Monday, February 10, 2014

மெய்யான கிறிஸ்துமஸ்

மெய்யான கிறிஸ்துமஸ் 


(இக்கட்டுரை "ஆதவன்" டிசம்பர் 2013 இதழில் பிரசுரமானது)


- எம். ஜியோ பிரகாஷ்  

பொய்யும் , கபடமும், ஏமாற்றும் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று  ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட உலக மனிதர்களது போக்கிலேயே சென்றுகொண்டிருக்கின்றனர். ஜெபம், வழிபாடு, ஜெபக்கூட்டங்கள், காணி க்கையளிதல்  போன்ற செயல்பாடுகள் இருந்தாலும் ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரிடமும் ஆவிக்குரிய நற்குனங்களி ல்லை.

"எல்லோரும் இப்படிதானே வாழ்கிறார்கள்?" எனத் தங்களை நியாயபடுதுவோ ரும், "வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி எவரும் உலகில் வாழமுடியாது" எனக் கூறும் பலரும் உலகப் பிரகாரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டேத் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் கூரிக்கொள்கின்றனர்.

இதனைப் பற்றிய ஒருத் தெளிவை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் பெற வேண்டியது இன்றையச் சூழ்நிலையில் அவசியமாகிறது.

"எல்லோரும் இப்படித்தான் வாழ்கிறார்கள்" என்றுக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் மனிதர்கள் பலரும் தங்களைக்கொண்டே  மற்றவர்களையும் அளவிடுகின்ற்றனர். காமாலைக் கண்ணனுக்குக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். 

விபசார எண்ணமும் செயல்பாடுகளும் உள்ளவனுக்கு எல்லோரும் தன்னைப்போல விபச்சாரம் செய்வதாகவும், ஏமாற்றும், புரட்டும், லஞ்சமும் பித்தலாட்டமும் செய்பவனுக்கு எல்லோரும் அதுபோலச் செய்வதாக்கவும்தான் தெரியும். ஆனால் இது ஒரு மாய எண்ணமே.

இதுபோலவே பலரும் வேதத்தில் கூறியுள்ளபடி யாரும் வாழ முடியாது எனக் கூறுகின்றனர். தேவன் தனது பிள்ளைகளுக்கு வாழ முடியாத ஒரு வழியைக் காட்டுவாரா என அவர்கள் எண்ணிப்பாரப்பதில்லை.

தனது ஒரு வயதுக் குழந்தையை எந்தத் தகப்பனும் ஆறு இட்லிகளைத் தின்ன வற்புறுதமாட்டான். அல்லது ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் தெரு நல்லியில்போய் ஒரு குடம் தண்ணீர் எடுத்துவரச்  சொல்லமாட்டான். தனது குழந்தையால் எதைச் செய்ய முடியும் என்றும் எதைச் செய்ய முடியாது என்றும் ஒரு உலகத் தகப்பனுக்கேத் தெரியும்போது பரமத் தகபனுக்குத் தனது குழந்தையின் சக்தி என்னவென்று தெரியாமலிருக்குமா?   .

ஒருமுறை ஒரு பிரசங்கியாரே  இப்படி பிரசங்கிக்கக் கேட்டேன்.. "இயேசு கிறிஸ்து தேவ குமாரன், எனவே அவர் பரிசுத்தமாய் வாழ்ந்தார். நாம் சாதாரண மனிதர்கள் எனவே அவரைப்போல வாழ முடியாது"

இயேசு கிறிஸ்துக் கூறினார், " பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும்,  யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (அப்போஸ்தலர் -1:8)

பரிசுத்த ஆவி நம்மில் வரும்போது இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக வாழ முடியும் என்பதால்தான் இயேசுக் கிறிஸ்து இப்படிக் கூறினார்.

இயேசுக் கிறிஸ்துவின் வசனங்களை விசுவாசிப்போமெனில், அந்த வார்த்தைகள் உண்மையுளளவை என்று .  ஏற்றுக் கொள்வோமெனில் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மால் முடியும்.

பழைய ஏறபாட்டுப பரிசுத்தவான்கள் தவிர புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை எண்ணிப் பாருங்கள். இவர்களால் ஒரு பரிசுத்தமுள்ள சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடிந்ததென்றால் ஏன் நம்மால் அப்படி   வாழ முடியாது?

எனவே, இத்தகைய எண்ணங்களும் போதனைகளும் மாயையே. இப்படிப் "பொய்யான மாயையைப் பின்பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்" (யோனா - 2:8). தேவனது வார்த்தைகளை ஏற்க மறுப்பது பொய்யான மாயையைப் பின்பற்றுவதுதான். இது தேவ கிருபையை நாம் இழக்கச் செய்கிறது. 

அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு அந்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களை உலகத்திலிருந்து அழிக்கும் எண்ணம்கொண்டு அலைந்தவர். ஆனால் அததகையக்  கொலைவெறி கொண் டப் பவுலைத்  தேவன் சாந்த குணமுள்ளவராக மாற்றினார். இயேசு கிறிஸ்துவின் குணநலன்களைக் கொண்டவராக மாற்றினார். எனவேதான் அவர், "எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது:" (1 கொரிந்தியர் 2:16) என்று கூறுகிறார். மேலும், "நான் கிறிஸ்துவைப் பின் பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்"  (1 கொரிந்தியர் 11:1) என்று நமக்கும் வழி காட்டுகிறார்.

 பவுலை இத்தகையக் குணமுள்ளவராக  மாற்றிய தேவன் நம்மை ஏன்  மாற்ற முடியாது? தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லையே?

