DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, June 29, 2025

வேதாகமத் தியானம் - ஜூன் 2025

    
- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1576                                                                       ஆதவன் 01.06.2025 ஞாயிறு

"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன்  ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால்  பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8: 44)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிசாசைக்குறித்து இன்றைய தியான வசனத்தில் சில காரியங்களைக் கூறுகின்றார். அதாவது அவன் மனுஷ கொலைபாதகன், சத்தியத்தில் நிலைநிற்காதவன், பொய்யன், பொய்யின் தகப்பன், சொந்தமாக கதைகட்டுபவன். 

பிசாசு ஆதிமுதல்  மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான் என்று இயேசு கூறுகின்றார். தேவன்  ஏற்கெனவே ஆயத்தப்படுத்தியிருந்த நித்திய ஜீவனை ஆதாமும் ஏவாளும் அனுபவிக்கவிடாமல் தடுக்க பிசாசு  பொய்யையே பயன்படுத்தினான். தேவன் கூறிய வார்த்தைகளை ஆதாமும் ஏவாளும் புறக்கணிக்கும்வகையில் தனது பொய்யான கதையால் அவர்களை ஏமாற்றினான். இதனாலேயே இயேசு அவனை பொய்யின் தகப்பன் என்கின்றார்.

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." ( ஆதியாகமம் 2: 16, 17) அதாவது தேவன் நியமித்தக் கட்டளை மிகச் சிறிதானது. அதனைக் கடைப்பிடிப்பதில் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் பிசாசு அவர்களைத் தனது பொய்யால் ஏமாற்றினான். "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3: 4, 5)

இன்று கிறிஸ்தவர்கள் என்று, அதுவும் நாங்கள் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று நம்மைக் கூறிக்கொண்டு  ஆதாம் ஏவாளைப்போலவே வாழ்வோமானால் அந்த வாழ்க்கையில் பயனில்லை. அது ஏதேனிலிருந்து ஆதாம் ஏவாள் துரத்தப்பட்டதுபோன்று தேவ சமூகத்தைவிட்டு நாம் துரத்தப்படும் வாழ்வாகவே இருக்கும். ஆராதனைகளில் கலந்துகொண்டு தேவ வார்த்தைகளைக் கேட்டாலும் நமது ஆசை இச்சையை நிறைவேற்றிட பிசாசின் பொய்யான வழியையே பின்பற்றுவோமானால்  இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நாம்  பிசாசானவனால் உண்டானவர்கள். 

இந்த உலகம் எப்போதும் உண்மையைவிட பொய்யையே அதிகமாக ஏற்றுக்கொள்ளும். ஏனெனில் உண்மை பலருக்குப்  பெரும்பாலும் கசப்பானதாகவே இருக்கும். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை." ( யோவான் 8: 45) என்று. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய ஆராதனைகளில்  கலந்து  கொள்வது,  ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது, தசமபாக காணிக்கைகள் கொடுப்பது, ஆலய காரியங்களில் முன்னின்று ஆர்வமாகச் செயல்படுவது இவை முக்கியமல்ல, மாறாக நாம் வாழ்க்கையில் எவ்வளவுதூரம் உண்மையுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதனையே இயேசு கிறிஸ்து பெரிதாகப் பார்க்கின்றார். "ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே." ( கொலோசெயர் 3: 9, 10)

ஆவிக்குரிய மனிதன் என்பதற்கு பொய்யில்லாத வாழ்வே எடுத்துக்காட்டு. "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21: 27) என்று பரலோக ராஜ்யத்தில் பொய்யர்கள் பிரவேசிக்கமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆம், பொய்யர்களுக்கு அவர்களது தகப்பனாகிய பிசாசு இருக்கும் இடமே ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் பொய்யைக்களைந்து உண்மையுள்ளவர்களாக வாழ்வோம்.  

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1577                                                                       ஆதவன் 02.06.2025 திங்கள் 

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 9)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகின் ஒளியாக இருக்கின்றார். இதனை அவரது அன்புச்  சீடனான யோவான்,  "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை." (யோவான் 1: 4, 5) என்று அவரது நற்செய்தியின் துவக்கத்திலேயே கூறுகின்றார். மட்டுமல்ல, "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி".  (யோவான் 1: 9) என்கிறார். 

இயேசு கிறிஸ்துவும் "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்."  (யோவான் 8: 12) மேலும், "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் " (யோவான் 9: 5) என்றார்.

நாம் அந்த ஆச்சரியமான ஒளியினிடம் வருவதற்கு நம்மைப் பிதாவாகிய தேவன் அழைத்துள்ளார்.  நாம் ஒளியாகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, நாம் தேவனால்    தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜ அதிகாரப்பெற்ற ஆசாரியர்களாகவும், பரிசுத்த மக்களாகவும், அவருக்குச் சொந்தமானவர்களாகவும் மாறுகின்றோம்.  அந்த ஒளியிடம் வரும்போது நம்மைச் சூழ்ந்துள்ள பாவ இருள் நம்மைவிட்டு அகலுகின்றது. இதனையே, "அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவர்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

இப்படி நாம் அந்த ஒளியினிடம் வந்ததால் நமக்கு என்ன நன்மை? அதனை இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பேதுரு, "முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 10) என்று கூறுகின்றார். 

அதாவது நாம் இந்த ஒளியான கிறிஸ்துவிடம் வரும்போது நாம் அவருடைய மக்களாவது மட்டுமல்ல, தேவனது இரகத்தைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாகின்றோம். 

ஒளியாகிய இயேசு கிறிஸ்துவிடம் வருவது என்பது வெறுமனே இயேசுவே ஆண்டவர் என்று கூறிக்கொள்வதல்ல, அவருடைய உருவப்படத்துக்கு மாலையும் மெழுவர்த்தியும் ஏற்றி வழிபடுவதல்ல. மாறாக, அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும் அனுபவத்தைப் பெறுவது. நாம் பாவத்தோடு இருப்போமானால் அவரைப் பகைக்கிறவர்களாக இருப்போம். "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3: 20) என்று இயேசு கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நாம்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கவேண்டுமானால் பாவங்கள் கழுவப்பட்ட  அனுபவம் நமக்குத் தேவை. அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். 

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."  (1 யோவான் 1: 7) 

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1578                                                                       ஆதவன் 03.06.2025 செவ்வாய்  

"மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8: 3)

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கைவாழ அவர் மோசே வழியாக பல்வேறு கட்டளைகளை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தார். இந்தக் கட்டளைகளையே நாம் நியாயப்பிரமாணக் கட்டளைகள் என்கின்றோம். ஆனால் இஸ்ரவேல் மக்கள் அந்தக் கட்டளைகளை வெறும் கட்டளைகளாகப் பார்த்து அவைகளுக்குக் கீழ்ப்படிந்தார்களேத்தவிர அவர்களுக்கு அந்தக் கட்டளைகளின் உள்ளார்ந்த அர்த்தமோ அனுபவமோ இல்லை.  எனவே அவர்கள் மனிதாபிமானமில்லாதவர்களாக, இறுமாப்புள்ளவர்களாக, சுபாவ அன்பில்லாதவர்களாக இருந்தனர். 

இதன் ஒரு உதாரணம்தான் ஓய்வுநாள் கட்டளை. ஓய்வுநாள் கட்டளையை மனிதாபிமானமற்றதாக அவர்கள் கடைபிடித்ததை இயேசு பல்வேறு முறைக் கண்டித்ததைப் பார்க்கின்றோம். "மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" ( மாற்கு 2: 27) என்பதையும், கட்டளைகள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டன, மனிதன் கட்டளைகளுக்காக உண்டாக்கப்படவில்லை என்பதனையும் உணர்த்தினார். 

மனிதர்களுக்கு இந்த அறிவு  இல்லாததால் கட்டளைகள் பலன்தரவில்லை; அவை வலுவிழந்து போய்விட்டன.  கட்டளைகளால் மனிதர்களைத் தேவனுக்கு ஏற்ற தூயவர்களாக மாற்றமுடியவில்லை. இதனையே,  "மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." என்று கூறப்பட்டுள்ளது.

இதனையே, "நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்." (1 பேதுரு 2: 24) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வரும்போது நாம் கிறிஸ்துவின் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்துக்குள் வந்துவிடுகின்றோம். அந்த ஆவியானவர் நம்மை நடத்துவதால் நாம் பாவம், அதனைத் தொடர்ந்த மரணம் இவைகளிலிருந்து விடுதலையாகின்றோம். "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து மனிதனாகப்  பூமியில் தோன்றி மரித்தது இதனால்தான். அதாவது கட்டளைகள் செய்யமுடியாத செயலை நமக்காக அவரே செய்து முடித்து நம்மைத் தூய்மைப்படுத்தவே அவர் உலகினில் வந்தார்.  

நியாயப்பிரமாணக் கட்டளைகள் வலுவற்றுப்போனதால் மனிதர்கள் சிதறிய ஆடுகளைப்போல இருந்தனர். அவர்களுக்கு வழியும், சத்தியமும் தெரியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து இவற்றைச் செய்துமுடித்து நமக்கு மீட்பினைத் தந்தார். இதனையே, "சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 25) என்கின்றார் அப்போஸ்தலரான் பேதுரு. 

எனவே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அல்ல; மாறாக, கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமான்களாக முடியும்.  "நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்," ( பிலிப்பியர் 3 : 9 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

"நான் எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறேன்" என்று எண்ணிக்கொண்டும் கூறிக்கொண்டும் நம்மை தேவனுக்கு ஏற்றவர்கள், நீதிமான்கள்  எனக் கருத்துவோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம். நாம் எத்தனை நீதிச்செயல்கள் செய்தாலும் அவைகள் நம்மை மீட்காது. கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்ப்படையச் செய்யும். 

"நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1579                                                                       ஆதவன் 04.06.2025 புதன்   

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ( ஏசாயா 26 : 3 )

இன்றைய தியான வசனம் தேவனை நோக்கிய ஒரு விண்ணப்பமாகவும், சமாதானத்துக்கான ஜெபமாகவும் உள்ளது. எவரும் உதவிடமுடியாத இக்கட்டான சூழ்நினையில் தேவனைத்தவிர வேறு யாரையும் நாம் உதவிக்கு அழைக்க முடியாது. ஆனால் அப்படி நாம் அவரை அழைப்பதிலும் உண்மையுள்ளவர்களாக  இருக்கவேண்டியது அவசியம். 

சிலர் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும்  இக்கட்டான வேளைகளில் தங்கள் விசுவாசத்தில் தளர்ச்சியடைவதுண்டு. பிறர் தாங்கள் சென்றுவந்த கோவில்களைக்குறித்தும் அதனால் தங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளைக் குறித்தும் கூறும்போது விசுவாசத்தில் தளர்ச்சியடைகின்றனர். நாமும் ஒருமுறை அவர்கள் கூறும் இடத்திற்குச் சென்று வழிபட்டுவந்தால் என்ன என்று மனதினில் எண்ணுகின்றனர். அதாவது இவர்கள் உறுதியற்ற மனமும் விசுவாசமும் கொண்டவர்கள். 

தொடர்ந்த துன்பங்களே வாழ்வில் நீடித்தபோதும் பக்தனான யோபு திடமான விசுவாசத்துடன் கூறுகின்றார், "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்." ( யோபு 13 : 15 ) என்று. 

சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ எனும் இளைஞர்கள் தங்களை அக்கினிச் சூழையில் போட்டாலும் நாங்கள் வேறு தேவனை வழிபடுவதில்லை என்று உறுதியாகக் கூறினர்.  "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்." ( தானியேல் 3 : 17, 18 )

இன்றைய தியான வசனம் கூறுவதன்படி அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடைய இவர்கள் அவரையே  நம்பியிருந்தபடியால் அவர் அவர்களைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொண்டதைப் பார்க்கின்றோம். 

இது என்றோ நடந்த அதிசய சம்பவங்களல்ல, இன்றும் நாம் விசுவாசத்தில் உறுதியோடு இருப்போமானால் நமக்கும் வாழ்வில்  இவை சம்பவிக்கும். எனவேதான் இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக ஏசாயா கூறுகின்றார், "கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்." ( ஏசாயா 26 : 4 ) ஆம், நமது தேவன் நித்யமானவர். இன்றும் அவர் நமது விசுவாசத்தைக் கனம்பண்ணுகின்றவராக இருக்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் எந்த எதிர்மறையான வாழ்க்கைச் சூழலிலும் அவரை உறுதியாகப் பற்றிக்கொள்வோமானால் அவர் நம்மை மெய்யான சமாதானத்தினால் பூரணமாய் நிரப்புவார். மட்டுமல்ல நாம் சூழ்நிலைகளை ஜெயிப்பவர்களாகவும் மாறுவோம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." ( ரோமர் 8 : 36, 37 ) என்று கூறுகின்றார். 

சூழ்நிலைகளை மறந்து தேவனையே உறுதியாய் அன்புடன் பற்றிக்கொள்வோம். அப்போது நம்மை அவர் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். 

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1580                                                                       ஆதவன் 05.06.2025 வியாழன் 

"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )

இந்த உலகத்தில் மனிதர்களைப்  பல்வேறு காரியங்கள் அடிமைப்படுத்துவனவாக உள்ளன. முக்கியமாக, பல்வேறு பாவங்கள், பொருளாசை, புகழாசை, பதவியாசை மற்றும் பல்வேறு உலக ஆசைகள் மனிதர்களை அடிமைப்படுத்தியுள்ளன. எவையெல்லாம் இப்படி நம்மை அடிமைப்படுத்தியுள்ளனவோ, அவையெல்லாம் நம்மை ஆளுகின்றன என்று பொருள். 

நாம்  தேவனை மறந்து அவரைத் தேடாமல் வாழும்போது நம்மில் இவையே ஆட்சிசெய்கின்றன. இன்றைய தியான வசனத்தில் ஏசாயா கூறுகின்றார்,  "தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்" என்று. அதாவது, இதுவரை உமக்கு விருப்பமில்லாத காரியங்களே எங்களை ஆட்சிபுரிந்து அடிமைப்படுத்தி வந்தன. இப்படி நாங்கள் அடிமைப்பட்டிருந்த காரியங்களுக்கு இனி அடிமைப்படமாட்டோம். காரணம் நாங்கள் இனி உம்மை மட்டுமே எங்களை ஆட்சிபுரிய அனுமதிப்போம்; உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் என்கின்றார்.

