கர்த்தர்மேல் உள்ள விசுவாசம் வெறும் பிரசங்கங்களைக் கேட்பதால் வருவதல்ல. அது கர்த்தரோடு இணைந்து அவரது அன்பை வாழ்வில் ருசிப்பதால் வருவது. அப்படிக் கர்த்தரது அன்பை ருசித்தவர்கள் சீக்கிரத்தில் அவரைவிட்டு விலகமாட்டார்கள்.
ஒரு நாத்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான். அவன் பிரசங்கம் செய்தால் கேட்கும் அனைவரையும் அவனது கருத்துக்கு மாற்றிவிடுவான் என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். "கடவுள் இல்லை, மதம் இல்லை, எதுவுமேயில்லை. இவை மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று சில உதாரணங்களைக் கூறி திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.
கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான். அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பழைய பெரிய குடிகாரன் ஒருவன் இருந்தான். அவன் இப்போது இரட்சிக்கப்பட்டு தேவனை அறிந்து அவரது அன்பை ருசித்தவன். அவன் மேடைமீது ஏறினான்.
தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். "கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவன் அதனைத் தின்று கொண்டே, "பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான். தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.
"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்."கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று இவன் சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள். நாஸ்திகன் தலைகுனிந்து போனான்.
ஆம் கர்த்தரை ருசி பார்க்கும் அனுபவம் வேண்டும். இந்த அனுபவம் இருந்ததால் தாவீது இப்படிக் கூறுகின்றார். தாவீது வாழ்வின் ஆரம்பம்முதல் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர். ஆனால் அவர் தேவனது அன்பை ருசி பார்த்திருந்ததால் இப்படிக் கூறுகின்றார். சொந்த குடும்ப உறவுகளால் அற்பமாய் எண்ணப்பட்டவர் தான் தாவீது. ஒருபுறம் பொறாமை கொண்ட சவுல் துரத்த உயிரைக் காப்பாற்ற ஓடி ஒழிய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அந்த சூழ்நிலையிலும் "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்" எனப் பாடுகிறாரென்றால் அதுதான் அவரது விசுவாசம்.
அன்பானவர்களே, நாம் நல்ல நிலையில் இருக்கும்போது கர்த்தர் நல்லவர் என்று கூற முடியும். ஆனால் எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில், எல்லாம் எதிர்மறையாகவே வாழ்வில் நடக்கும்போதும் கர்த்தர் நல்லவர் என்று நம்மால் கூற முடியுமா? கூற முடியுமானால் நாம் கர்த்தரை வாழ்வில் ருசித்திருக்கிறோம் என்று பொருள்.
சிறு குழந்தையை தாய் கண்டித்து அடித்தால் அக்குழந்தை அழுதுகொண்டே தாயிடம்தான் ஓடும். ஏனெனில் குழந்தை தாயின் அன்பை ருசித்துள்ளது. அதுபோலத்தான் தேவனை அறிந்தவரது வாழ்விலும் நடக்கும். தேவனது அன்பை நாம் ருசித்திருந்தால் எந்த துன்பம் வந்தாலும் அவரிடம் ஓடுவோமே தவிர விசுவாசத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்.
72
"மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9 : 24 )
மனிதர்களிடையே பெருமை எனும் மேன்மைபாராட்டுதல் அதிக அளவில் உள்ளது. சிலர் தங்களது குடும்ப பாரம்பரியத்தைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள். " எங்கள் குடும்பத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா? எங்க தாத்தாவுக்கு தாத்தா காலத்திலேயே இந்த ஊரில் எங்க குடும்பம்தான் பெரியது" என்பார்கள்.
இதுபோல சிலர் தங்களது பணத்தைக் குறித்து, பதவியைக்குறித்து, அழகைக் குறித்து, பலத்தைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள்.
வேடிக்கையாக இருந்தாலும் சிலர் தங்கள் பாவச் செயல்களைக் குறித்தும் மேன்மை பாராட்டுவார்கள். மிகப் பெரிய குடிகாரனுக்கு அது ஒரு பெருமை. " நான் ஒரு "ஆப்" அடித்தாலும் ஸ்டெடியா இருப்பேன்" என்பான். சிலர் விபச்சாரக் காரியத்தில் தங்களுக்குள்ள அனுபவத்தை பெருமையாகச் சொல்வார்கள். தங்களை அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் பலர் தங்களது அறிவாற்றலைக் குறித்துப் பெருமை பட்டுக்கொள்கின்றனர்.
"ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;" ( எரேமியா 9 : 23 ) என்று கர்த்தர் கூறுகின்றார்.
இன்று சமூக ஊடகங்களான பேஸ்புக் , வாட்சாப் , இன்ஸ்டாக்ராம் போன்றவற்றில் கிறிஸ்தவ ஊழியர்கள் செய்யும் மேன்மை பாராட்டுதலுக்கு அளவே இல்லை. தாங்கள் வீட்டில் தனியாக ஜெபிப்பதை, வேதாகமத்தை வாசிப்பதை, யாருக்காவது சிறு உதவிகள் செய்வதை புகைப்படங்களாகவோ வீடியோ காட்சியாகவோ எடுத்து எல்லோரும் பார்க்கும்படி பதிவிடுகிறார்கள். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவை அனைத்தையுமே அந்தரங்கத்தில் செய்யவேண்டுமென அறிவுறுத்தியிருக்கின்றார். ஆனால் இவர்கள் இவற்றை உலகம் அறிய பறைசாற்றுகிறார்கள்.
தங்களது சபைக்கு வரும் விசுவாசிகள் தங்களை மேன்மையாய் எண்ணவேண்டுமெனும் அற்ப ஆசைக்காக இப்படிச் செய்கின்றனர். ஆனால் இவர்கள் உண்மையில் தேவனை அறிந்தவர்களல்ல. தேவனை மதிப்பவர்களுமல்ல. தேவனை மதித்திருந்தால் இப்படிச் செய்வது தவறு என்று உணர்ந்திருப்பார்கள்.
கிறிஸ்து இயேசுவின் தாழ்மையைக் குறித்து வேதத்தில் இப்படி வாசிக்கின்றோம், "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்". ( பிலிப்பியர் 2 : 6-8 )
அன்பானவர்களே, நமக்குச் செல்வம், பதவி, படிப்பு, அழகு, நல்ல உடல்நலம் இல்லாமலிருக்கலாம் ஆனால் கர்த்தர் கூறுகிறார், மகனே, மகளே நீ என்னை அறிந்திருக்கிறாயே, இதுதான் மேன்மை. நீ என்னை அறிந்துள்ளதால் எனக்குமுன் நீ மேன்மையானவன்.
73
"அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்." ( யோவான் 11 : 16 )
பொதுவாக அனைவரும் தோமாவை அவிசுவாசமான சீடன் எனக் கூறுவர். மரித்து உயிர்த்த இயேசு கிறிஸ்துவை மற்றச் சீடர்கள் கண்டு அறிவித்தபோது தோமா அதனை நம்ப மறுத்து அவரது கைகளிலும் விலாவிலும் உள்ள காயத்தைக் கண்டு அதில் என் விரலை விட்டால் ஒழிய அதனை நம்பமாட்டேன் என்று கூறியதால் அவரை கிறிஸ்தவர்கள் அற்பமான ஒருவராக எண்ணுகின்றனர்.
உலகம் துவங்கி அதுவரை நடக்காத ஒரு சம்பவம் இறந்து மூன்று நாட்களுக்குப் பின் ஒருவர் கல்லறையிலிருந்து உயிரோடு வெளிவருவது. தோமாவின் இடத்தில் நாம் இருந்திருந்தாலும் நாமும் அப்படிதான் கூறியிருப்போம். ஆனால் தோமாவுக்கு கிறிஸ்து இயேசுவிடம் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. அது எந்த அளவுக்கு என்றால் கிறிஸ்துவுக்காகத் தனது உயிரையே விடத் துணிந்த அளவுக்கு.
அதனைத்தான் நாம் மேற்படி வசனத்தில் பார்க்கின்றோம். சில நாட்களுக்குமுன்புதான் யூதேயாவிலுள்ள யூதர்கள் இயேசு கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல முயன்றனர். இயேசு அவர்களுக்குத் தப்பி கலிலேயாவுக்கு வந்து விட்டார். ஆனால் அடுத்து சில நாட்களில் தனது நண்பன் லாசர் மரித்துப்போனான் என்பதை அறிந்து மறுபடியும் யூதேயாவிலுள்ள பெத்தானியாவுக்குப் போகப் புறப்படுகின்றார். அப்போது மற்றச் சீடர்கள் அவரிடம் , ஆண்டவரே இப்போதுதானே யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயன்றனர் ? மறுபடி அங்கு போகலாமா? என்றனர்.
அப்போது தோமா மட்டும் கிறிஸ்துவோடு சென்று இறக்க நேரிட்டாலும் பரவாயில்லை அவரோடு கூட யூதேயாவுக்குப் போகத் துணிந்து இப்படிக் கூறுகின்றார். அன்பானவர்களே, இன்றும் இப்படித்தான் நடக்கிறது. நாம் சிலரைத் தவறாக எடைபோட்டுவிடுகின்றோம். ஆலயக் காரியங்களில் சிறப்பாகச் செயல்படுவதுபோல இருப்பவர்களை நாம் மதித்து மரியாதை செய்கின்றோம். அப்படி இல்லாதவர்களை அற்பமாக எண்ணுகின்றோம் . ஆனால் ஆலயக் காரியங்களில் முன்னணியில் இருந்து செயல்படாமல் இருக்கும் சிலர் உண்மையிலேயே தேவனுடன் அதிக தொடர்பில் இருப்பதுண்டு. ஆலயத்தில் நடக்கும் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களால் அவர்கள் ஒதுங்கி இருப்பார்கள்.
