DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, April 30, 2025

🦋வேதாகம முத்துக்கள் - ஏப்ரல் 2025

                              - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

வேதாகமத் தியானம் - எண்:- 1,516   

'ஆதவன்' 💚ஏப்ரல் 01, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்" (1 தீமோத்தேயு 2: 1)

ஆவிக்குரிய மனிதர்கள் என்று நம்மை நாம் கூறிக்கொள்ளவேண்டுமானால் நமக்காக, நமது குடும்பத்து உறுப்பினர்களுக்காக மட்டும் ஜெபிக்கும் குணம் மாறி நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் குணம் உள்ளவர்களாக மாறவேண்டியது அவசியமானதாகும். உலக மனிதர்கள் மற்றவர்கள்மேல் வஞ்சகம், பொறாமை, எரிச்சல்  போன்ற அவலட்சண குணங்களுள்ளவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தேவன் நமக்குள் வந்து செயல்படும்போது இந்தக்குணங்கள் நம்மைவிட்டு மாறுகின்றது. நாம் எல்லோரையும் நேசிப்பதால் எல்லோருக்காகவும் ஜெபிக்கின்றவர்களாக மாறிவிடுவோம்.

லோத்து ஆபிரகாமைவிட்டுப் பிரிந்து சென்றபோது நல்ல செழிப்பான நீர்வளமிக்க நிலப்பரப்பைத் தனக்கென்று தெரிந்துகொண்டார். ஆனால் ஆபிரகாம் அதற்காக அவர்மேல் வெறுப்புக் கொண்டவராக இருக்கவில்லை. அவர் தேவனையே சார்ந்துகொண்டார். லோத்து வசிக்கும் பகுதிக்கு தேவனால் அழிவு வருகின்றது எனத் தெரிந்தபோது அவர் லோத்துவுக்காகப் போராடி  ஜெபித்தார். இதனை நாம் ஆதியாகமம் 18:23-33 வசனங்களில் வாசிக்கலாம். தேவன் ஆபிரகாமின் ஜெபத்தை அங்கீகரித்து லோத்தை அழிவிலிருந்து காப்பாற்றினார். 

இதனை நாம், "தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது,  ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்." ( ஆதியாகமம் 19: 29) என்று வாசிக்கின்றோம். 

இதுபோல அனைவருக்காகவும் குறிப்பாக நம்மை ஆளும் தலைவர்களுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டுமென்று நமக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. நாம் விரும்பும் கட்சியின் தலைவருக்கு மட்டுமல்ல, மாறாக நம்மை ஆளும் தலைவர் எந்தக் கட்சியினைச் சார்ந்தவராக இருந்தாலும் நாம் அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும். "நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்." (1 தீமோத்தேயு 2: 2)

மேலும், நம்மை வருத்தும் சில நோய்களுக்கும் மற்றவர்களுக்காக ஜெபிப்பது மருந்தாக இருக்கின்றது. இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5: 16) என்று கூறுகின்றார். நாம் குணமடையவேண்டுமானால் நமது குற்றங்களை அறிக்கையிட்டு ஜெபிக்கவேண்டியது அவசியம். 

வேதாகமம் கூறும் இந்த அறிவுரை விஞ்ஞானபூர்வமானது என்று மருத்துவ உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மற்றவர்கள்மேல் நாம் கொள்ளும் வெறுப்புணர்ச்சி நமது உடலில் தேவையற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி நம்மில் பல்வேறு நோய்களை உருவாக்குகின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள். நாம் வெறுப்பை மாற்றி அவர்களுக்காக ஜெபிக்கும்போது நமது நோயும் குணமாகின்றது. 

எனவே நமக்காக மட்டும் ஜெபிக்கும் குறுகிய மனப்பான்மையினை விட்டு எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணப் பழகுவோம். இத்தகைய ஜெபத்தின்மேல் தேவனும் பிரியமாக இருக்கின்றார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,517   
'ஆதவன்' 💚ஏப்ரல் 02, 2025. 💚புதன்கிழமை

"அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது." ( ரோமர் 4: 13)

இன்றைய தியான வசனம் மூலம் நாம் அறியவேண்டிய கருத்து  பத்துக்கட்டளைகள், பிற நியாயப்பிரமாணக் கட்டளைகள்,  திருச்சபைக் கட்டளைகள் இவற்றுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதால் மட்டும் நாம் தேவனுக்குமுன் நீதிமான்கள் ஆகிவிடுவதில்லை  என்பதே.    பழையஏற்பாட்டுக் காலத்திலும் பலர் இப்படியே எண்ணிக்கொண்டிருந்தனர். குறிப்பாக, பரிசேயர்கள் இப்படிப்பட்ட எண்ணத்தில்தான் இருந்தனர்.  ஆனால் வேதம், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவந்தால் மட்டும் ஒருவர் நீதிமானாக முடியாது என்று கூறுகின்றது. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." ( ரோமர் 3: 20) என்று கூறுகின்றார். முற்காலத்தில் பரிசேயர்கள்  கட்டளைகளை வெறும்  கட்டளைகளாகப் பார்த்தனரேத்தவிர நீதி நியாயம் நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்தனர். கட்டளைகளுக்கு முன்னுரிமைகொடுத்து மனிதமாண்பை புறம்பேத் தள்ளினர். 

வெறுமனே கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அல்ல மாறாக,  தேவன்மேல் விசுவாசம்கொண்டு வாழும்போது மட்டுமே நாம் மெய்யான நீதியுள்ள வாழ்க்கை வாழமுடியும். இதனையே அப்போஸ்தலரான பவுல், "வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது" ( ரோமர் 4: 3) என்று கூறுகின்றார். 

உன் சந்ததி வானத்தின் நட்சத்திரங்களைப்போல இருக்குமென்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்களிக்கக் காரணம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் வாழ்ந்த வாழ்க்கையல்ல, மாறாக தேவன்மேல் அவர் கொண்ட விசுவாச  வாழ்வுதான் காரணம். உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கும்  அவன் சந்ததிக்கும் நியாயப்பிரமாணத்துக்கு அவர் கீழ்ப்படிந்து வாழ்ந்ததால் கிடைக்காமல் அவரது  விசுவாசத்தினால் வந்த நீதியினால் கிடைத்தது.

மேலும் இந்த விசுவாச வாழ்க்கையால்தான் ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்கின்றோம்.  "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்." ( ரோமர் 4: 17)

ஆம் அன்பானவர்களே, வெறுமனே கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதால் நாம் நீதிமான்கள் ஆகிடமுடியாது. கிறிஸ்து இயேசுவின்மேல்  பூரண விசுவாசம் கொண்டு வாழும்போது மட்டுமே அந்த விசுவாசம் நம்மைப் பூரண ஆவிக்குரிய மக்களாக மாற்றிடமுடியும். காரணம், கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழும்போது நாம் ஆவியானவரின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகின்றோம். அப்போது அவரே நம்மை வழிநடத்துவார். 

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16: 13) என்று இயேசு கூறவில்லையா? எனவே, கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை இரட்சித்து நீதியின் பாதையில் நடத்திடமுடியும். 

எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3: 7) என்றும், "அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்." ( கலாத்தியர் 3: 9) என்றும்  நமக்கு உணர்த்துகின்றார். கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிப்போம்; மெய்யான நீதியின் வாழ்க்கையினை வாழ்ந்து தேவ ஆசீர்வாதத்தைப் பெறுவோம். "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்." ( எபிரெயர் 10: 38) தேவனாகிய கர்த்தர்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,518  
'ஆதவன்' 💚ஏப்ரல் 03, 2025. 💚வியாழக்கிழமை

"அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்." ( ரோமர் 5: 3, 4)

ஆவிக்குரிய வாழ்வில் நாம் தினம்தோறும் வளர்ச்சியடைந்து முன்னேறவேண்டியது அவசியம். இந்த வளர்ச்சியே நமக்கு தேவனை நெருங்கவும் மேலான அனுபவங்களை நாம் பெறவும் உதவிடும். நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் மேலும் வளரும்படிக்குத் தனது ஆவிக்குரிய அனுபவம் மூலம் கற்றுக்கொண்டதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வார்த்தைகள்மூலம்  நமக்கு அறிவுறுத்துகின்றார். 

