Thursday, February 29, 2024

வேதாகமத் தியானம் - பிப்ரவரி, 2024

 


                          - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,088                                              பிப்ரவரி 01, 2024  வியாழக்கிழமை  💚 

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." ( 1 கொரிந்தியர் 15 : 47, 48 )

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் முதல் மனிதனாகிய ஆதாமையும் ஒப்பிட்டுச் சில காரியங்களைக் கூறுகின்றார். 

முந்தின மனுஷனாகிய ஆதாம் இந்த மண்ணினால் உருவானவன். அவனைத் தேவன் மண்ணினால் படைத்தார். அந்த ஆதாமுக்குள் மண்ணுக்குள்ள ஆசைகளே நிறைந்திருந்தன. அவனுக்கு உலக ஆசை எனும் இச்சை இருந்ததால் அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தனது மனதின் ஆசைக்கு இடம்கொடுத்தான். இன்று நாமும் அதுபோல இருப்போமானால் நாமும் ஆதாமைபோன்றவர்களே. அதனையே பவுல் அப்போஸ்தலர், "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே" என்று கூறுகின்றார். 

ஆனால் நாம் இந்த மண்ணுக்காக படைக்கப்பட்டவர்களல்ல; மாறாக தேவனோடு நித்தியகாலமாக வாழவேண்டி படைக்கப்பட்டவர்கள். வானத்துக்குரியவராக கிறிஸ்துவோடு வாழப்  படைக்கப்பட்டவர்கள். நாம் அப்படி வானத்துக்குரியவர்களாக மாறவேண்டுமானால் அவரைப்போல மாறவேண்டும். எனவேதான் "வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

நாம் கிறிஸ்துவை மெய்யாகவே அறிந்துகொண்டவர்கள் என்றால் அவரைப்போல அவர் இருக்குமிடத்திலுள்ளவைகளைத் தேடுபவர்களாக இருப்போம். "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1, 2 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, நாம் எப்போதும் மேலானவைகளைத் தேடுபவர்களாக இருக்கவேண்டும். நமது கண்கள் மேல்நோக்கிப் பார்ப்பதாக இருக்கவேண்டும். பன்றியால் மேல்நோக்கிப் பார்க்க முடியாது. காரணம் அதன் உடல் அமைப்பு. அது மண்ணையே பார்த்து, மண்ணிலுள்ள அசுத்தங்களே பெரிதென எண்ணி வாழும். ஆனால் மனிதர்களாகிய நாம் பன்றிகள்போல படைக்கப்பட்டவர்கள் அல்ல; மேலான நோக்கத்துக்காகப் படைக்கப்பட்டவர்கள். நமது கண்களைத் தேவனை நோக்கி உயர்த்தும்போதே மேலான அனுபவங்களைப் பெறமுடியும். 

இந்த உலகத்தில் உடலளவில் நாம் ஆதாமைப்போல மண்ணின் சாயலை நாம் பெற்றிருந்தாலும் தேவனை நோக்கிப் பார்த்து நமது வழிகளை நாம் மாற்றி அமைத்துக்கொள்ளும்போது நாம் அவரது சாயலை அடைந்துகொள்வோம். "மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம்." ( 1 கொரிந்தியர் 15 : 49 ) அப்படி நாம் மேலான சாயலை அடைந்துகொள்ள வழிகாட்டவே கிறிஸ்து வந்து நித்திய மீட்பினை ஏற்படுத்தினார்.

இப்போது ஆதாமின் சாயலை நாம் பெற்றிருந்தாலும் நம்மால் அதனைவிட மேலான மகிமையின் சாயலைப் பெறமுடியும்.  கிறிஸ்துவின் சாயலைப் பெற முடியும். நாம் வானத்துக்குரியவரை நோக்கிப்பார்த்து அவரைப்  பின்பற்றி வாழ்வோமானால் வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே என்ற வசனத்தின்படி வானத்துக்குரிய கிறிஸ்துவின் சாயலைப் பெறமுடியும். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  

"நிலவைக் குறிவையுங்கள்; விண்மீனைத் தொட்டுவிடுவீர்கள்" என்று ஒரு பழமொழி உண்டு. ஆம், மேலான சிந்தனை, பார்வைகள் நம்மை விண்ணவரின் சாயலை அடைந்திடச் செய்யும். 

ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,089                                              💚 பிப்ரவரி 02, 2024 💚 வெள்ளிக்கிழமை  💚 

"அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கு...," ( பிலிப்பியர் 3 : 10 )

அப்போஸ்தலரான பவுல் தனது ஆவிக்குரிய வாழ்வின் இலக்கு எது என்பதை இன்றைய வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது, கிறிஸ்துவின் பாடுகள் தன்னை அவரோடு எப்படி ஐக்கியப்படுத்தியுள்ளது என்பதனையும் அவரது உயிர்தெழுதலின் வல்லமையினையும் அறிந்து அவரது மரணத்துக்குத் தானும் ஒப்பாகி எப்படியாவது உயிர்தெழுதலுக்குத் தகுதியுள்ளவர் ஆகவேண்டும் என்பதே தனது நோக்கம் என்கின்றார்.. 

கிறிஸ்துவின் மரணம் நாம் பாவத்துக்கு மரிப்பதைக் குறிக்கின்றது. உயிர்த்தெழுதல் பாவத்துக்கு விலகி வாழ்வதைக் குறிக்கின்றது.  "கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்." ( ரோமர் 14 : 9 ) இங்கு மரித்தல் உயிர்தல் எனும் வார்த்தைகள் ஆவிக்குரிய பொருளில் கூறப்பட்டுள்ளன.  ஆவிக்குரிய வாழ்வில் மரித்திருப்பவர்களுக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கும் அவரே ஆண்டவர். எனவேதான் ஆவியில் மரித்திருப்பவர்கள் உயிரடைந்து அவரை  அறியவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

இப்படிக்  கிறிஸ்துவின் வல்லமையை அடைந்திட முயலுகின்றேனேத்  தவிர அதனை இன்னும் தான் பிடித்துக்கொள்ளவில்லை என்று கூறும் பவுல் அடிகள் அதனை அடைந்திடத் தான் என்ன செய்கின்றேன் என்பதனையும் இப்படிக் கூறுகின்றார்;-  "சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 13, 14 )

ஆம், நமது ஆவிக்குரிய பயணம் ஒரு தொடர் பயணம். அந்த பயணத்தில் நாம் பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடிச் செல்பவர்களாக இருக்கவேண்டும். 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வை நாம் ஆரம்பிக்குமுன் வாழ்ந்த பழைய பாவ வாழ்க்கையின் செயல்களை நாம் மறந்துவிடவேண்டும். அவற்றை விட்டுவிடவேண்டும். அவற்றை முற்றிலும்  மறந்து மகிமையான கிறிஸ்துவின் பந்தயப்பொருளை மட்டுமே நாடி நாம் ஆர்வமாகத் தொடரவேண்டும். தான் அப்படி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்வதாகக் கூறுகின்றார். 

ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேறினவர்கள் என்றால் இப்படியே இருப்போம். இல்லாவிட்டால் வெறுமனே உலக ஆசைகளை நிறைவேற்றிட ஜெபித்துக்கொண்டு ஆத்துமாவை இழந்தவர்களாகவே இருப்போம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3 : 15 )

எனவே அன்பானவர்களே, எப்படியாவது அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும்  மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கு முயற்சி செய்வோம்.


ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,090                                            💚 பிப்ரவரி 03, 2024 💚 சனிக்கிழமை  💚 

"பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்." ( ஆமோஸ் 3 : 2 )

பொதுவாக குடும்பங்களில்  நல்ல பிள்ளைகளுக்கும் பள்ளிக்  கூடங்களிலும்  நன்றாகப் படிக்கும் குழந்தைகளுக்கும் தனி கவனிப்பு கிடைக்கும். மட்டுமல்ல, அப்படி நல்லவர்களாக இருக்கும் குழந்தைகள் சிறு தவறு செய்தாலும் அது மிகப் பெரிதாகப் பார்க்கப்படும். "உன்னை நான் எப்படியோ எண்ணியிருந்தேன் நீபோய் இப்படியொரு காரியத்தைச் செய்து விட்டாயே?" என்று பெற்றோரும் ஆசிரியர்களும் அங்கலாய்ப்பார்கள்.  ஆம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் செய்யும் சிறு தவறும் பெரிதாகப் பார்க்கப்படும். 

தேவனும் இதுபோலவே மனிதர்களைப்  பார்க்கின்றார். தனது கிருபையாலும் தெரிந்துகொள்ளுதலினாலும் இப்படி அவர் தெரிந்துகொள்கின்றவர்களிடம் பரிவு  காட்டுகின்றார். "அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது." ( ரோமர் 9 : 13 ) என்று வாசிக்கின்றோம். மேலும்,  "ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.' ( ரோமர் 9 : 18 ) என்று கூறப்பட்டுள்ளது.

யாக்கோபு, தாவீது இவர்களது வாழ்கையினைப்பார்த்தால் இவர்கள் பல்வேறு தவறுகள் செய்தவர்களாகவே இருந்தனர். ஆனால் அவர்களைத் தேவன் தெரிந்துகொண்டதால் அவர்களைத் தண்டித்து ஏற்றுக்கொண்டார்.  

இப்படியே தேவன் இஸ்ரவேல் மக்களையும் தெரிந்துகொண்டார். புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் இப்படியே அவர் மனிதர்களைத் தெரிந்துகொள்கின்றார். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மையும் அவர் இப்படியே தெரிந்துகொண்டுள்ளார். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்று கூறுகின்றார். 

இப்படி அவர் தெரிந்துகொண்டுள்ளதால் நமது எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன் என்று கூறுகின்றார். "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 )

இந்த உலகத்தின் பல துன்மார்க்கர்கள் எவ்வளவோ தவறுகள் செய்தாலும் செழித்து எந்த குறையுமில்லாமல் வாழ்வதை நாம் காணலாம். ஆனால் அதனைவிட சிறு தவறு செய்யும் ஆவிக்குரிய மனிதர்கள் பெரிய தண்டனையை தேவனிடமிருந்து பெறுகின்றனர். காரணம் அவர் நம்மைப் புத்திரராக எண்ணி நடத்துவதுதான். 

இப்படித் தேவன் தண்டித்தாலும் இறுதியில் அது நமக்குச் சமாதானத்தைத் தருவதாக இருக்கும்.  "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." ( எபிரெயர் 12 : 11 )

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் நமக்குத் தண்டனைகளைத் தேவன் தரும்போது அதன் காரணத்தைக் கண்டறிந்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். நம்மை அவர் தெரிந்துகொண்டதால்தான் தண்டிக்கிறார் எனும் அறிவு நமக்கு வேண்டும். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் நம்மை மட்டும்  அறிந்துகொண்டதால் நம்முடைய  எல்லா அக்கிரமங்களினிமித்தமும் நம்மைத் தண்டிப்பேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர்.  எனவே நமது ஆவிக்குரிய வாழ்வை எச்சரிக்கையுடன் வாழ்வோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,091                                           💚 பிப்ரவரி 04, 2024 💚ஞாயிற்றுக்கிழமை  💚 

"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு.....," ( எபேசியர் 3 : 20 )

இந்த வசனத்தை வாசித்தாலே இது உலக கண்ணோட்டத்தில் கூறப்பட்டதல்ல என்பது புரியும். காரணம் அப்போஸ்தலரான பவுல் இதில் கூறுகின்றார், "வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற" என்று கூறுகின்றார். அதாவது நாம் வேண்டும் உலக பொருட்களையல்ல; மாறாக, நமக்குள்ளே கிரியை செய்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது நமது உள்ளான மனிதனில் அவர் நாம் வேண்டுவதைவிட அதிகமாகச் செயல்புரிகின்றார்.  நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவேண்டும், பாவத்தை வென்று பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என விரும்பி அவரிடம் வேண்டினால் நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும்  மிகவும் அதிகமாக அவர் நம்மில் செயல்புரிவார். 

அன்பானவர்களே, நமது தேவன் பரிசுத்தத்தை விரும்புகின்றவர். நமது பலவீனங்கள் அவருக்குத் தெரியும். எனவேதான் பவுல் அப்போஸ்தலரிடம் அவர் கூறினார்,  "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"  2 கொரிந்தியர் 12 : 9 )

இன்று ஒருவேளை குறிப்பிட்ட ஒரு பாவத்தை நாம் விட்டுவிடமுடியாமல் தவிக்கலாம். ஆனால் உள்ளத்தில் நாம் அதனை விட்டுவிடவேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால் அவர் நமக்கு உதவிசெய்வார். பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையினைத் தருவார்.  "ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்." ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்கின்றார் பவுல். 

பலர் இந்த வசனத்தை உலகக் கண்ணோட்டத்துடன் பார்த்து, நாம் வேண்டிக்கொள்ளும் ஆசீர்வாதத்தைவிட அதிகமான ஆசீர்வாதத்தைத் தேவன் நமக்குத் தருவார் என்று எண்ணிக்கொள்கின்றனர். வேதாகமம் நமது உலக வாழ்க்கையின் செழுமைக்காக எழுதப்பட்டதல்ல; மாறாக நம்மை மறுவுலக வாழ்கைக்குத் தகுதியுள்ளார்களாக்கும்படிக்கு எழுதப்பட்டுள்ளது எனும் சத்தியம் புரியும்போதுதான் நாம் ஆவிக்குரியவர்களாக மாற முடியும். 

கிறிஸ்துவை இன்னும்  அதிகமாக அறியவேண்டும், அவரது மெய்யான வல்லமையினைச் சுவைக்கவேண்டும், பாவத்தை வென்று பரிசுத்தமாக வேண்டும் எனும் எண்ணங்களோடு நாம் வேண்டினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே அவரது வல்லமை கிரியைசெய்யும்.