பெரும்பாலும் நாமெல்லோரும் பல்வேறு பாவங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று. அப்படி நாம் பாவம் செய்துகொண்டிருப்போமானால் பாவம் நம்மை ஆளுகின்றது என்று பொருள். பாவம் ஆளும் இடத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆட்சிபுரிய நாம் இடம்தரவேண்டும். அப்படியானால் மட்டுமே நாம் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைய முடியும். 

ஆம் அன்பானவர்களே, நாம் மேலே பார்த்த காரியங்களான பொருளாசை, புகழாசை, பதவியாசை மற்றும் பல்வேறு உலக ஆசைகள் எல்லாமே பாவம்தான். தேவனை முன்னிலைப்படுத்தாமல் வேறு காரியங்களுக்கு முன்னிலை கொடுக்கும்போது அவை நம்மை ஆளுகின்றன என்று பொருள். 

அப்போஸ்தலரான பவுல் மனிதர்களை ஆளும்  பல்வேறு பாவங்களைப் பட்டியலிட்டுப் பின்வருமாறு கூறுகின்றார். "அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 9, 10 )

எனவே,  இத்தகைய பாவங்கள் நம்மை ஆளாமல் இவற்றிலிருந்து விடுதலையாகி தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க வேண்டுமானால் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நம்மை ஆளும்படி அவருக்கே  நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  இயேசு கிறிஸ்து கூறினார், "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) என்று.

எனவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை ஆளும்படி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். "எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, இதுவரை உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி நீர் மட்டுமே எங்களை ஆளவேண்டும்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தை மட்டுமே  பிரஸ்தாபப்படுத்துவோம்" என்று அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். குமாரன் நம்மை  விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1581                                                                       ஆதவன் 06.06.2025 வெள்ளி  

"கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்." ( சங்கீதம் 40 : 1 )

மனிதர்கள் நாம் நாமது மனதின் விருப்பங்கள் உடனடியாக நிறைவேறிட வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். நமது ஜெபங்களுக்கு தேவன் உடனடியாகப் பதில்தந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் எல்லா நேரங்களிலும் மனிதர்கள் நமது எண்ணப்படி தேவன் உடனடியாகப் பதில் தருவதில்லை. அவர் பலவேளைகளில் நம்மிடம் நிதானத்தை எதிர்பார்க்கின்றார். காரணம், இந்த நிதானம் நமது விசுவாசத்தை வளரச்செய்யும். 

ஆபிரகாமுக்குத்   தேவன் அளித்த வாக்குறுதியை அவர்  பெற்று மகிழ்ந்திட  ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. யோசேப்பு பல்வேறு துன்பங்களை அனுபவித்து ஏறக்குறைய  13 ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின்னரே தேவன் அவருக்குத் தரிசனத்தில் காட்டிய ராஜமேன்மையை அடைந்தார். ஆம், 17 வயதில் சகோதரர்களோடு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த அவர் (ஆதியாகமம் 37:2) பாரவோன்முன் நிற்கும்போது 30 வயது என்று கூறப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 41: 46)

தாவீது பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரே இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தப்பட்டார். இந்த அனுபவங்களையெல்லாம் பெற்றிருந்ததால்  அவர் இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்." என்று கூறுகின்றார். 

இன்று எதிலும் உடனடி உயர்வு வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் சிலர் பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு உயர்வினை அடைந்திட முயல்கின்றனர். வேலையில் பதவி உயர்வுக்காக சிலர் கையூட்டுக்கொடுத்து அதனை அடைகின்றனர். இதுபோல அரசு விருதுகள், பரிசுகள் பெறுவதற்கும் குறுக்குவழியே பலருக்கு ஏற்றதாகத் தெரிகின்றது. ஆனால் இப்படி முயலும் பலர் தங்கள் விரும்பிய உயர்வை அடைந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கின்றனர். 

தேவனுக்கேற்ற காலம் ஒன்று உண்டு. எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 ) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.  ஆம் அன்பானபவர்களே, நமக்கு நியமித்திருக்கின்ற உயர்வு நிச்சயமாக தேவனால் நமக்குக் கிடைக்கும். குறுக்குவழிகள் தற்காலிக மகிழ்ச்சியை மட்டுமே நமக்குத் தரும். 

தங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வு தாமதித்துக்கொண்டே இருப்பதால் பல பெற்றோர் கவலைப்பட்டுக் கலங்குகின்றனர். அன்பானவர்களே, பிள்ளைகளை தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். நிச்சயமாக தேவன் நமது காத்திருத்தலை மகிழ்ச்சியாக்குவார்.  கர்த்தருக்காகக்  காத்திருப்பவர்களை அவர் கைவிடமாட்டார். நிச்சயமாக நாம் எதிர்பார்த்ததற்கும் மேலான வாழ்க்கையினை நமது பிள்ளைகளுக்கு அமைத்துத் தருவார்.    

சிலவேளைகளில் இப்படிக் காத்திருப்பது நமக்குத் துயரம் தருவதாகவே இருக்கும். ஆனால் வேதம் கூறுகின்றது, "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 )

கர்த்தருக்குப் பொறுமையோடு காத்திருப்போம். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1582                                                                       ஆதவன் 07.06.2025 சனி   

"பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்." ( பிரசங்கி 8 : 12 )

இன்று சமூக வலைத்தளங்களை நாம் பார்ப்போமானால் அதிகமான பதிவுகள் உடல்நலம் குறித்தும் அதனை எப்படி மேம்படுத்தலாம், என்னென்ன உணவுகள் உடலுக்கு ஏற்றவை, எவைகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்துவனவாக உள்ளன. இவைகளைப் பதிவிடுபவர்கள் இவைகளைக் கடைபிடிக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் எல்லோருக்கும் உடல்நலத்துடன் நீண்டநாள் வாழவேண்டுமெனும் ஆர்வம் இருக்கின்றது என்பது மட்டும் புலனாகின்றது. எனவே, எல்லோரும் மருத்துவர் ஆகிவிட்டனர்.

மக்கள் இந்த உலகத்தில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்பவர்களை பொதுவாக  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணுவதுண்டு. ஆனால் மனிதர்கள் நீண்டநாள் உயிர்வாழ்வதால் அவர்கள் நல்லவர்கள் என்று பொருளல்ல. அனைத்து பாவச் செயல்களையும் செய்யும்  ஒருவர்  நூறாண்டுவரை வாழலாம், அதுபோல எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத ஒருவர் அற்ப வயதில் இறந்துபோகலாம். மனிதர்களது வாழ்நாளுக்கும் அவர்களது செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை.

உடல்நலம் குறித்து வெளியாகும் பதிவுகளை எல்லோரும் ஆர்வத்துடன் படிக்கின்றனர். ஆனால், உடல்நலத்தைவிட மேலான ஆத்தும காரியங்களைக்குறித்த காரியங்களுக்குப் பலரும் முன்னுரிமை கொடுப்பதில்லை. இந்த உலகத்தில் பொல்லாப்பான காரியங்களில் ஈடுபட்டு ஒருவர் நூறு வயதுவரை வாழ்ந்தாலும் அவரைவிட தேவனுக்கு அஞ்சி வாழும் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்று இன்றைய தியானம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

தேவனுக்கு அஞ்சி வாழ்வது என்பது பயந்து பயந்து வாழ்வதல்ல, மாறாக தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அவற்றுக்கு விலகி நீதியுள்ள வாழ்க்கை வாழ்வது.   "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். (நீதிமொழிகள் 8:13) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வாழ்வது குறித்து மேலும் நாம் வேதத்தில்,  "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." (நீதிமொழிகள் 9:23) என்றும்  "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதனால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்". (நீதிமொழிகள் 14:27) என்றும் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, உடல்நலத்துக்கு ஒரு சில உணவுகளைத் தவிர்த்து ஒருசில உணவுகளைச் சேர்த்துக்கொள்வதுபோல ஆத்தும நலத்துக்கு ஒரு சில காரியங்களைத் தவிர்த்து ஒருசில காரியங்களை வாழ்வில் கடைபிடிக்கவேண்டியது அவசியம்.  ஆனால் பெரும்பாலான மக்கள் உடல்நலம் குறித்தச் செய்திகளைக் கேட்டுக் கடைபிடிப்பதுபோல ஆவிக்குரிய செய்திகளைக்  கேட்பதிலும் வாசிப்பதிலும் காட்டும் ஆர்வத்தை அவற்றைக் கடைப்பிடிப்பதில் காண்பிப்பதில்லை. 

நீண்டநாள் வாழ்வதல்ல முக்கியம், மாறாக தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது கவனிக்கத்தக்கது.  

"ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்." ( 1 பேதுரு 3 : 10, 11 )

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1583                                                                       ஆதவன் 08.06.2025 ஞாயிறு 

"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29 : 13 )

தேவனைத் தேடுவதற்கும் அவரை ஆராதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அவரை அறியாமலேயே ஆராதிக்கமுடியும். ஆனால் அதனால் என்ன பயன்? இன்று கடவுளை ஆராதிக்கும் அனைவரும் அவரை வாழ்வில் அறிந்தவர்களல்ல. இதனையே இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம்கூறினார், "நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்" (யோவான் 4:22) என்று. 

தேவனை அறியவேண்டுமானால் முதலில் நாம் அவரை உண்மையான மனதுடன் தேடுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 )என்று இயேசு கூறவில்லையா? இன்று தேவனைத் தேடுபவர்களைவிட தேவனிடமிருந்து ஏதாவது நன்மையைப் பெறவேண்டுமெனும் ஆர்வத்தில் அவரை வழிபடுபவர்களே அதிகம்பேர். இத்தகைய மனிதர்கள் தேவனை வாழ்வில் ஒருபோதும் அறியமுடியாது. 

இன்று நூற்றுக்குத்  தொண்ணூறு சதவிகித ஊழியர்களும் தங்களைத் தேடிவரும் மக்களுக்கு உலகத் தேவையை அடைந்திட ஜெபிக்கவே கற்றுக்கொடுக்கின்றனர். பல்வேறு தியானக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றபோதும் தேவனை அறிய அவை மெய்யான வழியைக் காட்டுவதில்லை. ஆம் அன்பானவர்களே, இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார்,  "குருடனுக்குக்   குருடன்  வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?" (லூக்கா 6:39) ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரும் குருடர்களாக இருப்பதால் மக்களைப் பள்ளத்தில் தள்ளுகின்றனர். 

தேவனை அறியவேண்டுமென்றால் முதலில் அவரை வாழ்வில் அறியவேண்டும் எனும் ஆர்வம் வேண்டும். பல்வேறு தெய்வங்களை உலக மக்கள் வழிபடுகின்றனரே, இவற்றில் எது உண்மையான தேவனாக இருக்கமுடியும்? என்றாவது எண்ணிப்பார்க்கவேண்டும். ஆனால் இப்படி எண்ணிப்பார்க்கும் மனநிலையில் மக்கள் இல்லை. எந்த தெய்வத்திடம் வேண்டினால் நமது தேவைகள் சந்திக்கப்படும் என்றே பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர். எனவேதான்  பலரும் தேவனை வாழ்வில் அறியமுடியாமல் இருக்கின்றனர். 

தேவனை நாம் அறிய முடியாமல் தடையாக இருப்பது நமது பாவங்களே என்று வேதம் நமக்குக் கூறுகின்றது. "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." (ஏசாயா 59:2)

எனவே, நாம் தேவனை அறியவேண்டுமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எல்லா மதங்களும் பாவங்களைப்பற்றியும் பாவ மன்னிப்பைப்பற்றியும் கூறினாலும் அவை கூறும் வழிமுறைகள்  வெவ்வேறு. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நதியில் மூழ்கி எழுந்தால் பாவங்கள்  போகும் என்று சிலர் எண்ணிக்கொண்டு அவ்வாறு நதிநீரில் குளித்து எழுகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் அவர்கள் பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் காண்பதில்லை. 

ஆனால் வேதம் கூறுகின்றது, "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை." (எபிரெயர் 9:22) என்று. ஆம் அன்பானவர்களே, நமக்காக தனது சுய இரத்தத்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சிப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டும்போது நாம் தேவனை அறியமுடியும்; அவரது பிள்ளைகளாக மாறி அவரது மகத்துவத்தை வாழ்வில் உணரமுடியும். காரணம், "குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்". ( 1 யோவான்  1 : 7 )

மேலும், "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." ( எபிரெயர் 10 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. முழு இருதயத்தோடு தேவனை அறியும் ஆர்வத்துடன் நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டும்போது அவரைக் கண்டுகொள்ளலாம். அவரிடமிருந்து எதனையாவது பெறவேண்டுமென்று அவரைத் தேடாமல் அவரே நமக்கு வேண்டுமென்று நாடுவோம்.  ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳

வேதாகமத் தியானம் எண் - 1584                                                                      ஆதவன் 09.06.2025 திங்கள்  

"ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுபோதும்." ( மத்தேயு 6 : 34 )

இன்றைய தியான வசனம் பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தலாம். அது எப்படி நாளைக்காக நாம் கவலைப்படாமல் இருக்க  முடியும்? நமது குழந்தைகளின் படிப்புச் செலவுகள், திருமணம், எதிர்பாராச் செலவினங்கள்,   நமக்கு வயதாகும்போது நமக்குப்  பாதுகாப்பு இவைகளையெல்லாம் பற்றி நாம் முன்னரேத்  தீர்மானித்து இந்தச் செலவுகளுக்காக ஆயத்தமாய் இருக்கவேண்டாமா? என்றெல்லாம் நாம் எண்ணலாம். 