வாழ்க்கையில் ஏற்படும் உபத்திரவங்கள், துன்பங்கள் இவை நமக்குத் தேர்வுபோல (examination) இருக்கின்றன என்கின்றார் அவர். நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வுகள் நமக்கு நடத்தப்படுகின்றன. ஆண்டின் இறுதியில் ஆண்டு இறுதித்தேர்வு நமக்கு வைக்கப்படுகின்றது. இந்தத் தேர்வுகளில் நாம் எப்படி சாதித்துள்ளோம் என்பதனைப் பொறுத்தே நாம் மேல் வகுப்புக்கு மாற்றலாகிச் செல்கின்றோம். 

இதுபோலவே, வாழ்வில் ஏற்படும் உபத்திரவங்கள் நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ளவும் அந்தப்பொறுமை நாம் நமக்கு தேவன் வைத்துள்ள தேர்வை வெற்றிகொள்ளவும் அதன்மூலம் நமது நம்பிக்கை வளரவும்  உதவுகின்றது. இந்தத் தெளிவு நமக்கும் வேண்டும்.  இந்தத் தெளிவு இருப்பதால் உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம் என்கின்றார். 

ஆனால், தொடர்ந்த உபத்திரவங்களும் துன்பங்களும் நம்மில் விசுவாசக் குறைவை ஏற்படுத்தக்கூடும். 'தேவனையே நம்பிக்கொண்டு இருக்கின்றோம், ஒருவேளை இறுதியில் அவமானமடைந்து வெட்கப்பட்டுப் போவோமோ?' என்று நமக்குள் எண்ணமெழலாம். ஆனால், நமது உள்ளத்தில் தேவனுடைய ஆவியானவர் இருப்பாரென்றால்  நாம் அப்படிப் பயப்படத் தேவையில்லை.  இதனையே அவர், "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ( ரோமர் 5: 5) என்று கூறுகின்றார். 

எனவே அன்பானவர்களே, அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல, உபத்திரவம், துன்பங்கள் வாழ்வில் ஏற்படும்போது தேர்வைச் சந்திப்பதற்குத் தயாராவதுபோல நாம் தயாராகி அதனை வெற்றிகொள்ள ஆவியானவரின் உதவியை நாடுவோம். அப்படி நாம் அந்தத் துன்பங்களை மேற்கொண்டுவிட்டபின் அதுவே நமக்கு ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சித்தரும் மேன்மையான காரியமாக இருக்கும். மற்றவர்களோடு நாம் அவற்றை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறவர்களாக மாறிவிடுவோம். 

அப்போஸ்தலரான பவுலின் நிரூபங்கள் இன்றும் வல்லமையுடன் நமது வாழ்வில் செயல்பட அவரது துன்பங்களை மேற்கொண்ட அனுபவங்களே காரணம். ஆம் அன்பானவர்களே, துன்பங்களை பொறுமையாகச்  சகிப்போம்; அவை தேவன் நமக்கு வைத்துள்ள தேர்வு என எண்ணிக்கொண்டு சிறப்பாக அதனை எழுதுவோம். நிச்சயமாக நாம் வெட்கமடையமாட்டோம்; மாறாக தேர்வுக்குப்பின் அடுத்த உயர்ந்த நிலையினை நாம் அடைவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,519  
'ஆதவன்' 💚ஏப்ரல் 04, 2025. 💚வெள்ளிக்கிழமை

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." ( ரோமர் 8: 36, 37)

இன்று பல கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்துவிடம் அன்பாக இருப்பதனாலும் அவருக்குக் கீழ்ப்படிந்த வாழ்க்கை வாழ்வதாலும் தங்களுக்கு வாழ்வில்  துன்பங்கள் வருவதில்லை என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே அதற்கு மாறாக வாழ்வில் துன்பங்கள் வரும்போது ஆவிக்குரிய வாழ்வில் துவண்டு போகின்றனர். முதலில் ஆவிக்குரிய வாழ்வை சிறப்பாக ஆரம்பிக்கும் பலர் ஆவிக்குரிய வாழ்வில் பின்வாங்கிப்போக துன்பங்கள் வாழ்வில் வருவதே காரணமாக இருக்கின்றது.

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் 16:33)  என்றுதான் கூறினார். ஆனால் நமது உபத்திரவம் நம்மை அழித்துவிடாது. கிறிஸ்து அவற்றில் ஜெயம் பெற்றதைப்போல நாமும் ஜெயம்பெறுவோம். எனவேதான் அவர்,  "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16: 33) என்று கூறினார். 
 
அப்போஸ்தலராகிய பவுல்,  "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் 10: 13) என்று நம்மை தைரியப்படுத்துகின்றார்.

ஆம் அன்பானவர்களே, உலகத்தில் நமக்குச் சில கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அப்போஸ்தலரான பவுல் இப்படித் தான் அனுபவித்தத் துன்பங்களையும் அவற்றிலிருந்து தேவன் அவரை விடுவித்ததையும்  நினைவுகூருகின்றார்.  எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தில், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." என்று நமக்கு துன்பங்களை வெற்றிகொள்ள வழிகூறுகின்றார். 

ஒருசில துன்பங்களிலிருந்து மட்டும் சிறியதான விடுதலை பெறுவோம் என்று கூறாமல், எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாக இருப்போம். இதனையே அவர், "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." என்கின்றார். அதாவது நம்மில் அன்புகூர்ந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அளிக்கும் வெற்றி முழுமையான வெற்றி; முற்றிலும் ஜெயம்கொடுக்கும் வெற்றி. ஆம், எந்தத் துன்பமும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரித்திடாமல் காத்துக்கொள்வோம். அதுவே நம்மை ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து வெற்றிகொள்ள உதவியாக இருக்கும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,520  
'ஆதவன்' 💚ஏப்ரல் 05, 2025. 💚சனிக்கிழமை

"பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்." (2 இராஜாக்கள் 6: 16)

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப்  போர்ச்செய்யும்படி ஆலோசனை செய்து எந்த வழியாக இஸ்ரவேலுக்குள் செல்லலாம் என திட்டம் வகுக்கும்போதெல்லாம் எலிசா தீர்க்கதரிசி அதனைத் தனது தேவ வெளிப்படுத்துதல்மூலம் அறிந்து இஸ்ரவேல் ராஜாவுக்கு முன்கூட்டியே அறிவித்துவிடுவார். எனவே சீரியாவின் ராஜாவால் இஸ்ரவேலரை  மேற்கொள்ள முடியவில்லை. எலிசாவின் இந்தச் செயலைத் தனது ஊழியர்கள்மூலம் அறிந்துகொண்ட சீரியாவின் ராஜா எலிசாவைப் பிடிக்க வகைதேடினான். அப்படியானால் மட்டுமே தன்னால் இஸ்ரவேலரை மேற்கொள்ளமுடியும் என்று எண்ணினான்.

எலிசா தோத்தானில் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட சிரியாவின் ராஜா அவரைப்பிடிக்கத்   தனது படைவீரர்களை  அங்கு அனுப்பினான். அதிகாலமே எழுந்த எலிசாவின் வேலைக்காரன் அந்த மலை முழுவதும் இராணுவமும் குதிரைவீரர்களும் இரதங்களும்  நிற்பதைக்கண்டு பயந்து, "ஐயோ என் ஆண்டவனே! என்னச்செய்வோம்?" என்று அலறினான். தாங்கள் இருவரும் அழிந்துவிடுவோம் என்று அஞ்சினான் வேலைக்காரன். ஆனால் எலிசா தைரியமாக அவனிடம் கூறினார், "பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள்  அதிகம்." 