ஆம் அன்பானவர்களே, "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாகவே இருப்போம் ."  ( 1 கொரிந்தியர் 15 : 19 )


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,092                                           💚 பிப்ரவரி 05, 2024 💚திங்கள்கிழமை  💚 

"அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 5 )

அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு புதிய வெளிப்பாடு பெற்றவராக இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். இன்றும் பல கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டில் பேசியதும் செயல்பட்டதும் பிதாவாகிய தேவன்  என்றும் புதிய ஏற்பாட்டில் பேசுவது மட்டுமே கிறிஸ்து என்று  எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அப்படியானால் கிறிஸ்து தேவனாக இருக்க முடியாதே!!!. ஆம், கிறிஸ்து உலகத்தோற்றத்துக்கு முன்னமே பிதாவோடு இருக்கின்றவர். உலகங்களைப் படைத்தவர் அவர்தான் என்று வேதம் கூறுகின்றது. 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகள் மூலம் தனது செய்தியைச் சொன்ன தேவன் "இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்." ( எபிரெயர் 1 : 2 ) என்று வாசிக்கின்றோம். அவர் வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்து வாழ்ந்தவர் என்று நாம் எண்ணிக்கொண்டிருப்போமானால் நாம் அவரை வல்லமையுள்ள தேவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்.

அன்று இஸ்ரவேல் மக்களை பாலை நிலத்தில் வழிநடத்தியவர் கிறிஸ்துவே. "எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே." ( 1 கொரிந்தியர் 10 : 3, 4 ) என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்திய அதே கிறிஸ்துதான் இன்று நம்மையும் வழி நடத்துகின்றார். 

ஆனால் ஞான உணவையும் பானத்தையும் உட்கொண்ட அந்த மக்கள் இச்சை எனும் உலக ஆசையில் விழுந்தனர். எனவே அழிக்கப்பட்டனர். இதனையே இன்றைய வசனம், "அப்படியிருந்தும், அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்." என்று கூறுகின்றது. "அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக." ( 1 கொரிந்தியர் 10 : 9 )

அன்பானவர்களே, அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை எனும் வார்த்தைகள் இன்று நமக்கும் எச்சரிக்கையாக உள்ளன. நாம் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும், கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொண்டு வந்தாலும் இச்சை எனும் உலக ஆசைக் கவர்ச்சியில் மூழ்கி இருப்போமானால் கிறிஸ்துவோடு நமக்குப் பங்கிராது.   கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்த இஸ்ரவேலரைப்போலவே இருப்போம்.

"அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 6 )

கிறிஸ்துவை வல்லமையுள்ள தேவ குமாரனாக ஏற்றுக்கொண்டு அவரால்தான் நாம் மீட்கப்பட்டுளோம் என்பதை உறுதியாக நம்பி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் நம்மில் செயல்புரிவார். இஸ்ரவேல் மக்களை தனது வல்லமையுள்ள கரத்தால் வழிநடத்தி கானானுக்குள் கொண்டு சேர்த்ததுபோல நம்மையும் பரம கானானுக்குள் கொண்டு சேர்ப்பார். அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்த அதிகமானோர்கள் கூட்டத்தில் நாம் சேர்ந்துவிடக்கூடாது. அப்போதுதான் நம்மேல் அவர் பிரியமாய் இருப்பார். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,093                                           💚 பிப்ரவரி 06, 2024 💚செவ்வாய்க்கிழமை  💚 

"தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )

ஆவிக்குரிய வாழ்வு நாம் கவனமாக வாழவேண்டிய ஒன்றாகும். எப்போதும் நாம் தேவனுக்குள் உறுதியோடு நிலைத்திருப்போம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் நாம் வாழும்வரை துன்பங்களும், பிரச்சனைகளும் நம்மைத் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். எனவே, நான் ஆவிக்குரிய வாழ்வில் நிலைநிற்கின்றேன் என்று எண்ணிக்கொள்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையா யிருக்கக்கடவன் என்று இன்றைய வசனம் அறிவுறுத்துகின்றது. 

மட்டுமல்ல, நாம் மற்றவர்களைக்குறித்து அற்பமாக எண்ணிவிடக்கூடாது. இன்று ஆவிக்குரிய வாழ்வில் வலுவற்றவராக இருக்கும் ஒருவர் பிற்பாடு ஆவிக்குரிய வாழ்வில் தேர்ச்சிபெற்று நம்மைவிட மேலான நிலைக்கு வந்துவிடலாம். அதுபோல இன்று ஆவிக்குரிய வாழ்வில் சிறப்புற இருக்கும் ஒருவர் ஆவிக்குரிய வலுவிழந்தவராக மாறிப்போகலாம். எனவே, தன்னை நிற்கிறவன் என எண்ணிக்கொள்கிறவன்  விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.   

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு எதிராகப் போரிடும் பிசாசு எப்போது நம்மை விழத்தள்ளலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். இன்றைய உலகத்தில் ஆவிக்குரிய மனிதர்களை விழுத்தள்ளும் காரியங்கள் பல இருக்கின்றன.  இன்று பாவம் மனிதர்களின் விரல் நுனியில் இருகின்றது. ஆம், அலைபேசியில் தவறுதலாக ஒரு இணைப்பைத் தொட்டுவிட்டால்கூட குப்பையான ஆபாசங்கள் நம்மை வந்துச் சேர்ந்துவிடும். எனவே, தன்னை நிற்கிறவன் என எண்ணிக்கொள்கிறவன்  விழாதபடிக்கு எச்சரிக்கை யாயிருக்கக்கடவன்.   

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." ( 1 பேதுரு 5 : 8 ) என்று கூறுகின்றார். 

நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தோடு அவரது கிருபையைச் சார்ந்துகொண்டு உறுதியாக இருந்தால் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும். சாதாரண உலக மனிதர்கள் எளிதில் இப்படிப்பட்ட பாடுகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதனையே அப்போஸ்தலரான பேதுரு தொடர்ந்து கூறும்போது, "விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு (பிசாசுக்கு) எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே." ( 1 பேதுரு 5 : 9 ) என்கின்றார். 

எனவே அன்பானவர்களே, நாம் இன்று எப்படிப்பட்ட ஆவிக்குரிய மேன்மையான நிலையில் இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். தேவ கிருபையால்தான் நாம் நிற்கின்றோம் எனும் எண்ணம் வேண்டும். ஆவிக்குரிய வாழ்வில் சிலர் அவிசுவாசத்தால் விழுந்துபோயிருக்கலாம். அதற்காக,  "நான் அப்படியல்ல" என்று பெருமைகொண்டு  இருப்போமானால்  நாமும் விழுந்துபோவோம்.   

யூதர்களையும் பிற இனத்து மக்களையும்  மனதில்வைத்து அப்போஸ்தலராகிய பவுல் கூறிய பின்வரும் வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்:-  "நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு." ( ரோமர் 11 : 20, 21 )


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,094                                          💚 பிப்ரவரி 07, 2024 💚புதன்கிழமை 💚 

"நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." ( கலாத்தியர் 6 : 9 )

நன்மை செய்வதை அப்போஸ்தலனாகிய பவுல் விதை விதைத்தலுக்கு ஒப்பிடுகின்றார். விதை விதைக்கின்றவன் விதைத்த உடனேயே அதன் பலனை அனுபவிப்பதில்லை. பயிரானது வளர்ந்து பலன்தர காலதாமதம் ஆகும். ஆனால் அதனால் விவசாயி சோர்ந்துபோவதில்லை. அதுபோல நாமும் நன்மைசெய்துவிட்டு உடனேயே அதன் பலன் கிடைக்கும் என்று எண்ணிடாமல் சோர்ந்துபோகாமல் இருக்கவேண்டும் என்கின்றார். எனவே தொடர்ந்து அவர் கூறுகின்றார்:-

"ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், குறிப்பாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்." ( கலாத்தியர் 6 : 10 )

நமக்கு கிடைக்கும் நேரத்திற்கேற்றவாறு நாம் எல்லோருக்கும் நம்மை செய்திடவேண்டும். அதிலும் குறிப்பாக, விசுவாச குடும்பத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்கின்றார்.  உதவி செய்யவேண்டுமென்று கூறாமல் அவர் நன்மை செய்யவேண்டும் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்.  அதாவது, பொருளாதார உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு உதவியும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த நல்ல காரியங்களையும் செய்திடவேண்டும். 

நன்மை செய்வது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புதான். நாம் எல்லோருமே ஏதாவது நன்மையினைப் பிறருக்குச் செய்யமுடியும். ஒரு வழிகாட்டுதலாக இருக்கலாம், அறிவுரையாக இருக்கலாம், ஒருவரால் தனியாகச் செல்ல இயலாத இடத்துக்கு அவரோடு உதவியாகச் செல்வதாக இருக்கலாம்.....இப்படி ஏதாவது ஒரு நன்மையினை நாம் செய்யலாம். மனிதன் சமூகமாக வாழப் படைக்கப்பட்டவன். உதவிசெய்யும்போது நாம் சக மனிதர்களோடுள்ள உறவினை வலுப்படுத்துகின்றோம்.  

ஒருமுறை நகராட்சி அலுவலகத்தில் நானும் இன்னுமொரு ஊழியரும் ஒரு சிறு வேலைக்காகச் சென்றிருந்தோம். அப்போது அங்கு பணியிலிருந்த அலுவலர் எங்களைக் கண்டவுடன், "பிரதர், எனக்கு உங்களைத் தெரியும், நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?" என்று கேட்டவாறு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தந்தார். அவர் எங்களுக்கு பொருளாதார உதவி செய்யவில்லை; மாறாக எங்களுக்கு அவர் நன்மை செய்தார்.   இப்படி நாமும் பொருளாதார உதவிகள் செய்ய நம்மால் இயலாவிட்டாலும்  நம்மால் இயன்ற நன்மைகளைப் பிறருக்குச்  செய்யவேண்டும் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆனால் சிலர் எந்த நல்ல செயல் செய்தாலும் அது தங்களுக்கு ஏதாவது நன்மை தருமா என்று கணக்குப் பார்த்துச் செய்வார்கள். இப்படிச் செய்வதை அப்போஸ்தலரான பவுல் மாம்சத்துக்கு விதைத்தல் எனும் வார்த்தைகளால் விளக்குகின்றார். இப்படி சுய லாபம் கருதி நன்மைசெய்பவர்கள் அழிவையே அறுப்பார்கள் என்கின்றார். "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

எனவே நாம் செய்யும் செயலைவிட அந்தச் செயலைச் செய்யும் நோக்கத்தையே தேவன் பெரிதாக எண்ணுகின்றார் என்பது புரியும். நமது இருதயத்தின் உள் நினைவுகளை அவர் அறிவார். நல்ல மனதுடன் நாம் நன்மைகளைச்  செய்யும்போது நல்ல பலனைத் தேவன் நமக்குத் தருவார். ஆம், இப்படி  "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." அதாவது, ஆவிக்குரிய அன்போடு நாம் நன்மை செய்யும்போது  ஆவியினாலே நித்தியஜீவனை அடைவோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,095                                          💚 பிப்ரவரி 08, 2024 💚வியாழக்கிழமை 💚 

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்." ( கொலோசெயர் 3 : 17 )

இன்று கிறிஸ்தவர்களாகிய பலருக்கும்கூட பிதாவாகிய தேவனைப்பற்றிய ஒரு தெளிவு இல்லை. பலரும் பழைய ஏற்பாட்டுக்கு பிதா, புதிய ஏற்பாட்டுக்கு இயேசு என்று எண்ணிக்கொள்கின்றனர். இது தவிர, "இயேசு மாத்திரம்" என்று ஒரு கூட்டம் எழும்பியுள்ளது. இப்படித் தப்பறையான போதனைகள் எழக் காரணம் வேதாகமத்தை உணர்ந்து படிக்காததே. அப்போஸ்தலரான யோவான் தனது நிரூபங்களில் இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். 

இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கின்றவன் பொய்யன். பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கின்றவன் அந்திக்கிறிஸ்து என்கின்றார் அவர். "இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து." ( 1 யோவான்  2 : 22 ) நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே" என்றுதான் நமக்கு ஜெபிக்க கற்றுத்தந்தார். பிதாவாகிய தேவன் அனுப்பிதான் கிறிஸ்து உலகத்தில் வந்தார்.

எனவே, "கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." ( 2 யோவான்  1 : 9 ) அதாவது, கிறிஸ்துவின் உபதேசத்தில் நாம் நிலைத்திருப்போமானால் நாம் பிதாவையும் குமாரனையும் உடையவர்களாயிருப்போம்.

அனைத்து மகிமையையும் நாம் இயேசு கிறிஸ்து மூலம் பிதாவாகிய தேவனுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வசனம் கூறுகின்றது. "எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்." ( 1 பேதுரு 4 : 11 )

நாம் நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வை அடையவேண்டுமென்றால் நாம் பிதாவாகிய தேவனையும் அவர் அனுப்பியவரான இயேசு கிறிஸ்துவையும் அறியவேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறினார். "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 )

நமது பாவங்களை மன்னித்து தேவனோடு நம்மை ஒப்புரவாக்கினவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்." ( ரோமர் 5 : 11 ) என்று கூறுகின்றார். 

எனவேதான் நீங்கள் "ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 5 ) என்கின்றார் பேதுரு. 