ஆனால் இந்த வசனம் மூலம் இயேசு வலியுறுத்த விரும்புவது தேவன்மேல் நாம் உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும் என்பதைத்தான். இந்த உலகத்தில் தேவனது கிருபை இல்லாமல் நாம் எதனையும் சாதிக்கமுடியாது. எவ்வளவுதான் சொத்து சுகங்களை நாம் சேர்த்தாலும் அவை அனைத்தையும் ஒரே நொடியில் இழந்துவிடக்கூடிய நிலையும் நமக்கு ஏற்படலாம். யோபுவின் வாழ்க்கையினை நினைத்துப்பாருங்கள். எனவே தேவனது கிருபையினைச் சார்ந்து நாம் வாழவேண்டும் என்று இயேசு வலியுறுத்துகின்றார். 

இதனை நாம் பாலைவனத்தில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு மன்னா அளித்ததைக் கொண்டு சிறு விளக்கம் பெறலாம். இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவை தேவன் பொழிந்தபோது அதில் எதனையும் மறுநாள்வரை வைக்கவேண்டாம் என்று கட்டளையிட்டார். அதாவது அன்றன்றுள்ள அளவுக்கு மன்னாவைச் சேகரித்தால் போதும் என்று கூறியிருந்தார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் மன்னாவைக் கண்டபோது தேவனது கட்டளையைமீறி அதனை அதிகமாகச் சேர்க்க முயன்றார்கள். 

தேவன் அன்றன்று அவர்களுக்குத் தேவையான  மன்னாவைத் தவறாமல் அளித்தபோதும் அவர்கள் மறுநாளைக்கு என்று சேர்க்கக் காரணம் அவர்களது விசுவாசக் குறைவு. ஒருவேளை நாளைக்கு மன்னா பொழியப்படாவிட்டால் என்னசெய்வது என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே கட்டளையைமீறி மறுநாளுக்காகச் சேர்த்து வைத்தார்கள். ஆனால் அதனை அவர்களால் மறுநாளில் பயன்படுத்தமுடியாத நிலைதான் ஏற்பட்டது. 

"மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்." (யாத்திராகமம் 16 : 19, 20) என்று வாசிக்கின்றோம்.                                         

இத்தகைய  விசுவாசக் குறைவு நமக்கு இருக்கக் கூடாது என்பதையே இயேசு, "நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுபோதும்." என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, நாம் நாளைக்காக சேர்த்து வைப்பது பாவமல்ல, ஆனால் நமது அனைத்து நம்பிக்கையையும்  நாம் சேர்த்துவைத்த பொருள் செல்வங்களின்மேல் வைக்காமல் தேவன்மேல் வைக்கவேண்டியது அவசியம். ஏனெனில், தேவனது கிருபையே நாம் சேர்த்த செல்வத்தை அனுபவிக்க உதவிடும். இதனையே இயேசு கிறிஸ்து உவமையாக ஒரு செல்வந்தனின் வாழ்க்கைக்குறித்துக் கூறும்போது:- 

"பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்." ( லுூக்கா 12 : 19, 20 ) என்று கூறுகின்றார். 

தேவன்மேல் பூரண விசுவாசம் கொள்ளும்போது நமது நாளைய தேவையை அவர் பார்த்துக்கொள்வார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? நாளைக்காக கவலைப்படுவதைவிட முதலில் தேவனது ராஜ்யத்தைக்குறித்து கவலைகொண்டு அதனைத் தேடுவோம். நமது மற்ற தேவைகளை தேவனே பார்த்துக்கொள்வார். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1585                                                                      ஆதவன் 10.06.2025 செவ்வாய்  

"தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்." ( ஏசாயா 55 : 1 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த இலவசமான தண்ணீரையும் உணவையும்குறித்து ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறும் வார்த்தைகளாகும். 

மனிதர்கள்  ஆத்தும தாகத்தால் உள்ளமும் உடலும் வறண்டவர்களாக உள்ளனர்.  ஆத்துமாவைத் தேற்றும் தண்ணீரையும் உணவையும் தேடிப் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு அலைந்து திரிகின்றனர்.  அப்படி அலையும் மக்களை "நீங்கள் எல்லாரும் அப்படி வீணாக அலையவேண்டாம்; தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்" என்று அழைப்பு விடுக்கின்றது இன்றைய தியான வசனம். 

இயேசு கிறிஸ்து, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்." ( யோவான் 4 : 14 ) தொடர்ந்து இயேசு கிறிஸ்து ஆத்துமாவை நிறைவடையச்செய்யும் இந்த இலவசத்  தண்ணீரையும் உணவையும் குறித்து பல்வேறு முறைக் கூறுவதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். 

"பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்." ( யோவான் 7 : 37, 38 ) இலவசமான தண்ணீரை நாம் பெறுவது மட்டுமல்ல, அவரை ஏற்றுக்கொள்ளும்போது நம்மிடமிருந்தே நதிகள் புறப்படும் என்கின்றார். 

மேலும், "என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்." ( யோவான் 6 : 54 )

"என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது." ( யோவான் 6 : 55 )

ஆம் அன்பானவர்களே, இந்த உலகினில் பொதுவாக இலவசமாய்க்  கிடைக்கும் பொருட்களைத்தேடி மக்கள் ஓடுவது இயல்பு. ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த இலவச தண்ணீரையும் உணவையும் தேடி வருபவர்கள் மிகக்குறைவு. ஆனால் அப்படி அதனைத் தேடுவோமானால் நாம் மீட்படைவோம். "இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" ( ரோமர் 3 : 24 ) என்கின்றார் அப்போஸ்த்தலரான பவுல். 

பணமுமில்லாமல் எந்தவித விலையுமில்லாமல் மீட்பு நமக்கு அருளப்படுகின்றது. காரணம் அதற்கான விலைக் கிரயத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துச் சிலுவையில் கொடுத்துத் தீர்த்துவிட்டார். எனவே, நமது ஆத்தும மீட்புக்கான ஜீவத்தண்ணீரையும் ஜீவ அப்பத்தையும் நாம் இலவசமாகவே பெறுகின்றோம். "நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்" என்று அழைப்பு விடும் தேவ வார்த்தைகளைப் புறக்கணிக்கவேண்டாம். 

மட்டுமல்ல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியதுபோல நாமே இலவச தண்ணீரைக் கொடுக்கின்ற ஜீவ நதியாக மாறுவோம். 

"உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்." ( ஏசாயா 55 : 3 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1586                                                                      ஆதவன் 11.06.2025 புதன்   

"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 )

இந்த உலகம் ஒருவரின் பல்வேறு தகுதிகளைக் கருத்தில்கொண்டு அவருக்கு மதிப்பையும்  மரியாதையையும் அளிக்கின்றது. இந்த உலகத்தில் பணம், அதிகாரம், புகழ், அழகு, திறமை, கல்வித்தகுதி என பல்வேறு காரணிகள் மனிதர்களை தகுதியுள்ளவர்களாக்குகின்றன.

நாம் ஒரு பதவிக்கு விண்ணப்பிக்கும்போதும் நமது கல்வித்தகுதியையும், இதரத் தகுதிகளையும் (other talents), முன் அனுபவம் (past experiences) இவைகளைக் கருத்தில்கொண்டுதான் நமக்கு ஒரு வேலைவாய்ப்பைத் தருகின்றனர்.  ஆனால் தேவன் இப்படிப்பார்த்து மனிதர்களைத் தனது பணிக்காகத் தெரிவுசெய்வதில்லை. உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தனது பணிக்காகத் தெரிவுசெய்கின்றார். இப்படி அற்பமானவர்களைத் தெரிவுசெய்து அவர்களைத்  தகுதியுள்ளவர்களாக்கிப்  பயன்படுத்துகின்றார். 

யோசேப்பு, சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டவன். அரசனான தாவீது தகப்பனாலும் சகோதரர்களால் ஒரு பொருட்டாக எண்ணப்படாமல், ஆடுமேய்த்துக்கொண்டுத் திரிந்தவன்,  இலட்சக்கணக்கான இஸ்ரவேலரை பார்வோனது கையிலிருந்து விடுதலையாக்கி கானானை நோக்கி வழிநடத்திய மோசே ஒரு திக்குவாயும் மந்த நாவும் உள்ள மனிதன். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும் படிப்பறிவில்லாத மீனவர்கள்.  ஆம், தேவன் ஒரு மனிதனை அவனது தகுதிகளின் அடிப்படையில் பார்க்காமல் அவர்களது இருதயத்தைப்பார்த்துத் தெரிவுசெய்கின்றார். இதனை அறிந்திருந்ததால்தான் அன்னை மரியாள், "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 51, 52 ) என்று பாடுகின்றார்.

அப்போஸ்தலரான பவுலும், "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 ) என்று கூறுகின்றார். அப்போஸ்தலரான பவுல் அதிகம் படித்தவர்தான். ஆனால் அந்தப் படிப்பைப் பார்த்து தேவன் அவரைத் தெரிவு செய்யவில்லை. எனவேதான் துணிவுடன் அவர் இன்றைய தியான வசனத்தை எழுதியுள்ளார்.

ஆம் அன்பானவர்களே, இந்த உலகம் நம்மைத் தகுதியற்றவர்கள், இயலாதவர்கள், வெறுமையானவர்கள், அற்பர்கள், என்று கருதலாம். ஆனால் தேவன் நம்மை மேலானவர்களாகக் கருதுகின்றார். எனவேதான் புகழும், அதிகாரமும், படிப்பும், பணமும், அழகும் உள்ளவர்கள் அறியாத தேவனை நமக்கு அவர் வெளிப்படுத்தியுள்ளார். தேவனை அறியாமல் எல்லா உலகச் செல்வங்களை அனுபவிப்பதிலும் அவை எதுவும் இல்லாவிட்டாலும்  தேவனையும் அவரது மேலான உடனிருப்பு அனுபவங்களையும்  வாழ்வில் அனுபவிப்பது மேலானது.  

இப்படித் தேவன் ஏன் இல்லாதவர்களையும் அற்பர்களையும் தேர்வுசெய்கின்றார் என்பதை இன்றைய தியான வசனத்தின் முதல் இரண்டு வார்த்தைகள், "உள்ளவைகளை அவமாக்கும்படி" என்று  கூறுகின்றன. அதாவது, "நீ எல்லாம் உடையவன் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றாயே, எனது பார்வையில் நீ அவமானவன், ஒன்றும் இல்லாதவன்" என்பதனை அவர்கள் உணரும்படி இப்படி ஒன்றுமில்லாதவர்களைத்  தேவன்  தனக்காகத் தெரிவுசெய்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, இன்று மற்றவர்களைப்போல் நம்மிடம் உலகம் பெருமையாகக் கருதும் எதுவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் நாம்  தேவனை அறிந்துள்ளோம்.  தேவன் நமக்குத் தன்னை வெளிப்படுத்தியுள்ள கிருபைக்காக அவருக்கு நன்றி கூறித்  தொடர்ந்து அவருக்கேற்ற வாழ்வு வாழ்வோம். அவரே நம்மை இறுதிவரை தொடர்ந்து நடத்துவார். "இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." ( லுூக்கா 10 : 21 )

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1587                                                                      ஆதவன் 12.06.2025 வியாழன்    

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தேவன் தனது இரத்தத்தால் மீட்கப்பட்ட நம்மைக்கொண்டு செய்யும்  உன்னதமான காரியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றார். 

முதலில் அவர் நம்மை ஒரு வெற்றி வாழ்க்கை வாழத் துணைபுரிகின்றார். அதாவது எந்தச் சூழ்நிலையிலும் நாம் பாவத்தில் விழுந்துவிடாமல் பாவத்தின்மேல் வெற்றிகொள்ளும் வாழ்வைத் தருகின்றார். அப்படி நாம் பாவத்தை மேற்கொள்ளும்போது தேவனது வாசனை நம்மில் வெளிப்படும். மட்டுமல்ல, அந்த வாசனையை நாம் எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துபவர்களாக வாழ்வோம். 

இகனையே, "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவன்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் கிறிஸ்துவுக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்படையும்போது ஆவியின் பிரமாணத்துக்குள் வந்துவிடுகின்றோம். அந்த ஆவியின் பிரமாணம் நம்மை பாவத்துக்கும் ஆத்தும மரணத்துக்கும்  விடுதலையாக்குகின்றது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று கூறுகின்றார். 

மேலும், இன்றைய தியான வசனத்தில், "அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற" என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாசனை என்பது சாட்சியுள்ள ஒரு வாழ்கையினைக் குறிக்கின்றது.  மனிதர்களாகிய நம்மால் சுயமாக இப்படிச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியாது என்பதால் தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். 

இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நாம் எல்லா இடங்களிலும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமானால் நமக்கு ஆவியானவரின் துணை அவசியமாய் இருக்கின்றது. இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தபின் தனது சீடர்களுக்கு, "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 )

ஆம் அன்பானவர்களே, எருசலேம் எனும் நமது சொந்த வீட்டிலும், யூதேயா எனும் நமது சுய மக்களிடத்திலும்,  சமாரியா எனும் பிற மக்களிடமும் தொடர்ந்து உலகம் முழுவதும் அவருக்குச் சான்று பகரும் வழக்கை பரிசுத்த ஆவியின் பலத்தினால் நமக்குக் கிடைக்கின்றது. 

இத்தகைய மேன்மையான வாழ்வை நமக்குத் தந்துள்ள தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக வாழவேண்டாமா? எனவேதான் "எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." என்று பவுல் அப்போஸ்தலர் தேவனை ஸ்தோத்திரம் செய்கின்றார்.  

எனவே நாமும் ஆவியானவரின் பலத்தால் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். அப்போது, நம்மைக்கொண்டும் தேவன் இப்படி அவரது நறுமணத்தை உலகினில் பரவச்செய்வார். அவருக்கே துதியும் ஸ்தோத்திரமும் உண்டாகட்டும்.