ஆவிக்குரிய ஒரு ஆலயத்தில் கமிட்டி உறுப்பினர்களாக மருத்துவர்களும், வக்கீல்களும், பொறியியல் வல்லுனர்களும் இருந்தனர். ஆனால் அந்த ஆலயத்தில் இருந்த கட்டிடத் தொழிலாளியை யாரும் மதிக்கவில்லை. அவரை கமிட்டியில் சேர்க்கவும் இல்லை. ஆனால் மதக் கான்னியாகுமாரியில் மதக் கலவரம் ஏற்பட்டபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்துவுக்காக நின்று ஆலயத்தைக் காப்பாற்றியது அந்தக் கட்டிடக் தொழிலாளிதானேதவிர அந்த மருத்துவர்களோ, வக்கீல்களோ , பொறியியல் வல்லுனர்களோ அல்ல.
கிறிஸ்துவுக்கு ஆராதனை செய்ய மட்டுமல்ல அவரோடேகூட நமது பாவத்துக்கு மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்.
74
"அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 )
கிருபை எனும் வார்த்தை வேதாகமத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது. கிருபை என்றால் தேவன் நம்மீது காட்டும் அன்பு என்று எளிதாகக் கூறலாம். அதாவது நாம் பாவிகளாய் இருக்கும்போதும் தேவன் நம்மீது அன்பு காட்டுவதுதான் கிருபை. ஆனால் இதற்கும் மேலாக, மனிதனது பலவீனங்களில் அவற்றைத் தாங்கி நடக்க தேவன் அருளும் பெலன் என்றும் கூறலாம்.
மனிதர்களாகிய நாம் பலவீனர்கள். நமது மாம்ச பலவீனத்தினால் நாம் பாவத்தில் விழுகின்றோம். நோயில் வாடுகின்றோம், பொருளாதார சிக்கல்களில் மாட்டுகின்றோம் . ஆனால் என்ன இருந்தாலும் அவற்றால் சோர்ந்திடாமல் நாமைத் தாங்கி நடத்துவது தேவ கிருபைதான்.
தனது உடலில் இருந்த ஒரு பலவீனத்தை மாற்றும்படி பவுல் அப்போஸ்தலர் ஜெபித்தபோது தேவன், "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்." ( 2 கொரிந்தியர் 12 : 9 )
இந்த வார்த்தைகள் பவுல் அப்போஸ்தலர் உள்ளத்துக்கு மிகப் பெரிய ஆறுதல் அளித்தது. இந்தத் தேவ வார்த்தைகளே அவருக்கு வந்த பல்வேறு துன்பங்களை அவர் மகிழ்ச்சியுடன் தாங்கிட பெலன் கொடுத்தது. மட்டுமல்ல கிறிஸ்துவின் கிருபை துன்பங்களில் பெருகி வருவதால் அவர் துன்பங்களை அனுபவிப்பதில் ஆர்வம் கொண்டார். எனவேதான் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் என்று துணிந்து கூறுகின்றார்.
பவுல் அப்போஸ்தலருக்கு தேவன் அளித்த இந்தப் பதில் இன்றும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலளிக்கும் வசனமாக இருக்கின்றது.
பழைய ஏற்பாட்டு பக்தனாகிய தாவீதும், "தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்."( சங்கீதம் 36 : 7 ) என்று கூறுகின்றார். அதாவது தேவ கிருபையினால்தான் நாம் அவரது பாதுகாப்பினுள் வந்து சேருகின்றோம்.
தேவனது கிருபை நம்மில் பெருகிட என்ன செய்யவேண்டும் என்பதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
நாம் பிதாவாகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகின்ற அறிவில் வளர வேண்டும்.
"தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 )
கர்த்தருக்கு பயப்படும் பயம் . அதாவது பாவத்துக்கு விலகிட விரும்புகின்ற மனம்.
"பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது." ( சங்கீதம் 103 : 11 ) –
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. ( சங்கீதம் 103 : 17 )
கிருபையானது ஸ்தோத்திரத்தினாலே பெருகும்.
"தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 4 : 15 )
தாழ்மையை வாழ்வில் கடைபிடித்தல் - "பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ( 1 பேதுரு 5 : 5 )
வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம் ; தேவ கிருபையை வாழ்வில் பெற்று மகிழ்வோம்.
75
"பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்." ( 2 பேதுரு 3 : 8 )
கிறிஸ்துவினுடைய வருகையைப் பற்றிக் கூறும்போது அப்போஸ்தலரான பேதுரு மேற்படி வசனத்தைக் கூறுகின்றார். இந்த வசனம் மிக முக்கியமான ஒரு விஞ்ஞான விதியான 'காலமும் இடமும்' என்பதை தன்னுள் கொண்டுள்ளது.
காலமும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நாம் இருக்கும் இடத்தின் அடிப்படையிலேயே காலம் செயல்படும். நமது பூமியில் நாம் கணக்கிடும் நாள், ஆண்டு இவை சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஓர் ஆண்டு எனக் கணக்கிடுகின்றோம். நமது வயதும் அதனடிப்படையில் மாறுகின்றது. ஆனால் நாம் இருக்கும் இந்த இடத்தினை மாற்றும்போது காலக் கணக்கும் மாறிவிடுகின்றது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த கோட்பாடு நேரமும் இடமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. ஐன்ஸ்டீன் மேலும் கூறினார், நமது பிரபஞ்சத்திற்கு வேக வரம்பு உள்ளது: ஒளியின் வேகத்தை விட வேறு எதுவும் வேகமாக பயணிக்க முடியாது (வினாடிக்கு 186,000 மைல்கள்). அப்படி நாம் பயணித்தோமானால் என்ன நடக்கும்? உதாரணமாக அப்படி ஒருவர் விண்வெளியில் ஓர் ஆண்டு பயணித்து ஓர் ஆண்டு கழித்து திரும்பி வருவாரென்றால் அவரது வயது ஒரு ஆண்டுதான் கூடியிருக்கும். ஆனால் அவர் அப்படித் திரும்பி வரும்போது பூமியில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும். அவர் பயணத்தைக் துவங்கியபோது பூமியில் இருந்த மக்கள் அழிந்து பல தலைமுறை மாறியிருக்கும்.
இதுதான் கர்த்தரது கணக்கும் மனிதர்கள் நமது கணக்கும். பேதுருவுக்குத் தேவன் இந்த சத்தியத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி பலரும் பலவிதங்களில் கேள்வி கேட்டனர். இதனைப் பேதுரு பின்வருமாறு கூறுகின்றார்: "அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே". ( 2 பேதுரு 3 : 4 )
தன்னிடம் கேள்வி எழுப்பிய மக்களுக்குப் பேதுரு இந்த வசனங்கள் மூலம் பதிலளிக்கிறார். தேவனது காலக் கணிப்பு ஒருபுறம், மறுபுறம் தேவனது பொறுமை. அதாவது ஒருவரும் அழிந்து கெட்டுபோய்விடக்கூடாது எனும் எண்ணம். எனவே தேவன் தனது வருகையைத் தாமதப்படுத்துகின்றார். "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )
அன்பானவர்களே, கிறிஸ்துவின் வருகை உண்மை என்பதற்கு பேதுரு குறிப்பிட்டுள்ள நிரூபிக்கப்பட்ட இந்த விஞ்ஞானபூர்வமான வசனமே சாட்சி.
கிறிஸ்து நமது காலத்தில் வந்து நம்மை சந்திக்கலாம் அல்லது நாம் மரித்து அவர்முன் போய் நிற்கலாம். எனவே அவரை சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். நமது வாழ்வை சீர்தூக்கிப் பாப்போம். கிறிஸ்துவை சந்திக்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா?
76
"...ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 )
தேவன் மனிதனைப் பார்க்கும் விதத்துக்கும் மனிதர்கள் நாம் சக மனிதர்களைப் பார்க்கும் விதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை கடந்த 7 ஆம் தேதி தியானித்தோம். அதில், " மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான் கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமுவேல் 16:7) என்று பார்த்தோம்.
இன்றும் தேவன் அதுபோல ஒரு வசனத்தைக் கூறுகின்றார். தேவனுக்கு ஆலயம் கட்டுவதை மனிதர்கள் நாம் எப்படிப் பார்கின்றோம், தேவன் எப்படிப் பார்க்கின்றார் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது. இன்றைய தியான வசனத்தின் முழுப் பொருளையும் அறிந்துகொள்ள இதன் முந்தைய வசனத்திலிருந்து பார்க்கவேண்டும்.
அந்த வசனம் கூறுகிறது, "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 1 & 2 )
அதாவது மனிதர்கள் தேவனுக்கு ஆலயம் கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தேவன் சொல்கிறார், நீ ஆலயம் கட்டும் இந்தப் பொருட்களையெல்லாம் உண்டாக்கியது என்னுடைய கரம்தான், எனவே நீ எனக்கு ஆலயம் காட்டுவதால் மட்டும் நான் உன்னை நோக்கிப் பார்க்க மாட்டேன் , மாறாக சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
தங்களுடைய பெருமைக்காக ஆலயங்கள் கட்டி அவற்றில் தங்களது பெயரைப் பதிவு செய்வது பெரிதல்ல, மாறாக நாம் தாழ்மையுள்ள ஒரு ஆவி உள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.
இதனையே இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) என்று முதல் வசனமாகக் கூறினார்.
அன்பானவர்களே, ஆலயங்கள் கட்டுவதோ, ஆலயங்களுக்கு என பெரிய காரியங்கள் செய்வதோ நல்லதுதான். ஆனால் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு தேவனது வசனத்துக்கு நடுங்குகிற (வசனத்துக்கு கீழ்ப்படிகின்ற) ஒரு மனநிலை அதைவிட நல்லது. அத்தகைய மனதுள்ள ஒருவனையே தேவன் நோக்கிப் பார்க்கின்றார்.
77
"எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்." ( 1 பேதுரு 2 : 17 )
ஒரு இறைச்சி பதப்படுத்தும் நிலையத்தில் பலர் வேலை செய்தனர். அங்குள்ள குளிர்பதன அறைக்கு பொறுப்பாளராக ஒரு பெண்ணும் பணி புரிந்தார். அலுவலகத்துக்கு வரும்போது யாரும் அந்த நிறுவனத்தின் வாயில்காவலாளி (Watchman ) அங்கு நிற்பதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் அந்தப் பெண்ணோ தினமும் அலுவலகத்துக்கு வரும்போதும் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போதும் அவருக்கு வணக்கம் செலுத்துவதுண்டு. அது அவருக்கும் பெரிய ஒரு காரியமாக இருந்தது.