ஆம் அன்பானவர்களே, நாமும் எலிசாவின் வேலைக்காரனைப்போல பலவேளைகளில் நமது சூழ்நிலைகளைப் பார்த்துப் பயப்படுகின்றோம். "ஐயோ, இந்தப் பிரச்னை அல்லது இந்த நோய் என்னைத் தாக்கிவிட்டதே, நான் என்னசெய்வேன்? எவ்வளவு கொடிய நோய் இது!" என்று புலம்புகின்றோம்.  ஆனால் தேவன் சொல்கின்றார், "பயப்படாதே, உன் பிரச்சனையைவிட, உன் நோயைவிட உன்னோடு இருக்கும் நான் பெரியவராய் இருக்கிறேன். உன்னை நான் விடுவிப்பேன்" என்று.

ஆனால், தேவனது வல்லமையினை நாம் கண்டுணர எலிசாவின் வேலைக்காரனது கண்கள் திறக்கப்பட்டதுபோல நமது கண்களும் திறக்கப்படவேண்டியது அவசியம். ஆம், "அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்." (2 இராஜாக்கள் 6: 17)

தேவன் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் எலிசாவைச் சுற்றிலும் இறங்கிப் பாதுகாத்ததுபோல நம்மையும் பாதுகாப்பார். "யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்." ( ஓசியா 1: 7) தேவனாகிய கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, நம்மில் இருக்கும் தேவன் அனைத்தையும்விடப் பெரியவர். "பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்." (1 யோவான்  4 : 4) என்று நம்மை அறிவுறுத்துகின்றார்  அப்போஸ்தலராகிய யோவான். எனவே நாம் பயத்தைத் தள்ளி தேவன்மேலுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்துவோம். "பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்." 

வேதாகமத் தியானம் - எண்:- 1,521  

'ஆதவன்' 💚ஏப்ரல் 06, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3: 8)

வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவனின் ஏழு சபைகளுக்கு ஆவியானவர் சொல்லும் காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதில் பிலதெல்பியா சபையின் தூதனுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளே இன்றைய தியான வசனம். இந்த வார்த்தைகள் நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரு முக்கிய காரியத்தை நமக்கு விளக்குகின்றது.

அதாவது நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமக்கு ஏற்படும் துன்பங்கள், பிரச்சனைகள் இவைகளை மேற்கொள்ள நமக்குப் போதிய பெலன் இல்லாமலிருக்கலாம், அதனால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனாலும் நாம் நமது ஆவிக்குரிய ஓட்டத்தில் பின்வாங்காமல் தேவனை மறுதலிக்காமல் வாழவேண்டும் என்று உணர்த்துகின்றது. இதனையே இந்த வசனத்தில், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே" என்று கூறப்பட்டுள்ளது. 

சிலர் தங்கள் பிரச்சனைகள் தீர்ந்து விடுதலை கிடைத்திட சபை சபையாக ஓடுவார்கள். ஒரு பாஸ்டரை விட்டு இன்னொரு பாஸ்டர் என அலைவார்கள். இத்தகைய மனிதர்கள் உண்மையில் தேவனை அறியவில்லை; அவரை நம்பவில்லை என்பதே பொருள். தேவன்மேல் முழு விசுவாசம் நமக்கு இருக்குமானால் சபைகளோ பாஸ்டர்களோ இரண்டாம்பட்சமாகவே நமக்கு இருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாம் தேவனுக்கே முன்னுரிமை கொடுத்து அவரையே சார்ந்து வாழ்கின்றவர்களாக இருப்போம்.  

அப்படி நாம் தேவனை மறுதலியாமல் அவரையே சார்ந்துகொண்டு வாழ்வதையே தேவன் விரும்புகின்றார். அப்படி வாழும்போது நம்மேல் அவர் அதிக கவனமுள்ளவராக இருக்கின்றார்.  இன்றைய தியான வசனம் "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்" என்று தொடங்குகின்றது. ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கவில்லை. நமக்கு கொஞ்சம் பெலனும் கொஞ்சம் விசுவாசமும் இருந்தாலே போதும். ஆனால் அவரை நமது வாழ்வாலும் வார்த்தையினாலும்  மறுதலியாமல் நாம் வாழ்ந்தால்போதும் என்கின்றார். 

"அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்." ( ஏசாயா 42: 3) என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நாம் நெரிந்த நாணலாகவும் மங்கியெரியும் திரியாகவும் இருக்கலாம். ஆனால் அதனால் அவர் நம்மைத் தள்ளமாட்டார். மாறாக, நாம் எழுந்து பிரகாசமாக எரிந்திட உதவிடுவார். எனவேதான் அவர், "இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." என்கின்றார். 

ஆம் அன்பானபவர்களே, நமக்குமுன் தேவன் திறந்த வாசலை  வைப்பேன் என்று உறுதிகூறுகின்றார். அதாவது தான் நமக்கென வைத்துள்ள ஆசீர்வாதத்தின் வாசலை ஒருவனும் பூட்டமாட்டான் என்கின்றார் தேவன்.  நாம் இப்படி நமது கொஞ்சம் பலத்துடன் தேவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ முயன்று செயல்படுவோமானால் நமக்குமுன் தேவன் வைத்துள்ள ஆசீர்வாதத்தினை எந்த சக்தியும் நமக்குக் கிடைக்காமல் தடுத்திட முடியாது. எனவே இருக்கின்ற கொஞ்சம் பெலத்துடன் அவரது நாமத்தை மறுதலியாமல், அவரது  வசனத்தைக் கைக்கொண்டபடி வாழ்வோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,522  
'ஆதவன்' 💚ஏப்ரல் 07, 2025. 💚திங்கள்கிழமை

"கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." (1 நாளாகமம் 28: 9)

இன்றைய தியான வசனம் வயது முதிர்ந்த தாவீது, தனது இடத்தில்  அடுத்து பட்டத்துக்குவரப்போகின்ற மகன் சாலமோனுக்கு அறிவுரையாகக் கூறியது. தாவீதை தேவன் தனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டார். அவரது சங்கீதங்கள் இன்றும் நம்மை உயிர்ப்பூட்டுவனவாக உள்ளன. தேவனை முழுவதும் அனுப்புகூர்ந்து அவரையேச் சார்ந்துகொண்ட தாவீது தனது மகனையும் அப்படியே தேவனையே சார்ந்து வாழ அறிவுறுத்துகின்றார்.   

தாவீது கூறும் இந்த அறிவுரை நமக்கும் ஏற்புடையதாக இருக்கின்றது. நமது தேவன் இருதயத்தை ஊடுருவிப்பார்க்கின்றவர் என்கின்றார் அவர். நமது இருதயத்தின் நினைவுகள் அவருக்கு மறைவானவைகளல்ல  இதனையே நாம், "ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே," ( எரேமியா 20: 12) என்று எரேமியா புத்தகத்திலும் வாசிக்கின்றோம்.