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1588                                                                      ஆதவன் 13.06.2025 வெள்ளி     

"சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?" ( லுூக்கா 17 : 17 )
"Were there not ten cleansed? but where are the nine?" ( Luke 17 : 17 )

பொதுவாக மனிதர்கள் பலவேளைகளில் நன்றி மறந்தவர்களாக இருக்கின்றனர்.  நன்றிகூறுவது பலவேளைகளில் நமக்கு மேலான நன்மைகளைக் கொண்டுவரும் என்பதும்  பலருக்கும் தெரியாமலிருக்கின்றது. மட்டுமல்ல, சிறிய காரியங்களில் நன்றி மறந்தவர்களாக நாம் வாழ்வோமானால் தொடர்ந்துவரும் மேலான நன்மைகளை நாம் இழந்துவிடுவோம். இன்றைய தியான வசனம் இவைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

இயேசு கிறிஸ்துவிடம் சுகம்பெற ஆர்வமுடன் பத்து தொழுநோயாளிகள் வந்தனர். இயேசு கிறிஸ்து அவர்களை உடனேயே அந்த இடத்தில்  குணமாக்காமல், "நீங்கள் போய் ஆசாரியரிடம் உங்களைக் காட்டுங்கள்" என்று கூறி அனுப்பினார். காரணம், அந்தக்  காலத்தில் தொழுநோயாளிகளைத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதி அவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கும் நிலை இருந்தது. நோய் குணமானால் குணமான அந்த மனிதன் ஆசாரியனிடம் தன்னைக் காண்பித்து ஆசாரியன் கூறும் ஒருசில சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றியபின்னரே ஊரில் சேர்த்துக் கொள்ளப்படுவான். (காண்க - லேவியராகமம்)

"நீங்கள் போய் ஆசாரியரிடம் உங்களைக் காட்டுங்கள்" எனும் இயேசு  கிறிஸ்துவின் வார்த்தைகளை அந்தத் தொழுநோயாளர்கள்  விசுவாசித்து ஆசாரியனிடம் தங்களைக் காண்பிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் செல்லும் வழியில் குணமடைந்தார்கள். ஆனால் குணமடைந்த சந்தோஷத்தில் அவர்களில் ஒன்பதுபேர் இயேசு கிறிஸ்துவை மறந்துவிட்டனர். ஒருவன் மட்டும் அவரை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி சொல்லத் திரும்பி வந்தான். இயேசு அவனிடம், "சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?" என்றார்? இது தேவன் நம்மிடம் நன்றியுணர்வை எதிர்பார்க்கின்றார் என்பதனையும் உணர்த்துகின்றது.

ஆம் அன்பானவர்களே, நம்மில் பலரும் நன்றி மறந்த இந்த ஒன்பதுபேரைப்போலவே பலவேளைகளில் இருக்கின்றோம். ஒரு நன்மையைப் பெற்றுக்கொண்டபின் எல்லாவற்றையும் மறந்துவிடுகின்றோம். பலர் கடவுளுக்கு நன்றி காணிக்கைச் செலுத்துவதுண்டு. ஆனால் பெரும்பாலான வேளைகளில் தங்களுக்கு உதவிசெய்த சக மனிதர்களை மறந்துவிடுகின்றனர். நமக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவியவர்கள், உயர்கல்விக்கு உதவியவர்கள்,  இக்கட்டான வேளைகளில் உதவியவர்கள் இவர்களை பலரும் மறந்துவிடுகின்றனர். 

மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் சிலர் தாங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வர உதவியவர்களை அற்பமாக எண்ணுகின்றனர். இத்தகைய மனிதர்கள் மேலான ஆசீர்வாதங்களைப் பெறமுடியாது என்பதனை இன்றைய தியான வாசகம் நமக்கு உணர்த்துகின்றது. வேதாகமத்தில் நாம் வாசிக்கின்றோம், இயேசு, தன்னிடம் நன்றிசொல்ல வந்த மனிதனைப்பார்த்து  "தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்." ( லுூக்கா 17 : 18, 19 )

ஆம், மற்ற ஒன்பதுபேரும் வெறும் உடல்நலம் மட்டும் பெற்றனர். ஆனால் நன்றிகூறிய இந்த மனிதனோ தனது விசுவாசத்தினால் ஆத்தும இரட்சிப்பையும் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்டான். எனவே, இரட்சிப்பு அனுபவம் பெறுவதற்கு நன்றியறிதல் எனும் குணமும் காரணமாக இருக்கின்றது. 

அன்பானவர்களே, தேவனுக்கும் நமக்கு உதவிய சகமனிதர்களுக்கும் நன்றிகூற நாம் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம்.  இந்தக் குணம் நமக்கு இருக்குமானால் அது  நமது இருதயத்தையும்  தேவ சமாதானத்தால் நிறைக்கும்.  "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்".(கொலோசெயர் 3:15)

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1589                                                                      ஆதவன் 14.06.2025 சனி 

"அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று." ( யோபு 16 : 16, 17 )

இன்றைய தியான வசனம் யோபுவின் அடக்கமுடியாத மனத்துயரத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. வாழ்வில் ஒன்றுமில்லாமல் வாழ்பவர்களைவிட எல்லாச் செல்வத்தையும் அனுபவித்துப்  பின் அவை அனைத்தையும் ஒன்றுசேர இழக்கும் மனிதனின் மனத்துயர் அளவிடமுடியாதது. யோபு அப்படிப்பட்டத் துயரத்தைத்தான் அனுபவித்தார். இதனால், "அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது" என்கின்றார். 

இந்த உலகத்தில் இப்படித் துன்பம் அனுபவிப்பவர்களை பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். "நல்ல விதமாகச் சம்பாதித்திருந்தால் அந்தச் செல்வம் நிலைத்திருக்கும்....இவன் துன்மார்க்கமாய்ச்  சம்பாதித்ததுதானே?  அது எப்படி நிலைத்திருக்கும்?" என்று கேலியாகப்பேசுவார்கள். யோபுவைப்பார்த்தும் அவரது நண்பர்கள் இப்படித்தான் பேசினார்கள். ஆனால், "ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்". ( யோபு 1 : 1 ) என்று யோபு நூலின் துவக்கத்திலேயே நாம் வாசிக்கின்றோம். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் யோபு, "என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று" என்று அங்கலாய்ப்புடன் கூறுகின்றார். மட்டுமல்ல, இப்படி எல்லாவற்றையும் இழந்தாலும் நான் சாகும்வரை எனது நீதிவாழ்க்கையில் தொடர்ந்து நடப்பேன் என்கின்றார் அவர். "என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை" ( யோபு 27 : 2, 3 ) என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. 

ஆம் அன்பானவர்களே, இன்று நமக்கும் வாழ்க்கையில் இத்தகைய துன்பங்கள் நேர்ந்திருக்கலாம். நல்ல ஒரு வாழ்க்கை வாழ்ந்தபோதும் இன்று எல்லாவற்றையும் இழந்து வாழ்வில் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கலாம். ஆனால் நாமும் யோபுவைபோல மனஉறுதியுடன் இருக்கவேண்டியது அவசியம்.  "நான் நல்லவனாக, உத்தமனாக வாழ்ந்து என்ன பயன்?" எனும் எதிர்மறையான எண்ணங்களை நம்மைவிட்டு அகற்றி யோபுவைபோல தேவனையே நோக்கிப்பார்க்க முயலுவோம்.   

யோபுவைபோல நாமும் நம்மைக்குறித்து உறவினர்களும் நண்பர்களும் பேசும் பேச்சுக்களைக் கவனிக்காமல் தேவனை நோக்கி நமது பார்வையைத் தொடர்ந்துச் செலுத்துவோம்.  நமது வாழ்க்கையைக்குறித்து சாட்சிபகரவேண்டியது உலக மக்களல்ல. தேவனே நம்மைக்குறித்து மேலான சான்றளிப்பவர். இந்த உண்மையினை யோபு அறிந்திருந்ததால் கூறுகின்றார், "இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்." ( யோபு 16 : 19 )

நமது கைகளில் கொடுமையில்லாதிருக்கையிலும், நமது ஜெபம் சுத்தமாயிருக்கையிலும் நமக்குத் துன்பங்கள் நேர்ந்திருக்கலாம். இன்றைய தியான வசனத்தில் யோபு கூறுவதுபோல அழுது அழுது  நமது முகம் அழுக்கடைந்திருக்கலாம்; மரண இருள் நமது கண்முன் தெரியலாம், ஆனாலும் மனம் சோர்வடையாமல் உறுதியாக இருப்போம்.  நமக்குச் எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். அவர் நம்மை என்றைக்கும் அழிவைக் காணாவிடமாட்டார். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1590                                                                      ஆதவன் 15.06.2025 ஞாயிறு  

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை." ( மாற்கு 12 : 30 )

கர்த்தரிடம் அன்புகூருவது குறித்து இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார். எப்படி நாம் தேவனிடம் அன்புகூரவேண்டும் என்பதற்கு, முழு ஆத்துமா, முழு மனது, முழு பலம் ஆகிய வார்த்தைகளை அவர்  பயன்படுத்துகின்றார். அதாவது, இது நூறு சதவிகிதம் என்று பொருள். அதாவது பூரணம் எனும் முழுமையான அன்பை அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

நமது ஆண்டவர் எதனையும் அரைகுறையாகச் செய்பவரல்ல. அதுபோல அவர் அரைகுறையான  எதனையும் ஏற்றுக்கொள்வதுமில்லை. பலி செலுத்தும்போதுகூட அரைகுறையானவற்றைச் செலுத்தக்கூடாது என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டார். 

இதனை நாம் லேவியராகமத்தில் பின்வருமாறு வாசிக்கலாம்:-"ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.    குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக." ( லேவியராகமம் 22 : 21, 22 )

மல்கியா புத்தகத்திலும், "பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்." ( மல்கியா 1 : 13 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் அன்பு செலுத்துவது பூரண அன்பாக இருக்கவேண்டும். உண்மையான காதல் என்பது இரண்டு மூன்றுபேரிடம் ஏற்படாது. ஒருவரை மட்டுமே நாம் உள்ளான அன்புடன் நேசிக்க முடியும். அதனையே இன்றைய தியான வசனத்தில், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக" என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். பீறுண்ட, ஊனமான, நசல்கொண்ட அன்பை அவர் விரும்புவதில்லை. 

நாம் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே தேடுபவர்களாக இருந்தால் இத்தகைய பூரண அன்பு தேவன்மேல் ஏற்படாது. காரணம், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தெய்வங்களிடம் ஜெபித்து தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளைப்  பிறர் கூறக் கேட்கும்போது நாமும் அப்படி ஜெபித்தால் என்ன எனும் எண்ணம் ஏற்பட்டு மெய் தேவனைவிட்டு நாம் பின்மாறிவிடுவோம். இப்படித்தான் பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். 

இயேசு கிறிஸ்து,  "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று கூறினாரேத் தவிர "நானும் ஒரு வழி" என்று கூறவில்லை. காரணம் அவரால் மட்டுமே மனிதர்களுக்கு மீட்பு உண்டாகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடனான தீமோத்தேயுவுக்கு, "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." ( 1 தீமோத்தேயு 2 : 5,6 ) என்று எழுதுகின்றார். 

இதனால்தான் இயேசு கிறிஸ்து, "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக" என்று கூறுகின்றார். இப்படித் தேவனிடம் பூரண  அன்புகூருபவர்கள் மட்டுமே மீட்பு அனுபவத்தைப் பெறமுடியும். மற்றவர்கள் பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து உலக ஆசீர்வாதங்களையே பெறும்படி ஆயுளுக்கும் ஜெபித்துக்கொண்டே இருப்பார்கள். ஆம் அன்பானவர்களே, நமது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு  மனதோடும்,  முழுப் பலத்தோடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் மட்டுமே அன்புகூருவோம். 

"நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே." ( எபிரெயர் 10 : 23 )

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1591                                                                      ஆதவன் 16.06.2025 திங்கள்   

"அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது." ( 2 கொரிந்தியர் 3 : 14 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து  பழைய ஏற்பட்டு நூல்களில் பல நூறு ஆதாரங்கள் இருந்தும் இஸ்ரவேலர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதனை மோசேக்காலத்துச் சம்பவத்துடன் ஒப்பிட்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

தேவனது கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு நாற்பது நாட்கள் கழித்து  மலையிலிருந்து மோசே இறங்கியபோது தேவனோடு பேசியதால் அவரது முகம் பிரகாசமானதாக இருந்தது. இஸ்ரவேல் மக்களால் அவரது முகத்தைப் பார்க்ககூடாதபடி அது கண்களைக் கூசச்செய்தது.  "மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்". (யாத்திராகமம் 34: 29,30)

எனவே, மோசே இஸ்ரவேல் மக்களோடு பேசும்போது தனது முகத்தை முக்காடுபோட்டு மூடிக்கொண்டிருந்தார். "மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்". (யாத்திராகமம் 34: 33) தேவனோடு பேசும்படி ஆசாரிப்புக் கூடாரத்துக்குள் செல்லும்போது மோசே முக்காட்டை நீக்கிக்கொள்வார்.  "இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்."  (யாத்திராகமம் 34: 35)

ஆம்  அன்பானவர்களே, இஸ்ரவேல் மக்களால் தேவனது ஊழியக்காரனது முகத்தையே நோக்கிப்பார்க்க முடியவில்லை; அப்படியானால் அவர்களால் எப்படி தேவனை நோக்கிப்பார்க்க முடியும்?  இதனையே அப்போஸ்தலரான பவுல், நாம் மனம்திரும்பாத வாழ்க்கை வாழும்போது இஸ்ரவேல் மக்களைப்போல தேவனது  முகத்தை ஏறெடுத்துப்பார்க்கத் துணிச்சலில்லாமல்தான் இருப்போம் என்று குறிப்பிடுகின்றார்.

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து பவுல் கூறுகின்றார், "அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 16, 17 ) ஆம் அன்பானவர்களே, மனம்திருப்பி, தேவனது ஆவியைப் பெறும்போது நாம் விடுதலையோடு உரிமையுடன் தேவனை ஆராதிக்க முடியும். அப்போது தேவனது முகத்தை நாம் நோக்கிப்பார்க்க முடியும்.