ஒருநாள் மாலை அலுவலகம் முடியும் வேளையில் அந்தப் பெண் ஏதோ காரணத்துக்காக இறைச்சி வைத்திருக்கும் குளிர்பதன அறைக்குள் செல்லவேண்டியிருந்தது. அவர் அங்கு சென்று திரும்புவதற்குள் அவர் உள்ளே இருப்பதை அறியாத பணியாளர் அலுவலக கதவுகளை எல்லாம் அடைந்துவிட்டார். அந்தப் பெண்ணோ குளிர்பதன அறைக்குள் மாட்டிக்கொண்டார்.
எல்லோரும் சென்றபின் அந்த வாயில்காவலாளி அந்தப் பெண்ணை நினைவு கூர்ந்தார். தினமும் தனக்கு வணக்கம் செலுத்துவதால் அந்தப்பெண் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை என்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என எண்ணிய அவர் அலுவலக பொறுப்பாளரிடம் பேசி மீண்டும் அலுவலகத்தைத் திறந்து ஒவ்வொரு அறையாகச் சோதித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணோ குளிர்பதன அறைக்குள்ளிருந்த குளிரால் உடம்பெல்லாம் நடுங்கி, 'நாம் இன்றோடு இங்கேயே மரித்துப்போய்விடுவோம்' எனக் கலங்கி கதவோடு சாய்ந்து தன்னால் முடியுமட்டும் கத்திக்கொண்டிருந்தார்.
அந்தக் காவலாளி சத்தத்தைக் கேட்டு ஓடிச் சென்று குளிர்பதன அறையின் கதவைத் திறந்தார். இன்னும் சில நிமிடங்கள் கடந்திருந்தால் அந்தப் பெண் அங்கேயே குளிரால் மரித்துப்போயிருந்திருப்பார்.
அன்பானவர்களே, இது ஒரு உண்மைச் சம்பவம். அந்தப்பெண், அலுவலகக் காவலாளி தனக்கு உதவவேண்டும் என எண்ணி தினமும் அவருக்கு வணக்கம் செலுத்தவில்லை, மாறாக, பிறர் அந்தக் காவலாளியைப் பார்த்ததுபோல அல்லாமல் அவரை ஒரு மனிதனாகப் பார்த்ததன்னால் அவருக்கு வணக்கம் செலுத்தினார்.
தேவனையும் ராஜாவையும் (நம்மை ஆளுவோரை) பொதுவாக நாம் கனம் பண்ணுவோம். ஆனால் நமக்கு அடுத்திருப்பவர் நம்மைவிடத் தகுதியில், படிப்பில், பதவியில் குறைவாக இருந்தால் அவர்களை அற்பமாக எண்ணுகின்றோம் , அவர்களைக் கனம் பண்ணத் தவறுகின்றோம். வசனம் கூறுவதால் மட்டும் இத்தகைய நல்ல குணங்களை நாம் கைக்கொள்ளாமல் நம் சுபாவத்திலேயே இத்தகையக் குணங்களை உருவாக்கவேண்டும். இது ஒரு உதாரணமே. உலகினில் நாம் சிறப்பாக வாழ இதுபோல பல சிறு சிறு நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. அவற்றையே தேவனும் விரும்புகின்றார்.
தேவ வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோமெனில் இந்தக் குணங்கள் நம்மில் அதிகமாக உருவாகும். கர்த்தர்தாமே அத்தகைய நல்ல குணங்களோடு வாழ நமக்கு உதவுவாராக.
78
"நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." ( மத்தேயு 7 : 1&2 )
ஒருமுறை எனது ஆவிக்குரிய நண்பரும் நானும் ஒரு சிற்றுண்டியகத்தில் சாப்பிடச் சென்றிருந்தோம். அங்கு மேசையில் சில மாத, வாரப் பத்திரிகைகள் கிடந்தன. நண்பர் அவற்றில் ஒரு பத்திரிகையை எடுத்துப் படிக்க நினைத்து கையில் எடுத்தார். ஆனால் பத்திரிகையைத் திறந்ததும் ஒரு பெண்ணின் ஆபாசப்புகைப்படம் இருந்தது. எனவே அதனைக் கீழே போட்டுவிட்டார். அந்த நொடியில் அங்கு வந்த இன்னொரு நண்பர் அதனைப் பார்த்துவிட்டார்.
அவர் வெளியே சென்று சிலரிடம், "இவர்கள் இருவரும் பைபிள் பிரசங்கம் செய்துகொண்டு திரிகிறார்கள் ஆனால் படிப்பது எல்லாம் ஆபாசப் பத்திரிகைகள். நானே நேரில் பார்த்தேன். என்னைக் கண்டதும் படித்துக்கொண்டிருந்த ஆபாசப் பத்திரிகையைக் கீழே போட்டுவிட்டனர்." என்று கூறிகொண்டுதிரிந்தார்.
அவர் சொல்வது சரிதான். அவரது பார்வையில் அவர் உண்மையைத்தான் கூறுகின்றார். "படித்துக்கொண்டிருந்த ஆபாசப் பத்திரிகையை நான் வந்ததும் கீழே போட்டனர்" என்பதில் பாதி உண்மை. அதாவது பத்திரிகையைக் கீழே போட்டது உண்மை. அதனைப் படித்தார்கள் எனக் கூறுவது அவரது அனுமானம். ஆனால் அவர் கூறுவது அவரது பார்வையில் சரிதான். இப்படித்தான் நாம் பல விஷயங்களில் பிறரைத் தீர்ப்பிடுகின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்." என்று கூறினார்.
ஆனால் தேவனது தீர்ப்பு வித்தியாசமானது. அவர் கண் கண்டபடியோ காது கேட்டபடியோ தீர்ப்பிடாமல் எதார்த்தத்தின்படி தீர்ப்பு செய்வார்.
"கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து....," ( ஏசாயா 11 : 3, 4 ) என வேதம் கூறுகிறது.
அன்பானவர்களே, எனவே நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். ஒருவரது உண்மை மனநிலை தேவனுக்கு மட்டுமே தெரியும். அவரே எதார்த்தத்தை அறிந்தவர். "நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்" என இயேசு கிறிஸ்து நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்போஸ்தலரான பவுலும் இதுகுறித்து நமக்கு அறிவுறுத்தியுள்ளார்:- "ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். ( 1 கொரிந்தியர் 4 : 5 )
79
"வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்." ( நீதிமொழிகள் 6 : 26 )
நான் ஏழாவது அல்லது எட்டாவது வகுப்புப் படிக்கும்போது (1968) எங்கள் பக்கத்து ஊரில் ஒரு மிகப் பெரிய செல்வந்தரான மனிதர் இருந்தார். அவரது வீடு மிகப் பெரிய அரண்மனைபோல இருக்கும். வீட்டின்முன் இரண்டு மூன்று கார்கள் , மோட்டார் சைக்கிள்கள் என அணிவகுத்து நிற்கும். இதுதவிர குதிரைப்பூட்டிய வண்டி ஒன்று வைத்திருந்தார். அந்த வண்டியில் மாலை நேரங்களில் சுற்றிவருவார். அந்த வண்டியைப் பார்க்கவே மக்கள் கூடி வருவார்கள்.
ஆனால் ஒருசில ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. நான் பத்தாவது வகுப்புப் படிக்கும்போது அவர் சாதாரண சைக்கிள் ஒன்றில் வருவதை பார்த்திருக்கின்றேன். ஒருநாள் திடீரென்று ஒரு செய்தி வந்தது, அவர் தூக்குமாட்டி இறந்துவிட்டார் என்று. காரணம் கடன் பிரச்னை. அவரது கடனைத் தீர்ப்பதற்கு வீடு, கார்கள், எல்லாம் விற்றும் தீரவில்லை.
நடந்தது என்ன என்று பின்புதான் தெரிந்தது. அதிகமான பணம் மற்றும் செல்வாக்கு இருந்ததால் 1960 களில் பிரபலமாயிருந்த ஒரு சினிமா நடிகையோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பணம் செலவழிந்தபின் அவளுக்குக் கொடுப்பதற்காக அவரது கார்கள், பைக்குகள் மற்றும் வீடு அனைத்தையும் விற்றார். பின் கடன் வாங்கி இன்பம் அனுபவித்தார். இறுதியில் பிச்சை எடுக்கும் நிலை வந்தபின் தற்கொலை செய்துகொண்டார். மட்டுமல்ல அவரது மனைவி வீட்டுவேலை செய்து பிழைக்கக் கூடிய நிலைக்கு வந்து அவரும் மரித்துப்போனார். இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிகாரர்களாக அலைந்து திரிந்தனர்.
அன்பானவர்களே, "பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்."( நீதிமொழிகள் 5 : 3 ) என வேதம் நம்மை எச்சரிக்கின்றது. அத்தகைய தேன் போன்ற வார்தைகளால்தான் மேற்படி மனிதரின் சொத்துக்களை அந்த நடிகை கவர்ந்தாள்.
பத்துக் கற்பனைகளில் ஒரு கற்பனை "விபசாரம் செய்யாதிருப்பாயாக." ( யாத்திராகமம் 20 : 14 ) என்பது . இந்தப் பழைய ஏற்பாட்டுக்கட்டளையை இயேசு கிறிஸ்து மேலும் மெருகேற்றினார். "விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." ( மத்தேயு 5 : 27, 28 )
அன்பானவர்களே, நாம் ஒருவேளை நேரடியாக விபச்சார பாவம் செய்யாமல் இருக்கலாம் ஆனால், இயேசு கிறிஸ்து கூறியுள்ள புதிய ஏற்பாட்டுக் கட்டளையை நினைத்துப் பார்ப்போம். இத்தகையப் பாவம் நம்மில் இருந்தால் அந்தப் பாவத்திலிருந்து விடுபட பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடி ஜெபிப்போம். ஆவியானவர் நமக்கு நிச்சயம் உதவுவார். அப்படி இல்லாமல் தொடர்ந்து பாவத்திலேயே வாழ்வோமெனில், வேதம் கூறுவதுபோல அந்தப் பாவம் நமது அருமையான உயிரை வேட்டையடிவிடும்.