மட்டுமல்ல, நமது வாயில் வார்த்தை பிறக்குமுன்னே அதனை தேவன் அறிகின்றார். "என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்." ( சங்கீதம் 139: 4) என்று கூறுகின்றார் சங்கீதக்காரர். மட்டுமல்ல, "என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்." ( சங்கீதம் 139: 2) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நாம் ஒரு செயலை ஏன் செய்கின்றோம், ஏன் செய்யாமலிருக்கிறோம் என்பதன் காரணம் மற்றவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம் அனால் தேவன் அவற்றையெல்லாம் அறிந்திருக்கின்றார். உள்ளொன்றுவைத்து வெளியொன்று பேசும் வஞ்சக  உள்ளத்தையும்  அவர் அறிவார். எனவே நாம் பேச்சிலும் செயலிலும் தேவனுக்கு அஞ்சி வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் தேவனை நாம் தேடவேண்டுமென்று வலியுறுத்துகின்றது. முழு உள்ளத்தோடு தேடும்போதுதான் நாம் அவரைக் கண்டறியமுடியும். இயேசு கிறிஸ்து இதனையே, "தேடுகிற எவனும் கண்டடைகிறான்" (மத்தேயு 7:8) என்று கூறினார். நமது பெற்றோர்கள் கூறியதாலல்ல, எல்லோரும் சொல்கிறார்கள் என்பதாலல்ல; எல்லோரும் வழிபடுகிறார்கள் என்பதாலல்ல, நாம் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்து வழிபடவேண்டும். முதலில் முழு இருதயத்தோடு அவரைத் தேடவேண்டும். "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29: 13) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இறுதியாக இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்" என்று. ஆம் அன்பானவர்களே, தேவனை அறிந்தபின் நாம் அவரையே பற்றிக்கொண்டு ஆவியில் அனலுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். இல்லையானால் தேவனை விட்டு நாம் விலக்கப்படுவோம்.  "இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்". (வெளிப்படுத்தின விஷேசம் 3:16) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

எனவே அன்பானவர்களே, தாவீது கூறுவதுபோல, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார் என்பதால் நமது இருதயத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொண்டு அவரை முழு இருதயத்தோடு தேடும்போது அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார்.  உலக ஆசைகொண்டு தாறுமாறாக வாழ்வோமானால் அவர் நம்மை என்றைக்கும் கைவிட்டுவிடுவார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,523  
'ஆதவன்' 💚ஏப்ரல் 08, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41: 13)

நமது வாழ்வில் இயல்பாக நடக்கும் காரியங்களில் சிறிது மாறுபாடு வந்துவிட்டாலும் நமக்குள் பயம் வந்துவிடுகின்றது. பள்ளியில் பயிலும் மாணவனுக்கு சாதாரண நாட்களைவிட தேர்வுநாளைக் கண்டால் பயம் ஏற்படுகின்றது. நமது உடம்பின் சாதாரண  வெப்பநிலை 98.6°F (37°C). இது  சிறிய  அளவு அதிகரித்தாலும் நமக்கு உடல் சோர்வு ஏற்படுகின்றது; நமக்குள் பயம் வந்துவிடுகின்றது. நமக்குக் கடன் கொடுத்த மனிதனைக் கண்டால் பயம்;  விபத்துச் செய்திகளை வாசிக்கும்போது அல்லது நேரில் விபத்துக்களைப்  பார்க்கும்போது பயம்,  நமது எதிர்காலத்தையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எண்ணிப் பயப்படுகின்றோம். இப்படி மனித வாழ்வு பயத்துடனேயே தொடர்கின்றது. 

இப்படிப் பயத்துடனேயே வாழ்வைத் தொடரும் நம்மைப்பார்த்துக் கர்த்தர், "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நமது கரத்தை தேவன் பற்றிக்கொள்ள அனுமதிப்போமானால் பயம் நம்மைவிட்டு அகலும். 

வேதாகமத்தில், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் "பயப்படாதே" எனும் வார்த்தை பல இடங்களில் நமக்கு ஆறுதலாகக் கூறப்பட்டுள்ளது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்." ( மத்தேயு 10: 31) என்று குருவிகளைக் காண்பித்து நம்மைத் தைரியப்படுத்தினார். 

பயமானது சாத்தானின் வஞ்சனைக் குணம். தோல்விகள் மற்றும் பிரச்னைகளின்போது சாத்தான், "இனி உனக்கு வாழ்வே இல்லை; எனவே செத்துப்போய்விடு என்று நமக்குள் தற்கொலை உணர்வைத் தூண்டுகின்றான். பயம் சாத்தானின் ஆயுதம்.  ஆம், "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்". (யோவான் 8:44)

ஆனால், தேவன் நமக்கு நல்ல ஒரு வாழ்வு உண்டு என்று நம்மைத் தைரியப்படுத்துகின்றார். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் தேவனிடம் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளும்போது நமது பயம் அகலுகின்றது; தேவ அன்பு நமக்குள் வரும்போது பயம் அகலுகின்றது. பயப்பட்டுக்கொண்டிருப்போமானால் நாம் தேவ அன்பில் பூரணமடையவில்லை என்று பொருள். "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல."(1 யோவான்  4 : 18) என்று வேதம் கூறவில்லையா?

தேவனிடம் நாம் ஒப்புரவாகும்போது இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டதுபோல தேவன் நம்மிடமும் கூறும் உறுதியான வார்த்தைகள் நமது இருதயத்தை நிரப்பும்.  "மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்" (லூக்கா 9:56) என்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எனவே, "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41: 13) என்று மனம்திரும்பிய ஒவ்வொருவருக்கும் தேவன் வாக்களிக்கின்றார். தேவனோடு ஒப்புரவாவோம்; அவரில் பூரண அன்புகொண்டு பயத்தைப் புறம்பே தள்ளுவோம். 

தேவன்மேல் அன்புகொண்டவர்களாக, மனிதர்களுக்கல்ல, தேவனுக்கு மட்டுமே பயந்து வாழும் வாழ்க்கை வாழ்வோம். அப்போது மட்டுமே நாம் பாவத்துக்கு விலகி வாழமுடியும். "ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்." ( மத்தேயு 10: 28) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.


வேதாகமத் தியானம் - எண்:- 1,524
'ஆதவன்' 💚ஏப்ரல் 09, 2025. 💚புதன்கிழமை 

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." ( நீதிமொழிகள் 3: 5, 6)

மனிதர்கள் நமது அறிவு குறைவுள்ளது  (1 கொரிந்தியர் 13: 9). நாம்  தற்போது நமக்கு இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தை நமது குறைவான அறிவால் கணித்து எந்தக் காரியங்களுக்கும் முடிவெடுக்கின்றோம்.  எனவே இப்படி முடிவெடுப்பது பெரும்பாலும் தவறான முடிவாகவே இருக்க வாய்ப்புள்ளது. இப்படி முடிவெடுப்பதையே சுய புத்தியில் சாய்தல் என்று கூறப்பட்டுள்ளது. நீ இப்படி சுய புத்தியில் சாயாமல் உன் முழு இருதயத்தோடு கர்த்தரில் நம்பிக்கையாயிரு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

வாழ்க்கையில் நாம் முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டிய காலகட்டங்கள் பல உண்டு. உதாரணமாக, நமது வேலை விஷயங்களில், நமது பிள்ளைகளின் திருமண காரியங்களில், அல்லது புதிதாக ஒரு நிலமோ வீடோ வாங்க முயலும்போது, நாம் சரியான முடிவுகள் எடுக்கவேண்டியது அவசியம். நமது சுய தீர்மானங்களோ அல்லது நண்பர்களது அறிவுரையோ எப்போதும் சரியானதாக இருக்காது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் நாம் கர்த்தரையே நம்பி இருக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது. 