அப்போஸ்தலரான பவுல் தனது அனைத்து நிரூபங்களிலும், "பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக" என்றே துவங்குவதை நாம் பார்க்கலாம். எனவே, நமது எந்த ஜெபமும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனுக்கு ஏறெடுப்பதாகவே இருக்கவேண்டும். அதுவே தேவனுக்கு ஏற்றதும் கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் நமக்கு அறிவுறுத்தியதுமாய் இருக்கின்றது.  கிறிஸ்துவுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன் என்று எண்ணி பிதாவாகிய தேவனை நாம் மகிமைப்படுத்தாமல் விட்டுவிடுவோமானால் நாம் அந்திக்கிறிஸ்துக்களாகவே இருப்போம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,096                                          💚 பிப்ரவரி 09, 2024 💚வெள்ளிக்கிழமை 💚  

"ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்." (  சங்கீதம் 62 : 8 )

ஜெபம் என்பது அதிகநேரம் கூப்பாடுபோட்டு கத்துவதோ ஒரு சில மந்திரங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதோ அல்ல. மாறாக, அவரை நம்பி நமது இருதயம் தேவனோடு ஊற்றப்படும் அனுபவம். எப்படி ஒரு பாத்திரத்திலுள்ள தண்ணீரையோ இதர பணத்தையோ நாம் ஊற்றுகின்றோமோ அதுபோல நமது இருதயத்தை; அதன் ஏக்கங்களை தேவ சமூகத்தில் நம்பிக்கையோடு ஊற்றுவது. அதற்கு நேரமோ காலமோ கிடையாது.  

ஜெபத்தைக்குறித்து மனிதர்களது எண்ணங்கள் பல. சிலர் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் ஜெபத்தைத்தான் கடவுள் கேட்பார் எனப் போதிக்கின்றனர்சிலர் உபவாசமிருந்து ஜெபிக்கவேண்டுமென்கின்றனர். சிலர் பொருத்தனை பண்ணி ஜெபிக்கவேண்டும் என்று கூறுகின்றனர். சிலர் ஒரு நாளின் பத்தில் ஒருபாகத்தை ஜெபத்துக்கு ஒதுக்கவேண்டுமென்கின்றனர்ஆனால் இவை பெரும்பாலும் மனித போதனைகளேதவிர மெய்யல்ல

இவை ஜெபத்தைக்குறித்து வேதாகமத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் ஜெபித்த முறைகளும் கூறப்பட்டக்  கருத்துக்களுமே தவிர இப்படித்தான் நாமும் ஜெபிக்கவேண்டும் அப்போதுதான் நமது ஜெபத்தைத் தேவன் அங்கீகரிப்பார் என்று பொருளல்ல.  

ஏனெனில், கடமைக்காக ஜெபிப்பவர்களும் அதிகாலை வேளைகளில் எழுந்து  ஜெபிக்கலாம். எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர், "சிறு வயதுமுதலே எங்கள் பெற்றோர்கள் எங்களை  அதிகாலையில் ஜெபிக்க எழுப்பி விட்டுவிடுவார்கள், எனவே அதுவே பழக்கமாகிவிட்டது" என்பார்கள். ஆனால் இவர்கள் ஜெபம் என்று தங்களுக்கு சிறு வயதுமுதல் பெற்றோர்களால் கற்றுகொடுக்கப்பட்ட முறையில்  தினமும் ஜெபிக்கிறார்களேதவிர தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தோடு ஜெபிப்பதுபற்றி தெரியவில்லை என்கின்றனர்

இதுபோலவே உபவாச ஜெபமும். நாம் சாப்பிடாமல் இருப்பதால் தேவன் நமது ஜெபத்தைக் கேட்டுவிடுவார் என நம்பி உபவாசம் இருப்பது ஏற்புடைய உபவாசமல்ல. மேலும் இப்படி ஜெபிக்கும் பலரும்கூட தங்களது உலக தேவைகளை நிறைவேற்றவே இப்படி உபவாசமிருக்கின்றனர். பெரும்பாலும் பொருத்தனை பண்ணி ஜெபிப்பவர்களும் தங்களது உலக ஆசீர்வாதங்களுக்காகவே அப்படி ஜெபிக்கின்றனர்.

சிலர் ஒருநாளின் பத்தில் ஒரு பகுதியாகிய இரண்டுமணி நாற்பது நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் என்கின்றனர். இப்படிக் கறாராக கணக்குபார்த்து ஜெபிப்பவர்களிடம் தேவ அன்பு நிச்சயம் இருக்கமுடியாது. ஏனெனில் இவர்கள் ஜெபத்தை ஒரு கட்டளையாக நிறைவேற்றுகிறார்கள் என்றுதான் கூற முடியும் 

ஆனால் இருதய வேதனையோடும் நம்பிக்கையோடும்  வரும் கண்ணீரின் ஜெபத்தை தேவன் கேட்டுப்  பதிலளிக்கின்றார்அத்தகைய ஜெபமானது கர்த்தரது சமூகத்தில் இருதயத்தை ஊற்றிவிடும் ஜெபமாகும். எசேக்கியா ராஜா இப்படித்தான் ஜெபித்தார். சாமுவேலின் தாய் அன்னாள் இப்படித்தான் ஜெபித்தாள். இயேசு கிறிஸ்துவும் பலத்தச் சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபித்தார். 

அதிகாலையில் எழுந்து ஜெபிப்பது நல்லது; அது ஏற்புடையதே. ஆனால் அப்படி ஜெபிப்பதாலேயோ,  உபவாசமிருப்பதாலோ , மணிக்கணக்கு பார்த்து ஜெபிப்பதாலேயோ தேவன் நமது ஜெபத்தைக் கேட்பதில்லை. அவர் நமது உடைந்த உள்ளத்தைத்தான் பார்க்கின்றார்.  நமது தவறுகளை எண்ணி மனம் வருந்தி உள்ளம் உடைவது. தேவனை இன்னும் நெருங்கவேண்டும் என ஆவல்கொண்டு வருந்தி உடைவது; பிறரை அவமதித்ததை எண்ணி வருந்தி உடைவது....உள்ளான மன ஏக்கத்துடன் வேண்டிவது. ......இத்தகைய ஜெபங்களைப்   பல மணிநேரம் ஜெபிக்காவிட்டாலும் தேவன் உடனேயே கேட்டுப் பதிலளிப்பார். 

அன்பானவர்களே, மெய்யான விசுவாசத்தோடு, மன உருக்கத்துடன், ஒரு உடைந்த உள்ளதோடு நமது விண்ணப்பங்களை தேவ சந்நிதியில் ஊற்றுவோம் , தேவன் நிச்சயம் நமக்கு அடைக்கலமாய் இருப்பார்.   



'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,097                                          💚 பிப்ரவரி 10, 2024 💚சனிக்கிழமை 💚  

"தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்." ( 1 இராஜாக்கள் 11 : 9, 10 )

அன்று ஏதேன் தோட்டத்தில் ஆதாம் செய்த அதே பாவத்தை சாலமோனும் செய்தான். ஆதாமோடு தேவன் தோட்டத்தில் சஞ்சரித்து வந்தார். ஆதாம் அவரை முகமுகமாய்ப் பார்த்தான். அப்படி இருந்தும் அவன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டான். காரணம் இச்சை. அவனுக்குத் தேவனுடைய வார்த்தைகளைவிட விலக்கப்பட்டக் கனியை உண்பதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மேலும், அவன் ஏவாள்  கொண்டுவந்தக்  கனியைத் தான்  உண்ணாவிட்டால் ஏவாள் மனம் வருந்திவிடுவாள் எனும் காரணத்துக்காகவும் அதனை உண்டான். 

அதேபோலவே சாலமோனும் இருந்தான். தேவன் அவனுக்கு இரண்டுமுறைத் தரிசனமாகி பேசியபின்னரும் தனது மனைவியரைத்  திருப்திப்படுத்தவேண்டி அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டிருந்தும், அவர்கள் வணங்கிவந்த அந்நிய தெய்வங்களை வணங்கத் துவங்கினான்.  அப்படி வணங்காவிட்டால் அவர்கள் மனம் வருந்துவார்கள் என எண்ணினான். 

"அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்." என்று கூறப்பட்டுள்ளது. ஆம், அப்படிக் கோபமானதால் அவர் அவனது நாட்டை இருகூறாக்கி அவனது ஆட்சியின் மாட்சியைச் சிறுமைப்படுத்தினார். அவனது தந்தை தாவீது கர்த்தரை உண்மையாகப் பின்பற்றியதால் அப்படிச் செய்தார்; இல்லாதிருந்தால் அவனை முற்றிலும் அழித்திருப்பார்.

அன்பானவர்களே, இன்று நாமும் சாலமோனைப்போல இல்லாமலிருக்க முயலவேண்டும். தேவனா அல்லது உலக அதிகாரமா , பணமா , புகழா  என்ற தேர்ந்தெடுப்பு நமக்கு அவசியம். நாம் எவ்வளவுதான் தேவனோடு நெருக்கத்தில் இருந்தாலும் சிலவேளைகளில் நமது மனைவி பிள்ளைகளுக்காகச் செய்யும் சில காரியங்கள் நம்மைத் தேவனைவிட்டுப் பிரித்து விடும். பதவி, பணத்துக்காக நாம் செய்யும் சில செயல்கள் தேவனை விட்டு நம்மைப் பிரித்துவிடும். 

ஆனால் ஒன்று, தேவன் ஒரு கொடூரமான ஈட்டிக்காரனைப்போல நம்மைக் கண்காணித்துத் தண்டிப்பவரல்ல. அவர் நமது உள்ளான மனத்தினையும் பார்க்கின்றார்.  மனைவி பிள்ளைகளுக்காகச் சில வேளைகளில் நாம் சில காரியங்களைச்  செய்தாலும்  நமது உள்மனத்தினை அவர் அறிவார். தவிர்க்க முடியா சூழ்நிலையில் மனம் குத்தப்பட்டு நாம் செய்யும் சிறு தவறுகளைத் தேவன் பொறுத்துக்கொள்வார். அன்று எலிசாவிடம் வந்த நாகமானுக்கு ராஜாவுக்கு கைத்தாங்கு கொடுத்து அழைத்துச் செல்வதுதான் வேலை. ராஜா ரிம்மோன் கோவிலுக்குள் செல்லும்போது அவனும் கூடச் சென்று ராஜா வணங்குவதுபோல வணங்கவேண்டும். அவன் எலிசாவிடம் இது குறித்து ஆலோசனைக் கேட்டான். 

"என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான். அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்" ( 2 இராஜாக்கள் 5 : 18,19 ) எனவே நாம் இருதயத்தில்  தேவனுக்குமுன் மன உண்மையாய் இருக்கவேண்டியது அவசியம் என்பது தெளிவாகின்றது.

"அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி"  என்று இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளது நாம் நோக்கத்தக்கது. அதாவது கர்த்தராகிய இயேசுவை மறுதலித்து என்று பொருள்கொள்ளலாம். மனதளவிலும் செயலளவிலும் நாம் கர்த்தராகிய இயேசுவை விட்டு இருதயத்தைத் திருப்பாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். ஆம் அன்பானவர்களே,  3000 நீதிமொழிகளைச் சொன்ன சாலமோனின் வீழ்ச்சி நமக்கு ஓர் எச்சரிக்கை. 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,098                                        💚 பிப்ரவரி 11, 2024 💚ஞாயிற்றுக்கிழமை 💚  

"மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்." ( மத்தேயு 13 : 25 )

இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய வசனம் அவர் கூறிய உவமையில் கூறப்பட்டதாகும். இந்த உவமையில் விதைகளை விதைத்தவன் நல்ல விதைகளை விதைத்தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதைகளை விதைத்தது மனுஷ குமாரன் என்று இயேசு விளக்குகின்றார். (மத்தேயு 13:37) என்று கூறுகின்றார். அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நாம் விதைக்கப்பட்டவர்களாக இருந்தால் நல்ல விதைகளாக இருப்போம். 

இந்த நல்ல விதைகள் வளரும்போது அவைகளோடு களைகளும் வளருகின்றன. இந்தக் களைகளை விதைப்பது பிசாசு. இங்கு களைகள் என்று இயேசு கிறிஸ்து கூறுவது பொல்லாங்கனுடைய புத்திரர். (மத்தேயு 13:38) அதாவது மனுஷ குமாரனால் விதைக்கப்பட்ட பயிர்களுடனேயே பிசாசு விதைத்த பொல்லாங்கான தீய மனிதர்களும் வாழுகின்றார்கள்.

இன்றைய வசனம் கூறுகின்றது,  "மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்" என்று. இங்கு பிசாசு களைகளை விதைப்பது நல்ல விதைகளை விதைத்த மனிதனுக்குத் தெரிந்தே இருந்தது. "சத்துரு அதைச் செய்தான் "(மத்தேயு 13:28) என்று அவன் வேலைக்காரருக்குச் சொல்வதிலிருந்து இது தெரிகின்றது. அதாவது நல்ல பயிரான கிறிஸ்துவுக்குள் வாழும் மக்களை கெடுக்க அவர்கள் அறியாமலேயே சத்துரு அவர்கள் மத்தியில் தீயோரை எழுப்புகின்றான். 

ஆனால் தேவன் கிருபை உள்ளவராக இருப்பதால் களைகளை உடனேயே அழித்துவிடுவதில்லை. மாறாக, நல்ல பயிர்களோடு அவைகளையும் அறுப்புக்காலம் எனும் இறுதிநாட்களுக்காக அவர்களையும் வளரவிடுகின்றார். "அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்." ( மத்தேயு 13 : 30 ) என்று வாசிக்கின்றோம். ஆம், "துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்." ( யோபு 21 : 30 )

பிசாசு விதைத்த துன்மார்க்க விதையிலிருந்து எழும்பும் களைகள் எப்போதுமே நல்லவைகளாக மாறமுடியாது என்பது தெரிந்தும் அவைகளை வளர விடுகின்றார். காரணம் அவைகளைப் பிடுங்கினால் நல்ல பயிரும் ஒருவேளை அழிந்துபோகலாம். இப்படி அவர் தீமைகளையும் நன்மையாக மாற்றுகின்றார்.  காரணம் களைகள் வளர்வது கிறிஸ்துவுக்குளான விசுவாசிகளுக்குத் தேவையாக இருக்கின்றது. அதன்மூலம் அவர் தனது மக்களைப்  புடமிடுகின்றார். தனது சித்தத்தை நிறைவேற்றுகின்றார். 