80
"சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )
விசுவாசம்தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. அந்த விசுவாசம் இல்லாவிட்டால் கிறிஸ்தவத்தில் ஒன்றுமே இல்லை. கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் அதன்மூலம் ஆத்தும இரட்சிப்பை விசுவாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தினார் என்பதும் அடிப்படை இறையியல் உண்மை. இதனை விசுவாசிக்கவேண்டும். ஆனால் கிறிஸ்தவத்தின் இந்த விசுவாசக் கோட்பாடு வெறும் வேற்று உபதேசமல்ல. இந்த அடிப்படை உண்மையினை விசுவாசிக்கும்போது நமது விசுவாசத்தைக் கனம் பண்ணும் விதமாகத் தேவன் நம்மோடு இடைப்படுவார். அதனை உறுதிப்படுத்தும் பல அற்புத அடையாளங்களை நமது வாழ்வில் நடப்பித்து நாம் விசுவாசித்து உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவார்.
ஆனால் சாத்தான் நம்மை விசுவாசத்தைவிட்டுத் திசைத்திருப்பிட பல்வேறு சோதனைகளையும் இக்கட்டுகளையும் நமது வாழ்வில் கொண்டு வருவான். அப்போஸ்தலரான பேதுருவையும் சாத்தான் இப்படித் திசைதிருப்ப முயன்றான். ஆனால் நமது கர்தராகிய இயேசு கிறிஸ்து பேதுருவுக்காக ஜெபம் செய்து சாத்தானின் சூழ்ச்சியில் பேதுரு விழுந்திடாமல் காத்துக்கொண்டார். இதனை வேதத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:-
"பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்." ( லுூக்கா 22 : 31, 32 )
நம்மையும் இப்படிச் சுளகினால் புடைப்பதற்கும் விசுவாசத்தைவிட்டுத் திசை திருப்புவதற்கும் சாத்தான் முயலுவான். ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்தச் சோதனை உண்டு. அதனை நாம் ஜெயிக்கவேண்டும். அப்போதுதான் நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாக மாற முடியும். ஆம், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 )
துன்மார்க்கன் விசுவாசத்தினால் பிழைப்பான் என்று வேதம் கூறாமல் "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்றுதான் கூறுகின்றது. ( ரோமர் 1 : 17 ). அப்படியானால் விசுவாசத்துக்கான பரீட்சை (தேர்வு) நீதிமானுக்குத்தான் வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு . இந்தப் பரீட்சையில் வெற்றிபெற்ற பரிசுத்தவான்களது பட்டியல் எபிரேயர் நிருபத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (எபிரேயர் - 11 ம் அதிகாரம்)ஆபேல் முதல் பல்வேறு விசுவாச வீரர்களை இங்கு நாம் வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, நமது வாழ்வில் விசுவாசத்துக்குச் சோதனை வரும்போது கலங்கிடாமல் இந்த விசுவாச வீரர்களின் வாழ்க்கையினை தியானிப்போம். இயேசு கிறிஸ்து பேதுருவுக்காக ஜெபித்ததுபோல நாமும் இந்த விசுவாச பரீட்சையில் வெற்றிபெற பரிசுத்த ஆவியின் பலத்தை வேண்டுவோம். கடுகளவு விசுவாசம் இருந்தாலும் அதனைக் கனம் பண்ணும் கர்த்தர்தான் நாம் தொழுதுகொள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அன்பானவர்களே "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்". விசுவாசித்தால் நாமும் பிழைப்போம்.
81
"மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் .?......" ( 1 சாமுவேல் 2 : 25 )
மனிதர்கள் தேவனுக்கு விரோதமாகவும் சக மனிதர்களுக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இரண்டையும் அவர்கள் பெரிதாக நினைப்பதோ அப்படிப் பாவம் செய்ததற்காக மனம் வருந்துவதோ மிக அரிது.
சாமுவேல் தீர்க்கதரிசி சிறுவனாய் இருந்தபோது அவரது தாயார் தனது பொருத்தனையின்படி சாமுவேலை ஆலயத்தில் தேவனுக்காக விட்டுவிட்டுச் சென்று விட்டார். ஏலி எனும் ஆசாரியன் சாமுவேலை வளர்த்தான். அந்த ஏலியின் புதல்வர்கள் ஏலியைப்போல உத்தமமாக இல்லை. தேவ சந்நிதியிலேயே அவர்கள் பாவம் செய்தார்கள். எனவே தேவன் அவர்களை அழிக்கச் சித்தம்கொண்டார். அதனைச் சிறுவன் சாமுவேலுக்கும் வெளிப்படுத்தினார்.
ஏலி உத்தமனானவனாக இருந்ததால் தனது புதல்வர்களிடம் இப்படி எச்சரித்தான் "என் குமாரரே வேண்டாம் , மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் .? அதாவது ஒருவர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்தால் மற்றவர்கள் அந்தப் பாவத்துக்காக விண்ணப்பம் செய்ய முடியாது என்பதுதான்.
அன்பானவர்களே, இந்த வசனத்தைத் தியானிக்கும்போது பெருகிவரும் வாரிசு ஊழியங்களைப்பற்றியும் நாம் சிந்திக்கவேண்டியதுள்ளது. இன்று வாரிசு ஊழியங்கள் பெருகிவிட்டன. பெரிய புகழ்பெற்ற ஊழியர்களது புதல்வர்களும் புதல்வியரும் ஊழியத்துக்கு வந்துவிட்டார்கள். மக்களும் ஏதோ கர்த்தரது ஊழியம் அரச பதவிப்போல வாரிசுகளுக்கு வந்துவிடும் என எண்ணி அவர்களுக்குப்பின் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரபலமான ஊழியர்களைப்போல அவர்களது வாரிசுகள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களா அபிஷேகம் பெற்றவர்களா என்று யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பெரிய ஊழியர்களது வாரிசுகள் தேவனால் கனம் பெற்றதில்லை என்பதற்கு வேதத்திலிருந்து பல உதாரணங்களை நாம் கூறமுடியும்.
மோசேயைப்போல மோசேயின் புதல்வர்கள் இல்லை; ஏலியைப் போல ஏலியின் புதல்வர்கள் இல்லை; சாமுவேலைப்போல சாமுவேலின் புதல்வர்கள் இல்லை; தாவீதைப்போல தாவீதின் புதல்வர்கள் இல்லை; வேறு வாரிசு ஊழியம் செய்த உதாரணங்களும் இல்லை.
நிற்க. மேற்படி வசனத்தின் கருப்பொருள், மனிதனுக்கு விரோதமான காரியங்களை விசாரித்து நீதி வழங்க நீதிபதிகள் உள்ளனர். ஆனால் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தால் அதனை நிவர்த்தி செய்ய கர்த்தரது பாதத்தில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை.
மேலும் தேவன் திட்டவட்டமாகச் சொல்கின்றார், "..........என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( 1 சாமுவேல் 2 : 30 )
சகோதரரே, நாம் என்னென்ன விஷயங்களில் தேவனைக் கனவீனம் பண்ணினோம் அல்லது அசட்டைப் பண்ணினோம் என்பதை சிந்திப்போம். தேவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது அல்லது தேவ காரியங்களில் அசட்டையாக இருப்பது இவைகளே தேவனைக் கனவீனம்செய்வது. தேவ காரியங்களில் அசட்டையாக இருப்பதால்தான் பலரால் உண்மையான ஊழியர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
மேற்படி வசனம் அப்படிக் கர்த்தரைக் கனவீனம் செய்பவர்கள் வாழ்வில் கனமடைய மாட்டார்கள் என்று நம்மை எச்சரிக்கின்றது. அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் நமது தவறுகளைக் கண்டு உணர்வோம். தேவனுக்கு விரோதமான பாவங்களோ சில செயல்பாடுகளோ நம்மில் இருக்குமானால் தேவனிடம் மன்னிப்பு வேண்டி அவற்றை விட்டுவிடுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
82
"எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்." ( லுூக்கா 16 : 13 )
இயேசு கிறிஸ்து இங்கு இரண்டு ஏஜமான்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். ஒன்று தேவனாகிய கர்த்தர் மற்றொன்று உலகப் பொருள்கள். இங்கு உலகப் பொருள் அல்லது பணத்தை இயேசு கிறிஸ்து தேவனுக்கு இணையான இன்னொரு எஜமானாகக் குறிப்பிடுகின்றார் (equal to God ).
இந்த உலகினில் யாராக இருந்தாலும் இந்த இரண்டு எஜமான்களில் ஒருவருக்கு அடிமையாகித்தான் ஆகவேண்டும். பணத்துக்கு அடிமையாகிறவன் "பணஅடிமை" தேவனுக்கு அடிமையாகின்றவன் "இறைஅடிமை". ஒருவன் ஒரே நேரத்தில் இந்த இரண்டுபேருக்கும் வேண்டியவனாக இருக்க முடியாது.