எந்த நிலையிலும் நாம் கர்த்தர்மேல் முழு நம்பிக்கையையும் வைத்து வாழ்வோமானால் அவர் நம்மைக் கைவிடாமல் இருப்பார். வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள் என்று கூறுவது நாம் நடந்து செல்லும்போது என்ற பொருளிலல்ல, மாறாக நமது வாழ்க்கைப் பாதையில் என்று பொருள். கர்த்தரையே நம்பும் மனிதன் அவரையே வாழ்வில் நினைப்பவனாக இருப்பான். நாம் இப்படி வாழ்வதையே தேவன் விரும்புகின்றார். இதனையே மோசே இஸ்ரவேல் மக்களுக்குப் பின்வருமாறு  கூறுகின்றார்:- 

"நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்". ( உபாகமம் 10: 12, 13)

அதாவது, நமக்கு  நன்மையுண்டாகும்படி கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் அன்றாடம்  நாம்  கைக்கொள்ளவேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கின்றார்.  அப்படி நாம் வாழும்போது அவர் நமது  பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். ஆம் அன்பானவர்களே, நாம் எந்த நிலையிலும் தேவனைச் சார்ந்தே வாழவேண்டியது அவசியம். "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 40: 4) என்று கூறப்பட்டுள்ளபடி நாம் பாக்கியவான்களாக வாழ முயற்சியெடுப்போம். 

இப்படி நாம் வாழும்போது நிறைவான கிறிஸ்துவின் ஆவியானவர்  நமக்குள் வந்து நம்மை வழிநடத்துவார். இப்படி, "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்."(1 கொரிந்தியர் 13: 10) 

ஆம் அன்பானவர்களே, இப்படி ஜெபிப்போம்:- "நிறைவான இயேசுவே என்னில் வாரும், என்னை வழி நடத்தும். எனது வாழ்வை உமக்கே ஒப்படைக்கிறேன். உமது வழிகளைக் கைக்கொண்டு வாழ்வேன் என்று உறுதிகூறுகின்றேன். நான் அறிவில் குறைந்தவன்; ஞானமில்லாதவன். நீர் என்னில் வரும்போது மட்டுமே நான் எனது சுயபுத்தியில் சாராமல் எனது வாழ்வில் சரியான முடிவுகள் எடுக்க முடியும். எனவே உமது ஆவியானவரை அனுப்பும். அவரே என்னில் வந்து என்னை நேரிய பாதையில் வழிநடத்துவாராக.  ஆமென். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,525
'ஆதவன்' 💚ஏப்ரல் 10, 2025. 💚வியாழக்கிழமை 

"தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." (2 பேதுரு 1: 21)

தீர்க்கத்தரிசனம் சொல்வது என்பது ஆவியின் வாரங்களில் ஒன்று (1 கொரிந்தியர் 12:10)  இந்த வரத்தைத் தேவன் ஏன் கொடுக்கின்றார் என்றால் பாவத்தில் மடிந்துபோகின்ற ஆத்துமாக்களுக்கு பாவ உணர்வைக்கொடுத்து அவர்கள் மனம்திரும்புவதற்கு. மேலும், நாட்டில் ஏற்படப்போகும் பெரிய இடர்களை முன்கூட்டியே மக்களுக்கு உணர்த்தி அவர்களை எச்சரித்துத்  தப்புவிப்பதற்காக.  தாவீதுக்கு நாத்தான் தீர்க்கதரிசனம் கூறியது அவர் தனது பாவத்தை உணர்ந்து மனம்திரும்புவதற்காக. 

ஆதியாகமத்தில் பாரவோன் கண்ட கனவுக்கு பொருளாக யோசேப்பு வரப்போகின்ற பஞ்சகாலத்தைத்  தீர்க்கதரிசனமாக அறிந்துக்  கூறியது தேசத்தை அழிவிலிருந்து மீட்பதற்காக. மட்டுமல்ல, தீர்க்கதரிசனம் கூறிய யோசேப்பின் எதிர்கால உயர்வுக்கும் இது காரணமாக இருந்தது. ஆனால் தேவனால் மேலான நோக்கத்துக்காக வெளிப்படுத்தப்படும் இரகசியங்கள் பிற்காலங்களில் ஊழியர்களது பொருளாசையினை நிறைவேற்றும் கருவியாக மாறிப்போனது. எனவே அவர்கள் பொய்யான தரிசனங்களைக்கூறி மக்களை ஏமாற்றித் தாங்கள் செழிப்பாக வாழ வகைசெய்து கொண்டார்கள். 

இது இப்போது நடக்கும் தவறல்ல,  இயேசு கிறிஸ்துவின் காலத்துக்கு முன் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்னேயே இது நடந்துள்ளது.  இதனையே எரேமியா மூலம் தேவன், "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள்" என்று கூறுகின்றார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட, "கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்." ( மத்தேயு 7: 15) என்று எச்சரித்தார்.

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனோடு நெருங்கிய உறவோடு வாழ்வோமென்றால் தேவன் நமக்கு நம்மைக்குறித்து வெளிப்படுத்தல்களைத் தருவார். அதற்காக நாம் ஊழியக்காரர்களைத் தேடி ஓடவேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொய்யையே கூறி நம்மை ஏமாற்றுவார்கள். ஊழியனைத்தேடி வரும் எல்லோருக்கும் தேவன் எப்போதும் ஆசீர்வாதத்தையே தீர்க்கதரிசனமாகக் கூறிக்கொண்டிருக்கமாட்டார். பலவேளைகளில் நமது ஆசீர்வாதத்துக்கு நமது பாவமான செயல்களே காரணமாக இருக்கும். உண்மையான தீர்க்கத்தரிசி அதனை உணர்த்தவேண்டும். மாறாக, "உங்களுக்குச் சமாதானம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார்" என்று கூறிக்கொண்டிருக்கக்கூடாது.  

தங்கள் இருதயத்தின் கடினத்தில் தொடர்ந்து நடக்கும் மக்களுக்கும் கள்ளத் தீர்க்கத்தரிசியானவன், "உங்களுக்குச் சமாதானம் இருக்கும்" என்றுதான் கூறுவான். இதனையே இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக நாம் வாசிக்கின்றோம்:-   "அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்." ( எரேமியா 23: 17) எனவே, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஆனால் இப்போதும் உண்மையான தீர்க்கதரிசிகள் இருக்கின்றார்கள். என்னை ஆவிக்குரிய வாழ்வில் ஆரம்பகாலத்தில் வழிநடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்கள் இதற்கு ஒரு  உதாரணம். நான் செய்யும் சிறு தவறையும்கூடத் தனது  தீர்க்கத்தரிசன வரத்தால் அறிந்து என்னை எச்சரித்திருக்கின்றார்.  ஆம் அன்பானவர்களே, இதுபோன்ற கர்த்தருக்கேற்ற தீர்க்கத்தரிசிகள் இப்போதும் உண்டு. இத்தகைய தீர்க்கதரிசிகளைக்குறித்தே அப்போஸ்தலரான பேதுரு, "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." (2 பேதுரு 1: 21) என்று கூறுகின்றார்.

ஆனால் நாம் குறிகேட்பதுபோல தீர்க்கத்தரிசிகளைச் சாராமல் கர்த்தரையே நம்பி அவரையே சார்ந்து வாழ தேவன் வலியுறுத்துகின்றார். அவருக்கு உண்மையாக நாம் வாழ்வோமானால், அவரே நமக்குத் தேவையான வெளிப்படுத்தல்களைத் தந்து நம்மை வழிநடத்துவார். போலிகள் பல இருப்பதால்  "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." தேவ உறவை வளர்த்துக்கொள்வோம். அவரே நம்மை வழிநடத்தட்டும். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,526
'ஆதவன்' 💚ஏப்ரல் 11, 2025. 💚வெள்ளிக்கிழமை 

"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." ( யோவேல் 2: 13) 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவம்செய்தவர்கள் மனம்திரும்புதல் வேண்டித்  தங்கள்  உடலில் சாம்பலைப் பூசிக்கொள்வதும் தங்களது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு சாக்கு உடை அணிந்துகொள்வதும் வழக்கமாக இருந்தது. பலர் உண்மையான உணர்வுடன் இப்படிச் செய்தாலும் மிகப்பலர் இதனை ஒரு சடங்காகவே செய்தனர். மெய்யான மனம்திரும்புதல் இருக்கிறதோ இல்லையோ, தாங்கள் இப்படிச் செய்வதன்மூலம் மற்றவர்கள் தங்களை மேன்மையாகக் கருதவேண்டும் எனும் எண்ணத்துடனும் பலர் இப்படிச் செய்தனர். 

