40 நாட்கள் மட்டுமா......?
- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
சத்தியத்தைவிட மக்கள் சம்பிரதாயத்தையே அதிகம் பார்க்கிறார்கள். தேவன் கூறுவதைவிட பெரும்பாலான மக்கள் கூறுவதையே அனைவரும் நம்புகின்றனர். இன்று நோன்பு காலம் அல்லது லெந்து காலம் என கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பதும் அப்படியே.
வேதத்தில் இல்லாத ஒன்றுக்கு அல்லது வேதபூர்வமற்ற ஒன்றுக்கு கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் இன்று முக்கியத்துவம் கொடுத்து 40 நாட்கள் ஒரு நாடகமாக நடித்துவிட்டால் கிறிஸ்தவ கடமையை நிறைவேற்றி தேவனது பார்வையில் நல்லவன் எனப் பெயர் வாங்கிவிடலாம் என எண்ணுகின்றனர்.
முதலில் நோன்பு காலம் அல்லது லெந்து காலம் என்பது தேவையா எனப் பாப்போம். இதனை ஒரு சிறு உதாரணம் மூலம் தெளிவு படுத்தலாம் என எண்ணுகிறேன். ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகின்றான் என வைத்துக்கொள்வோம். அந்தச் சிறுவனின் தந்தை வெளி நாட்டில் இருப்பதால் அவர் வரும்வரை அவனது உடலைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் மூன்று நாட்கள் கழித்து அவனது தந்தை வந்தபோது அந்த மகன் உயிர் பெற்று எழுந்து விடுகின்றான். அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இப்போது நான் கேட்பது அந்த மகன்தான் உயிரோடு எழுந்துவிட்டானே பின் ஒவ்வொரு ஆண்டும் அவன் இறந்த நாளில் அவனது பெற்றோரும் உறவினர்களும் அழுது புலம்புவார்களா? இல்லை. காரணம் அந்த மகன் உயிரோடு வாழ்கின்றான்.
இயேசு கிறிஸ்துவும் இதுபோலத்தான். அவர் மரித்தது உண்மைதான். ஆனால் அவர் மரித்தே போய்விடவில்லை. உயிருடன் எழுந்து ஜெய கிறிஸ்துவாக ஜீவித்துக்கொண்டிருக்கிறார். இதுதான் கிறிஸ்தவத்தின் அடிப்படை. அவர் செத்தவராக இருந்தால் நாம் அவரை விசுவாசிக்கவேண்டிய அவசியமே இல்லை.
"கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் எங்கள் பிரசாங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா" (1 கொரிந்தியர் - 15:14)
"கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும், நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள் " (1 கொரிந்தியர் - 15:17)
கிறிஸ்து பாடுபட்டு மரித்து தனது இரத்தத்தினால் மீட்பை உண்டுபண்ணினார் என்பதுதான் நமது நம்பிக்கை. இதனை விட்டு அவர் செத்து விட்டார் என அழுது கூப்பாடு போடுவது வேதத்துக்கு முரணானது.
" மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் " (வெளிப்படுத்தின விசேஷம் - 1;18)
மேலும் கிறிஸ்து சிலுவையைச் சுமந்து கொண்டு செல்லும்போது அவரைப் பார்த்துப் பல பெண்கள் அழுது புலம்பினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அதனை விரும்பவில்லை. அழுத அந்தப் பெண்களைப் பார்த்து இயேசு கிறிஸ்துக் கூறினார், " எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" (லூக்கா - 23:28)
" மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன் " (வெளிப்படுத்தின விசேஷம் - 1;18)
மேலும் கிறிஸ்து சிலுவையைச் சுமந்து கொண்டு செல்லும்போது அவரைப் பார்த்துப் பல பெண்கள் அழுது புலம்பினார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அதனை விரும்பவில்லை. அழுத அந்தப் பெண்களைப் பார்த்து இயேசு கிறிஸ்துக் கூறினார், " எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" (லூக்கா - 23:28)
மேலும் வேதம் ஆண்டுக்கு நாற்பது நாட்கள் மட்டும் வித்தியாசமான வாழ்க்கை வாழ வேண்டுமென்று கூறவில்லை. இவைகள் பிற மதத்தவரைப் பார்த்து உருவாக்கிக்கொண்ட கோட்பாடு. இயேசு கிறிஸ்து எப்போதுமே நாம் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்றுதான் கூறுகிறார். அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்வதுதான் அவரை அன்பு செய்வதே தவிர அழுது கூப்பாடு போடுவதும் சாப்பிடாமல் நோன்பிருப்பதுமல்ல.