"......உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்" ( யாக்கோபு 4 : 4 )
ஆனால், இன்றைய பெரும்பாலான ஊழியர்களைப் பார்க்கும்போது அவர்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறார்கள் என்பது தெளிவு. ஆனால் அதனை மறைத்துத் தங்களை தேவ ஊழியர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். "ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்" என்று இயேசு கிறிஸ்துக் கூறியபடி தேவனைப் பகைத்துப் பணத்தை நேசிப்பதால் பண ஆசீர்வாதத்தையே தேவ ஆசீர்வாதம் எனப் பிரசங்கிக்கின்றனர். இத்தகைய பொருள் சார்ந்த ஊழியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பும் இருந்துள்ளனர். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு பின்வருமாறு எழுதுகின்றார்:-
"..........உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ( 2 பேதுரு 2 : 1- 3 )
இயேசு கிறிஸ்து மேலும் கூறினார், இரெண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யும்போது "ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான்". அதாவது பணத்தைப் பற்றிக்கொண்டு தேவனைப் பற்றிய வேத சத்தியங்களைப் பிரசங்கியாமல் அசட்டைபண்ணுவது. தசமபாக காணிக்கைக் கொட்டுதல் கர்த்தர் அதனைப் பல மடங்காகத் திருப்பித் தருவார் எனப் பிரசங்கிக்கும் இவர்கள் தேவனது ஆத்தும இரட்சிப்பு , பாவத்திலிருந்து முழு விடுதலை, பரிசுத்தமான வாழ்க்கைக்கான வழி இவையே மெய்யான ஆசீர்வாதம் எனப் பிரசங்கியாமல் அசட்டைப் பண்ணுகிறார்கள்.
அன்பானவர்களே உலகப் பிரகாரமான பிரசங்கிகளுடைய தவறான
போதனைகளைக் கேட்டு தேவனது வல்லமை மகத்துவங்களை விளக்கும் பரிசுத்த வேதாகமச் சத்தியங்களை பணத்துடன் ஒப்பிடாதீர்கள். வேதாகமம் நாம் பண ஆசீர்வாதம் பெறும்படி எழுதப்பட்டதல்ல.
"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை." ( 1 யோவான் 2 : 15 )
83
"நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்." ( எசேக்கியேல் 3 : 11 )
இன்றைய தியானம் குறிப்பாக தேவ ஊழியர்களைத் திடப்படுத்த தேவன் கூறும் அறிவுரையாக இருக்கிறது. ஆனால் விசுவாசிகள் அனைவருமே சுவிசேஷத்தை அறிவிக்கக் கடமைப்பட்டவர்களே. எனவே ஊழியர்களுக்கு என்பது கிறிஸ்துவை அறிந்த அனைவருக்குமே பொருந்தும்.
மேற்படி வசனத்தில் தேவன் தீர்க்கதரிசி எசேக்கியேலிடம் "அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்" என்று கூறுகின்றார்.
நான் தினசரி வேதாகமத் தியானம் எழுதி பேஸ்புக் மற்றும் வாட்ஸப் மூலம் அதனை வெளியிடுவதை அறிந்த சிலர் என்னிடம் , "இது தேவையற்ற முயற்சி. பேஸ்புக் மற்றும் வாட்ஸப் பார்ப்பவர்கள் எங்கே தேவனது வார்த்தையைக் கவனமுடன் வாசிப்பார்கள்?" என்று என்னை சோர்வடையச் செய்யும் வார்த்தைகளைக் கூறினர். அன்பானவர்களே, நீங்களும் தேவனுக்கென்று இதுபோல சிறிய சிறிய செயல்களைச் செய்யும்போது பிறர் இப்படி எண்ணலாம். ஆனால் இங்கு தேவன் கூறுகின்றார், "அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும்" நீ போய்ச் சொல்.
பிரசங்கி புத்தகத்தில் ஒரு அருமையான வசனம் உண்டு (பொது தமிழ் மொழிபெயர்ப்பில் சபை உரையாளர்) "உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலனைக் காண்பாய்." ( பிரசங்கி 11 : 1 ) ஆகாரம் என்பது தேவனது வார்த்தைகள். அதனை நாம் தூவிக்கொண்டே இருக்கவேண்டும். விளையச் செய்பவரோ கர்த்தர்.
இயேசு கிறிஸ்துக் கூறிய விதைக்கிறவன் உவமையில் விதைத்தவன் விதைத்த விதைகள் வழிஅருகிலும் , முட்களுக்கிடையிலும் , பாறையிலும் விழுந்தன. ஆனால் நல்ல நிலத்திலும் சில விதைகள் விழுந்தன. வழியருகிலும், முட்களுக்கிடையிலும் பாறை நிலத்திலும் விதைக்கக்கூடாதென்று விதைத்த விவசாயிக்குத் தெரியாதா ? தெரியும். ஆனால் இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது இப்படிப்பட்ட மனிதர்கள் நமது சமுதாயத்தில் இருப்பார்கள் அவர்களுக்கும் தேவ வார்த்தைகள் போய்ச் சேரவேண்டும் என்பதே.
"காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்." ( பிரசங்கி 11 : 4 ) நம்மைச் சுற்றியுள்ள அசாதாரணமான சூழ்நிலைகளைப் பார்ப்போமானால் நமது ஊழியம் சிறப்படைய முடியாது. நாம் உலகில் எதனையும் செய்யவும் முடியாது.
அன்பானவர்களே, ஊழியத்தில் "நான் நினைக்கிற பலன் வரவில்லையே" எனக் கவலை எழுந்திட முக்கியக் காரணம் நமது சுயம் சார்ந்த மனநிலை. முதலில் ஊழியம் என்பது கர்த்தருக்கானது என எண்ணிடவேண்டும். அதுதான் உண்மை. கர்த்தர் நம்மைத் தனது ஊழியத்துக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றார், அவ்வளவுதான். "நான்" , "எனது" எனும் எண்ணங்கள் நம்மில் மறைந்து கர்த்தரை முன்னிலைப்படுத்திப் பார்த்து ஊழியம் செய்வோமென்றால் இத்தகைய மனச் சோர்வுகள் நமக்கு வராது.
எனவே சோர்ந்துபோகாமல் கர்த்தரது பணியை அவரவர்களுக்கு முடிந்த அளவுக்குச் செய்யவேண்டும். பலனை தேவனே பார்த்துக்கொள்வார்.
84
"............... காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. ( ரோமர் 1 : 20 )
கடவுள் உண்டுமா கிடையாதா எனும் சர்ச்சை ஆதிமுதல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இல்லை என்பவர்களும் உண்டு என்பவர்களும் பல்வேறு ஆதாரங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் இங்கு அதனைத் தெளிவுபடுத்துகின்றார். அதாவது உலகினில் நாம் காணும் படைப்புகளே கடவுள் உண்டு என்பதற்கும் அவரது வல்லமை, தேவத்துவம் இவற்றிற்கும் சான்று என்கின்றார்.
மனிதனது உடலே ஒரு அதிசயம். மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேர்த்தியாய் அமைக்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். மனித மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித கண்களுக்கு இணையான காமெரா இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித உடலை ஆய்வு செய்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு விஞ்ஞானி மனிதனது நரம்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ள வித்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மனிதனது நரம்பு மண்டலத்தைப் பார்த்துவிட்டு அவர் பின்வருமாறு கூறுகின்றார்:-
"மனித உடலில் இரத்த நாளங்களும் நரம்புகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் என்னை ஆச்சரியப்படச் செய்தது. இரண்டு இரத்த நாளங்கள் இணையும் இடம், பிரியும் இடம் இவை உலகில் உள்ள ஒரு பிளம்பர் குடிநீர் குழாயில் இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் ஒரு எலெக்ட்ரிஷியன் மின்சார உபகரணங்களுக்கு இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக இவைகள் தானாக உருவாக சாத்தியமே இல்லை.
இதனைத் தாவீது ராஜாவும் ஆவியில் கண்டு களிகூர்ந்து பின்வருமாறு கூறுகின்றார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்." ( சங்கீதம் 139 : 14 )
இதுபோல விண்வெளிக் கோள்களின் அமைப்பைப் பல விஞ்ஞானிகள் கண்டு பிரமித்துள்ளனர். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்குடன் சென்று திரும்பிய ஆல்ட்ரின் விண்ணிலிருந்து பூமியைப் பார்க்கும்போது வேதம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள பல வேத வசனங்கள் தனக்கு விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தாலே தேவனைப் பற்றியும் அவரது மகத்துவங்களைப் பற்றியும் வியந்து அறிக்கையிடுவார் என்று அவர் குறிப்பிடுகின்றார். இவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் கர்த்தரது ஊழியக்காரனாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
சங்கீத புத்தகத்திலும் "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; ......" ( சங்கீதம் 19 : 1- 4 ) என்று படிக்கின்றோம்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனது வல்லமையும் மகத்துவமும் உலகப் படைப்புகளில் தெளிவாகத் தெரிவதால் "அவர்கள் (கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள்) போக்குச் சொல்ல இடமில்லை" என்று குறிப்பிடுகின்றார். அதாவது அவர்கள் நியாயத் தீர்ப்புநாளில் இதனைக் காரணம் காட்டிச் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்ளமுடியாது என்கின்றார்.
ஆம், "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; .." ( சங்கீதம் 53 : 1 )
85
"முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்."( உன்னதப்பாட்டு 2 : 2 )
வேதாகமத்திலுள்ள உன்னதப்பாட்டு எனும் புத்தகம் வித்தியாசமானது. இது இலக்கியங்களில் காதலனுக்கும் காதலிக்கும் நடக்கும் காதல் உரையாடல்களைப் போல இருக்கின்றது. கடவுளுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையே நிலவும் அன்புறவை இந்த உரையாடல்கள் வர்ணிக்கின்றன. காதல் கவிதைகள்போல உள்ள இவற்றை விவிலியத்தில் ஏன் சேர்த்தனர் என்பதற்கு அறிஞர்கள், " காதல் உணர்வு என்பது பலர் எண்ணுவதுபோல தவறானது அல்ல அது புனிதமானது. மனித இன வளர்ச்சிக்கு அது தேவையானது. தேவன் தூய்மையான காதல் உணர்வை மதிக்கின்றார். எனவேதான் வேதாகமத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன " என்கின்றனர்.
வெறும் மனிதக் காதலாகப் பார்த்தால் அதுபோலவே தெரியும் இந்தப் பாடல்கள் உண்மையில் தேவனை காதலனாகவும் காதலியாகவும் உருவகித்துப் பாடப்பட்டப் பாடல்களாகும்.