எனவேதான் யோவேல் தீர்க்கத்தரிசி மூலம் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். வெளி அடையாளச் சடங்குகள் மூலமல்ல, மெய்யான இருதய உணர்வோடு பாவத்தை நாம் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டவேண்டும் என்கின்றார். இதனையே அவர், "இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்" என்கின்றார். 

புலம்பல் நூலிலும் இதனையே நாம் வாசிக்கின்றோம், "நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்." ( புலம்பல் 3: 40, 41) என்று. கைகளை மட்டும் உயர்த்தி ஜெபித்தால் போதாது, மாறாக நமது இருதயமும் தேவனை நோக்கி உயர்த்தப்படவேண்டும். 

தேவன் கிருபையும் இரக்கமும் நிறைந்தவராக இருப்பதால், "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." (சங்கீதம் 103: 10) நமது பாவத்துக்கு அவர் தண்டனையைத் தந்தாலும் தனக்குள் அதுகுறித்து மனம் வருந்துபவராக இருக்கின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்." என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, எல்லோரும் ஜெபிக்கிறார்கள் என்று கூட்டத்தோடு கூட்டமாக நாமும் கூப்பாடுபோட்டு ஜெபிப்பதால் பலனில்லை. பாவம் மன்னிக்கப்பட பரிகாரமாக ஒறுத்தல்கள் செய்வதில் பலனில்லை. சகோதர மதத்தவர்கள் குறிப்பிட்ட காலங்களில் ஆறுகளிலும் கடலிலும் மூழ்கியெழுந்து  பாவங்கள் மன்னிக்கப்பட்டது என எண்ணிக்கொள்வதுபோல நாமும் எண்ணிக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. பாவமன்னிப்பு பெறும்போது நமது இருதயம் அதனை உணர்ந்துகொள்ளும். மெய்யான சமாதானம் நம்மை நிரப்பும். கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது இரத்தத்தால் கழுவப்படும்போது மட்டுமே இந்த மீட்பு அனுபவம் கிடைக்கும்.  

ஆம் அன்பானவர்களே, நமது தேவன் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை நேசிக்கின்றார். நமது அக்கிரமங்களை அவர் எண்ணியிருந்தால் நாம் அவர்முன் நிற்கமுடியாது.  "கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே." ( சங்கீதம் 130: 3) அவர் நம்மை நேசிப்பதால் அவரிடம் மெய்யான இருதய உணர்வோடு மன்னிப்பை வேண்டும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, பாவத்தையே நம்மைவிட்டு அகற்றுவார். "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்." ( சங்கீதம் 103: 12) என்று கூறப்பட்டதுபோல, பாவம் நம்மைவிட்டு அகற்றப்படும். 

நமது இருதயங்களைக்கிழித்து, தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புவோம்.  அவரது பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட வேண்டுவோம். அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவராக இருப்பதால் நம்மைப் புறம்பேத் தள்ளமாட்டார்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,527
'ஆதவன்' 💚ஏப்ரல் 12, 2025. 💚சனிக்கிழமை 

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: "மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்"என்றார். ( லுூக்கா 10: 41, 42)

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மார்த்தாள், மரியாள் எனும் சகோதரிகள் நமக்கு ஆவிக்குரிய வாழ்வைத்தொடர நல்ல படிப்பினைகளாக இருக்கின்றனர். பொதுவாகத் தங்களைப் பலரும்   கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் இன்றைய நாட்களில் நாம் மார்த்தாளைப்போன்ற கிறிஸ்தவர்களையே  அதிகம் பார்க்கின்றோம். 

மார்த்தாள்வகைக் கிறிஸ்தவர்கள் ஆலயக் காரியங்களுக்காக ஓடிஓடிப்  பல்வேறு காரியங்களைச் செய்கின்றார்கள். ஆலயத் திருவிழா, அசனம்,  பல்வேறு ஆலயப்பணிகளுக்கு நன்கொடை வசூலித்தல் என்று ஆலய வளாகத்தையே சுற்றிச்சுற்றி வருகின்றார்கள். மார்த்தாள் இயேசு கிறிஸ்துவுக்காகத்தான் உழைத்தாள். அதுபோல இவர்களும் தங்களைக் கிறிஸ்துவுக்காக உழைப்பதாகவே எண்ணிக்கொள்கின்றனர். இயேசு கிறிஸ்துவுக்கு  நல்ல உணவளிக்கவேண்டும், அவரை நன்கு உபசரித்து வழியனுப்பவேண்டும் என்பதுதான் மார்த்தாளின் எண்ணம். இதுவே உலகமக்கள் விரும்பும் காரியமாகவும் இருக்கின்றது. 

ஆனால் இதற்கு மாறாக மரியாளோ, அமைதியாக இயேசு கிறிஸ்துவின் பாதத்தருகில் அமர்ந்து அவரது உயிருள்ள வார்த்தைகளைக்  கேட்பதிலேயே ஆர்வமுள்ளவளாக இருந்தாள். அவள் அவரோடுள்ள ஐக்கியத்தையே மேலானதாகக் கருதினாள். ஆனால் மார்த்தாளின் பார்வையில் மரியாள் வேலைசெய்ய மனதில்லாமல் வெட்டியாக இருப்பதாகவே தோன்றியது. எவ்வளவோ வீட்டுவேலைகள் இருக்கும்போது இவள் சும்மா இருக்கிறாளே என்று அவள் எண்ணினாள். எண்ணியது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவிடம் அவளைக்குறித்து குற்றம் சாட்டினாள். 

"ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்." (லுூக்கா 10: 40) "உமக்குக் கவலையில்லையா?"  என்று கேட்பதன்மூலம் ஒருவிதத்தில் அவள் இயேசுவையும் குற்றப்படுத்துகின்றாள். இதுபோலவே இன்றும் பலர் இருக்கின்றனர். தங்களைப்போல எல்லோரும் ஆலயங்களுக்கென்று ஓடிஓடி உழைக்கவேண்டுமென்று எண்ணுகின்றனர். அப்படி உழைக்காதவர்களை குற்றப்படுத்துகின்றனர்.  

ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரியாளையே மேன்மையாக எண்ணினார். ஆம் அன்பானவர்களே, ஆலயங்களுக்காக உழைப்பதையல்ல, மாறாக நமது உடலாகிய ஆலயத்தை பரிசுத்தமாக காப்பாற்றவேண்டிய செயல்கள் நாம் செய்வதையே தேவன் விரும்புகின்றார். கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்முள் இறங்கிச்  செயல்படவில்லையானால் நாம் பாவிகளாகவே இருப்போம். கிறிஸ்து நம்முள் இல்லையானால் நாம் பாவத்தை மேற்கொள்ள முடியாது. 

உலகரீதியான உதாரணமாக ஒரு காரியத்தை நாம் எண்ணிப்பார்ப்போம், நாம் பணியாற்றும் அலுவலகத்தில் ஓடிஓடி உழைத்தாலும் நம்மிடம் உண்மையும் நல்ல ஒழுக்க குணமாகும்  இல்லாதிருக்குமானால் உயரதிகாரிகள் நம்மை விரும்புவார்களா? அங்கு நாம் பணியில்தான்  நிலைக்கமுடியுமா? இப்படியே தேவனும் நம்மிடம் உண்மை, தூய்மை, இவற்றையே மற்ற அனைத்தையும்விட மேலாக எதிர்பார்க்கின்றார். 

அன்பானவர்களே, தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அவரைவிட்டுப் பிரியாத உறவு. இதனையே அவர், "தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்" என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, மரியாளைப்போல கிறிஸ்து எனும் நல்ல பங்கை நாம் தெரிந்துகொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.  அவரோடுள்ள ஐக்கியத்தில் வளரவேண்டியது அவசியம். 

