Thursday, January 22, 2015

தேவனை அறிதலும் தேவனைப் பற்றி அறிதலும்


 தேவனை அறிதலும் தேவனைப் பற்றி அறிதலும் 

 - ஜியோ பிரகாஷ்


தேவனை அறியும் அறிவில் வளர்வதே ஆவிக்குரிய வளர்ச்சி. தேவனை அறிவதும் தேவனைப் பற்றி அறிவதும் வித்தியாசமானவை. ஒருவன் வேதாகமத்தை வாசிப்பதினாலும் ஆலயங்களுக்குச் சென்று பிரசங்கங்களைக் கேட்பதாலும் தேவனைப் பற்றி அறியலாம். ஆனால் தேவனை அறிவது என் பது வித்தியாசமானது. 

ஒரு நாட்டின்  தலைவரை எடுத்துக் கொள்வோம்.  அவரைப் பற்றி நாம் பல விசயங்களை அறிந்திருக்கலாம். அவை  அவரைப் பற்றி வெளிவரும் பத்திரிகை மற்றும் டி.வி செய்திகளினாலும் அவரது எழுத்து அல்லது பேச்சாற்றல் இவற்றை நாமே கண்டும் கேட்டதனாலும்  இருக்கலாம். ஆனால் அந்தத் தலைவரது மகனோ,  மகளோ, பேரனோ, பேத்தியோ நம்மைவிட அதிகமாக அவரைப் பற்றித் தெரிந்திருப்பர். அவரது தனிப்பட்டக் குணங்கள் விருப்பங்கள் இவை அவர்களுக்கு மட்டுமே நன்கு தெரியும்.

சிலர் வெளிப் பார்வைக்கு நல்லவர்கள் போலத் தெரிந்தாலும் அவர்களது பல அவலட்சணமான குணங்கள் அவர்களோடு அதிக நெருக்கம் கொண்டவர்களுக்கேத் தெரியும். தேவனை அறிதலும் தேவனைப் பற்றி அறிவதும் இப்படியே. 

தேவன் நல்லவர், அன்பானவர், மன உருக்கம்  உடையவர், நீடிய சாந்தம் உள்ளவர் என அறிவது தேவனைப் பற்றி அறிவது. இது நாம் பிரசங்கங்களிலும் வேத புத்தகத்தைப் படித்ததினாலும் அல்லது ஞாயிறு  வகுப்புகளுக்குச் சென்றதாலும் அறிந்தது. 

ஆனால் தேவனை அறிவது என்பது வித்தியாசமானது. அது  அந்த தேவனது அன்பையும் மன உருக்கத்தையும்   வாழ்வில் அனுபவிப்பது. அதாவது தேவனது சொந்தப் பிள்ளைகளாக மாறுவது. அப்படி மாறும்போது மட்டுமே தேவனை அறிய முடியும்.  

பலர் இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றுக் கூறிகொண்டாலும் கண் பார்வையில்லாத ஒரு மனிதனைப் போலவே இருக்கின்றனர். ஆனால் அவர்களும் தாங்கள் தேவனை அறிந்துள்ளதாகக் கூறுகின்றனர் அல்லது அப்படி எண்ணிக்கொள்கின்றனர்.  கண்பார்வை இல்லாத ஒரு மனிதன் பல்வேறு நிறங்களின் பெயரைத் தெரிந்திருப்பான். பச்சை, நீலம்,   சிகப்பு, மஞ்சள் என்று அவனும் நிறங்களின் பெயரைக் கூற முடியும். ஆனால் அந்த நிறங்களின் உண்மையான மகிமை அவனுக்குத் தெரியாது. இதுவே தேவனைப் பற்றி அறிதலுக்கும் தேவனை அறிதலுக்கும் உள்ள வித்தியாசம்.

தேவன் நம் யாருக்கும் தூரமானவர் அல்ல. மிகச் சமீபமாக இருக்கும் அவரை அறிய நமது பாவங்களே தடையாக இருக்கின்றன. நமது அடுத்த அறையில் இருக்கும் ஒருவரை நாம் பார்க்க முடியாமல் இருக்கக் காரணம் இடையில் இருக்கும் சுவர்தான். இதுபோலவே நமது பாவங்களும் மீறுதல்களும் தேவனை நாம் அறிய முடியாதபடி தடுத்துக் கொண்டு இருக்கின்றன. 

நாம் கோவில்களுக்குச் செல்லலாம், வழிபாடுகளில் கலந்துகொள்ளலாம், அதனால் நாம் நம்மை ஆன்மீகவாதிகள் என எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தேவனை அறியாதவரை நாம் தேவனற்றவர்களே. தேவனை அறியும்  அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவே வேதம் நமக்கு வழி காட்டுகிறது. மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் நம் பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என வேதம் கூறுகின்றது. நம் பாவங்களை உண் மையான   மனஸ்தாபத்துடன் அவரிடம் அறிக்கையிட்டால் தேவன் இந்த அனுபவத்தை நமக்குத் தருவார்.

ஜாதி, மத, இன வேறுபாடு தேவனிடம் இல்லை. எனவே,  "தேவனே நான் உம்மை அறிய விரும்புகிறேன், எனக்கு உதவும்" என மெய்யான (தேவனை அறிய விரும்பும் மெய்யான விருப்பத்துடன்)  ஆதங்கத்துடன் குரலெழுப்பும் ஒவ்வொருவரையும் தேவன் சந்திப்பார். தேவனை அறியும் அறிவில் வளர வாழ்த்துக்கள்.