லீலி மலர்கள் அவலட்சணமான இடங்களிலும் முட்களுக்கிடையிலும் வளர்த்தாலும் அவை தூய்மையான வெண்ணிறமாக கம்பீரமாக எழுந்து நின்று மணம் வீசும். அவை தங்களது அழகு மற்றும் மணத்தால் மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும். தான் வளர்ந்த இடத்தில உள்ள துர்நாற்றத்தை தனது மணத்தால் மறையச் செய்யும்.
"அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்" என இந்த வசனம் கூறுகின்றது. அதாவது இந்த உலகத்தில் துன்மார்க்க குணம் கொண்டவர்களும், முரட்டுக்குணம் கொண்டவர்களும், பாவத்தின் சூழ்நிலைகளும் நிறைந்துள்ளன. தேவனுக்குப் பிரியமான குமாரத்தி அல்லது குமாரன் அந்தச் சூழ்நிலைகளுக்கிடையிலும் லீலி மலரானது தனதுத் தூய்மையை இழக்காமல் மனம் வீசுவதுபோல பாவமில்லாமல் மணம் வீசி பிறரை இழுத்துக்கொள்வார்கள்.
மட்டுமல்ல, தேவனுக்குப் பிரியமான லீலி மலரைப்போன்ற ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழும்போது தேவனது குரலைக் கேட்கும் மேலான ஒரு அனுபவத்துக்குள் வர முடியும். இந்த வாசனத்தின்பின் தொடர்ச்சியாக வரும் வசனங்கள் இதனையே குறிப்பிடுகின்றன. இங்குக் காதலி மகிழ்ச்சியுடன் , "இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்." ( உன்னதப்பாட்டு 2 : 8 ) எனக் குறிப்பிடுகின்றார். அதாவது தேவனுக்குப் பிரியமில்லாத முரட்டு குணமுள்ளவர்களையும், அவலட்சணமான தாழ்வான குணமுள்ளவர்களையும் தாண்டித் துள்ளி தனக்குப் பிரியமாக வாழ்வோரிடத்தில் தேவன் விரைந்து சேருகின்றார்.
அன்பானவர்களே, உன்னதப்பாட்டு புத்தகத்தைத் தியானதோடு நாம் வாசித்தால் தேவனோடு மேலான ஒரு தொடர்புடன் வாழும் ஒருவரது அனுபவத்தை நாம் உணர முடியும். நான் தேவனை வாழ்வில் அனுபவித்து உணர்ந்த ஆரம்பகாலத்தில் இது தேவையில்லாத ஒரு புத்தகம் என்றே கருதினேன். அதனை அவ்வளவு ஆர்வத்துடன் படிப்பதும் கிடையாது. "இது ஒரு இலக்கிய புத்தகம்" என்று இந்தப் புத்தகத்தின் மேலேயே குறிப்பு எழுதி வைத்தேன். ஆனால் உண்மை விளங்கியபின் இந்தப் புத்தகம் படிக்க ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
தேவனோடு நெருங்கியத் தொடர்பில் வாழ முயலுவோம்; தேவனுக்குப் பிரியமான காதலனாக, காதலியாக வாழ்வோம். தேவன் நம்மை அவரது அன்பால் கிருபையுடன் சேர்த்துக்கொள்வார்.
86
"அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )
மேற்படி வசனத்தை எழுதிய அபோஸ்தலரான பவுல் தொடர்ந்து அடுத்த வசனமாக, "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது." ( எபேசியர் 4 : 31 ) என எழுதுகின்றார். அதாவது இத்தகைய குணங்கள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துகின்றன எனக் குறிப்பிடுகின்றார்.
நாம் கிறிஸ்துவுக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஒரு முத்திரை அடையாளமாகக் கொடுக்கப்பட்டு நம் கூடவே இருந்து வழிநடத்தத் துவங்குகின்றார். பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆள் தத்துவம் உடையவர். இயேசு கிறிஸ்து தான் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்தில் திரும்பிச் செல்லுமுன் தன் சீடர்களை நோக்கி இந்தப் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளரை அனுப்புவதாக வாக்களித்தார்.
"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 7-8 )
இந்தத் தேற்றரவாளரான பரிசுத்த ஆவியானவருக்கு மனிதரைப் போலவே மகிழ்ச்சி,கோபம், துக்கம் போன்ற உணர்வுகள் உண்டு. நம்மோடு இருக்கும் பரிசுத்த ஆவியானவர், அவருக்கு விரோதமாகச் செயல்படும்போது துக்கமடைகின்றார். தேவன் மனிதரை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை. எதனைச் செய்யலாம், செய்யக்கூடாது என உணர்துவாரே தவிர அதற்கு கீழ்படிவதும் அல்லாததும் மனிதர்களது சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே உள்ளது. எனவே நாம் ஆவியானவரின் உணர்த்துதலுக்கு விரோதமாகச் செயல்படும்போது ஆவியானவர் துக்கப்படுகின்றார்.
இன்று கிறிஸ்தவத் திருச்சபைகளில் பொதுவாக காணப்படுபவை கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம், மேலும் பல்வேறு துர்க்குணங்களும்தானே ? ஆலயப் பதவிப்போட்டியில் நடக்கும் விஷயங்கள் அனைத்துப் பத்திரிகைகளிலும் நாறுகின்றன. திருச்சபைப் பொறுப்பாளர்கள், தலைவர்கள் கோர்ட் வாசல்படிகளை ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், கசப்பு, கோபம், மூர்க்கம், வைராக்கியம்.
மேலும், பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவர் இவர்களிடம் இல்லை என்பதற்கு இதுவே அடையாளம்.
இப்படிப்பட்டத் திருச்சபைத் தலைவர்களைப் பார்த்து பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுவாரா, மகிழ்ச்சியடைவாரா? மேலும் இவர்கள்தானே விசுவாசிகளை வழி நடத்துகின்றனர். அப்படியானால் அந்த விசுவாசிகள் எப்படி சத்தியத்தை அறிவார்கள், அல்லது எப்படி சத்தியத்தின்படி நடப்பார்கள்?
அன்பானவர்களே, நம்மை நடத்தும் ஊழியர்களைப்பொறுத்தே நமது ஆவிக்குரிய வளர்ச்சி இருக்கும். எனவே, மனிதர்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவரே உங்களை நடத்த ஒப்புக்கொடுங்கள். தேவனே நீர் என்னை நடத்தும் , எனது வாழ்வைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என வேண்டுதல் செய்வது நம் அனைவரது கடமை. மெய்யான ஆர்வமுடன் தேவனிடம் வேண்டினால் ஆவியானவரால் வழிநடத்தப்படும் அனுபவத்திற்குள் நாம் வரலாம்.
"நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
87
"கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்." ( 2 கொரிந்தியர் 8 : 21 )
இன்று மேற்படி வசனம் 'கர்த்தருக்கு முன்பாக மாத்திரம் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்' என்று மாறிவிட்டது. அதிலும்கூட கர்த்தருக்குப் பிரியமானது எது என்று உணராதவர்களாகவே அப்படிச் செய்ய முயலுகின்றோம். ஆம் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இன்று கைகளால் கட்டப்பட்ட ஆலயம் எனும் சுவருக்குள்ளும், கடமைக்காக தினமும் வேதாகமத்தைப் படிப்பதிலும் ஜெபம் எனும் பெயரில் தங்களது உலகத் தேவைகளைத் தேவனிடத்தில் கேட்பதிலும் , காணிக்கைக் கொடுத்தால் பத்து மடங்கு ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும் என எண்ணிக் காணிக்கை கொடுப்பதிலும் அடங்கியுள்ளது.
மேற்படிச் செயல்கள் மூலம் கர்த்தருக்கு முன்பாக யோக்கியமானவைகளைச் செய்ய நாடும் பலரும் அது தவறு என உணர மறுக்கின்றார்கள்.
இது தவிர மனுஷர் முன்பாக கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் செய்யும் செயல்கள் இன்னும் அதிக கேவலமானதாக இருக்கின்றது. கிறிஸ்துவை அறியாத பிற மத சகோதர்களது நீதி நியாயங்கள்கூட கிறிஸ்தவர்கள் பலரிடம் இல்லை. அதிலும் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் ஆராதனையில் ஆர்வம் காட்டி, ஆவியில் நிறைந்து துள்ளிக் குதித்து ஆராதித்து, தேவனை அறிவிக்கிறேன் என்று வேதாகமம் கையுமாக அலைகிறார்களேதவிர அப்படி அலையும் பலரும் உலக காரியங்களில் உண்மையில்லாதவர்களாகவே இருக்கின்றனர். (இதற்கு உதாரணங்கள் தேவையில்லை, அன்றாட வாழ்வில் அனைவருமே பல உதாரணங்களைக் கண்டிருப்போம் )
ஆனால் அன்பானவர்களே, மேற்படி வசனதை எழுதிய அப்போஸ்தலரான பவுல், கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம் என்பதால் கிறிஸ்தவன் இந்த இரண்டு வகையிலும் யோக்கியனாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
பழைய ஏற்பாட்டு பக்தனான தானியேலை பொறாமைகொண்ட எதிரிகளின் சூழ்ச்சியால் தரியு ராஜா சிங்கக் கெபியில் அடைத்துவிட்டான். ஆனால் ராஜாவுக்கு தானியேலின் ஜெப வாழ்வு தெரிந்திருந்தது. அன்று இரவு ராஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே சிங்கக் கெபியின்முன் வந்து நின்றுகொண்டு , "தானியேலே , ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கும்தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராய் இருந்தாரா?" என்று கேட்டான். அதற்குத் தானியேல்:-
"சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." ( தானியேல் 6 : 22 ) அதாவது தேவனுக்கு முன்பாக குற்றமில்லாமை, ராஜாவுக்குமுன் (உலக காரியங்களில்) நீதிகேடு செய்யாமை. இதனைத்தான் அப்போஸ்தலரான பவுலும் இங்குக் குறிப்பிடுகின்றார்.
நியாயப்பிரமாண காலத்தில் வாழ்ந்த தானியேல் இப்படி இருந்தாரென்றால், இன்று புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழும் நாம் எவ்வளவு நீதி நேர்மை உள்ளவர்களாக வாழ வேண்டும்?