மட்டுமல்ல, அப்படி அவரது முகத்தைப் பார்த்து உரிமையுடன் ஆராதிக்கும்போது,   "நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்." ( 2 கொரிந்தியர் 3 : 18 )

மோசேயின் முகத்தைப் பார்க்கத் தடையாக இருந்த முக்காடுபோல இன்று நாம் விடுதலையோடு தேவனை ஆராதிக்கத் தடையாக இருக்கும்  முக்காடு கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. எனவே, இஸ்ரவேல் மக்களது மனது கடினப்பட்டு இருந்ததுபோல நமது மனதையும் கடினப்படுத்தாமல் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களுக்கு மன்னிப்பை வேண்டுவோம். கிறிஸ்துவின் ஆவி நம்மில் செயல்பட அனுமதிப்போம். "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1592                                                                      ஆதவன் 17.06.2025 செவ்வாய்    

"காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 4 : 17 )

கிறிஸ்தவ மார்க்கமே விசுவாச மார்க்கம்தான். காணக்கூடாத தேவனை  நாம் விசுவாசக் கண்கொண்டு பார்த்து விசுவாசிக்கின்றோம். எனவேதான்  நமக்கு கடவுளை நினைவுபடுத்த உருவமோ சிலைகளோ தேவையில்லை என்று முதல் கட்டளையிலேயே கூறப்பட்டுள்ளது. 

இதுபோல, கிறிஸ்தவம் வலியுறுத்திக் கூறும் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல்,  நித்திய ஜீவன் எனும் நிலையான விண்ணக வாழ்வு,  இவைகளை நாம் கண்ணால் காணவில்லை. ஆனால் அவற்றை விசுவாசிக்கின்றோம். ஆம், "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ). 

உலகினில்  பலர் அனுபவிக்கும் பல்வேறு செல்வங்களும், நாம் கண்ணால் காணும் பொருட்களும் நமக்கு ஒருவேளை இல்லாமலிருக்கலாம். அல்லது நாம் பல்வேறு உபத்திரவங்களை இந்த உலகினில் அனுபவிக்கலாம். இவை நமக்கு வேதனையைத் தரலாம். ஆனால்,  நாம் மெய்யான விசுவாசிகளாக இருப்போமானால் இவைகளைக்குறித்து நாம் கவலைப்படவேண்டாம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதாவது, காணப்படாத விண்ணகத்துக்குரியவற்றை எதிர்நோக்கிக் காத்திருக்கின்ற நமக்கு, அதிசீக்கிரத்தில் இந்த உபத்திரவம் நீங்கும். மட்டுமல்ல, அது நமக்கு  மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.  

இது ஏனெனில், "காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்" ( 2 கொரிந்தியர் 4 : 18 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த உலகத்தில் காணப்படுபவை அழிந்துபோகக்கூடியவை. ஆனால் வேதம் கூறும் நாம் காணாத விண்ணகத்துக்குரியவைகளோ  நித்தியமானவைகள். இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்."( ரோமர் 8 : 18 ) என்று கூறுகின்றார்.

ஆம் அன்பானவர்களே, வீணான கவலைகளை விட்டுவிடுவோம். தேவன் இந்த உலகினில் வாழ நமக்கு ஏற்றவைகளைத் தருவார் என்று விசுவாசிப்போம். தேவனை அறியாமல் வாழும் பலர் பல்வேறு செல்வங்களை அனுபவிக்கலாம். ஒருவேளை இது நமக்கு மனவேதனையைத் தரலாம். "நான் தேவன்மேல் இத்தனை நம்பிக்கையாக இருந்து என்ன பயன்?" எனும் எதிர்மறையான எண்ணங்கள் நம்மில் தோன்றலாம்.   நாம் கிறிஸ்துவுக்குள் உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வோமென்றால் இன்றைய தியான வசனத்தை நினைவுகூர்வோம். 

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்று வேதம் கூறுகின்றது. 

எனவே, "அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." என்பதை விசுவாசிப்போம்.

எல்லாம் கிடைப்பதால் நாம் தேவன்மேல்  அன்பு கூருவதிலும், கிடைக்காதபோதும் அவரிடம் அன்புகூர்வது  மேலானது. காரணம்,  "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 6 )

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1593                                                                      ஆதவன் 18.06.2025 புதன்     

"கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )

நாம் உடலால் செய்யும் பாவமானது நமது ஆத்துமாவை அழிக்கின்றது. பெரும்பாலும் மனிதர்கள் தங்களது சரீர ஆசைகளை நிறைவேற்றிட ஆசைப்படுகின்றார்களேத் தவிர ஆத்துமாவைப்பற்றி கவலைப்படுவதில்லை. "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23 ) என்று வேத வசனம் கூறுகின்றது. 

எனவே, நமது சரீரம் பாவத்துக்கு மரித்ததாக இருக்குமானால் நமது ஆவியானது உயிருள்ளதாக இருக்கும். இறந்துபோனவன் பாவம் செய்வதில்லை. அதுபோல நமது உடலானது இறந்து (பாவம் செய்யாமல்) இருக்குமானால் நமது ஆத்துமா உயிருள்ளதாக இருக்கும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நாம் கிறிஸ்துவுக்கு உட்பட்ட ஆவியின் பிரமானத்துக்குள் வரும்போது பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுவிக்கப்படுகின்றோம். ஆம் அன்பானவர்களே, நாம் மீட்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்குள் வரும்போது அவரே நம்மை எல்லா விதத்திலும் வழிநடத்துவார். வேதம் கூறும் இந்த உண்மை கட்டுக்கதையல்ல. நாம் என்ன பேசவேண்டும், எதனைப் பேசக்கூடாது, எங்கு செல்லவேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பதனை ஆவியானவர் நமக்கு உணர்த்துவார். இதனையே ஆவியின் வழிநடத்துதல் என்று கூறுகின்றோம். 

அன்று  அப்போஸ்தலர்களை வழிநடத்திய ஆவியானவர் நம்மையும் இதுபோலவே வழிநடத்துகின்றார். ஏனெனில் அவர் மாறக்கூடியவர் அல்ல. இந்த அனுபவமே ஆவிக்குரிய அனுபவம். இதற்கு மாறாக  குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம்கூடி, "அல்லேலூயா" என்று கூப்பாடுபோட்டுவிட்டு பின்னர் பாவ வாழ்க்கை வாழ்வது ஆவிக்குரிய வாழ்க்கையல்ல. இதனை மெய்யான ஆவிக்குரிய மனிதர்கள் செய்வதில்லை.    

ஆம் அன்பானவர்களே,  இப்படி ஆவியின் பிரமாணம் நம்மைப்  பாவம், அதனைத் தொடர்ந்த மரணம் இவைகளிலிருந்து விடுக்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று கூறுகின்றார். 

இன்றைய தியான வசனம், "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." என்று கூறுகின்றது. அதாவது, முதலில் நாம் நமக்குள் கிறிஸ்து வருவதற்கு  அனுமதிக்கவேண்டும். அப்படி அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்து விடுதலைபெற முடியும். இதனையே இயேசு கிறிஸ்து, "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) என்று கூறினார். 

இப்படி நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது தேவனது நியாயத்தீர்ப்புக்குத் தப்புகின்றோம். இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 ) என்று கூறுகின்றார். 

ஆவியானவர் நம்மை ஆளவும் வழிநடத்தவும் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அதற்கு முதன்முதலில் நமது பாவங்கள் கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட அவற்றை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். கிறிஸ்து நமக்குள் இருந்தால் மட்டுமே நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், நமது ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1594                                                                      ஆதவன் 19.06.2025 வியாழன்      

"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்." ( ரோமர் 10 : 12 )

இந்த உலகத்தைப் படைத்து ஆளும் கடவுளுக்கு மனிதர்களிடையே வேற்றுமையில்லை. அவர் எல்லோரையும் ஒரே விதமாகத்தான் பார்க்கின்றார். அதனையே, "யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை" என்றுகூறப்பட்டுள்ளது. நமது இந்திய கூற்றில்சொல்லவேண்டுமானால், கிறிஸ்தவனென்றும், இந்து என்றும் இஸ்லாமியர் என்றும், சீக்கியன், சமணன், புத்தன் என்றும்  வித்தியாசமேயில்லை. தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார்.

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்று கூறுகின்றார். 

ஆம், தேவன் மனிதர்களது தோற்றத்தையோ, ஜாதியையோ, மதத்தையோ, இனத்தையோ, நாட்டையோ கருத்தில் கொள்வதில்லை. அவர் இருதயத்தை ஊடுருவிப் பார்கின்றவர். இதனை நாம் சாமுவேல் நூலில் வாசிக்கின்றோம்,  "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்." ( 1 சாமுவேல் 16 : 7 )

இன்றைய தியான வசனம் தன்னைத் தொழுதுகொள்கின்ற யாவர்க்கும் அவர் ஐஸ்வர்யசம்பன்னர் என்று  கூறப்பட்டுள்ளது. அதாவது அவரைத் தொழுதுகொள்கின்ற யாரையும் அவர் தனது விலையேறப்பெற்ற இரட்சிப்பால் செல்வந்தனாக்குகின்றார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." ( யோவான் 6 : 37 ) என்று கூறினார். அவர் யாரையும் புறம்பேத் தள்ளுபவரல்ல. தன்னிடம் வரும் எவரையும் அவர் சேர்த்துக்கொள்கின்றார். 
 
இதனையே அப்போஸ்தலரான பவுலும், "ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." ( ரோமர் 10 : 13 ) என்று கூறுகின்றார். 

பிதாவின் சித்தம் செய்யவே இந்த உலகினில் வந்ததாக இயேசு கிறிஸ்துக் கூறினார். பிதாவின் சித்தம் என்ன? அது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பது. இதனையே இயேசு கிறிஸ்து, "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்." ( யோவான் 6 : 40 ) 

அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்கள் கிறிஸ்துவை அறியாத குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். வேதாகமமும் வேத தியானங்களும் குறிப்பிட்ட மதத்துக்கு உரியதல்ல.  கிறிஸ்துவும் மதத்துக்கு உரியவரல்ல. அவர் மதத்தை உருவாக்கவும் வரவில்லை. நித்திய ஜீவனுக்கான வழியை நமக்குக் காண்பிக்கவும் அந்த வழியை நாம் கண்டடைந்து அதில் நடக்கவும் இறுதியில் அவரோடு நித்தியத்துக்கும் வாழவும்  தகுதிப்படுத்தவுமே உலகினில் வந்தார். 

எனவே, யூதனென்றும் கிரேக்கனென்றும், கிறிஸ்தவன் என்றும், இந்து என்றும், இஸ்லாமியர் என்றும், சீக்கிய, சமண, புத்த மதத்தவனென்றும்   வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மனம் திரும்பும்போது அவர்களுக்கு அவர்  சகோதரனான, நண்பனாக, தாயாக, தகப்பனாக மாறுகின்றார்.  அவரைஉள்ளத்தில் ஏற்றுக்கொண்டு ஆவியில் செல்வந்தர்களாக மாறுவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1595                                                                      ஆதவன் 20.06.2025 வெள்ளி       
  
"என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்." ( சங்கீதம் 41 : 9 )

இன்றைய தியான வசனம் நம்பிக்கைத்துரோகம் செய்யும் மனிதர்களைப்பற்றிக் கூறுகின்றது.  தாவீது சந்தித்த நம்பிக்கைத் துரோகிகளைப் போன்றவர்களை நாமும் நமது வாழ்க்கையில் கண்டிருக்கலாம். தாவீதின் சொந்த மகனான அப்சலோமே தாவீதைக்கொல்ல வகைபார்த்துத் திரிந்தான். 

நாம் மிகவும் நம்பியிருக்கும் மனிதர்கள் நமக்கு எதிராகச் செயல்படும்போது நமது மனம் அதிகமாகப் பாதிக்கப்படும். தன்னோடு உணவு உண்டு சேர்ந்து நண்பர்களாக வாழ்ந்தவர்கள் தனக்கு எதிராக எழுந்ததையே தாவீது.  "என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும்" என்று கூறுகின்றார். 

சிலவேளைகளில் நாம் நோயுற்றிருக்கும்போது நம்மைப் பார்க்க வருபவர்கள் எல்லோரும் நல்ல எண்ணத்துடன் வருவதில்லை. மருத்துவ மனையில் நம்மைப் பார்க்கவந்துவிட்டு வெளியில்போய், "இவனுக்கு இந்த வியாதி வந்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும்" என்றும், "இவன் செய்த பொல்லாப்புக்குக் கடவுள் தண்டனை கொடுத்துள்ளார்" எனவும் பேசிக்கொள்ளும் மனிதர்கள் உண்டு. எனவே பலரும் நோயுற்றிருக்கும்போது பலர் தங்களைப் பார்க்கவும் விசாரிக்கவும் வருவதை விரும்புவதில்லை. 

இதனையே தாவீது, "அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்." ( சங்கீதம் 41 : 5, 6 ) என்கின்றார். 

ஆனால் தொடர்ந்து தாவீது ஒரு உண்மையினைக் கூறுகின்றார். அதாவது பலரும் என்னவேண்டுமானாலும் பேசட்டும், நாம் தேவனுக்கேற்ற வாழ்வு வாழ்வோமென்றால் நமக்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகள் எதுவும் பலிக்காது என்பதனை அவர், "என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.  நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்." ( சங்கீதம் 41 : 11, 12 ) என்கின்றார்.
         
ஆம் அன்பானவர்களே, நோய்கள், துன்பங்கள் நம்மை நெருக்கலாம்.  உடனிருந்து நண்பர்களாகப் பழகிய சிலர் நமது நிலத்தையோ,  பணத்தையோ, பொருள்களையோ ஏமாற்றி அபகரித்து நமக்குத் துரோகம் செய்திருக்கலாம். ஆனால்  தேவனோடு நமக்குள்ள தனிப்பட்ட உறவு உண்மையாக இருக்குமானால் அவரும் நம்மேல் தனி அக்கறையுடன் இருப்பார். தேவன் நம்மேல் அன்பாக இருப்பதை அவர் நமக்குச் செய்யும் அதிசயமான விடுதலை வாழ்வால் பிறர் அறியச் செய்வார். 