யோசேப்பின் வாழ்கையினைப் பாருங்கள், அவனுடைய உடன்பிறந்தவர்கள் களைகள் போல இருந்தனர். அவனுக்கு அவர்கள் தீமையினையே செய்தார்கள்.  அவர்கள்மூலம் தேவன் யோசேப்பைப் புடமிட்டார். இறுதியில் அது நன்மையாக மாறியது.   "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ( ஆதியாகமம் 50 : 20 ) என்று வாசிக்கின்றோம்.

இந்த உலகிலும் அவர் சிலவேளைகளில் நல்ல பயிராகிய மனுஷகுமாரனின் பிள்ளைகளை துன்மார்க்கரைக்கொண்டு காப்பாற்றுகின்றார். ஒருவேளை நாம் பணிபுரியும் இடத்திலுள்ள நிர்வாகி, முதலாளி போன்றவர்கள் துன்மார்க்கர்களாக இருக்கலாம். ஆனால் தேவன் அவர்களை உடனேயே அழிக்காமல் அவர்கள் மூலம் நம்மைக் காப்பாற்றுகின்றார். அவர்களை உடனேயே அழித்து ஒழித்துவிட்டால் நல்ல பயிராகிய மக்களும் பாதிக்கப்படுவார்கள்.  

இறுதியாக, "மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்" என்று நாம் வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய தூக்கம் கொண்டவர்களாக இருந்தால் பிசாசு களைகளை விதைத்துக்கொண்டுதான் இருப்பான். எனவே நாம் நமது ஜெபங்களில் விழிப்பாய் இருக்கவேண்டியது அவசியம். ஜெபக்குறைவு எனும் ஆவிக்குரிய நித்திரை மயக்கத்திலேயே இருப்போமானால் களைகள் நம்மை மேற்கொண்டுவிடும். சாத்தான் களைகளை விதைத்துக்கொண்டுதான் இருப்பான். விழிப்பாயிருந்து அவற்றை மேற்கொள்வோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,099                                        💚 பிப்ரவரி 12, 2024 💚திங்கள்கிழமை 💚  

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே". (எபிரெயர் 3:15)

தேவனுடைய வார்த்தைகள் அன்று இஸ்ரவேல் மக்களுக்கு மோசே மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனைக் கேட்ட எல்லோரும் அந்த வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. தேவனுக்கு எதிராக முறுமுறுத்தார்கள். காரணம் அவர்களுக்கு பழைய எகிப்து வாழ்க்கைதான் மனதுக்குப் பிடித்திருந்தது. எகிப்தில் தங்கள் உண்டதை நினைத்தும் அந்த உணவு இப்போது கிடைக்காததை  நினைத்தும் ஏங்கினார்கள்.

இதனையே நாம் தேவ வசனத்தைக் "கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?" (எபிரெயர் 3:16) என்றும் வாசிக்கின்றோம். 

நமக்கும் இன்று தேவ வார்த்தைகள் பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள், சுவர் எழுத்துக்கள், பிரசங்கங்கள்  எனப் பல்வேறு விதங்களில் அறிவிக்கப்படுகின்றன.  தேவ ஊழியர்கள் அறிவிக்கும் செய்திகள் பல வேளைகளில் நமது இருதயத்தைத் தொடுகின்றன. வேதாகமத் தியானங்கள் இருதயத்தைக் குத்துகின்றன. அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு முறையில் தேவ வார்த்தைகள் நாம் அனைவரையும் வந்து சேர்கின்றன. ஆனால் அவை நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பழைய வாழ்வை மற்ற வேண்டும் என்று கூறுவதால் அன்றைய இஸ்ரவேல் மக்களைப்போல நாமும் இருதயத்தைக் கடினப்படுத்துகின்றோம். 

ஆம், பலவேளைகளில் நாம், "இந்தப் பிரசங்கம் நன்றாய் இருந்தது" என்று கூறிக்கொள்கின்றோம், சில வீடியோ பிரசங்கங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கின்றோம். ஆனால் அந்தச் செய்தி கூறும் உண்மைக்கு நேராக நடக்கவும் நமது வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளவும் தயாராக இருப்பதில்லை. இப்படித் தேவ வார்த்தைகளை புறக்கணிப்பவர்களை நோக்கி இன்றைய வசனம் கூறுகின்றது, "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்."

சபை வேறுபாடு பார்க்காமல் பொதுவாக அனைத்து கிறிஸ்தவ  பிரிவினரின் செய்திகளையும் கேட்பது நல்ல செயல். ஒவ்வொரு சபையும் போதிப்பதில் வேதத்துக்குச் சரியான போதனைகள், முரணான போதனைகள் உண்டு. அதுபோல நம்மை உணர்வடையச் செய்யும் போதனைகளும் உண்டு.  கூடுமானவரை யார் சொன்னார்கள் என்று பார்ப்பதைவிட சொல்வது வேதத்துக்கு ஏற்புடையதுதானா என்று மட்டும் பார்ப்பதே கிறிஸ்துவை அறிந்த மனிதன் செய்யவேண்டியது.  

அன்பானவர்களே, ஒரு திறந்த மனதுடன் நாம் எல்லாவற்றையும் அணுகினால் சத்தியத்தை உணர்ந்துகொள்ளமுடியும். எனவே, நாம் முதலில் தேவ வார்த்தைகளைக் கேட்பதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், அவற்றை விசுவாசிக்கவேண்டும், அவற்றுக்குக் கீழ்படியவேண்டும்.  அப்போதுதான் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வினை அடையமுடியும்.

இதனையே எபிரெய நிருபத்தில், "பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்."  (எபிரெயர் 3:18, 19) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்" சபைப் பாகுபாடு எண்ணம் நமது இருதயத்தைக் கடினப்படுத்தும். அவிசுவாசம் நமது இருதயத்தைக் கடினப்படுத்தும்  "இவன் நம்ம சபை இல்லையே...ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான் ..." என்று எண்ணி எவரது மூலம் வரும் தேவ வார்த்தைகளை நாம் புறக்கணித்தால்  அந்த அவிசுவாசமே நம்மை தேவ இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கத் தடையாக இருக்கும். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,100                                     💚 பிப்ரவரி 13, 2024 💚செவ்வாய்க்கிழமை 💚  

"துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்." ( நீதிமொழிகள் 15 : 8 )

மனிதர்கள் பொதுவாக தேவனையும் தங்களைப்போன்ற மனமுள்ள ஒருவராகவே எண்ணிக்கொள்கின்றனர். ஒரு அரசியல் தலைவனுக்குமுன் அவனை வாழ்த்திக் கூக்குரலிடுவது, மலர் மாலைகளை அணிவது, பால் அபிஷேகம் செய்வது இவை போன்ற செயல்கள் அவனை மகிழ்ச்சிப்படுத்தும். மனிதர்கள் தேவனையும் இப்படி மகிழும் அரசியல் தலைவனாகவே எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தேவனோ உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கின்றவர். அவர் தூய்மையான ஒரு மனநிலையினை மனிதர்களிடம் எதிர்பார்க்கின்றார் என்பதனை பெரும்பாலும் மறந்துவிடுகின்றனர்.

மிகப் பிரமாண்டமாக பலி செலுத்துவதாலோ ஆலயங்களுக்கு விழா எடுப்பதாலோ தேவன் மகிழ்ச்சியடைந்துவிடமாட்டார்.  இத்தகைய மனிதர்களைப் பார்த்து அவர் பரிதாபப்படுவார்.  இன்றல்ல, கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன்னரே ஏசாயா தீர்க்கதரிசி மூலம் இதனை மக்களுக்குத் தேவன் தெளிவுபடுத்தினார். "உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை." ( ஏசாயா 1 : 11 )

துன்மார்க்கருடைய பலி தேவனுக்கு அருவருப்பானது என்று இன்றைய வசனம் சொல்கின்றது. கொலையும், கொள்ளையும், லஞ்சமும் வாங்கி பணத்தையும் இதர சொத்துக்களையும் சேர்த்துவிட்டு ஆலயங்களில் வந்து நின்று பலிசெலுத்துவது மனித கழிவை பரிமாறுவதுபோல அருவருப்பானது என்கின்றார் தேவனாகிய கர்த்தர். ஆனால் பலரும் ஆலயங்களில் சென்று காணிக்கைச் செலுத்துவதிலும் வணங்குவதிலும்தான் ஆர்வம்  செலுத்துகின்றார்.  

நாம் மணிக்கணக்காக ஜெபிக்கலாம், உபவாசித்து ஜெபிக்கலாம், பல்வேறு காணிக்கைகளை நேர்ச்சையாக தேவனுக்குக் கொடுத்து ஜெபிக்கலாம் ஆனால் நமது வாழ்க்கை தகுதியில்லாத வாழ்க்கையாக  இருக்குமானால் தேவன் நமது ஜெபத்தைக் கேட்கமாட்டார். "நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )

ஜெபக் குறைவுதான் உங்கள் ஆசீர்வாதத்துக்குக் காரணம், வேதம் வாசிக்காததுதான் உங்கள் இந்த கீழான நிலைமைக்குக் காரணம் என்று பல பிரசங்கங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அன்பானவர்களே, அதனைவிட முதலில் நமது வாழ்க்கைத் தூய்மையானதாக இருக்கவேண்டியது அவசியம். நமது வாழ்க்கை தேவனுக்குப் பிரியமில்லாத வாழ்க்கையாக இருப்பதுதான் நமது ஆசீர்வாதக் குறைவுக்குக் காரணம். 

யார் வேண்டுமானாலும், எந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் ஜெபிக்கலாம். ஆனால் எல்லா ஜெபத்தையும் தேவன் கேட்பதில்லை. மனம் வருந்தும் மன்னிப்பின் ஜெபத்தைக்கே தேவன் முன்னுரிமை கொடுப்பார். எனவே, முதலில் நமது பாவங்களை உணர்ந்து மனம்திரும்பும் ஜெபத்தை நாம் ஏறெடுத்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அது இல்லாத ஜெபம் வெற்றுக்   கூச்சல் போன்றதே.  

முதலில் "உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;" ( ஏசாயா 1 : 16 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நம்மைத் தேவனுக்குமுன் செம்மையானவர்களாக மாற்றுவோம். பலிகளும் காணிக்கைகளும் இரண்டாவது பட்சமே. 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,101                                     💚 பிப்ரவரி 14, 2024 💚புதன்கிழமை 💚  

"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்." ( பிலிப்பியர் 1 : 10, 11 )

பிதாவாகிய தேவனை நாம் வாயினால் துதிப்பது மட்டும் அவருக்கு மகிமையைச் செலுத்துவதாகாது; மாறாக நமது வாழ்க்கை கனியுள்ள ஒன்றாக மாறுவதே நாம் அவருக்கு மகிமையையும் துதியையும் செலுத்துவதாகும்.  இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி" என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, நாம் அப்படி கனியுள்ள வாழ்க்கை வாழும்போதே கிறிஸ்துவின் நாளுக்கு அதாவது அவரது இரண்டாம் வருகைக்கு ஏற்றவர்களாக மாற முடியும். இதனையே இன்றைய வசனத்தின் பிற்பகுதியில், "நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழும்போது பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துகின்றோம், அதே வேளையில் கிறிஸ்துவின் வருகைக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். 

கிறிஸ்து இயேசுவோடு இணைந்த ஒரு வாழ்க்கை வாழும்போது மட்டுமே நாம் கனியுள்ளவர்களாக மாற முடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய கனிகள் நிறைந்த மனிதனே ஆவிக்குரிய மனிதன். ஆனால் இன்று பொதுவாக இது மறக்கப்பட்டு ஒரு சில குறிப்பிட்ட சபைகளுக்குச் செல்பவனே ஆவிக்குரிய மனிதன் என்று எண்ணும்  நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆவிக்குரிய மனிதனிடம் பவுல் அப்போஸ்தலர் சொல்லும் கனிகள் காணப்படவேண்டும்.  "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23 )

இந்த ஆவிக்குரிய கனிகளை நாம் சுயமாகப் பெற முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நமது வாழ்க்கை ஒட்டவைக்கப்படும்போது மட்டுமே நாம் கனி கொடுப்பவர்களாக மாற முடியும். நமது சுபாவக் குணங்கள் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்படும்போது மட்டுமே மாறி நாம் கனிகொடுப்பவர்களாக முடியும். 

பிலிப்பி சபை விசுவாசிகள் இப்படி கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கத் தான்  வேண்டுதல் செய்வதாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்.  

அன்பானவர்களே, நாம் வெறுமனே "அல்லேலூயா" என்று ஆர்ப்பரிப்பது மட்டும் பிதாவாகிய தேவனுக்கு மகிமையல்ல என்பதை உணர்ந்தவர்களாக கிறிஸ்துவோடு இணைந்து கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது நம்மூலம் பிதாவாகிய தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,102                                     💚 பிப்ரவரி 15, 2024 💚வியாழக்கிழமை 💚  

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரப் பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

நமது எகிப்து எனும் பழைய பாவ வாழ்க்கை நம்மை தேவனைவிட்டுப் பிரித்து மனசமாதானமின்றி அலையவைத்தது. அப்போது தேவனைப்பற்றியும் அவரது மகிமை, வல்லமை பற்றியும் நமக்கு எதுவும் தெரியாது; அவற்றை நாம் எண்ணிப் பார்ததுமில்லை. உலக ஆசை இச்சைகளில் மூழ்கி இந்த உலகமேகதி என்று வாழ்ந்துவந்தோம். ஆனால் நமைக்குறித்து தேவனுக்கு ஒரு திட்டமிருந்தது. அந்தத் திட்டம் அவர் நம்மேல் கொண்ட அன்பினால் ஏற்பட்டது.  