அன்பானவர்களே, ஜெபம் வேதவாசிப்பு, ஆராதனை, உபவாசம், காணிக்கை அளித்தல் இவைமட்டுமல்ல கிறிஸ்தவ வாழ்வு, இவை தவிர மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய வேண்டும். அதுதான் கிறிஸ்தவத்தின் முழுமை. கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிப்பதே கிறிஸ்தவ வாழ்வு.
88
"யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." ( எபிரெயர் 12 : 14 )
இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் செய்யக்கூடிய ஆவிக்குரிய செயல்பாடுகள் பல உள்ளன. கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் இவற்றையே வலியுறுத்துகின்றனர். அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளவேண்டும், தினமும் வேதம் வாசிக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும், உபவாசிக்கவேண்டும், காணிக்கை அளிக்கவேண்டும் இப்படி இன்னும் சில காரியங்களை வலியுறுத்துகின்றனர். ஆனால் இவற்றைச் செய்வதால் தேவனைத் தரிசிக்கலாம் என்று வேதம் கூறாமல், "பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே". என்று கூறுகின்றது.
ஆவிக்குரிய காரியங்கள் என்று கிறிஸ்தவ உலகம் நம்பி போதிக்கும் மேற்படி காரியங்களை பரிசுத்தமில்லாத ஒருவரும் செய்யலாம். துன்மார்க்கமாக வாழ்ந்துகொண்டு வேதம் வாசிக்கலாம், ஜெபிக்கலாம், காணிக்கை அளிக்கலாம், உபவாசிக்கலாம். ஆனால் தேவனைத் தரிசிக்க இவை போதாது.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு பிரித்தெடுக்கப்பட்ட அனுபவம். ஆபிராகாமைப் பிரித்தெடுத்து நடத்தி அவன் சந்ததியை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாக செழிக்கச் செய்தார். பின் அவர்களை எகிப்திலிருந்து பிரித்தெடுத்து கானானுக்குள் கொண்டு வந்தார். அதுபோலவே இன்றும் உலக மக்கள் மத்தியிலிருந்து கர்த்தர் நம்மை மீட்டு பிரித்தெடுக்கின்றார். அது ஏன் என்பதைத் தேவன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்". ( லேவியராகமம் 20 : 26 )
இன்று உலகத் தந்தையர்களைப் பாருங்கள், தந்தையானவன் ஒரு மோசமான குடிகாரனாக இருந்தாலும் தந்து மகன் குடிப்பதை விரும்புவதில்லை. அதுபோலவே, மகன் புகை பிடிப்பதை விரும்புவதில்லை, பொய் சொல்வதை விருப்புவதில்லை, தவறான செயல்களான சூதாட்டம் பெண் தொடர்பு இவைகளை மகன் செய்வதை விரும்புவதில்லை. அன்பானவர்களே, மேற்படி அனைத்துத் தவறுகளையும் செய்யும் ஒரு தகப்பன் தனது மகன் மட்டும் நல்லவனாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றான்.
ஒரு மோசமான உலகத் தகப்பனே இப்படி நல்ல மகனை விரும்புவனென்றால், பரிசுத்தரான கர்த்தர் தனது பிள்ளைகள் எவ்வளவு அதிகம் பரிசுத்தமாக வாழவேண்டுமென்று விரும்புவார்! இதையே தேவன் மோசேயிடம் கூறினார்,
"நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்." ( லேவியராகமம் 19 : 2 )
அன்பானவர்களே, சுய பரிசுத்தம் நம்மை தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றிடாது. வெளிப்புறமான பரிசுத்தமும் நம்மை தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றிடாது. எனவேதான் தேவன் நமக்குத் பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தார். அந்த பரிசுத்த ஆவியானவரே நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்த முடியும். ஆவிக்குரிய செயல்கள் என்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஒரு பரிசுத்த வாழ்வு வாழ்வதன் மூலம் மட்டுமே நிறைவுபெறும். எனவே துதி ஆராதனை, ஜெபம், வேதவாசிப்பு இவற்றோடுகூட நமது தனிப்பட்ட வாழ்விலும் பரிசுத்தமாக வாழ்வோம். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை.
89
"அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.' ( மத்தேயு 15 : 14 )
ஒரு காரியத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் அதனைப்பற்றி மற்றவருக்கு விளக்கிச் சொல்வது கூடாதகாரியம். தான் அனுபவித்த ஒன்றினை மட்டுமே ஒருவர் பிறருக்குத் தெளிவாகப் புரியவைக்கமுடியும். இதனைத்தான் மேற்படி வசனத்தில் இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். வேதபாரகரும் பரிசேயரும் சீடர்களைக் குற்றம்கூறியபோது இயேசு கிறிஸ்து இதனைக் கூறினார்.
தேவனை அறியாத ஒருவர் - அதாவது தேவனை தனது வாழ்வில் ருசித்து அறியாத ஒருவர் - தேவனைப்பற்றி பிரசங்கிப்பதும் இதுபோலத்தான் இருக்கிறது. இன்று பெரும்பாலான ஊழியர்கள் இதுபோலவே இருக்கின்றனர். பிரசங்கிகளின் பிரபு என அழைக்கப்பட்ட சார்லஸ் ஸ்பர்ஜன் இது பற்றிக் கூறும்போது, "இரட்சிக்கப்படாத ஒருவர் (தேவனை அறியும் அறிவைப் பெறாத ஒருவர்) பிறருக்கு உபதேசிப்பது பறக்கத்தெரியாத குள்ள வாத்து, கழுகுக் குஞ்சுகளுக்கு பறக்கச் சொல்லிக்கொடுப்பதுபோல" என்று கூறுகின்றார். ஒவ்வொரு விசுவாசியும் முதலில் பறக்கத் தெரியாத கழுகுக்கு குஞ்சுகள்தான். இன்று அத்தகைய விசுவாசிகளுக்குக் குள்ள வாத்து போன்ற ஊழியர்கள் தேவனை அறிவிக்கிறார்கள்.
இயற்கையிலேலேயே ஒவ்வொருவருக்கும் சிறு வயதிலிருந்தே எதிர்காலத்தில் யாராக வருவது என்று சில ஆசைகள் இருக்கும். மருத்துவர், பொறியியல் அறிஞர், கல்லூரிப் பேராசிரியர், விமான பைலட், காவல்துறை அதிகாரி, இப்படி ஏதாவது ஒரு துறையில் வரவேண்டுமென்று எண்ணுவதுண்டு. அப்படியே அவர்கள் ஒருவேளை எதிர்காலத்தில் ஆகிவிடலாம்.
ஆனால் தேவனுடைய ஊழியம் அப்படிப்பட்டதல்ல. இறையியல் கல்லூரிகளில் படித்துவிட்டு வருவதால் ஒருவர் சிறந்த ஊழியராக முடியாது. சிறந்த ஊழியன் முதலில் கிறிஸ்துவைத் தனது வாழ்வில் அறிந்து ருசித்தவனாக இருக்கவேண்டும். அப்படி அறிந்து ருசித்து ஊழியம் செய்யாமல் பிற காரியங்களுக்காக ஊழியத்துக்கு வருபவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்களாக மாறிவிடுகின்றனர். அடுத்தவரைப் பார்த்து ஊழியத்துக்கு வருவது, வேறு உலக வேலைக் கிடைக்காததால் ஊழியத்துக்கு வருவது, பணத்துக்காக ஊழியம் செய்வது, பெருமைக்காக, புகழுக்காக ஊழியம் செய்வது இவர்களே குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள்.
வேதம் கூறுகின்றது, "மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை." ( எபிரெயர் 5 : 4 ) தேவனால் அழைப்பு பெறுகிறவன் மட்டுமே தேவனது ஊழியத்தைச் சரியாகச் செய்யமுடியும். தேவனோடு ஒரு இறைத்தொடர்பில் உள்ளவன் மட்டுமே சிறப்பாக தேவனை அறிவிக்கமுடியும்.
அன்பானவர்களே, நாம் செல்லும் சபை மற்றும் நம்மை வழிநடத்தும் ஊழியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற நிச்சயம் நமக்கு வேண்டும். அவர்கள் குள்ள வாத்துகளா அல்லது கழுகுகளா என அறிந்துகொள்ளவேண்டும். கழுகுகளால் மட்டுமே குஞ்சுகளை சிறப்பாக பறக்க பழக்க முடியும். தேவனோடு நமக்குள்ள தனிப்பட்டத் தொடர்பை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே நாம் அதனை அறிய முடியும்.
"தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்" என பக்தன் பாடுவதுபோல தேவனோடு நாம் நாளுக்குநாள் கிட்டிச் சேரவேண்டுமெனினும் ஆவல் நமக்கு இருக்குமானால் குள்ள வாத்து ஊழியர்களை நாம் இனம் கண்டு ஒதுங்க முடியும். எப்போதுமே நமது பார்வை கர்த்தரை நோக்கி மேல்நோக்கி இருக்கவேண்டும். அப்போது நாம் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறமுடியும். இல்லாவிட்டால், "குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே" என இயேசு கிறிஸ்து கூறியதுபோல குள்ள வாத்து ஊழியர்களுடன் நாமும் குழியில் விழுவோம்.
90
"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்."
( 1 பேதுரு 5 : 6
)
ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் நாம் இன்னும் அதிகம் வளரவேண்டும் எனும் ஆவல் அனைவருக்கும் இருக்கும். நாம் இதனை ஆண்டுகளாக தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தபின்னும் நமது வாழ்வில் முன்னேற்றம் இல்லையே என எண்ணிச் சிலர் சோர்ந்துபோகலாம். நமது ஜெபத்தைத் தேவன் கேட்கிறாரா இல்லையா எனும் சந்தேகங்கள் சிலவேளைகளில் நமக்குள் எழலாம். இப்படிக் குழம்பி இருக்கும் மக்களைப் பார்த்து அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அதாவது தேவன் செயல்புரியும்வரை அமைதியாக இருங்கள்.