உடனிருந்து நம்மோடு பழகி, பின்னர் நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை நாம் பழிவாங்காமல் தேவனிடம் நமது வேண்டுதல்களை ஏறெடுத்து  ஜெபிப்போம். "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 ) ஆம் அவரது மக்களாக நாம் வாழும்போது நமக்கு ஏற்ற நியாயத்தை கர்த்தர் வழங்குவார். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1596                                                                      ஆதவன் 21.06.2025 சனி       

"என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." ( சங்கீதம் 143 : 4, 5 )

எவ்வளவுதான் நாம் கிறிஸ்துவுக்குள் பலம்கொண்டாலும் சிலவேளைகளில் நமது பிரச்சனைகளை துன்பங்களை  நாம் துன்மார்க்கருடைய செழிப்புடன் ஒப்பிட்டுப்பார்த்துவிடும்போது மனம் சோர்வடைந்துவிடுகின்றோம். துன்மார்க்கன் செழிப்பான் என்றுதான் வேதம் கூறுகின்றது  (சங்கீதம் 73).   ஆனால் இந்த உலகினில் மனிதர்கள் அந்தச் செழிப்பைத் தேவ ஆசீர்வாதம் என எண்ணிக்கொள்கின்றனர்.  துன்மார்க்கர்களது செழிப்பு புல்லைப்போன்றது என்பதனை யாரும் உணர்வதில்லை. புல்  எப்படி வெகு சீக்கிரத்தில்  வெயிலால் வறண்டு போகிறதோ அதுபோல துன்மார்க்கர்கள் வறண்டுபோவார்கள். 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமக்குள் ஏற்படும் சோர்வுகளின்போது நாம் இவைகளைச் சிந்திப்பதில்லை. "நான்  இவ்வளவு நேர்மையாக, உண்மையாக வாழ்ந்து என்ன பயன்?" எனும் எண்ணம் நமக்குள் எழுந்துவிடுகின்றது. 

இதனை மேற்கொள்ள தாவீது இன்றைய தியானத்தில் வழி காட்டுகின்றார். அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் தேவன் நமது வாழ்வில் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருப்பார். ஒவ்வொருவரையும் தேவன் இப்படியே வித்தியாசமாக நடத்துகின்றார். நாம் விசுவாசத்தில் வளர்வதற்காகவே  தேவன் இப்படிச் சில அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நம்மை வழிநடத்துகின்றார்.  

நமது வாழ்வில் சோதனைகள் ஏற்பட்டு மனம் மடியும்போது தேவன் இதுவரை நமக்குச் செய்த அதிசயங்களை நாம் தியானிப்போமானால்  நமது சோர்வு மறையும். அது தேவன்மேல் நமக்குள்ள விசுவாசம் குறைந்திடாமல் நம்மைப் பாதுகாக்கும். இதனையே தாவீது இங்குக் கூறுகின்றார், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." என்று. 

தாவீதுக்கு ஏற்பட்டச் சோதனைகள் அதிகம். சகோதரர்கள் அவனிடம் அன்பாய் இருக்கவில்லை. பிற்காலத்தில் சவுல், சொந்த மகன் அப்சலோம் என அவர்து உயிரை வாங்கத் துடித்தவர்கள் பலர். ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் தாவீது தனது பழைய வாழ்வை எண்ணிப்பார்த்திருப்பார்.  ஆடு மேய்த்துக்கொண்டு வனாந்தரத்தில் அலைந்த நாட்கள்....., தேவன் அவரோடு பேசி பல சத்தியங்களை வெளிப்படுத்திக்கொடுத்த நாட்கள், தேவனைப் புகழ்ந்து பாடி துதிக்கத்  தேவன் அவருக்கு உள்ளத்தில்  கொடுத்த பல்வேறு பாடல்கள்......என தேவன் கொடுத்த பல்வேறு நன்மைகளை அவர்  எண்ணிப்பார்த்திருப்பார். எனவேதான் இன்றைய தியான வசனத்தில், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்" என்று நினைவுகூர்கின்றார்.

அன்பானவர்களே, தாவீதின் இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்றுவோம். நமது பழைய வாழ்வை எண்ணிப்பார்ப்போம். அதிலிருந்து தேவன் நம்மை எப்படியெல்லாம் மாற்றி வழிநடத்தி வந்துள்ளார் என்பதனைச் சிந்தித்துப்பார்ப்போம். அவற்றுக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நாம் எப்படி இருந்தோம், இப்போது  எந்த விதத்திலெல்லாம் தேவன் நம்மை ஆசீர்வதித்துள்ளார் என எண்ணிப்பார்த்துத் தேவனைத் துதிப்போம். 

ஆம், நமது ஆவி நமக்குள் குழப்பமடையும்போது சோர்ந்துபோகாமல் நமது பழைய நாட்களை நினைப்போம், தேவனது  செய்கைகளையெல்லாம் தியானிப்போம்,  அவர் கொடுத்துள்ள மேலான ஆசீர்வாதங்களுக்காக நன்றி சொல்வோம். எந்தத் தகுதியுமில்லாத நம்மைத் தகுதிப்படுத்திய  தேவனைநோக்கி  "கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?" ( 2 சாமுவேல் 7 : 18 ) என்று தாவீதைப்போல கூறுவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1597                                                                      ஆதவன் 22.06.2025 ஞாயிறு         

"நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்." ( 2 இராஜாக்கள் 3 : 17, 18 )

நாம் இக்காட்டான வேளைகளில் நமது விடுதலைக்காக ஜெபிக்கும்போது  சிலவேளைகளில் சூழ்நிலைகள் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதுபோலத் தோன்றலாம். இந்த இக்கட்டான வேளையில் எப்படி நம்மால் வெற்றிபெறமுடியும் என்று நாம் எண்ணலாம். நமது விசுவாசமே ஆட்டம்காணலாம். ஆனால், ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த ஆண்ட சராசரங்களைப் படைத்தவர் தேவன்; அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. 

"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?" ( எரேமியா 32 : 27 ) என்று நமது விசுவாசத்துக்குத்  திடன் தருகின்றார்  கர்த்தர். 

இருபுறமும்  மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு. எதிரே செங்கடல். பின்னால் கொல்வதற்கு நெருங்கும் பார்வோனின் படைகள்; தப்பிக்க வழியே இல்லை. ஆனால் தேவன் அதிசயம் செய்து செங்கடலை பிளந்து இஸ்ரவேலரைக் கால் நனையாமல் கடலைக் கடக்கப்பண்ணினார்.  

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே யூதாவுக்கு எதிராக போருக்கு  வரும் மோவாபியரை எதிராக இஸ்ரவேலின் ராஜா யோராம்,  யூதாவின் ராஜாவாகிய யோசபாத், மற்றும் ஏதோமின் ராஜா ஆகிய மூவரும் வனாந்தரம் வழியாக போருக்குப் புறப்பட்டனர். ஏழு நாட்கள் கடந்தபின்னர் வழியில் தண்ணீரில்லாததால் படைவீரர்களும், குதிரைகளும் தவித்தனர். அப்போது அவர்கள் கர்த்தரிடம் விசாரிக்க எலிசாவை அணுகினர். அப்போது கர்த்தர் எலிசாவிடம் இன்றைய தியான வசனத்தைக் கூறினார். 

அன்பானவர்களே, இந்தச் சூழ்நிலையினை எண்ணிப்பாருங்கள். இடமோ வனாந்தரம்.  ஆனால் கர்த்தர் சொல்கின்றார், "நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று". அதுபோலவே கர்த்தர் செய்து தனது மக்களுக்கு வெற்றியைக் கொடுத்தார். 

இதுபோலவே இன்று நாம் பல்வேறு காரியங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கலாம். அந்த ஜெபத்துக்கான பதில் உலக மனிதர்கள் எண்ணுவதுபோன்ற வழிகளிலல்ல, மாறாக காற்றும் மழையும் இல்லாமல் அதிசயமாக தேவன்  பள்ளத்தாக்கினை தண்ணீரால் நிரப்பியதுபோன்ற அதிசய வழியில் நமது வாழ்வில் நிறைவேறும். ஆம் அன்பானவர்களே, சூழ்நிலைகளைப்  பார்க்காமல் சூழ்நிலைகளை மாற்றவல்ல கர்த்தரை நோக்கிப் பார்ப்போம்.  

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த பல்வேறு அற்புதங்களும் இப்படிப்பட்டவைதான். அவை நாம் எண்ணிப்பார்க்க முடியாத இயற்கைக்கு அப்பாற்பட்டவை.. மரித்து நான்கு நாட்களுக்குப்பின் எழுப்பப்பட்ட லாசர், பாடையில் கிடத்தப்பட்டு அடக்கத்துக்குக் கொண்டுபோகப்பட்ட  வாலிபன், மரித்துப்போன சிறுமி, 38 ஆண்டுகள் பெதஸ்தா குளக்கரையில் படுத்திருந்த மனிதன், 18 ஆண்டுகள் நிமிரக்கூடாத கூனி, 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பெரும்பாடு அனுபவித்தப் பெண்........ இப்படிப் பலருக்கு  இயற்கைக்கு மாறான வழியில் நடந்த அதிசயங்கள் வேதாகமத்தில் நமது விசுவாச வளர்ச்சிக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

எனவே, சூழ்நிலைகளை நோக்காமல் கர்த்தரையே விசுவாசத்தோடு நோக்கி ஜெபிப்போம். காற்றையும் காணமல், மழையையும் காணாமல் நமது  பள்ளத்தாக்கு வாழ்க்கை தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அது நமக்கு மட்டுமல்ல, அன்று கால்நடைகளுக்கும் மற்றும் அங்கிருந்த பலருக்கும் உதவியதுபோல நம்மைச் சுற்றிலும் இருக்கும் பலருக்கும்கூட  ஆசீர்வாதமாக இருக்கும். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1598                                                                      ஆதவன் 23.06.2025 திங்கள்          

"என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று." ( எஸ்றா 9 : 6 )


நாம் மெய்யான ஆவிக்குரிய மக்களாக இருப்போமென்றால் இன்றைய தியான வசனத்தில் எஸ்றா கூறுவது போன்ற அனுபவம் நமக்கும் ஏற்பட்டிருக்கும். அதாவது தேவனுக்குமுன் நாம் ஜெபத்துக்காக நிற்கும்போது நமக்குள் பாவ உணர்வு ஏற்பட்டிருக்கும். நம்மால் தேவனை நோக்கி விடுதலையுடன் ஜெபிக்கமுடியாது;  ஆராதிக்கமுடியாது. நமது மனச்சாட்சி நம்மை வாதிக்கும். 

இவ்வளவுக்கும் இந்த வசனத்தைக் கூறும் எஸ்றா சாதாரண மனிதனல்ல, அவர்  மிகப்பெரிய வேத அறிஞராக இருந்தார். தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தில் அவர் வாழ்ந்தார். எனவே, பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர் விடுதலைப்பெற்று எருசலேம் தேவாலயத்தைக் கட்டும்படி வந்தபோது எஸ்றா ராஜாவிடம் கேட்ட உதவிகளையெல்லாம் ராஜா அவருக்குக் கொடுத்து உதவினார். "இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

மட்டுமல்ல, எஸ்றா அவராக எந்தப்பாவமும் செய்யவில்லை. மாறாக அவர் வழிநடத்திய மக்கள் செய்த பாவங்களைத் தனது பாவமாகக் கருதி இந்த ஜெபத்தை தேவனை நோக்கி ஏறெடுக்கின்றார். 

தேவன் தனது மக்களுக்குக் கூறியிருந்த முக்கியமான கட்டளைகளில் ஒன்று பிற இனத்துப் பெண்களோடு திருமண உறவு கொள்ளக்கூடாது என்பதாகும். ஆனால் இஸ்ரவேல் மக்களில் பலர் இந்தக் கட்டளையை மீறினார்கள். இதனையே கடவுளுக்கு ஏற்பில்லாத பாவத்தைச் செய்ததால்  "என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று"  என்கின்றார் எஸ்றா. 

ஆவிக்குரிய அனுபவமில்லாத மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் ஆவிக்குரிய மக்கள் தேவ நோக்கம் அறிந்தவர்களாக, தேவ கட்டளையின்படியே எதனையும் செய்வார்கள்.  இதனையே இயேசு கிறிஸ்து தனது சகோதர்களிடம், "என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது." ( யோவான் 7 : 6 ) என்றார். ஆவிக்குரிய அனுபவமில்லாதவர்களுக்கு எல்லா வேளையும்  எதுவும் செய்யும் எண்ணமிருக்கும்; ஆவிக்குரியவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல. 

ஆம் அன்பானவர்களே, தேவனுக்கு ஏற்பில்லாத செயலைச் செய்துவிட்டு பின்னர் அவரிடம் ஒப்புரவு ஆகாமல் ஆவிக்குரிய மனிதனால்  ஜெபிக்கவோ வேதம் வாசிக்கவோ முடியாது. இதுவே எஸ்றாவின் அனுபவமாக இருந்ததால் இன்றைய தியான வசனத்தில் தேவனாகிய உமக்கு முன்பாக என் முகத்தை ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன் என்கின்றார். 

நம்மை நாம் நிதானித்துப் பார்ப்போம். நமது ஜெபங்கள் எப்படி இருக்கின்றன. எந்த மனச்சாட்சியின் உணர்வுமில்லாமல் பாவ இதயத்துடன் ஜெபித்துக்கொண்டிருக்கின்றோமா? அப்படியானால் நமது ஜெபத்தை தேவன் கேட்பது கூடாத காரியம்.

ஜெபம் செய்யுமுன்  நமது செயல்களை எண்ணிப்பார்ப்போம். பாவத்துடன் தேவனது முகத்தை  ஏறெடுக்க நமக்கும் எஸ்றாவைப்போல  வெட்கம் உண்டாகவேண்டும். தேவனுக்கு எதிரான பாவங்கள் செய்திருப்போமானால் முதலில் அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவி மன்னிக்கப்பட வேண்டுதல் செய்வோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டபின் நாம் செய்யும் வேண்டுதல்கள் வித்தியாசமானதாக, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1599                                                                      ஆதவன் 24.06.2025 செவ்வாய்           

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

இந்த உலகம் நம்மை எத்தனை அற்பமானவர்களாகக் கருதினாலும் கர்த்தர் அப்படி நம்மைப் பார்ப்பதில்லை. அவர் நம்மில் எவரையும் பயன்படுத்த முடியும். அதுபோலவே  நாம் உடல்வலு, பணம், பதவி இவற்றில் எவ்வளவு பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தர் நம்மைப் பலவான்களாக மாற்றிட முடியும். அதனையே நாம் கிதியோனது வாழ்வின்மூலம் அறிய முடிகின்றது. 