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அந்த அன்பு உண்டாயிருக்கிறது. அவர் நம்மேல் அன்புகூராமல் இருந்திருப்பாரேயானால் நாம் கிறிஸ்துவையும் அவரது இரட்சிப்பையும் பெற்றிருக்கமாட்டோம்.

இப்படி நமது பாவங்கள் கழுவப்பட்டதால் நாம் தேவனையும் அவரது குமாரனையும் அறிந்திருக்கின்றோம். எனவே அவரிடம் அன்புகூருகின்றோம். இப்படி நாம் அவரிடம் அன்புகூரக் காரணம் அவர் முந்தி நம்மள அன்புகூர்ந்து நமது பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக்கொண்டதால்தான். ஆம், "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." ( 1 யோவான்  4 : 19 )

தேவனிடத்தில் அன்புகூருகின்றேன் என்று வாயினால் கூறுவது அவரை அன்பு செய்வதல்ல. மாலையும், நறுமண அகர் பத்திகளைக் கொழுத்தி வழிபடுவது அவரை அன்புகூர்வதல்ல; அதிக காணிக்கைக் கொடுப்பதோ ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதோ, ஆராதனைகளில் கலந்துகொள்வதோ அவரை அன்புகூர்வதற்கு அடையாளமல்ல. எனவேதான் யோவான் கூறுகின்றார், "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?" ( 1 யோவான்  4 : 20 )

அதாவது நம்மோடு கூடப்பிறந்த சகோதரர்களை அன்பு செய்வது; நம்மோடு  வாழும் சக மனிதர்களை ஜாதி, மதம், இனம் கடந்து அன்புசெய்வது. இப்படி அன்பு செய்யாவிட்டால் அவன் பொய்யன் என்று யோவான் கூறுகின்றார். காரணம் நாம் உண்மையாகவே நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றவர்களென்றால் நாம் எல்லோரையும் மதிப்போம், அன்புசெய்வோம். அப்படி அன்புகூராமலிருக்கிறவன், இன்னும் தனது பாவங்களுக்கு தேவனிடம் மன்னிப்பு பெறவில்லை என்று பொருள். அவன் எப்படி கண்ணால் காணாத தேவனிடத்தில் அன்புகூருவான்? என்று கேள்வியெழுப்புகின்றார் அப்போஸ்தலரான யோவான். 

நம்மோடு உடன்பிறந்தவர்கள் ஒருவேளை நம்மைப் புறக்கணிக்கலாம், நம்மைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். எல்லா வேளையிலும் அவர்களிடம் சென்று நமது நிலைமையைப் புரியவைக்க முடியாது. ஆனால் நாம் அவர்களுக்காக ஜெபிக்கலாம்.  அப்படி ஜெபிப்பதும் நாம் அவர்களை அன்பு செய்கின்றோம் என்பதற்கு அடையாளமே. மறைந்திருக்கின்றவைகளை அறியும் தேவன் அவற்றை அறிவார்.  

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரப் பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. அதே பிரதிபலன் பாராத அன்பை நாம் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவர்க்கும் செலுத்துவோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,103                                     💚 பிப்ரவரி 16, 2024 💚வெள்ளிக்கிழமை 💚  

"நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 )

இந்த உலகத்துக்குரியவைகளை அறிவதற்கு உலக அறிவு போதும். பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ நமக்குப் போதிக்கும் ஆசிரியர்கள் உலக அறிவைப் பெற்று நமக்கு அவைகளைப் போதிக்கின்றார்கள். ஆனால் நாம் தேவனுக்குரியவைகளை அறியவேண்டுமானால் உலக அறிவு போதாது. தேவனை நாம் இறையியல் கல்லூரிகளில் படித்து அறியமுடியாது. வேதாகமத்தில் "தேவனை அறியும் அறிவு" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர "தேவனைப்பற்றி அறியும் அறிவு" என்று குறிப்பிடப்படவில்லை. 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனைப்பற்றி இறையியல் படிப்பதாலும்,  வேதாகமத்தைப்  படிப்பதிலும், பிரசங்கங்களைக் கேட்பதிலும், தேவனைப்பற்றிய செய்தி கட்டுரைகளை வாசிப்பதிலும் அறிந்துகொள்ளலாம்.  ஆனால் தேவனை அறியவேண்டுமானால் அதற்குமேலாக நமக்குப் பரிசுத்த ஆவியானவரின் துணை வேண்டும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்"  என்று கூறுகின்றார். 

மேலும், "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 2 : 13 ) என்று கூறுகின்றார். ஆவிக்குரியவைகளை ஆவிக்குரிய காரியங்களையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அறிவை பரிசுத்த ஆவி நமக்குத் தருகின்றார். 

இன்று பலர் வேதாகம வசனங்களுக்கு முழுக்க முழுக்க உலக அர்த்தம் கொண்டு போதிக்கின்றார்கள். ஆவியானவரின் அபிஷேகம் இல்லாததே இதற்குக் காரணம். உலக காரியங்களைப் பற்றி பேசவும் போதிக்கவும் ஏராளமான நூல்கள் உள்ளன. ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். வேதாகமம் நமது உலக வாழ்க்கைக்காக எழுதப்பட்ட ஒன்றல்ல. 

எனவே பலருக்கு வேதாகமத்தின் பல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும்போதுதான் அவற்றின் பொருள் நமக்குப்  புரியம். ஆம், "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 )

சாதாரணமாக ஒருவர் வேதாகமத்தை வாசிக்கும்போது கிடைக்கும் அர்த்தத்தைவிட மீட்பு அனுபவம் அடைந்து பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றபின்னர் வேதாகமத்தை வாசிக்கும்போது அதே வசனத்திற்கு புதிதான அர்த்தம் கிடைப்பதை உணரலாம். காரணம், ஆவியானவர் அந்த வசனம் எழுதப்பட்ட சரியான நோக்கத்தை நமக்கு உணர்த்துவதுதான்.  

எனவேதான் நாம் தேவனையும் அவரது வார்த்தைகளையும் அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நமக்குத் தேவையாக இருக்கின்றது.  தேவனால் நமக்கு  அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியை நாம் பெறவேண்டியது நமக்கு அவசியமாய் இருக்கின்றது. சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்தும் ஆவியானவர் நமக்குள் வரும்போது சகலமும் புதிதாகும். நமது உள்ளமும் புதிதாகி சத்தியத்தை அறிந்துகொள்ளும்.

எனவே அன்பானவர்களே, சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மை தனது அபிஷேகத்தால் நிரப்பி சத்தியத்தை அறிய துணைபுரிய வேண்டுவோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,104                                     💚 பிப்ரவரி 17, 2024 💚 சனிக்கிழமை 💚  

"நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 4 )

தெசலோனிக்கேயே சபையினைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் பாராட்டிக் கூறும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். அதாவது அந்த சபை மக்கள் யூதர்களால் பல துன்பங்களை அனுபவித்தார்கள். ஆனால் அந்தத் துன்பங்களுக்கு மத்தியிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பித்தார்கள். எனவே அவர்களைக்குறித்து மேன்மைபாராட்டுவதாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

தெசலோனிக்கேயே சபையினர் என்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்று பவுல் குறிப்பிடவில்லை. வெறுமனே துன்பங்கள் என்று கூறுகின்றார். என்ன துன்பம் என்று நாம் இங்கு ஆராயத்  தேவையில்லை. மாறாக, துன்பத்தை அவர்கள் பொறுமையோடும் விசுவாசத்தோடும் எதிர்கொண்டார்கள் என்பதே நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. 

தொடர்ந்து எழுதும்போது அப்போஸ்தலரான பவுல், "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்கின்றார். 

இன்று நமது வாழ்விலும் இதுபோல நமது விசுவாசத்தைக் கெடுக்கக்கூடிய துன்பங்கள் வரலாம். மனிதர்களாலோ, சூழ்நிலைகளாலோ நமக்குத் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நாம் அவற்றை தெசலோனிக்கேயே சபை மக்களைப்போல பொறுமையுடனும் விசுவாசத்தோடும் தாங்கிக்கொள்ளவேண்டும் எனும் கருத்தே நமக்கு அறிவிக்கப்படுகின்றது. 

அப்படி நாம் வாழும்போது உபத்திரவப்படுகின்ற நமக்கு தேவன் ஆறுதல் தருவார்; நம்மை உபத்திரவப்படுத்துபவர்களுக்கு உபத்திரவதைக் கொடுப்பார் என்கின்றார். பக்தனாகிய யோபுவின் வாழ்க்கையில் துன்பங்கள் வந்தன. நாம் யாருமே சந்திக்காத கொடிய துன்பங்கள். ஆனால் அவற்றை யோபு விசுவாசத்துடனும் பொறுமையோடும் சகித்தார். இறுதியில் தேவன் அவரை எப்படி உயர்த்தினார் என்பது நமக்குத் தெரியும். 

எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு தனது நிருபத்தில்,  "இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்கள்  என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 )

ஆம் அன்பானவர்களே, கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமும் உள்ளவராகையால் நமது துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடமாட்டார். அவரது செயலின் முடிவுகள் ஆச்சரியப்படத் தக்கதாக இருக்கும். எனவே நமது வாழ்வில் துன்பங்கள் சோதனைகள் பிறரால் வந்தாலும் சூழ்நிலைகளால் வந்தாலும் அவற்றைப் பொறுமையாய் விசுவாசித்தோடு எதிர்கொள்வோம்.  உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிறவர்களுக்கு  இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறது. 

அப்போஸ்தலரான பவுலைப்போல கிறிஸ்தவர்களுக்கு எதிராக  செயல்பட்ட பலர் இன்றும் மனம் திரும்பி தாங்கள் எதிர்த்த விசுவாசத்தையே பறைசாற்றுபவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். கிறிஸ்தவர்களாகிய நமது பொறுமையும் விசுவாசமும்தான் தேவன் செயல்புரிய  உதவுபவையாக இருக்கும். எனவே, பொறுமை, விசுவாசம் இவற்றைக் காத்துக்கொண்டு துன்பங்களை எதிர்கொள்வோம்.  


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,105                                    💚 பிப்ரவரி 18, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚  

"வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்." ( சங்கீதம் 31 : 6 )

இந்த உலகத்தில் மனிதர்கள் பல மாயமான காரியங்களை உண்மை என நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய மனிதர்களுக்கு நாம் உண்மையினை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, பணம், பதவி, புகழ், அழகு என இவைகளை நம்பி வாழ்வது வீண் மாயையை பற்றிக்கொள்வதுதான். 

மேற்குறிப்பிட்ட நிரந்தரமற்றவை அனைத்தும் அழிந்துவிடும். இவைகளால் நமக்கு நிரந்தர உதவியோ நன்மையோ கிடைப்பதில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு இவை உதவலாமேதவிர இவைகளை நம்பி வாழ்வது வீண். உதாரணமாக, நம்மிடம் எவ்வளவோ பணமிருந்தாலும் செல்வாக்கு இருந்தாலும் ஆள் பலமிருந்தாலும் ஒரு மிகக் கொடியநோய் நமக்கு வந்துவிட்டது விட்டது என்றால் இவை எதுவுமே நமக்குத் துணைவரப்போவதில்லை. அந்த வேளைகளில் நாம் கர்த்தரைத் தேடி ஓடுவோம். 

தாவீது ராஜாவாக இருந்தாலும் இந்த சத்தியத்தை நன்கு உணர்ந்திருந்தார். எனவேதான் தான் இப்படி மாயையைப் பற்றிகொள்ளவில்லை என்பதைவிட அப்படி வீண் மாயைகளைப் பற்றிக்கொள்பவர்களையும் வெறுத்து கர்த்தரையே நம்பியிருக்கிறேன் என்று கூறுகின்றார். மாயையான ராஜ பதவியோ, செல்வமோ அல்ல; மாறாக, கர்த்தரே எனது நம்பிக்கை என்று கூறுகின்றார். 

இந்தச் சத்தியத்தை யோனா தீர்க்கதரிசி நூலிலும் நாம் வாசிக்கலாம். யோனா கூறுகின்றார், "என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." ( யோனா 2 : 7, 8 )

ஆம், யோனா தீர்க்கதரிசி கூறுவதைப் பார்த்தால் அவர் ஏதோ ஒரு விதத்தில் இப்படி மாயையை நம்பி இருந்திருக்கின்றார் என்பது புரியும். அது என்ன? அவருக்குத் தான் தீர்க்கதரிசனம் கூறியது நடைபெறாமல்போனால் தனது புகழுக்கு இழுக்கு வந்துவிடும் எனும் ஒரு எண்ணம் இருந்தது. ஆம், அவர் அப்படி ஒரு மாய எண்ணத்தில் இருந்தார். இப்போது மீன் வயிற்றிலிருந்து வேண்டும்போது அதனை உணர்ந்து அறிக்கையிடுகின்றார். "என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்" என்கின்றார். 

இதனை உணர்ந்தபின்னர், "பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." எனும் உண்மை அவரால் கூறப்படுகின்றது.  கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் நம்மையே நாம் நிதானித்துப் பார்த்து நம்மிடம் கிருபையைப் போக்கடிக்கும் செயல்பாடுகள் ஏதாவது இருக்குமானால் திருத்திக்கொள்வோம். 