நல்ல வேலை, வீடு, திரண்ட செல்வம், கார், நிலபுலன்கள் இவையே ஆசீர்வாதம் என நாம் எண்ணலாம். அதுபோல ஆவிக்குரிய வாழ்வில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களைப் பார்த்து அதுவே ஆசீர்வாதமென்று எண்ணலாம். நமது ஊழியம் பிரபல ஊழியர்களது ஊழியம்போல வளரவில்லையே எண்ணலாம். ஆனால் ஒன்று, நமது எண்ணங்கள் தேவனுடைய எண்ணங்கள் அல்ல. உயர்வு என நாம் எண்ணுவது தேவனுடைய நிலையிலிருந்து பார்க்கும்போது உயர்வாகத் தெரியாது. அல்லது நாம் நினைக்கும் விதத்திலிருந்து வேறொரு விதத்தில் தேவன் நம்மை உயர்த்தலாம்.
தேவன் எனக்கு நல்ல உலக வேலையைத் தரவில்லை. என்னோடு படித்த நண்பர்கள் - என்னைவிடப் படிப்பில் மட்டமான நண்பர்கள், நல்ல வேலையில் அமர்ந்து சமுதாயத்தில் மதிப்போடு இருந்தனர். வேலையும் இல்லாமல் நல்ல சம்பாத்தியமும் இல்லாமல் இருந்தபோது என்னை ஆவிக்குரிய வாழ்வில் வழிநடத்திய முதிர்ந்த வயதுள்ள பாஸ்டர் என்னிடம்,
"தம்பி தேவன் உங்களுக்கு நல்ல உலக வேலை தரமாட்டார். ஆனால் தேவனுடைய வேதத்தைப் பகுத்து அறியும் ஞானமுள்ள இருதயத்தைத் தருவார். உங்களை பல்வேறு விதங்களில் பயிற்சியளிப்பார். சிரமமான காரியம்தான். அதனால் நீங்கள் பிற்காலத்தில் பலருக்கு ஆசீர்வாதமான வழிகாட்டுதலைக் கொடுப்பீர்கள்
.." என்று தீர்க்கதரிசனம் கூறினார். அந்த நிலையில் அது எனக்கு மகிழ்ச்சியைத்தரவில்லை. உலக வேலையையே மனது நாடியது. ஆனால் இன்று அந்த பாஸ்டர் கூறியது சரியாக உள்ளது. அப்படி உலக வேலை கிடைத்திருந்தால் தேவனை அறியும் இந்த அனுபவத்தை இழந்திருப்பேன்.
தேவன் நமது தனிப்பட்ட வாழ்வில் அவரோடு நாம் கொள்ளும் உறவையே பெரிதாக எண்ணுகின்றார். அதனையே பெரிய ஆசீர்வாதமாக எண்ணுகின்றார். நாம் பாவத்திலிருந்து முழு விடுதலை பெற்று பரிசுத்தத்தில் வளரவேண்டுமென விரும்புகின்றார்.
இப்படிக்கூறுவதால், உலக ஆசீர்வாதங்களையோ, ஊழியத்தில் நமது உயர்வையோ தேவன் விரும்புவதில்லை என அர்த்தமல்ல. தேவன் ஒவ்வொருவருக்கும் எதனை நியமித்திருக்கின்றாரோ அதுவே கிடைக்கும். அதுவும் அவர் விரும்பும் காலத்திலேதான் கிடைக்கும். அது கிடைக்கும்வரை அவரது கைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும்.
"ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
"( பிரசங்கி 3 : 1
) அந்தக் காலங்களும் நேரங்களும் தேவனது கரத்தில் இருக்கின்றது.
ஆனால் பலவேளைகளில் மனிதர்கள்நாம் காத்திருக்க விரும்பாமல் தேவனை முந்திவிட நினைக்கின்றோம். குறுக்கு வழியிலும் , சுய முன்னேற்ற முயற்சிகளிலும் ஈடுபட்டு முன்பு இருந்த செல்வத்தையும் இழந்து வேதனைப்படுகின்றோம். காத்திருத்தல் என்பது சும்மா இருப்பதல்ல. நமக்கு நியமித்துள்ள நிலையில் நாம் செய்யவேண்டியத்தைச் செய்துகொண்டிருக்கவேண்டும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஆவிக்குரிய மனிதர் ஒருவருக்கு வேலையில் உயர்வு கிடைக்காமல் இருக்கலாம், அல்லது கிடைக்கவேண்டிய பதவி உயர்வு இன்னொருவருக்கு வழங்கப்படலாம். இத்தகைய நிலைகளில் தேவனுடைய பலத்த கரத்தினுள் அடங்கி இருக்கவேண்டுமேதவிர குறுக்கு வழிகளான லஞ்சம் மூலம் முன்னேறத் துடிக்கும்படி முயலக்கூடாது. இதுவே தேவனுடைய கரங்களுக்குள் அடங்கி இருத்தல்.
அன்பானவர்களே உங்களைத் தேவனுக்கு ஒப்புவித்து அவரது திட்டம் நிறைவேறக் காத்திருங்கள். ஜெபத்திலும் பாவமில்லாமல் தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கையிலும் நிலைத்திருங்கள். ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்துவார்.
91
"அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்."(
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 :
17 )
இன்றைய தியானமானது ஒருவர் எந்த நிலையில் இருந்துகொண்டு தேவனை அறிவிக்கவேண்டுமென்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கின்றது. மேற்படி வசனத்தில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இந்த வசனத்தை கூறிய ஆளிடம்தான் தவறு உள்ளது.
அப்போஸ்தலரான பவுலும் அவருடன் சீலாவும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் வந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வந்தனர். அப்போது குறி சொல்லுகிற ஆவியையுடைய ஒரு பெண் பவுலையும் மற்றசீடர்களையும் அவர்கள் செல்லுமிடமெல்லாம் பின்தொடர்ந்து வந்து மற்ற மக்களுக்கு அவர்களைக் குறித்து மேற்படி வசனத்தைக் கூறுகின்றாள்.
இவர்கள் 'உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்' என்று அவள் கூறியதைப் பவுல் விரும்பவில்லை. எனவே,
"பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்;"(
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 :
18 ) என்று வாசிக்கின்றோம். (சில வேதாகமங்களில் பவுல் எரிச்சலுற்று இதனைக் கூறியதாக உள்ளது )
பவுல் ஏன் கோபம் அல்லது எரிச்சலடைந்தார்? இதற்கு நாம் உலக உதாரணம் ஒன்றினைக் கூறி விளக்கலாம். நமது நாட்டின் பிரதமர் நமது ஊருக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனை மக்களுக்கு அறிவிக்க ஒரு முறை உண்டு. அப்படி முன் அறிவித்து அவர் வருகின்றார். அவரோடு பாதுகாப்பு வீரர்களும் வருகின்றார்கள். ஆனால் அப்படி அவர் வந்து மக்கள் மத்தியில் நிற்கும்போது கூட்டத்தில் ஒரு பைத்தியக்காரன் எழுந்து நின்று,
"இவர் யார் தெரியுமா? இவர் இந்திய நாட்டின் பிரதம மந்திரி..... இப்போது நம்மைச் சந்திக்க வந்துள்ளார் "
என்று சப்தமிட்டுக் கூறினால் எப்படி இருக்கும்? சுற்றி நிற்பவர்கள் அவனை அடித்துத் துரத்துவார்கள் அல்லவா?
தமிழ் இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணி என ஒன்றுண்டு. அதாவது ஒன்றினைப் புகழ்வதுபோல இகழ்வது. இன்று பாரம்பரிய சபைப் பிரிவுகளிலிருந்து ஒருவர் ஆவிக்குரிய சபைக்குச் செல்லத் துவங்கிவிட்டால் சில இடங்களில் இப்படிப் பிறர் நம்மைப் பார்த்துக் கூறுவதுண்டு.
" இவரைத் தெரியுமா? நம்ம சபைதான் ஆனால் இப்போ பெந்தேகோஸ்தேகாரராக மாறிவிட்டார். ...இவருக்கு பைபிள் நல்லா தெரியும்..... இவர் ஜெபம் செய்தால் நோய்கள் தீரும்
..." ஆனால் இப்படிக் கூறும் இவர்கள் சபை வைராக்கியம் கொண்டவர்களேதவிர உண்மையை அறிய விரும்புபவர்கள் அல்ல. கிறிஸ்து சபைகளை உருவாக்க வரவில்லை என்ற உண்மையினை அறியாதவர்கள். நாம் சற்றுதள்ளிப் போனவுடன் நேரே மாற்றி பேசுவார்கள். 'என்ன இருந்தாலும் இவர் நம்ம சபையை விட்டுப் போயிருக்கக் கூடாது ..ஏதோ வழி தவறிப் போய்விட்டார்...பெந்தேகொஸ்தேகாரர்கள் இவரை மூளைச்சலவைச் செய்துவிட்டனர்.
"
அன்பானவர்களே நீங்கள் ஆவிக்குரிய அனுபவம் கொண்டவர்களாக இருந்தால் இந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கும். பவுல் அப்போஸ்தலர் அந்தப் பெண்ணைத் துரத்தியதுபோல இவர்களை நாம் புறக்கணிக்கவேண்டும். நமக்கு இத்தகைய மனிதர்களது சாட்சி தேவையில்லை. கர்த்தரே நம்மைக் குறித்து சாட்சி கொடுப்பார்.
முக்கிய அறிவுரையாக இருக்கிறது. கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்குமுன் நாம் பிசாசின் செயல்பாடுகளான பாவம் நம்மில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் சரியான உண்மையினைத்தான் கூறினாள் . ஆனால் அவளிடம் இருந்ததோ குறி சொல்லுகின்ற அசுத்த ஆவி. அதனைத் தேவன் விரும்பவில்லை. எனவே நம்மிடமும் பிசாசின் பாவ குணங்கள் இருக்குமானால் தேவன் நம்மையும் நமது போதனைகளையும் புறக்கணிப்பார். அவருக்கு அவை தேவையில்லாதவை.
முதல் பாகம் நிறைவு பெற்றது