" என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைக் கைக்கொள்பவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான் " (யோவான் -14:21)
மேலும் வேதத்தில் இப்படி குறிப்பிட்டக் காலம் என்று ஒரு காலமோ அல்லது அப்படி குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சில செயல்களை செய்வது நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஏற்றது என்றோ கூறப்படவில்லை. கிறிஸ்து நம்மை ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழவே அழைத்துள்ளார். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருப்பதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். என்கிற புதிதானாக் கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் அதனால் நீங்கள் என்னுடையச் சீடர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்." (யோவான் - 13:34)
கிறிஸ்து கூறிய சீடத்துவ வழக்கை பற்றி பலரும் நினைப்பதில்லை . ஆனால் இன்று உலகதோடு ஒத்து வாழ்ந்துகொண்டு உலக மக்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டு தபசு காலத்தில் மட்டும் சில பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு தங்களைத் தாங்களே உத்தம வாழ்க்கை வாழ்பவர்களாக எண்ணி பல கிறிஸ்தவர்கள் நிறைவடைத்து கொள்கின்றனர்.
குறிப்பிட்ட இந்த நாட்களில் மட்டும் சில உணவுக் கட்டுப்பாடுகளை சிலர் கைக்கொண்டு தாங்கள் தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாறிவிடத் துடிக்கின்றனர். இதுவும் பிற மத சகோதர்களை பார்த்து வந்தப்பழக்கம்தான். உண்ணும் உணவு ஒருவரைத் தீட்டுப் படுத்தாது. அசைவ உணவு உண்பதோ காய்கறி உணவுகளை உண்பதோ முக்கியமல்ல. நமது உள்ளமும் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் தூய்மையானவையாக, பிறரைக் காய படுத்தாதனவாக இருக்க வேண்டியதே முக்கியம். எனவே தான் இயேசு கிறிஸ்துக்கு கூறினார், "வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்" (மத்தேயு - 15:11)
மேலும் இயேசு கிறிஸ்து கூறினார், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும். அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும். எப்படியெனில் இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் ...." (மத்தேயு - 15: 18-20)
அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனைத் தெளிவாக இப்படிக் கூறுகிறார், " போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது. புசிப்பதனால் நமக்கு ஒரு மேன்மையுமல்ல, புசியாதிருப்பதனால் நமக்கு ஒரு குறையுமல்ல" 1கொரி - 8:8)
ஆம், பவுல் அடிகள் கூறுவதுபோல, "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் வரும் சந்தோஷமுமாயிருக்கிறது" (ரோமர் - 14:17)
மேலும் சுற்றுலா போல கோவில்களை சந்திப்பது பலரது வாடிக்கையாக இருக்கிறது. சந்திக்கும் கோவில்களை பொறுத்து தேவ பெலன் ஒருவருக்கு அதிகம் வந்துவிடுவதில்லை. சுற்றிச் சுற்றி கோவில்களுக்கு அலைவதைவிட ஒரு இடத்திலிருந்து தேவனை வழிபட முடியாதா? பிதாவை எங்கும் தொழுது கொள்ளலாம் என்று இயேசு கிறிஸ்துவே கூறுகின்றார். "நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது" (யோவான் 4:21)
தேவனை உண்மையான ஆத்துமாவோடு அன்போடு தொழுதுகொள்ளவேண்டுமே தவிர அலைந்து திரிந்து தொழுதுகொள்ள வேண்டாம். "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்" (யோவான் 4:24)
மேலும் நமது உடலே தேவன் வாழும் ஆலயமாயிருக்கிறது. நமது உடலை பாவக கறைகள் இல்லாமல் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதே மெய்யான ஆராதனை
"நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை" (ரோமர் - 12:1)
"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியுமிருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா?" (1 கொரி - 6:19)
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் இவற்றைக் குறித்து நமக்கு ஒரு தெளிவு வேண்டும். கிறிஸ்து நமக்காக ஏற்படுத்தின மீட்புக்கான வழிதான் அவரது மரணம். அது நமக்குத் புதிய நம்பிக்கையையும் பிதாவிடம் சேரும் வாய்ப்பையும் அளித்துள்ளது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் முக்கியமான பகுதி அவரது பாடுகளுடன்
ஆரம்பிக்கின்றது. இதுவே அறிவிக்கப்படவேண்டிய நற்செய்தி.
அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனைத்
தான் பிரதான அறிவிப்பாக அறிவித்துவந்தார்.
ஆதியில் ஏதேனில் தேவன் அளித்த
வாக்குறுதி இயேசு கிறிஸ்துவின் பாடுகள்
மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம்
நிறைவேறியது.
"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள்
வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவள்
வித்து உன் தலையை நசுக்கும்.