உலகக் கவர்ச்சி நாட்டங்கள், வீண் பெருமைதரும் எண்ணங்கள், நமக்கு தேவன் தந்துள்ள கொடைகளின்மேல் பெருமை போன்ற எண்ணங்கள் தேவ கிருபையினைப் போக்கடித்துவிடும்.  எனவே கர்த்தரையே மேலான கொடையாகப் பற்றிக்கொள்வோம். "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 17 )


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,106                                   💚 பிப்ரவரி 19, 2024 💚 திங்கள்கிழமை 💚  

"அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." ( மாற்கு 15 : 15 )

பொதுவாக அன்று முதல் இன்றுவரை அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது பதவியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களாக இருக்கின்றார்களேத்  தவிர நீதி, நேர்மை எதனையும் பார்ப்பதில்லை. எப்படி நடந்துகொண்டால் மக்கள் பிரியப்படுவார்களோ அதன்படியே நடக்கின்றனர்.  

இயேசு கிறிஸ்து குற்றமற்றவர் என்பதைப் பிலாத்து உணர்ந்திருந்தான். அவரை விடுதலை செய்யவேண்டும் என்றுதான் விரும்பினான். ஆனால் அவனது பதவி ஆசை அவனைத் துணிந்து செயல்பட அனுமதிக்கவில்லை.  எனவே, "ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." என்று வாசிக்கின்றோம். 

இன்று கிறிஸ்தவர்களாகிய நாமும்கூட பலவேளைகளில் இப்படியே இருக்கின்றோம். மனைவியைத் திருப்திப்படுத்த, குழந்தைகளைத் திருப்திப்படுத்த, மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த என்று பல்வேறு எண்ணங்களால் கிறிஸ்துவை புறம்பே தள்ளிவிடுகின்றோம். 

இந்த வசனம் இன்னுமொரு காரியத்தையும் நமக்கு விளக்குகின்றது. பிலாத்து விடுதலை செய்தது யாரை? பரபாஸ் எனும் அநீதிக்காரனை. "கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்." ( மாற்கு 15 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவன் கலவரம், கொலை, போன்ற அநீதி செயல்களில் ஈடுபட்டவன். கிறிஸ்துவுக்கு மாற்றாக  அவனை விடுதலை செய்கின்றான் பிலாத்து. நீதிமானுக்காக ஒரு அநீதிக்காரனை அவன் தேர்வுசெய்கின்றான்.

இன்றைய அரசியல்வாதிகளைப் பார்த்தாலும் இதுதான் நிலை. அவர்களுக்கு அமைதியான நீதிமான்கள் தேவையில்லை. அவர்களைக்கொண்டு அரசியல் செய்யமுடியாது; உலக அதிகாரத்தைத் தக்கவைக்க முடியாது.  அரசியல்வாதிகளுக்குத் தேவை அடிதடியில் ஈடுபடும்  துன்மார்க்கர்கள்தான். தேர்தல் நேரங்களில் அவர்கள்தான் அரசியல்வாதிகளுக்கு உதவுவார்கள். 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் ஆட்சிக்கு இத்தகைய மனிதர்கள்தான் தேவை. ஆனால் கிறிஸ்துவின் ஆட்சியில் நாம் பங்குபெறவேண்டுமானால் அவரைப்போன்ற தாழ்மை குணமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். அன்று விடுதலையான பரபாஸ் என்ன ஆனான் என்று தெரியாது. ஆனால் அன்று அநியாயமாய் குற்றம்ச்சாட்டப்பட்டு மரித்த கிறிஸ்துதான் ஜெய கிறிஸ்துவாக இன்றும் மக்களை வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். 

மக்களைப் பிரியப்படுபவர்களாக நாம் வாழவேண்டியதில்லை. என்ன வந்தாலும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே பிரியப்படுத்துபவர்களாக வாழ முயலவேண்டும். ஆம் அன்பானவர்களே அதுதான் கிறிஸ்துவுக்குள் நம்மை வெற்றி சிறந்தவர்களாக வாழச்செய்யும். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,107                                💚 பிப்ரவரி 20, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚  

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 8 )

இன்றைய வசனத்தை பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதுமாறு அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கூறப்படுகின்றது. பிலதெல்பியா சபையின் மேலான காரியம் இங்குக் குறிப்பிடப்படுகின்றது. அதாவது, ஆவிக்குரிய பெலன் சிறிதளவே இருந்தாலும் கர்த்தருடைய நாமத்தை அவர்கள் மறுதலியாமல் கர்த்தருடைய வசனத்தைக் கைக்கொண்டு வாழ்கின்றவர்களாக இருந்தார்கள்.

அதாவது,  அவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வந்தபோதிலும் அவர்கள் கர்த்தரை மறுதலிக்கவில்லை. எனவே அவர்களது வாழ்வில்  திறந்தவாசலை முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் கர்த்தரை மறுதலியாமல் இருந்ததற்குக் காரணம் அவர்கள் கர்த்தரது பொறுமையினை அறிந்திருந்தார்கள். எனவே கர்த்தர் தங்களது துன்பங்களிலிருந்து விடுவிப்பார் என்று முழு நிச்சயமாக நம்பியிருந்தார்கள். 

அப்படி, "என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 10 ) என்கின்றார் கர்த்தர். 

அன்பானவர்களே, இன்று நமக்குத் தேவன் கூறும் செய்தி இதுதான். நமக்குள் இருக்கும்  ஆவிக்குரிய பலத்தை நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது. ஐயோ எனக்கு பலமில்லை; மீண்டும் மீண்டும் ஒரே பாவத்தில் விழுகிறேன் என்று சிலர் அங்கலாய்ப்பார்கள். ஆனால் தேவன் கூறுகின்றார், உனக்குக் கொஞ்சம் பலமிருந்தாலும் கர்த்தரது  நாமத்தை மறுதலியாமல் அவரது பொறுமையை எண்ணி அமைதியாக இருந்தால் வெற்றிபெறுவாய். 

அன்று மீதியானியரை எதிர்த்து போராட தன்னிடம் பலமில்லை என்று கூறிய கிதியோனிடம் தேவன், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) இன்று நம்மிடமும் கூறுகின்றார், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே நான்  உன்னோடு இருக்கின்றேன். "

எனவே நம்மிடம் கொஞ்சம் பலமிருந்தாலும் அதனைக் காத்துக்கொள்வோம். கர்த்தரை மறுதலியாமல் விசுவாசத்தோடு அவர் செயலாற்றும்படி பொறுமையாகக் காத்திருப்போம். "நீ என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" என்கின்றார் கர்த்தர்.  அதாவது உனக்கு நான் தரும் எனது ஆசீர்வாதத்தினை யாரும் தடுக்கமுடியாது என்கின்றார். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,108                               💚 பிப்ரவரி 21, 2024 💚 புதன்கிழமை 💚  

"ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்." ( 1 தீமோத்தேயு 4 : 1 )

பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலராகிய பவுலுக்கு வெளிப்படுத்திய ஒரு தீர்க்கத்தரிசன வசனமே இன்றைய தியானம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அப்போஸ்தலரான பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்டத் தீர்க்கத்தரிசன  வெளிப்பாடு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தீர்க்கத்தரிசன வெளிப்பாடு நிறைவேறும் விதமாக இன்று விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் கிறிஸ்துவைவிட குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு அடிமைகளாகிவிட்டனர். எனவே அந்த ஊழியர்கள் கூறுவது வேத அடிப்படையிலானதா இல்லையா என்பதை அவர்கள் நிதானித்துப் பார்ப்பதில்லை. 

மேலும் தங்களை விசுவாசிகள் என்று கூறிக்கொண்டதாலும் பலருக்கு ஆவியானவரின் உதவியோடு வேதாகமத்தை வாசிக்கத் தெரிவதில்லை. ஆவிக்குரிய சபைகளுக்குச் செல்வதாகக் கூறிக்கொள்ளும் விசுவாசிகள் பலரும், "எங்க பாஸ்டர் இப்படிச்  சொன்னார்" என்று வேதாகம வசனங்களுக்குத் தங்கள் சபை  பாஸ்டர்கள் கூறிய விளக்கத்தையே கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆவியானவரின் வெளிப்படுத்தல் பெரும்பாலான இந்த மக்களுக்கு இருப்பதில்லை. இதுவே இன்றைய தாறுமாறான கிறிஸ்தவ  ஊழியங்கள் நடைபெறக் காரணம். ஆம், மக்களில் பலரும் தாங்கள்  விசுவாசிக்கும் ஊழியர்கள் சொல்வதையே உண்மை என நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் நாம் தப்பவேண்டுமானால் முதலில் இயேசு கிறிஸ்து தரும் மீட்பு அனுபவத்தை நாம் பெறவேண்டியது அவசியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகப்  பாடுபட்டு மரித்து உயிர்த்தார் என்பதே கிறிஸ்தவ விசுவாசம். இதனை ஏற்றுக்கொண்டு நமது பாவங்களை நாம் அவரிடம் அறிக்கையிட்டு நம்மை அவருக்கு ஒப்புவித்தால் நம்மை இரட்சித்துத் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவார்; தொடர்ந்து தனது ஆவியானவரால் வழிநடத்துவார். வேதாகம வசனங்களுக்கு விளக்கத்தை அவர் நமக்குத் தருவார். 

"பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்" என்பதே பவுல் அப்போஸ்தலர் கூறிய அந்தத் தீர்க்கத்தரிசனம். அதற்கேற்பக்   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் இவை நமக்கு ஏற்படுத்தித் தந்த மேலான இரட்சிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தி மக்களை அந்த வழியில் நடத்தாமல் இருப்பதே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயம். 

இன்று நாம் பல்வேறு அரசியல்வாதிகள் பணம் சேர்பதற்காகத் துணிந்து மனச்சாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதைப்  பார்க்கின்றோம். அதுபோலவே தேவனுடைய சுவிசேஷ சத்தியங்களை அறிந்திருந்தும் பணம் சம்பாதிக்கவேண்டும் எனும் நோக்கத்தில் தங்களது மனச்சாட்சிக்கு விரோதமாக சில கிறிஸ்தவ ஊழியர்கள் செயல்படுகின்றனர். அத்தகைய கிறிஸ்தவ ஊழியர்களே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யர்கள். அதாவது மனச்சாட்சியைக் கொன்றவர்கள். 

அப்போஸ்தலரான பவுல் மூலம் ஆவியானவர் மேலும் வெளிப்படுத்திக் கூறுகின்றார், அத்தகைய "பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்." ஆம் அன்பானவர்களே, இன்று இதுவே கிறிஸ்தவர்களிடையே நடைபெறும் போதக வஞ்சனையின் விளைவு.  அதாவது மனச் சாட்சியில் சூடுண்ட பொய்யர்களின் உபதேசத்தினால் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசின் உபதேசத்துக்கும் மக்கள் அடிமையாகி மேலான கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகிப் போகின்றனர். 

எனவே அன்பானவர்களே, மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே வஞ்சிக்கப்படாமல், வஞ்சிக்கிற  ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் தப்பி விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவேண்டியதே இற்றைய கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது. அதற்கு, ஊழியர்களையல்ல; கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும்.  ஊழியர்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கவேண்டும். 

அதிகமான மக்கள் ஒருவரை நம்பி ஓடுவதால் அவர் சத்தியத்தைப் போதிக்கின்றார் என்று பொருளல்ல; அவர் மக்களைத் திருப்திப்படுத்தப் போதிக்கின்றார் என்பதே உண்மை. வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுக்காமல் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்.  


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,109                             💚 பிப்ரவரி 22, 2024 💚 வியாழக்கிழமை 💚  

"ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 41 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தபின்பு தான் உயிரோடு உள்ளதை தன்னோடு உணவருந்தி அவருக்குச் சாட்சிகளாக வாழ்ந்தவர்களுக்கே நேரடியாக வெளிப்படுத்தி தரிசனமானார். தான் உயிரோடிருப்பதை அவர்களுக்கே காண்பித்தார். 

சாதாரண உலக மனிதர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்? முதல் முதலில் பிலாத்துவுக்கு முன்போய், "நீ என்னைக் கொலை செய்ய ஒப்புக்கொடுத்தாயே, இதோபார் நான் உயிரோடு வந்துவிட்டேன்" என்று மார்தட்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து அப்படி மற்றவர்களுக்குத் தரிசனமாகவில்லை. காரணம், பரிசுத்தமில்லாமல் எவரும் தேவனைத் தரிசிக்கமுடியாது என்று வேதம் கூறுகின்றது.

அவர் மனிதனாக உலகினில் வாழ்ந்தபோது அவரை எல்லோரும் கண்டார்கள். ஆனால் அவர் இப்போது வெறும் மனிதனல்ல; மாறாக மனிதத் தன்மையைத் துறந்து தேவனாக காட்சிதருகின்றார்.  எனவே அவர் தன்னோடு இருந்து உண்டவர்கள், தேவனால் நியமிக்கப்பட்டச் சாட்சி வாழ்வு வாழ்ந்தவர்கள் போன்றவர்களுக்கே வெளிப்பட்டார். துன்மார்க்கரும், பதவி வெறியர்களும், பணவெறியரும், குடிவெறியர்களும் தேவனைத் தரிசிக்கமுடியாது. 

அன்பானவர்களே, இன்றும் இதுவே நடந்துகொண்டிருக்கின்றது. கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டாலும் பலரும் கிறிஸ்துவின் வல்லமையையும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களையும் முழுவதுமாக அறியவில்லை; ஏற்றுக்கொள்வதுமில்லை. நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிறிஸ்து  இன்றும் ஜீவனுள்ளவராக இருப்பதையும் தன்னை உண்மையாய் ஏற்றுக்கொண்டு மீட்பு அனுபவம் பெற்றவர்களிடம் அவர் இப்போதும் பேசுவதையும், வழிநடத்துவதையும் பலரும்  ஏற்றுக்கொள்வதில்லை. 