மீதியானியர்  இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீதியானியர் அவ்வப்போது இஸ்ரவேலரை நெருக்கி  அவர்களது உடைமைகளையும் அவர்களது வயலின் விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். அப்போது இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடையமாட்டானா என்று ஏங்கித் தவித்தனர். அப்போது ஒருநாள் கிதியோன் எனும் வாலிபன்  தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான். 

மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்து அதனைப் போரடித்தான். ஏனெனில் மீதியானியர் எப்போது வருவார்கள் என்று தெரியாது. அப்போதுதான் கர்த்தருடைய தூதன் அவன்முன் வந்து நின்று, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ஆனால் கிதியோன் தனது அற்பமான குடும்ப நிலைமையை எடுத்துக் கூறுகின்றான். "ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 15 )


அன்பானவர்களே, கிதியோன்போல நாமும் நம்மைப் பலவீனர்கள் எனக் கருதி இதுபோல சூழ்நிலைகளை எண்ணிப்  பயந்துகொண்டிருக்கலாம். நம்மைவிட பலசாலிகளான மற்றவர்களுக்குக்கூட  இப்படி நடந்துள்ளதே,  அப்படியானால் நாம் எம்மாத்திரம் என எண்ணலாம். ஆனால் கர்த்தருடைய கரம் நம்மோடு இருக்குமானால் நாம் பலசாலிகள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். கர்த்தர் நம்மோடு இருப்பாரானால்  நமக்கு இருக்கின்ற அற்பமான பலமே நமது எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமானது. 

எனவேதான் கர்த்தர் கிதியோனைப்பார்த்து, "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) ஆம் அன்பானவர்களே, "என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று அவர் பவுல் அப்போஸ்தலரைத் திடப்படுத்தவில்லையா? கர்த்தர் நம்மோடு இருக்கும்போது பிரச்சனைகளை மேற்கொள்ளவும் சமாளிக்கவும் நமக்கு இருக்கும் கொஞ்சமான மனித பலம் போதும். 

ஆனாலும் கிதியோன் தனது அற்ப நிலைமையை எண்ணி தேவனிடம் அதனை அறிக்கையிட்டதைப்போல நாமும்  கர்த்தரிடம் அறிக்கையிடலாம். "ஆண்டவரே, நான் பலவீனமானவன் அல்லவா? எனது படிப்பு, குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச்  சமாளிப்பேன்?" என அவரிடம் கூறலாம். ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியது போலவே நம்மோடும் கூறுகின்றார், "வேறு எதனையும் பார்க்காதே, நான் உன்னோடு இருக்கின்றேன்".

தனது பலவீனத்தை ஒத்துக்கொண்டு அதனை தேவனிடம் அறிக்கையிட்ட கிதியோனிடம் தேவன் "நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

ஆம் அன்பானவர்களே, நமது பலவீனங்களைப் பார்க்கவேண்டாம்; சூழ்நிலைகளைப் பார்க்கவேண்டாம்; பிரச்சனைகளின் தன்மையினைப் பார்த்துப் பயப்படவேண்டாம்.  கர்த்தர் நம்மோடு இருப்பாரானால் நாம் பலசாலிகள்தான்;  பராக்கிரமசாலிகள்தான்.  எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். அன்பானவர்களே, சோர்ந்துபோகவேண்டாம். ஏனெனில்  கர்த்தர் சொல்கின்றார், " நான் உன்னோடேகூட இருப்பேன்"

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1600                                                                      ஆதவன் 25.06.2025 புதன்  

"நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக்  கட்டளையிட்டேன்." ( 1 இராஜாக்கள் 17 : 9 )

இக்கட்டான வேளைகளில் தேவன்  தனது ஊழியர்களையும் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களையும் தப்புவிக்க அதிசயமான வழிகளில்  உதவிசெய்கிறார்.  இந்த அற்புதமான உதவி அவரது சொல்லுக்கு நாம் விசுவாசத்துடன் கீழ்ப்படியும்போது நமக்குப் பலிக்கும். பஞ்சகாலத்தில் தனது ஊழியக்காரனாகிய எலியாவுக்கு தேவனால் அருளப்பட்ட இந்த வார்த்தைகளை எலியா விசுவாசித்து தேவன் கூறியபடி சாறிபாத் ஊருக்குப் புறப்பட்டார்.  

எலியாவைப்போல நாமும் இன்று சோர்ந்துபோயிருக்கலாம். வாழ்க்கைச் சூழ்நிலை நம்மை மனமடியச் செய்திருக்கலாம். ஆனால், நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்வு வாழும்போது தேவன் நமக்காக மாற்று ஆயத்தம் செய்திருப்பார். எலியாவுக்கு ஒரு விதவை இருந்ததுபோல நமக்கும் உதவிட மனிதர்களை அவர் ஏற்பாடு செய்திருப்பார். 

ஆனால் நாம் தேவனது வாக்குறுதிகளை விசுவாசிக்கவேண்டும். தேவன் கூறும் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். இந்தப் பஞ்சகாலத்தில் பணக்காரர்களே உணவில்லாமல் தவிக்கிறார்கள் ஏழை விதவை எப்படி நமக்கு உணவுத்தருவாள்? என்று எலியா எண்ணியிருந்தால் உணவு கிடைத்திருக்காது.  

இதுபோல ஒருவேளை ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோயிருக்கலாம், அல்லது ஆவிக்குரிய உணவு நமக்குப் போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது இத்தனை வயதாகியும் நமக்கு ஆவிக்குரிய உணவைக்குறித்து அறிவில்லாமலிருக்கலாம். பல்வேறு தேவர்களையும் பல்வேறு ஊழியர்களையும் தேடி ஓடி சலிப்படைந்திருக்கலாம். ஆனால் நாம் தயங்கிடத் தேவையில்லை. 

எலியாவுக்கு தேவன் கூறியதுபோல இன்று நம்மை நோக்கிக் கூறுகின்றார், "நீ எழுந்து, கல்வாரிநாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ. அவரோடே தங்கியிரு; அவரே உன்னோடு இருந்து உன்னைப் பராமரித்து  நடத்துவார்".  

தேவனுடைய வார்த்தையை நம்பி சாறிபாத் விதவையைநோக்கி எலியா சென்றதுபோல கல்வாரி நாதரை நோக்கி நாம் செல்லவேண்டியது அவசியமாய் இருக்கிறது. "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே" ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நம்புவோம். 

அன்று யூதர்கள் இயேசுவின் வார்த்தையால் இடறலடைந்தார்கள். "நமக்கு இவன்  எப்படித் தனது உடலைத் தரமுடியும்? என்றனர். மட்டுமல்ல, அவரோடு நடந்த பலர், "இது கடினமான உபதேசம்" என்று கூறி அவரைவிட்டுப் பிரிந்தனர். அவர்கள் இன்றுவரை தங்களைப் பராமரிப்பவரை அறியவில்லை. 

விருந்துகளில் சற்று தாமதமாக நாம் சென்றால் சில உணவு வகைகள் நமக்குக் கிடைக்காமல்  போகும். சிலவேளைகளில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். ஆம், உலக விருந்துகளுக்கு  காலம், இடம், நேரம் முக்கியம். சரியான காலத்தில், சரியான வேளையில் சென்றால்  மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவரையும் புறம்தள்ளுவதில்லை. நமது வயதும்  நமக்குத் தடையல்ல. எனவே விசுவாசத்தோடு தைரியமாக அவரை நோக்கிச் செல்வோம்.

நீ எழுந்து, கொல்கொதாவுக்குச் சென்று, அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் அருள்புரிந்துள்ளார். உலக பிரச்சனைகள், கவலைகள் குறைபாடுகள் இவற்றோடு நமது ஆவிக்குரிய வாழ்வின் குறைகளையும் அவர் நிறைவாக்குவார். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1601                                                                      ஆதவன் 26.06.2025 வியாழன்   

"என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய் வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." ( எண்ணாகமம் 14 : 24 )

இந்த உலக கானானுக்குள் கர்த்தரின் தாசனாகிய காலேப் நுழைந்திடக்  காரணம் அவரிடமிருந்த "வேறே ஆவி" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இந்த "வேறே ஆவி" என்பது பரிசுத்த ஆவியானவரைத்தான். லட்சக்கணக்கான மக்கள் ஒருபுறமும் காலேபும் யோசுவாவும் மறுபுறமும் நின்றார்கள். ஆம் அன்பானவர்களே, மற்ற அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைக்கு எதிர்த்து நின்றார்கள். மட்டுமல்ல, அவர்கள் வித்தியாசமான ஆவியைக் கொண்டிருந்ததால் அவர்கள்மேல் கல்லெறியவும் துணிந்தார்கள். 

"அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது." ( எண்ணாகமம் 14 : 10 ) என்று வாசிக்கின்றோம். 

இன்று நாம் பரம கானானுக்குள் நுழைய வேண்டுமானால் அதே பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தேவையாக இருக்கின்றார். "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." ( யோவான் 14 : 16 ) என்றார் இயேசு கிறிஸ்து. என்றென்றும் நம்மோடு இருக்கும் பரிசுத்த ஆவியானவர்தான் நம்மைப் பரம கானானுக்கு நேராக நடத்திட முடியும். 

காரணம், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆனாலும் இன்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் பரிசுத்த ஆவியானவரை அறியாமலும் அவரை அறிந்தவர்களை எதிர்த்து நிற்கின்றவர்களாகவும் இருக்கின்றனர். 

இது இப்போதல்ல திருச்சபையின் ஆரம்ப காலத்திலேயே நடந்தது. முதல் இரத்த சாட்சியான ஸ்தேவான் கொல்லப்பட மக்கள் இந்த வேறே ஆவியான பரிசுத்த ஆவியானவரை அறியாததே காரணம். ஸ்தேவான் தான் கல்லெறியப்படுமுன் செய்த பிரசங்கத்தில் கூறுகின்றார், "வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 51 )

ஆம் அன்பானவர்களே, பரம கானானுக்குள் நாம் பிரவேசிக்க பரிசுத்த ஆவியானவரின் வழித்துணை அவசியம். அவரே நம்மைத் தூய்மையான வழியில் நடத்திடமுடியும். மற்ற மனிதர்கள் கூறுவது நமக்கு முக்கியமல்ல, வேதம் காட்டக்கூடிய வழியே முக்கியம். காலேப் வேறே ஆவியை உடையவனாயிருந்தபடியினாலும், உத்தமமாய்க்  கர்த்தரைப் பின்பற்றி வந்தபடியினாலும் மண்ணக கானானுக்குள் பிரவேசித்தார். நாமும் உத்தமமாய்க் கர்த்தரைப் பின்பற்றி விண்ணக கானானுக்குள் நுழைய   சத்திய ஆவியாகிய தேற்றரவாளர்ரை நாம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.   

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1602                                                                      ஆதவன் 27.06.2025 வெள்ளி    

"சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 4 )

மனிதர்களுக்கு பிரியமுண்டாக பேசுவது   என்பது, எதைப்  பேசினால் மக்கள் இரசிப்பார்கள், எது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்று தங்களுக்குள் முடிவெடுத்து மக்களுக்கு ஏற்றபடி பேசுவது.  இப்படிப் பேசுவதால் முதலாவது, அதிக மக்கள் அந்தப் பிரசங்கியின் பிரசங்கத்தைக் கேட்க வருவார்கள். இரண்டாவது, அப்படிப் பேசுவதால் அதிக அளவில் .காணிக்கைக்  கிடைக்கும்.  இதற்கு மாறாகத் தேவனைப் பிரியப்படுத்தப் போதிக்கும்போது மேற்படி இரண்டும் கிடைக்காது.  

மனிதர்களைப் பிரியப்படுத்தப் பேசுதல் என்பது, மனம் திரும்பாத ஒரு மனிதனிடம் இரட்சிப்புக்கேற்ற வார்த்தைகளைப் பேசி சத்தியத்தை உணர்த்தாமல் "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.." என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவது, அல்லது அத்தகைய மனிதர்கள் அளிக்கும் காணிக்கைகளை  மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, "கர்த்தர் உங்களை பத்து மடங்காக ஆசீர்வதிப்பார்" என்பது. 

மட்டுமல்ல, மக்களைக் கவரும்படியான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவது. உதாரணமாக, குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை ஆசீர்வாத திட்டத்தில் இணைத்து  நாங்கள் உங்களுக்காகத் தினமும் ஜெபிப்போம் என்பது போன்ற வேதத்துக்கு முரணான செயல்கள்.  இத்தகைய முறைமைகள் மனிதர்கள் கடைபிடிக்க எளிமையானவை. எனவே இவற்றுக்கு மக்களது ஆதரவு அதிகம் கிடைக்கும். 

தேவனுக்குப் பிரியமானவைகளைப் பேசுதல் என்பது, பாவத்திலிருந்து மனம் திரும்புதல், ஆத்தும இரட்சிப்பு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், நித்திய ஜீவன் இவைகளைக்குறித்துப் பேசி மக்களை வழி நடத்துதல். இத்தகைய போதனைகளை தேவனுக்கு உத்தமமும் பிரியமுமான போதகர்களால்தான் போதிக்கமுடியும். எனவேதான் பவுல் இன்றைய தியான வசனத்தின் துவக்கத்தில் "சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணின படியே" என்று கூறுகின்றார். ஆனால், பெரும்பாலான மக்கள் இத்தகைய போதனைகளை விரும்புவதில்லை. எனவே, இவற்றை போதிக்கும் ஊழியர்களுக்கு மக்கள்கூட்டம் சேர்வதுமில்லை. 