நீ அதன் குதிகாலை காயப்படுத்துவாய்"
(ஆதியாகமம் - 3:15) என தேவன் பாம்பிற்கு
(சாத்தானுக்கு) இட்ட சாபம் பெண்ணின்
வித்தாகிய கிறிஸ்துவால் நிறைவேறியது. தனது சிலுவை மரணத்தின்
மூலம் சாத்தானின் தலையை நசுக்கினார். எனவேதான்
இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுக்கு தன்மீது அதிகாரமில்லை என
இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் - 14:30)
மேலும் இயேசு கிறிஸ்துவின் மரணம்
மகா பரிசுத்த ஸ்தலத்திற்கான வாயிலைத் திறந்துவிட்டது. பழைய ஏற்பாட்டுக்கால முறைமைகள்
மாற்றப்பட்டு கிருபையினால் தேவனைச் சேரும் மிகப் பெரிய
வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க இயேசு கிறிஸ்துவின்
மரணம் வழிவகுத்தது. காரணம், "இயேசு கிறிஸ்துவின் சரீரம்
ஒரேதரம் பலியிடப்பட்டதனாலே அந்தச் சித்தத்தின்படி நாம்
பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்"
(எபிரேயர் - 10:10)
ஆனால் மிருகங்களின் இரத்தம் பூரண சுத்திகரிப்பை
ஏற்படுத்தவில்லை. இதனால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பலி செலுத்திய மனிதன்
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று பூரணம் அடையாததால்
இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்காததால் மீண்டும் மீண்டும் இரத்த பலி செலுத்தவேண்டியிருந்தது.
(எபிரேயர் -
10:1-4)
இது இயேசு கிறிஸ்துவின் மரணத்தால்
நிவிர்த்தி செய்யப்பட்டது. "இயேசு கிறிஸ்துவும் அநேகருடைய
பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம்
பலியிடப்பட்டு தமக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரெண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்" (எபிரேயர் -
9:28)
பழைய ஏற்பாட்டின் காலத்தில் பாவ நிவாரணத்திற்காக மிருகங்கள்
பலியிடப்பட்டன. காரணம், பாவத்தினால் மரணமடைந்த
ஆத்துமாவை மீட்க இரத்தம் சிந்தப்பட்ட வேண்டியிருந்தது.
ஏனெனில் இரத்தமே உயிர். "மாம்சத்தின்
உயிர் இரத்ததில் இருக்கிறது" (லேவியராகமம் - 17:11) மேலும், " சகல மாம்சத்துக்கும் இரத்தம்
உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்கு சமானம்"
(லேவியராகமம் -
17:14) என்று வேதம் கூறுகிறது. எனவேதான்
"இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் - 9:22) என்கிறது வேதம்.
ஆசரிப்புக்
கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள்
நுழையுமுன் ஆசாரியன் இரத்ததால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டியிருந்தது. இயேசு கிறிஸ்து தனது
சொந்த இரத்தத்தால் சுத்திகரிப்பை உண்டுபண்ணி பிரதான ஆசாரியனாக மகா
பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்தது மட்டுமல்ல அவர் மூலம் இரட்சிப்பைப்
பெற்றுக்கொண்ட அனைவரும் அதில் நுழையும் வாய்ப்பையும்
ஏற்படுத்திவிட்டார்.
" மாம்சத்தில்
பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய
குமாரனை பாவ மாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை
ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்" (ரோமர் - 8:3)
" ஆகையால் சகோதரரே நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமான திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால் அந்த மார்க்கத்தின் வழியாக பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தால் நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் .." (எபிரேயர் - 10:19,20) என்கிறது வேதம்.
இன்று இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொண்டு அவர் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டால் நாம் இரட்சிக்கப்படுவோம். ஏனெனில் வேதம் கூறுகிறது, " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் - 10:9)
அன்பானவர்களே! கடமைக்காக மட்டுமல்ல, 40 நாட்கள் மட்டுமல்ல கிறிஸ்துவிடம் அன்புகூர்ந்து நமது வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. நமது வாழ்நாள் முழுவதுக்கும் போதுமானவையாக அவர் இருக்கிறார். உலக ஆசை இச்சைகளுக்காக இயேசுவைத் தேடுவதைவிட்டு நித்திய ஜீவனுக்காக தேடுவோம். உலக ஆசைகளை நிறைவேற்றிட தேவனைத் தேடுபவன் ஆண்டுக்கு நாற்பது நாட்கள் மட்டுமே தேடுவான்.
"இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்க்களாயிருப்போம்" (1 கொரிந்தியர் - 15:19)