யூதர்களால் கல்லெறியுண்டு மரணமடையும் வேளையிலும் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்து, இயேசு கிறிஸ்து  சிலுவை மரணமடையும்போது தன்னைச் சிலுவையில் அறையும்போது தன்னைச சிலுவையில் அறைந்த யூதர்களை மன்னிக்க பிதாவிடம் பரிந்து பேசி ஜெபித்ததைப்பொல பரிசுத்த ஸ்தேவானால் ஜெபிக்க முடிந்தது. "ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்" (அப் - 7:60)  என்பது கிறிஸ்துவைப் பிரதிபலித்த  வாழ்க்கைதானே ?

இயேசு கிறிஸ்துவைபபோல வாழ  உண்மையான மன விருப்பம்கொண்டு வாழவோமெனில்   தேவனது   பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.

இன்று பிரசங்கி மார்களும் பல ஊழியர்களும், விசுவாசிகளும் தேவன் நோயைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கின்றனர்; பேயை ஓட்டுவார்  என்று விசுவாசிக்கின்றனர்; அற்புத அதிசயங்களை தேவன் செய்வார் என்று   விசுவாசிக்கின்றனர்; ஆனால் அவரைப்போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்வார் என்பதை மட்டும் விசுவசிக்க மறுக்கின்றனர்.

இதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்துவின் போதனையைப் பின்பற்ற வேண்டுமானால் பொருளாதார இழப்பைச சந்திக்க வேண்டியிருக்கும் எனும் எண்ணமே. தங்கள் மனம் இந்தப்   பொருளாதார இழப்பை ஏற்றுக்கொள்ளது யென்பதால் பலரும் ஏசுக் கிறிஸ்துவின் போதனையின்படி வாழ முடியாது என்று தங்களைத  தாங்களே நியாயப் படுத்திக்கொள்கின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி அற்புத அதிசயங்கள் நடந்ததாகக் காண்பித்தால் அதிகக்  கூட்டமும் காணிக்கையும் சேர்கிறது. அவரைப்போல வாழ்வதால் பெரிதாக என்ன கிடைத்துவிடும் எனும் எண்ணமே இத்தகைய மனிதர்களின் ஆழ்மனதில் நிலைகொண்டுள்ளது.

ஒரு ஐ. ஏ. எஸ் அதிகாரி தனது பிள்ளைத தன்னைப்போல ஒரு .ஐ. ஏ. எஸ் அதிகாரியாக வேண்டுமென விரும்புகிறார்.  ஒரு மருத்துவர் தனது பிள்ளை மருத்துவராக வேண்டுமென விரும்புகிறார். ஏன் ஒரு  சாதாரண வேலை செய்யும் மனிதன் கூடத்  தனது பிள்ளை  மேலான ஒரு   உயரநத   பதவியை  அடைய வேண்டுமென விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் மன விருப்பமும் இதுதான் 

அவர் பிதாவோடு இணைந்திருந்ததைபபோல   நாமும்  இணைந்திருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார். " நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாம் நம்மில் ஒன்றாய் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்" (யோவான் - 17:21) என்று பிதாவிடம் நமக்காக விண்ணப்பம் செய்தார்.

இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தில் நமக்கு விசுவாசம் இருக்குமானால்  நம்மையும் அவர் தன்னைப்போல பரிசுத்தம் பண்ணுவார் என்பதையும் விசுவாசிக்க முடியும். இயேசு கிறிஸ்துவைப்போல வாழ உண்மையான மன விருப்பம்கொண்டு அதனை வாஞ்சித்து வாழ்வொமெனில் தேவனது பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.

தேவனது வல்லமையென்பது   நோயைக் குனமக்குவதிலும் பேயை ஓட்டுவதிலும்  அற்புத அதிசயங்களைச செய்வதிலும் வெளிப்படுவதில்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் இவற்றைச செய்ய முடியும். பார்வோன்முன் நின்ற மந்திரவாதிகளும் மோசே மூலமாக கர்த்தர் செய்த அதிசயங்களுக்கு இணையான அதிசயங்களை  முதலில்   செய்தனர்.(யாத்திராகமம் - 7)

எனவே மெய்யான வல்லமை எனபது நமது உள்ளான மனிதனில் பெரிய மாற்றத்தை அடைவதும் அதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்வு வாழ்வதுமேயாகும். இத்தகைய ஒரு சாட்சி வாழ்வை கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கில்லதவர்கள் வாழ முடியாது.

சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் அனைவருக்கும் பொதுவான விஷயங்கள். இயேசு கிறிஸ்துவைப் போன்ற சாட்சி வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு இவை சவாலாக இருக்கும். ஆனால் கிறிஸ்து இத்தகைய துன்பங்களைக் கடந்தேச் சென்றார்.. " எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான் ஆசாரியன்" (எபிரெயர் - 4:15) இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரிகை.  இயேசு கிறிஸ்துவிடம் இந்த வல்லமையையே முதன் முதலில் கேட்போம். இத்தகைய சாட்சி வாழ்வுக்கு வழி காட்டவும் உதவிடவுமே  வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் இயேசு கிறிஸ்துவாக இந்த பூமியில் அவதரித்தார்.

இந்த கிறிஸ்துமஸ் நாளில் இத்தகைய ஒரு வாழ்வுக்கு நம்மை தேவனது பரிசுத்தக் கரத்தில் ஒப்புவிப்போம். இதுவே கிறிஸ்து நம் உள்ளத்தில்   பிறக்கும் மெய்யான கிறிஸ்துமஸாக இருக்கும்.