ஒரு ஊழியர் எத்தகைய விதமாக பிரசங்கிக்கிறார் என்பதைக் கவனித்து அந்த மனிதன் தேவனுக்கு உகந்தவனாகப் பேசுகின்றானா அல்லது மனிதர்களைத் திருப்திப்படுத்த பேசுகின்றானா என்பதை நிதானிக்கக்கூடிய அறிவு நமக்கு வேண்டும். இன்று பல விசுவாசிகள் வேதாமத்தை வாசிப்பதே இல்லை. வாசித்தாலும் கடமைக்காக வேதாகமத்தைத் திறந்து குறிப்பிட்ட ஒரு சில வசனங்களை வாசிப்பவர்களாக இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களால் ஊழியர்களை அவர்களது போதனையின் அடிப்படையில் இனம்காண முடியாது. அவர்கள் உலக ஆசீர்வாதத்தையே விரும்புவதால் அத்தகைய போதகர்களையே நாடுவார்கள். 

இப்படி மனிதர்களைப் பிரியப்படுத்தப் போதிப்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்:-"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1 : 10 )

வேதாகம வார்த்தைகள் நம் அன்பின் ஆண்டவர் நமக்கு எழுதிக்கொடுத்த வார்த்தைகள். அவற்றை தேவ அன்போடு, அவரை இன்னும் இன்னும் அதிகமாக அறியவேண்டுமெனும் ஆர்வத்தில் வாசிக்கும்போதுதான் நாம் சத்தியத்தை அறிய முடியும். போலிகளையும் மனிதர்களைத் திருப்திப்படுத்த போதிப்பவர்ளையும் இனம்காண முடியும்.

மனிதர்களைப் பிரியப்படுத்தப் போதிக்கும் போதனைகளைக்  கேட்டு வாழ்ந்தோமானால் ஆத்தும மரணத்தையும் தேவனுக்குப் பிரியமான போதனைகளைப் போதிக்கும் ஊழியர்களது போதனைகளைக் கேட்டு நடந்தோமானால் நித்திய ஜீவனையும் பெறுவோம். போதனைகளை பகுத்தறியும் பிரகாசமான மனக் கண்கள் நமக்கு ஏற்படும்படி ஜெபிப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1603                                                                      ஆதவன் 28.06.2025 சனி     

"அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்." ( மத்தேயு 16 : 23 )

அப்போஸ்தலரான பேதுரு இயேசு கிறிஸ்துவை அதிகமாக அன்புசெய்தவரும்  இயேசு கிறிஸ்துவால் அன்புசெய்யப்பட்டவரும் ஆவார். தான் விண்ணகம் சென்றபின் தனது மந்தையான திருச்சபையை வழிநடத்த அவரையே பொறுப்பாளராக இதே அதிகாரத்தின் 18ஆம் வசனத்தில் இயேசு நியமித்ததை நாம் வாசிக்கின்றோம். ஆனால் அவ்வளவு அன்புச்செய்த பேதுருவை,   "சாத்தானே" என்று கடுமையாகத் திட்டுகின்றார் இயேசு.

இயேசு பேதுருவை "சாத்தானே" என்று கூறக் காரணம், அவர் பிதாவாகிய தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்தித்ததுதான். அதுவும் அவர் இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள அன்பினால்தான் அப்படிச் சிந்தித்தார். 

"இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும், வேதபாரகராலும் பலபாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்". ( மத்தேயு 16 : 21, 22 ) என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள அன்பினால் அவர் துன்பப்படக்கூடாது எனும் நல்லெண்ணத்தில்தான் பேதுரு இயேசு கிறிஸ்துவுக்கு இவைகள் சம்பவிக்கக்கூடாது என்று கூறினார். ஆனால் அது பிதாவின் சித்தமல்ல என்பதை இயேசு அறிந்திருந்தார். 

அன்பானவர்களே, ஆன்மீகக் காரியங்களில் நாமும் பலவேளைகளில் பேதுருவைப்போலவே சிந்தித்துச் செயல்படுகின்றோம். அதாவது, தேவ சித்தத்தை அறியாமல் நாமாக ஒரு சில சடங்கு சம்பிரதாயங்களைக் கைக்கொண்டு தேவனைத் திருப்திப்படுத்த எண்ணுகின்றோம். அன்றைய யூதர்களும் இப்படியே இருந்தனர். எனவேதான் இயேசு கிறிஸ்து, "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்." ( மாற்கு 7 : 7 ) என்று கூறுகின்றார். 

இதுபோலவே கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதும் பலவேளைகளில் இருக்கின்றது. இதனையும் இயேசு பல்வேறு இடங்களில் கண்டிப்பதைப் பார்க்கின்றோம். கட்டளைகளைக் கைக்கொள்வது முக்கியமல்ல, மாறாக கட்டளைகளை ஏன் தரப்பட்டன எனும் எதார்த்தத்தை உணர்ந்து மனித நேயத்தோடு கடைபிடிக்கவே இயேசு கிறிஸ்து வலியுறுத்தினார். காரணம் அதுதான் பிதாவுக்கேற்ற சிந்தனை.

இன்று பலவேளைகளில் பல திருச்சபைகளில் தேவன் கட்டளையிட்ட காரியங்களைப் புறம்பேத் தள்ளி மனித அறிவால் உருவாக்கப்பட்ட வேத சத்தியங்களுக்கு முரணானச் சட்டதிட்டங்களை ஏற்படுத்தி அவற்றைக் கடைபிடிப்பது தேவனுக்கு ஏற்புடையது என்று போதிக்கின்றனர்.  "நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்." ( மாற்கு 7 : 8 ) இது அன்றைய யூதர்களை நோக்கி இயேசு கிறிஸ்து கூறியிருந்தாலும் இன்றும் உண்மையாக இருப்பதை நாம் காண்கின்றோம். 

இத்தகைய திருச்சபைகளின் பல போதனைகளும் செயல்பாடுகளும் மெய்யான விசுவாசிகளுக்கு  இடறலாயிருக்கின்றன. காரணம் இவை  தேவனுக்கு ஏற்றச்சிந்தனையாய் இல்லாமல் மனுஷருக்கு ஏற்றச் சிந்தனையாயிருக்கின்றது. தவறான போதனைகளைக் கொண்டு வருபவர்கள் இடறலையும் கொண்டு வருகின்றனர். எனவே, எத்தனை பெரிய மனிதன் வேதத்துக்கு முரணான காரியங்களை கடைபிடிக்க நம்மை வலியுறுத்தினாலும் நாம் அவற்றைக் கடைப்பிடிக்காமல் நம்மைக் காத்துக்கொள்வோம். இல்லையானால் பேதுருவைப் பார்த்துக்  கூறியதுபோல நம்மையும்பார்த்து "எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே"  என்று இயேசு கூறுவார். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1604                                                                      ஆதவன் 29.06.2025 ஞாயிறு 

"எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்." ( ஏசாயா 31 : 3 )

வேதாகம அடிப்படையில் எகிப்து என்பது உலக செழிப்பு மற்றும்  உலக ஆசீர்வாதத்திற்கும் பாவத்துக்கு அடிமையாக வாழும் பாவ வாழ்க்கைக்கும் உருவகமாகக் கூறப்படுவதாகும். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது இதுதான்:-   செழிப்பு, வளமை இருப்பதால் எகிப்து வாழ்க்கையை மேன்மையாகக் கருதவேண்டாம். என் மக்களே, எகிப்து என்பது சாதாரணமானது; அதுவே தெய்வம் போன்றதல்ல.  உலக ஆசீர்வாதம் இருப்பதால் மட்டும் ஒருவரை நாம் மேலானவர்களாக கருதவேண்டாம். அவர்கள் சாதாரண மனிதர்கள்தான். 

நாம் மெய்யான ஆசீர்வாதம் பெறவேண்டுமானால் இஸ்ரவேலின் பரிசுத்தரான கர்த்தரை நோக்கிப்பார்க்கவேண்டும்.  எகிப்து வாழ்க்கையில் குதிரைகள், இரதங்கள், மற்றும்  உடல்பெலன் போன்றவை இருக்கலாம். ஆனால் இவற்றை மட்டுமே நம்பி கர்த்தரை விட்டுவிடுவோமானால் நமக்கு ஐயோ. ஆம், "சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா 31 : 1 )

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, நாம் அப்படிக் கர்த்தரை விட்டு எகிப்தை நாடிச் செல்வோமானால், "கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்". அதாவது எகிப்து வாழ்க்கையும் நாம் நம்பியிருந்த செல்வமும் நம்மைக் கைவிட்டுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.. 

இன்று எகிப்து வாழ்க்கையைத் தேடி கர்த்தரை புறக்கணிக்கும் மக்கள் அதிகம். எப்படியாவது செல்வம் சேர்த்துவிடவேண்டுமெனும் ஆவலில் தேவனுக்கு ஏற்பில்லாத காரியங்களில் ஈடுபட்டு பலர் உலகச் செல்வங்களைச் சேர்க்கின்றனர். ஆனால் அந்தச் செல்வம் அவர்களுக்கு உண்மையான மன மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. காரணம் அங்கு கர்த்தர் இல்லை. கர்த்தர் தரும் ஆசீர்வாதம் வேதனையற்றது. "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) என்று வேதம் கூறவில்லையா?

ஆபிரகாமை விட்டுப் பிரியும்போது லோத்து இப்படியே தெரிந்துகொண்டான். அவன் செழிப்பை மட்டுமே பார்த்தான்; ஆனால் தேவன் செழிப்பிலல்ல, மாறாக,  ஆபிரகாமோடு இருந்தார். லோத்து, "யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது." ( ஆதியாகமம் 13 : 10 ) ஆனால் எல்லாம் அழிவுற்றது. 

எனவேதான் வேதம் கூறுகின்றது, "சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்." ( நீதிமொழிகள் 15 : 16 )

எனவே, "யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்." ( எரேமியா 42 : 19 ) ஆம் அன்பானவர்களே, எகிப்தின் செழுமையையல்ல, கர்த்தரையே பற்றிக்கொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1605                                                                      ஆதவன் 30.06.2025 திங்கள்  

"ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்." ( ஆதியாகமம் 18 : 12 )

"வயது என்பது வெறும் எண் மட்டுமே" (Age is only a number) என்பார்கள். இதன் பொருள் சாதனைகள் நிகழ்த்த வயது ஒரு தடையல்ல என்பதுதான். நாம் பெரும்பாலும் நமது வயதைக் கருத்தில்கொண்டு சில செயல்களைச்  செய்யத் தயங்குகின்றோம்.  ஆனால் பல உலக மனிதர்கள் தங்களது 70, 80 வயதுகளிலும் பல்வேறு சாதனைகளைப் புரிகின்றனர். 

உலக மனிதர்கள் கூறுவதுபோல கூறிக்கொண்டு எல்லாச் செயல்களையும் நம்மால் வயதான காலத்தில் செய்திட முடியாது. மனிதனது சக்திக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் அப்படி நமது சக்தியால்  செய்ய முடியாத காரியங்களைச் செய்வது என்பது தேவனது கிருபை இருந்தால் மட்டுமே முடியும். இதற்கு உதாரணம்தான் ஆபிரகாம், சாராள் தம்பதியினர். நூறு வயது ஆபிரகாமுக்கு வயது முதிர்ந்த கிழவியான சாராள் மூலம் குழந்தை பிறப்பது என்பது மனித முயற்சியால் கூடாத காரியம். ஆனால், "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்." ( ஆதியாகமம் 18 : 14 ) தேவன். அதுபோல ஈசாக்கை மகனாகக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

அன்பானவர்களே, இன்று நாம் நமது வயதை எண்ணி சாராள் கூறியதைபோலக் கூறிக்கொண்டிருக்கலாம். இனி இந்த உலகத்தில் எனக்கு எதுவும் நல்லதாக நடக்க வாய்ப்பில்லை; எனது வாழ்க்கை இப்படியேதான் முடியப்போகின்றது" என்று மனதினில் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?" என்கின்றார் தேவன். 

காலேப் தனது எண்பதாவது வயதில் தனக்கு 40 வது வயதில் இருந்த அதே பெலன் இருக்கின்றது என்று கூறுவதை நாம் வேதாகமத்தில் வாசிக்கலாம். அவர் கூறுகின்றார், "....கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது."( யோசுவா 14 : 10, 11 )

இன்று,  "நல்ல ஒரு வீடு இல்லை, பிள்ளைகளுக்கு நல்ல தொழிலில்லை, பெண் பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்க வழியில்லை.....எனக்கோ அறுபத்தைந்து வயது ஆகிவிட்டது." என்பதுபோன்ற புலம்பல் நமக்குள் இருக்கலாம். ஆனால் "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?" என்கின்றார் தேவன்.  எனவே, நாம் எதிர்மறையான எண்ணத்தைக் கைவிட்டு எதனையும் செய்யவல்ல  தேவனது கிருபையினைச் சார்ந்து கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

இன்று பலரும் வயதான காலத்தில் நமக்கு உதவியாக இருக்கும் எனக் கருதி பணத்தை பல்வேறு  விதங்களில் பணத்தை முதலீடு செய்து வாழ்கின்றனர். ஆனால் அது மட்டும் போதாது. வயதான காலத்தில் நம்மைத் தேவ கிருபை தங்கிடவேண்டும். இன்றைய தியான வசனத்தில், சாராள், "நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?" எனக் கேள்வி எழுப்புகின்றாள். ஆனால், தேவனது கிருபை இருக்குமானால் முதிர்ந்த வயதிலும் இன்பம் உண்டாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதை நாம் அறிகின்றோம்.  

எனவே அன்பானவர்களே, சங்கீத ஆசிரியரைபோல முதிர் வயது தேவ கிருபைக்காக  நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். "முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்." ( சங்கீதம் 71 : 9 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர். இதுவே நாம் செய்யவேண்டியது. இன்று நாம் வாலிபர்களாக அல்லது உடலில் நல்ல வலிமையுள்ள நடுத்தர வயதினராக இருக்கலாம். இதே பெலன் நமக்கு என்றைக்கும் இருக்காது என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  

முதிர் வயது துணைக்காக பணத்தைச் சேமிப்பது முக்கியமென்று கருதும் நாம் தேவ கிருபைக்காக ஜெபிக்கவேண்டாமா?  அன்றாட ஜெபத்தில் இந்தக் கருதுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் நம்மை முதிர்வயதிலும் காத்து நடத்துவார்.