பல்வேறு சரீர முயற்சியால் ஒருவேளை நாம் மக்களிடம் "ஊருக்காக உழைப்பவர்கள்" என்று பெயர்பெறலாம். ஆனால் தேவனது எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றாமல் இருந்து அவர் நம்மைக் கைவிட்டால் அதனால் பயன் என்ன? "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16: 26) என்று இயேசு கிறிஸ்து கேட்டாரே?

ஆம் அன்பானவர்களே, நாம் மார்த்தாளைப்போல அநேக காரியங்களைக்குறித்து நாமே தீர்மானம் எடுத்துக்  கவலைப்பட்டு ஓடிஓடி உழைப்பதையல்ல மாறாக,  மரியாளைப் போல தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து தேவ ஐக்கியத்துடன் வாழ்வதையே தேவன் விரும்புகிறார். அதுவே நாம் தெரிந்துகொள்ளவேண்டிய நல்லபங்கு என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் விரும்பும் நல்ல பங்கைத் தெரிந்துகொள்வோம்; இயேசு கிறிஸ்துக் கூறுவதுபோல அதுவே நம்மைவிட்டு எடுபடாததாக இருக்கும். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,528
'ஆதவன்' 💚ஏப்ரல் 13, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை 

"எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13: 23)

மனிதன் இயல்பிலேயே துர்க்குணம் உள்ளவனாகவே இருக்கின்றான். "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." ( சங்கீதம் 51: 5) என்று வேத வசனம் கூறுகின்றது. இப்படி இருப்பதால் மனிதனால் நேர்மையாக வாழ முடிவதில்லை. இதனை அறிந்ததால் தேவன் கூறுகின்றார்:- "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன்  சிறுவயதுதொடங்கி பொல்லாததாயிருக்கிறது" (ஆதியாகமம் 8:21) என்று. 

ஒரு வயது குழந்தைகள் இரண்டை சேர்ந்து விளையாடவிட்டு ஒரேயொரு பொம்மையை அவர்களிடம் கொடுத்துப்பாருங்கள். அவை ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் சண்டைபண்ணுவதுபோல போராடும். ஒரு குழந்தை பொம்மையைக் கைப்பற்றிவிட்டால் மற்றகுழந்தை அதனைப் பொறுக்கமுடியாமல் அழுது  கூப்பாடுபோடும். ஆம், போட்டி, பொறாமை போன்ற குணங்கள் இயல்பிலேயே அவற்றுக்குள் இருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். இந்த குணம் வளர வளர மனிதனுக்குள் அதிகரிக்கின்றது. 

இதனையே தேவன் "எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." என்று எரேமியா மூலம் கூறுகின்றார். எப்படி ஒரு எத்தியோப்பிய நீக்ரோ தனது தோலின் நிறத்தையும் சிவிங்கி தனது உடலிலுள்ள புள்ளிகளையும் மாற்றமுடியாதோ அதுபோல மனிதன் தனது  சுய முயற்சியால் இந்தத்  துர்க்குணத்தை மாற்றமுடியாது என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

நாம் மனதளவில் நன்மைசெய்து நல்லவர்களாக இருக்கவேண்டுமென்று எண்ணினாலும் நமக்குள்ளிருக்கும் பாவ குணம் நம்மை நன்மைசெய்ய விடுவதில்லை. இதனையே அப்போஸ்தலரான பவுல், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7: 18, 19) என்கின்றார். 

ஆனால், தேவனது கரம் நம்மில் செயல்பட அனுமதிப்போமானால் நம்மால் இதனை மாற்றமுடியும். ஆம், கர்த்தராகிய இயேசுவை நமது வாழ்வில் ஏற்றுக்கொள்வோமானால் அவரது வல்லமையால் நமது துர்குணத்தை மாற்றிட முடியும் என்கிறார் இயேசு கிறிஸ்து. "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால்   ஒன்றும்    செய்யக்  கூடாது." (யோவான் 15:5) என்று அவர் கூறவில்லையா? திராட்சைச் செடியோடு இணைந்திருக்கும் கொடிகள் கனிதருவதுபோல அவரோடு நாம் இணைந்திருந்தோமானால் நம்மால் துர்க்குணத்தை மாற்றி கனிதரமுடியும். 

ஆம் அன்பானவர்களே எத்தியோப்பியனும் சிவிங்கியும் தங்கள் தோலை மாற்றிடமுடியாது. ஆனால் அவைகளைப் படைத்த தேவனால் அது கூடாததல்ல. அவர் நினைத்தால் அதுவும் முடியும்.  அதாவது, தேவ கிருபை இருந்தால் அது முடியும். அதுபோலவே,  தீமைசெய்யப்பழகின மனிதர்களையும் நன்மை செய்பவர்களாக அவரால் மாற்ற முடியும். நாம் கிறிஸ்துவின் ஆவியின் பிரமானத்துக்குள் வரும்போது பாவம் அதன் விளைவான ஆத்தும மரணம் இவைகளிலிருந்து விடுதலையாக முடியும்.  "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2)

எனவே கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அப்போது நமது எத்தியோப்பிய தோலையும் சிவிங்கியின் புள்ளியையும் தேவன் மாற்றி அதிசயம் செய்வார்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,529
'ஆதவன்' 💚ஏப்ரல் 14, 2025. 💚திங்கள்கிழமை 

"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கின்றன." (2 தீமோத்தேயு 3: 16, 17)

தேவன் தன்னுடைய பரிசுத்த ஆவியினால் பரிசுத்த மனிதர்கள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்திய வார்த்தைகளே தேவ வசனங்கள். அவைகளை ஏன் தேவன் இப்படி மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

வேதாகம வசனங்களை ஆசீர்வாதத்துக்காகக் கொடுக்கப்பட்டவை என்றே இன்று பல ஊழியர்களும் விசுவாசிகளும் எண்ணிக்கொள்கின்றனர். எனவே அவர்கள் வேதாகமத்திலுள்ள ஆசீர்வாத வாக்குறுதிகளை பொறுக்கியெடுத்து அவற்றையே கிளிப்பிள்ளைபோலச்  சொல்லிச்சொல்லி ஜெபிக்கின்றனர். ஐயோ, இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்!

இன்றைய தியான வசனம் மூலம் அப்போஸ்தலரான பவுல் நமக்கு ஒரு தெளிவைக் கொடுக்கின்றார். அதாவது, தேவன் மனிதர்களுக்கு ஏன் தனது வார்த்தைகளைக் கொடுத்தாரென்றால், மனிதர்கள் கிறிஸ்துவுக்குள்  தேறினவர்களாகவும், நற்செயல்கள் செய்யத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் கொடுத்தார். அந்த வசனங்கள்  உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் உபயோகமுள்ளவைகளாக இருக்கின்றன. 

தேவனுக்குமுன் நாம் தேறினவர்களாக இருக்கவேண்டும்; நன்மைசெய்தவராக சுற்றித்திரிந்த கிறிஸ்துவைப்போல நாமும் நற்செயல்கள் செய்யத் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டும். இப்படி நாம் வாழ்வதற்கு  வேத வசனங்கள் நமக்குப் போதிக்கின்றன, நாம் தவறும்போது கண்டித்துத் திருத்துகின்றன, தேவ நீதியுள்ள  மனிதர்களாக நாம் வாழ அவை நமக்கு வழிகாட்டி உதவுகின்றன.  அன்பானவர்களே, இந்தச் சத்தியம் புரிந்து வேதாகமத்தை நாம் வாசிப்போமென்றால் வேதாகமத்தில் ஆசீர்வாத வாக்குறுதிகளை மட்டும் பொறுக்கிக்கொண்டு இருக்கமாட்டோம். 