வேதாகமம் புராண கதையல்ல; அவற்றில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் என்றோ நடைபெற்ற காரியங்களல்ல. "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?" ( யோவான் 11 : 40 ) என்று இயேசு கிறிஸ்து கூறியதுபோல விசுவாசித்தால் அவரது மகிமையினை நாம் காண முடியும். 

அப்போஸ்தலரான பவுலோடு கிறிஸ்து பேசுவதைக்கூட அந்தக்காலத்தில் பலர் விசுவாசிக்கவில்லை. எனவேதான் அவர் கூறுகின்றார், "கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 13 : 3 ) 

"எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்." என்று கூறியுள்ளபடி நாம் அவரோடு நமது உறவினை வளர்த்துக்கொள்வோமானால் நம்மோடும் அவர் பேசுவார். எனவேதான் நாம் ஜீவனுள்ள தேவனை வழிபடுபவர்கள் என்று கூறுகின்றோம். வெறுமனே நாம் சுவரைப்பார்த்து ஜெபிப்பதுபோல அல்லது கண்ணுக்குத் தெரியாத காற்றிலே ஜெபிப்பவர்களல்ல; நமது ஜெபத்தைக் கேட்கவும் பதிலளிக்கவும் அன்பான ஒரு தகப்பன் உண்டு. அவரது குரலைக் கேட்கவும் அதற்குக் கீழ்படியவும் முயலவேண்டும்.   

தேவனோடு நமது தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொண்டு அவரோடு இணைந்த வாழ்வினை வாழ்வோமானால் அவரது உடனிருப்பையும்  அவர் நம்மோடு பேசி வழிநடத்துவதையும் வாழ்வில் உணரலாம்.  


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,110                             💚 பிப்ரவரி 23, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚  

"மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?" ( சங்கீதம் 88 : 10, 11 )

இன்றைய நமது தியான வசனமானது எடுக்கப்பட்ட சங்கீதம் எஸ்ராகியனாகிய  ஏமானின் போதக சங்கீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? என இன்றைய வசனம் கேட்கும் கேள்விகள் பொதுவாக "இல்லை" எனும் பதிலைத் தருவனவே. 

பல்வேறு விதமான துக்கத்தால் நிறைந்திருந்த ஏமான் வாழ்வில் விரக்தியடைந்து இந்த வசனங்களைக் கூறுகின்றார். இன்றைய தியான வசனம் கூறப்பட்டுள்ள சங்கீதத்தின் துவக்கத்தில் இதனை  நாம் வாசிக்கின்றோம். அவர் கூறுகின்றார், "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது. நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன்." ( சங்கீதம் 88 : 3, 4 )

அன்பானவர்களே, இவைபோன்ற சூழ்நிலைகள் நமது வாழ்விலும் சிலவேளைகளில் ஏற்படலாம். வாழ்வில் எல்லா வழிகளும் அடைபட்டு இனி நம்பிக்கையே இல்லை எனும் நிலை வரும்போது நாமும் இப்படி எண்ணலாம். "இனி நமக்கு தப்பிக்க வழியே இல்லை; எல்லாம் முடிந்துபோயிற்று " என எண்ணலாம். ஆனால் நமது தேவன் மரித்தவர்களுக்கும் அதிசயம் செய்கின்றவர் என்பதற்கு வேதாகமத்தில் பல சம்பவங்களை நாம் வாசிக்கலாம். 

அதுபோலவே, "பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?" என்று கேள்வி எழுப்புகின்றது இன்றைய வசனம். ஆம், இதற்கு இயேசு கிறிஸ்து மரித்து நான்கு நாட்களான லாசருவை பிரேதக்குழியிலிருந்து எழுப்பியது பதிலாக இருக்கின்றது.  இன்று வாழ்வே முடிந்துபோயிற்று என்று பலர் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அன்பானவர்களே, கிறிஸ்துவை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வோமானால் மரித்து புதைக்கப்பட்டு பல நாட்களானதுபோன்ற நமது மரித்த வாழ்வை அவர் உயிரோடு எழுப்புவார். 

தேவனது வல்ல செயல்கள் அனைத்தும் மனிதனால் முடியாது எனும் சூழ்நிலையில்தான் வெளிப்படும். ஈரோத்  பள்ளத்தாக்கின் இருபுறமும் மலைகள், எதிரே செங்கடல், பின்னால் துரத்திவரும் எகிப்தியர். (யாத்திராகமம் 14 ஆம் அதிகாரம்) இஸ்ரவேல் மக்கள் தப்பிக்க எந்த வழியுமே இல்லை. எகிப்தியர் அவர்களை நெருங்கி அழித்துவிட விரைந்து வந்துகொண்டிருக்கும்போது தான் தேவனது வல்லமை வெளிப்பட்டு செங்கடலை இரண்டாகப் பிரித்து அவர்களைக்  கால்நனையாமல் கடலைக் கடந்து தப்பிக்கச்செய்தது.    

"மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 18 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம் அன்பானவர்களே, மேற்படி வசனம் கூறுவதுபோல நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்துக்கும் பாதாளத்துக்கு உரிய திறவுகோலைக் கையில் வைத்துள்ளார். எனவே எத்தகைய மரண சூழ்நிலை வந்தாலும் நாம் அச்சப்படத் தேவையில்லை. 

அவர் மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்கிறவர்; செத்துப்போனவர்களை உயிரோடு எழுப்பித் தம்மைத்  துதிக்கச் செய்கிறவர். பிரேதக்குழியில் அவரது கிருபையும், அழிவில் அவரது  உண்மையும் விபரிக்கப்படும்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,111                             💚 பிப்ரவரி 24, 2024 💚 சனிக்கிழமை 💚  

"கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்". (2 சாமுவேல் 6:16)

கர்த்தருடைய பெட்டியைத் தாவீது தனது நகரத்துக்குக் கொண்டுவர முயன்றார். கிபியாவிலுள்ள அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டப்  பெட்டி மூன்று மாதங்கள் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் இருந்தது. பின்பு அங்கிருந்து அதனைத் தாவீதின் நகரத்துக்குள் கொண்டுவந்தான். (2 சாமுவேல் 6 ஆம் அதிகாரம்) அப்போது தாவீது ராஜா மகிழ்ச்சியாக ஆவியில் நிறைந்து பெட்டியின் முன்னே ஆடிப்பாடினார்.  தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, சவுலின் மகள் மீகாள் தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.

இன்றும் இத்தகைய அவமதிப்பு நடைபெறுவதை நாம் காணலாம். ஆவிக்குரிய ஆராதனை என்பது ஆடலும் பாடலுமல்ல என்பது உண்மையாயினும் உண்மையான உள்ளத்தோடு ஆவியில் நிறைந்து ஆராதனை செய்யும் மக்கள் உண்டு. அவர்களைச் சில பாரம்பரியச்  சபையினர் கேலியும்கிண்டலும்  செய்வதுண்டு. அன்பானவர்களே, அத்தகைய மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்கவே இந்த வசனம் இன்றைய தியானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  

தேவன் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஆவிக்குரிய அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம். சிலர் தேவனது உடனிருப்பையும் கிருபையையும்  அவர் தங்களுக்குச் செய்த நன்மைகளையும் உணர்ந்து ஆவியில் நிறைந்து துதிக்கலாம். இதனையே தாவீது தன்னைப் பார்த்து நகைத்த மீகாளுக்குப் பதிலாகக் கூறுகின்றார். 

"உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய  கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும் படிக்குத்தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.  இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்". (2 சாமுவேல் 6: 21,22) என்கின்றார் தாவீது. அதாவது, நான் ராஜாதான்; ஆனால் , கர்த்தர் எனக்குச் செய்த நன்மைகளுக்காக நான் ஆடிப் பாடுவதுமட்டுமல்ல கர்த்தருக்காக இன்னும் என்னை எவ்வளவுத் தாழ்த்த முடியுமோ அவ்வளவு என்னைத் தாழ்த்தி அற்பனும் நீசனுமாக இருக்கவும் நான் தயார்தான் என்கிறார் தாவீது. 

மெய்யான ஆவிக்குரிய வாழ்வு பெருமை கொள்வது கிடையாது. பல்வேறு விதமான நகைகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டு விதவிதமாக பட்டாடைகள் அணிந்து ஆலயங்களுக்குச் செல்பவர்களுக்கு ஆவிக்குரிய இத்தகைய தாழ்ச்சி புரியாது; ஆவிக்குரிய மேலான அனுபவங்கள் தெரியாது. அவர்கள் மீகாளைபோல மற்றவர்களை அற்பமாக மதிப்பிட்டுக்கொன்டுதான் இருப்பார்கள். 

தாவீதின் உண்மையான இருதயத்தையும் அவர்  நடனமாடித் தன்னைத் துதிப்பதையும் கர்த்தர் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார். அதற்கு மாறாகத் தாவீதை அற்பமாக எண்ணிக் கேலிசெய்த மீகாளைத் தேவன் தண்டித்தார். ஆம், "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." (2 சாமுவேல் 6: 23)

எனவே அன்பானவர்களே, நாம் தேவனைத் துதிப்பதைப்போலவும் ஆராதிப்பதைப்போலவும் தான் எல்லோரும் செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்த்து மற்றவர்களைக்  கேலி செய்வது சாபத்தையே கொண்டுவரும்.  தேவனை எப்படி ஆராதிக்கவேண்டும் என்பதற்கு ஒவ்வொரு சபைப் பிரிவும் வெல்வேறு முறைகளை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு முறைதான் சரி என்று நாம் கூற முடியாது. "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ( யோவான் 4 : 24 ) என்பதே இயேசு கிறிஸ்து கூறியது. 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,112                             💚 பிப்ரவரி 25, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚  

"............... காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. (  ரோமர் 1 : 20 )

கடவுள் உண்டுமா கிடையாதா எனும் சர்ச்சை ஆதிமுதல் தொடர்ந்து இருந்து  கொண்டுதான் இருக்கிறது.  இல்லை என்பவர்களும் உண்டு என்பவர்களும் பல்வேறு ஆதாரங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் இங்கு அதனைத் தெளிவுபடுத்துகின்றார். அதாவது உலகினில் நாம் காணும் படைப்புகளே கடவுள் உண்டு என்பதற்கும் அவரது வல்லமை,  தேவத்துவம் இவற்றிற்கும்  சான்று என்கின்றார்.  உண்டாக்கப்பட்ட பொருட்களில் அவை தெளிவாய்க் காணப்படும் என்கின்றார்.

மனிதனது உடலே ஒரு அதிசயம். மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேர்த்தியாய் அமைக்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். மனித மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித கண்களுக்கு இணையான காமெரா இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித உடலை ஆய்வு செய்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு விஞ்ஞானி மனிதனது நரம்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ள வித்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மனிதனது நரம்பு மண்டலத்தைப் பார்த்துவிட்டு அவர் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"மனித உடலில் இரத்த நாளங்களும் நரம்புகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் என்னை ஆச்சரியப்படச் செய்தது. இரண்டு இரத்த நாளங்கள் இணையும் இடம், பிரியும் இடம் இவை உலகில் உள்ள ஒரு பிளம்பர் குடிநீர் குழாயில் இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் ஒரு எலெக்ட்ரிஷியன் மின்சார உபகரணங்களுக்கு இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக இவைகள் தானாக உருவாகச்  சாத்தியமே இல்லை. இதனைத் தாவீது ராஜாவும் ஆவியில் கண்டு களிகூர்ந்து பின்வருமாறு கூறுகின்றார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்." (  சங்கீதம் 139 : 14 )

மேலும், விண்வெளிக் கோள்களின் அமைப்பைப்  பல விஞ்ஞானிகள் கண்டு பிரமித்துள்ளனர். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்குடன் சென்று திரும்பிய ஆல்ட்ரின் விண்ணிலிருந்து பூமியைப் பார்க்கும்போது வேதம் தெளிவாகக்  குறிப்பிட்டுள்ள பல வேத வசனங்கள் தனக்கு விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தாலே தேவனைப் பற்றியும் அவரது மகத்துவங்களைப் பற்றியும்  வியந்து அறிக்கையிடுவார்  என்று அவர் குறிப்பிடுகின்றார். இவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் கர்த்தரது ஊழியக்காரனாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . 

இதுவரை உலகம் கண்ட விஞ்ஞானிகளில் மிகப்பெரியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  இவரது கோட்பாடுகளின் அடிப்படையிலேயே விண்வெளிக்கு ராக்கெட்களை  அனுப்புகின்றனர். அவர் கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லையெனினும் விண்வெளியின் கோள்கள் அனைத்தையும்  ஒரு மிகப்பெரிய மூளை சிந்தித்து ஞானமாய் வடிவமைத்துள்ளது என்கின்றார். ஆனால் அந்த மிகப்பெரிய மூளைதான் தேவன் என்பதை இந்த மேதை இறுதிவரைக் கண்டுகொள்ளவில்லை. 

சங்கீத புத்தகத்திலும்  "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; ......" (  சங்கீதம் 19 : 1- 4 ) என்று படிக்கின்றோம்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனது வல்லமையும் மகத்துவமும் உலகப் படைப்புகளில் தெளிவாகத்  தெரிவதால் "அவர்கள் (கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள்) சாக்குபோக்குச் சொல்ல இடமில்லை" என்று குறிப்பிடுகின்றார். அதாவது அவர்கள் நியாயத் தீர்ப்புநாளில் இதனைக் காரணமாகச் சொல்லித்  தப்பித்துக்கொள்ளமுடியாது என்கின்றார். 

தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஏற்பில்லாத பாவ வாழ்க்கை வாழ்வதும் கடவுள் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பானதுதான். ஆம் அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்.  "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; .." (  சங்கீதம் 53 : 1 )



'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,113                             💚 பிப்ரவரி 26, 2024 💚 திங்கள்கிழமை 💚  

"அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." ( சங்கீதம் 106 : 43 )

நமது சுய யோசனையில் சார்ந்துகொண்டு தேவனுக்கு எதிராக நாம் செயல்பட்டு வாழ்வோமானால் தேவனது பார்வையில் அது அக்கிரமமாக இருக்கும். அத்தகைய அக்கிரமம் நம்மைச் சிறுமைப்படுத்திவிடும் என எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம்.

இஸ்ரவேல் மக்களது வாழ்கையினைப் பார்த்தால்  அவர்கள் எப்போதும் தேவனுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே இருந்தனர்.  எகிப்திலிருந்து விடுதலையாகி கானான் தேசத்தை அவர்கள் சுதந்தரித்தபின் தேவன் அவர்களைப் பல்வேறு நியாயாதிபதிகள் மூலம் நடத்தினார். இறுதியில் அவர்கள் சாமுவேலிடம் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று முறையிட்டு  அவர் அவர்களுக்கு சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார். 

இஸ்ரவேல் மக்கள் தங்களை மீட்டு  இரட்சித்து வழிநடத்திய  தேவனைவிட்டு அவ்வப்போது விலகி அந்நிய தேவர்களை வழிபடத்துவங்கினர்.  எப்போதெல்லாம் அவர்கள் தடம் மாறினார்களோ அப்போதெல்லாம் தேவன் அவர்களை எதிரி ராஜாக்களுக்கு  அடிமைகளாக்கி அவர்களைச் சிறுமைப்படுத்தினார். பின்னர் தேவனிடம் மன்னிப்புக்  கேட்டு முறையிடும்போது விடுவித்தார். ஆனாலும் அவர்கள் சிறிதுகாலத்தில் மீண்டும் வழி தவறினர்.

இப்படி, "அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." 

அன்பானவர்களே, இன்று நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் தேறியவர்களாக இருக்கலாம். ஆனால் நமது வாழ்வு சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்வாக இருக்குமானால் நாம் நம்மையே சோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம். அநேகந்தரம் தேவன் நமது பாவங்களையும் தவறுகளையும் மன்னித்து விடுவித்தும் நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். நம்மை ஆய்வுசெய்து பார்ப்போம்.

இன்றும் நமக்கு ஏற்படும் பல்வேறு துன்பங்கள் பிரச்சனைகளுக்கு நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்படுவது காரணமாக இருக்கலாம்.  எனவே "என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே." ( எபிரெயர் 12 : 5 ) என்று அறிவுறுத்துகின்றது வேதம். மட்டுமல்ல இப்படி தேவன் நம்மைக் கடிந்துகொள்ளும்போது நாம் உணர்வடைந்து மனம் திரும்பவேண்டியது அவசியம்.

தேவன் இஸ்ரவேலர் தன்னைவிட்டு விலகி பாவம் செய்தபோது அவர்களை விடுவித்தாலும்  எல்லோரும் அந்த விடுதலையின் பலனை அனுபவிக்கவில்லை. பலர் அழிக்கப்பட்டனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். இஸ்ரவேலரைப்போல வணங்கா கழுத்துள்ளவர்களாக வாழ்வோமானால் எப்போதும் தேவ துணை நமக்குக் கிடைக்காது. 

எனவேதான் நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கின்றது, "அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்." ( நீதிமொழிகள் 29 : 1 )


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 
தொடர்புக்கு:-96889 33712


"தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண்கள்  அவர்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன." ( சங்கீதம் 33 : 18, 19 )

கர்த்தரது கிருபையினைப் பெறவேண்டும் என எண்ணி கர்த்தருக்குப் பயந்து வாழும் மனிதர்களது வாழ்வில் கர்த்தர் என்னச் செய்வார் என்பது இன்றைய வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

முதலாவது அப்படிக் கர்த்தருக்குப் பயந்து வாழும் மனிதனது ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காக்கின்றார். அதாவது உலக மரணமல்ல, மாறாக ஆத்தும மரணம். ஆம், அத்தகைய மனிதர்களை இரண்டாம் மரணமாகிய நரக  அக்கினி பற்றிக்கொள்ளாது. மேலும் வறட்சியான பஞ்சகாலத்தில் அவர்கள் உயிரோடு காக்கப்படுவார்கள். இந்த உலகத் துன்பங்கள் பிரச்சனைகள் அவர்களை மேற்கொள்ளாது. மூன்றாவதாக, கர்த்தரது  கண்கள் அவர்கள்மேல் எப்போதும் நோக்கமாயிருக்கும். 

இதனை உணர்ந்திருந்தால் தாவீது ராஜா கூறுகின்றார், "என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்." ( சங்கீதம் 59 : 10 ) ஆம், தாவீது ராஜா பாவம் செய்தாலும் அவர் தேவனது கிருபையினை அதிகமாகச் சார்ந்திருந்ததால் தேவன் அவரை மரணக் கண்ணிகளிலிருந்து பலமுறை தப்புவித்தார்.  அவருக்கு எதிர்த்து வந்தவர்களை அழித்து ஒழித்தார். 

கர்த்தருடைய கண்கள்  அவர்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன எனும் இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்,  "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கின்றன; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது." (1பேதுரு 3 : 12) நீதியுள்ள வாழ்க்கையினை வாழ நாம் நம்மை ஒப்புக்கொடுத்தாலே போதும் கர்த்தரது  கிருபையினை நாம் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் அப்போஸ்தலரான பேதுரு கூறியுள்ளபடி, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கின்றன. அன்பானவர்களே, நாம் நமது சுய பலத்தால் அல்ல; மாறாக, கர்த்தரது கிருபையினால்தான் நிலைநிற்கின்றோம். சிலர் தாங்கள் ஜெபிப்பதால்தான் எல்லாம் நடந்தது என எண்ணி  "நான் ஜெபித்ததால்தான் கர்த்தரது கிருபையினையும் எனது வேண்டுதல்களையும் பெற்றுக்கொண்டேன்" என்று கூறுவார்கள். அன்பானவர்களே, ஜெபம் நமது வாழ்வில் முக்கியமானது எனினும் நாம் நமது ஜெபத்தால்தான் ஒன்றை பெற்றுக்கொண்டோம் என எண்ணினால் கர்த்தரது கிருபையினை அவமதிக்கின்றோம் என்று பொருள். 

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்." ( யாக்கோபு 1 : 17, 18 ) 

யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாமல்  அவர் சித்தங்கொண்டு நமக்கு நன்மைகளைத் தருவதுதான் தேவனது கிருபை. எனவேதான் நாம் அவரது கிருபையினைச் சார்ந்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது. அப்போது கர்த்தர் நமது ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவித்துக் காப்பார்.  அவரது கண்கள் நம்மேல் நோக்கமாயிருக்கும். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,115                             💚 பிப்ரவரி 28, 2024 💚 புதன்கிழமை 💚  

"சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்." ( ஏசாயா 31 : 4 )

கர்த்தருடைய பரிசுத்த சீயோனுக்கு ஏற்ற  மக்களாக நாம் வாழும்போது கர்த்தரது கரம் நமக்கு எத்தகைய பாதுகாப்பினைத் தரும் என்பதனை இன்றைய வசனம் விளக்குகின்றது. 

மேய்ப்பர்கள் மந்தையினை மேய்த்துக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் வந்து ஆடுகளைக் கவர்ந்துசெல்வதுண்டு. அப்படித் தனது குட்டிகளுடன் சிங்கம் வந்து ஆடுகளைப் பிடிக்கும்போது மேய்ப்பர்கள் ஒன்றுசேர்ந்து குரலெழுப்பி அதனைத் துரத்துவார்கள். ஆனால் அந்தக் கூக்குரலுக்குச் சிங்கம் பயப்படாது. தான் பிடித்த ஆட்டை விடவும் செய்யாது. இப்படியே தேவனும் பிடிவாத வைராக்கியமாகத் தனது மக்களுக்காகச் செயல்படுவேன் என்கின்றார். 

மேலும் அடுத்த வசனத்தில் ஏசாயா கூறுகின்றார், "பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்." ( ஏசாயா 31 : 5 )

வீட்டில் கோழி வளர்பவர்கள் தாய்க்கோழித் தனது குஞ்சுகளை காகம் பருந்து போன்றவற்றிடமிருந்து காப்பாற்ற போராடுவதைப் பார்த்திருக்கலாம்.  தன்னால் அவைகளுக்கு ஒப்பாகப் பறக்க முடியாவிட்டாலும் தாய்க்கோழியானது முயன்றவரை பறந்து தனது குஞ்சுகளைப் பாதுகாக்கும். சிலவேளைகளில் காகத்தைக் கொத்திக் கொன்றுவிடுவதுமுண்டு. அதுபோல தேவன் நமக்கு ஆதரவாக இருப்பார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமென்றால் நமக்குத் தேவனிடமிருந்து இத்தகைய பாதுகாப்புக் கிடைக்கும். பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம், அல்லது நமக்கு எதிராகச் சிலர் செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தாங்கள்  யூத ராஜ சிங்கத்தோடு மோதுகின்றோம் என்பது தெரியாது. துணித்து நமக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்களென்றால் அவர்களது வாழ்க்கைப் பரிதாபகரமானதாகவே இருக்கும்.

கர்த்தரது  இத்தகைய பாதுகாப்பையும் உடனிருப்பையும் அனுபவத்தில் உணர்ந்த தாவீது கூறுகின்றார், "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம்புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." ( சங்கீதம் 18 : 2 )

கர்த்தரது  உடனிருப்பை நாம் உறுதி செய்துகொள்வோமானால் நாம் எந்த பிரச்சனை, துன்பம் வந்தாலும் உறுதியுடன் நிற்க முடியும்.  "அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்." ( சங்கீதம் 144 : 2 ) என்று தாவீதைப்போல நம்பிக்கையுடன் கூறமுடியும். 

ஆம் அன்பானவர்களே, பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் நமக்கு ஆதரவாக இருப்பார்; அவர் நம்மைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து நம்மை விடுவிப்பார். கலங்காமல் உறுதியுடன் இருப்போம்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,116                             💚 பிப்ரவரி 29, 2024 💚 வியாழக்கிழமை 💚  

"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." ( லுூக்கா 23 : 27, 28 ) என்றார்.

பெரிய வியாழன் மற்றும் துக்கவெள்ளி நாட்களில் நடைபெறும் ஆராதனைச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பலருக்கு இயேசுவின் பாடுகளும் மரணமும் மனதில் ஒரு உணர்ச்சியைத் தூண்டி கண்களில் கண்ணீர் வரவைக்கலாம். இது மன உணர்ச்சியினால் ஏற்படும் ஒரு தூண்டுதல். ஒரு சோகமான திரைப்படத்தைப் பார்க்கும்போது பலர் அழுவதுண்டு; சிலருக்கு புத்தகங்களில் படிக்கும் கதைகள் இப்படி உணர்ச்சியினைத் தூண்டலாம். ஆனால் அடுத்தச் நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் சித்திரவதைகளும் மரணமும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுது மறந்துபோவதற்கல்ல. இப்படிப் பரிதாபப்பட்டுத் தனக்காக மக்கள் அழுவதை இயேசு விரும்பவுமில்லை. அதனையே தன்னைப் பார்த்து அழுத பெண்களுக்கு அவர் கூறுகின்றார், "நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்".

பாவமும் மரணமும் எவ்வளவு கொடூரனானவை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் மக்களுக்கு அதனைப்பற்றி அக்கறையில்லாமலிருந்தது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் அவர்மேல் பரிதாபம்கொண்டும் அழுதனர். எனவே தங்களது பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பாமல், தங்களது குழந்தைகளது மனம்திரும்புதலைகுறித்து கவலைகொள்ளாமல் வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுவதில் பிரயோஜனமில்லை என்பதையே இயேசு கிறிஸ்து இங்குக் குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் அந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்." ( லுூக்கா 23 : 31 )  நமது வாழ்க்கைப் பட்ட மரம்போல இருக்கையில் அதனைக்குறித்துக் கவலையற்று வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து கண்ணீர்விடுவதில் அர்த்தமில்லை.

அன்பானவர்களே, இதுவரை வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானது போதும். இத்தகைய உணர்ச்சிவசப்படுவது ஒன்றுக்கும் உதவாது. நாம் மனம்திரும்பாமல்போனால் இறுதியில் அது நம்மை நரகத்துக்கு நேராகக் கொண்டுசென்றுவிடும். "ஆண்டவரே, ஆண்டவரே உமக்காக துக்கவெள்ளிக்கிழமைதோறும் அழுதேனல்லவா?" என்று நாம் கூறி தப்பிட முடியாது. ஏனெனில், மனம் திரும்பாமல் இருந்துகொண்டு வெறுமனே பிரசங்கங்களைக் கேட்பதோ தேவனுடைய ஆலயத்தில் நற்கருணை உட்கொள்வதோ கூட நம்மை பரலோகத்துக்கு உரிமையாளராக்காது என்று இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:-

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13 : 26 , 27 )

அன்பானவர்களே, இந்த நாட்களில் நாம் அழுவது வெறும் உணர்ச்சிவசப்பட்டு, இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும். அதனையே இயேசு கிறிஸ்து விரும்புவார்