மட்டுமல்ல, கிறிஸ்துவிடம் நமக்கு மெய்யான அன்பு ஏற்படவேண்டுமானால் அவரது வார்த்தைகளை அவர் எந்த நோக்கத்துக்காகத் தந்தாரோ அந்த நோக்கத்தை நாம் முதலில் அறியவேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தகப்பனின் குரலைக்கேட்க அவரது குழந்தைகள் எத்தகைய ஆர்வத்துடன் அலைபேசி ஒலித்ததும் ஓடிச்சென்று எடுத்துப் பேசுகின்றனரோ அதுபோன்ற ஆர்வத்துடன் வேதாகமத்தை நாம் வாசிக்கவேண்டும். அப்போது அவர் குரலை நாம் கேட்கமுடியும். 

ஒரு ஊழியர் ஒருமுறை பிரசங்கிதத்தைக் கேட்டேன். அவர் கூறினார், "ஒரு நாற்பதாம்பக்க நோட்டுப்புத்தகத்தை எடுத்து அதில் வேதத்திலுள்ள தேவ வாக்குத்தத்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அவற்றின்மேல் கைகளைவைத்து அவற்றை வாசித்து வாசித்து ஜெபியுங்கள்" என்றார். எத்தகைய சாத்தானின் வஞ்சகபோதனை பாருங்கள். அதாவது, அவரது போதனையின்படி, நாம் வேதாகமத்தை வாசிக்கவோ, தேவ குரலைக் கேட்கவோ வேண்டாம். ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை எழுதிவைத்து தினமும் வாசித்தால் போதும். சாதாரணமாக பார்க்கும்போது அவர் நல்ல காரியத்தைத்தானே சொல்கிறார் என்று தோன்றும். ஆனால் அது தேவ நோக்கமுமல்ல, தேவ வழியுமல்ல. 

இத்தகைய போதகர்களைக்குறித்து அப்போஸ்தலரான பேதுரு பின்வருமாறு கூறுகின்றார்:- "...உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்." (2 பேதுரு 2: 1) எனவே இவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றாமலிருப்போமாக.

அன்பானவர்களே, தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தைகளை நாம் தேவ அன்புடனும் கவனமுடனும் வாசிக்கவேண்டும். அவையே  நம்மைத் தேறின மனிதர்களாக மாற்றும்;  நாம் தேவனுக்கேற்ற நற்செயல்களைச் செய்யத் தகுதியுள்ளவர்களாக நம்மை மாற்றும். இப்படி தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நாம் வாழும்போது மட்டுமே தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,530
'ஆதவன்' 💚ஏப்ரல் 15, 2025. 💚செவ்வாய்க்கிழமை 

"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1: 10)

மனிதர்களைப் பிரியப்படுத்தும் ஊழியம், தேவனைப் பிரியப்படுத்தும் ஊழியம் என இருவகை ஊழியங்களை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். தேவனைப் பிரியப்படுத்தும் ஊழியம் செய்பவர்கள் தங்களை நாடிவரும் மக்கள் கூட்டத்தைப் பெரிதாகப் பார்க்கமாட்டார்கள். சத்தியத்தைமட்டும் எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்துவார்கள். ஆனால் மனிதரைப் பிரியப்படுத்தும் ஊழியம் செய்பவர்கள்  தங்களை நாடிவரும் மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி அவர்களைத் திருப்திப்படுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்க  முயன்று தேவனைவிட்டுத்  தொலைந்துபோய்விடுகின்றனர். 

தேவன் கூறும் வேத சத்தியங்களை வேதம் கூறும் அடிப்படையில் மக்களுக்கு விளக்கவேண்டியதே ஊழியர்கள் செய்யவேண்டிய பணி. இதற்கு மாறாக மனிதர்களைத் திருப்திப்படுத்தவேண்டி வேதம் கூறாத தவறான காரியங்களை கூறிக்கொண்டிருப்போமானால் நாம் மனிதர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கின்றோம் என்று பொருள்.  அத்தகைய மனிதர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் அல்ல என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

எனவேதான் அபோஸ்தரான பவுல், இன்றைய தியான வசனத்தில்,  "மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." என்று கூறுகின்றார். அன்பானவர்களே, இந்த வசனம் ஊழியர்களுக்கு மட்டுமானதல்ல என்று எண்ணுகின்றேன். சாதாரண விசுவாசிகளாக நாம் இருந்தாலும் இதுவே பொருந்தும். 

நாம் நமது நண்பர்களையும், குடும்பத்தினரையும் பிரியப்படுத்திட வேண்டி கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு முரணாக நடப்போமானால் நாம் மனிதர்களைப் பிரியப்படுத்துபவர்களாக மாறிவிடுகின்றோம். ஏவாளைத் திருப்திப்படுத்தவேண்டி ஆதாம் விலக்கப்பட்டக் கனியை உண்டு பாவம் செய்தது இப்படித்தான். மாறாக, நாம் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக இருந்து கிறிஸ்துவை முன்னிலைப்படுத்திச் செயல்படுவோமானால்  தற்காலத்தில் மற்றவர்கள் நம்மைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் பிற்பாடு நாம் சொல்வதையும் செய்தவைகளையும் ஏற்றுக்கொண்டு  நம்மை அங்கீகரிப்பார்கள். 

தனக்கு உண்மையாக ஊழியம் செய்பவர்களை தேவன் புறக்கணிப்பதில்லை. இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப்பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்." ( ரோமர் 14: 18) என்று கூறுகின்றார். தேவனுக்கேற்ற நமது ஊழியத்தையும் போதனைகளையும் அதிக அளவில் மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தேவன் அவற்றை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதே மகிமையான காரியமாக இருக்கும்.    

இன்றைய தியான வசனம் கூறும் இருவித ஊழியர்களை அடையாளம்கண்டு சரியானவர்களை தேர்வுசெய்து வாழும்போதே நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெறமுடியும். மொத்த உலகமே ஒருவர்பின் சென்றாலும் பரவாயில்லை, நாம் கிறிஸ்துவின் பின்னால் செல்லவே அழைக்கப்பட்டுள்ளோம். அப்படி கிறிஸ்துவை முன்னிலைப்படுத்தும் மனிதர்கள்பின் வெறும் ஐந்து நபர்கள் மட்டுமே இருந்தாலும் ஆறாவது நபராக நாம் சேர்ந்துகொள்வோம்.  

வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு தேவனை அறியும் ஆர்வமுடன் வாசிப்போம். "தேவனே உமது ஆவியானவரே என்னை சரியான பாதையில் நடத்தட்டும்" என நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். அப்போது தேவனைப் பிரியப்படுத்த ஊழியம் செய்யும் நபர்களை நாம் கண்டுகொள்ள அவர் உதவுவார். இதற்கு மாறாக உலக அறிவோடு யாருக்கு கூட்டம் சேர்கின்றது என்று கூட்டத்தைப்பார்த்து ஓடிக்கொண்டிருப்போமானால் நாம் பரிதபிக்கத்தக்கவர்களாக மாறிவிடுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,531
'ஆதவன்' 💚ஏப்ரல் 16, 2025. 💚புதன்கிழமை 

"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." ( சங்கீதம் 27: 5)

தேவனுக்குள் உண்மையாக வாழும் மனிதன் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். இந்த வார்த்தைகளை தாவீது ராஜா தான் அனுபவித்த அனுபவத்தால் கூறுகின்றார். பலவேளைகளில் தேவன் தாவீதை அவரது பகைவர்களுக்குத் தப்புவித்ததை நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கண்டுகொள்ளலாம். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நம்மையும் இதுபோலத் தப்புவிப்பார். தேவன் எவ்வாறு தன்னை தப்புவித்தார் என்பதை தாவீது, "அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து" என்று கூறுகின்றார். அதாவது எதிரிகள் அவரை நெருக்கும்போது தேவனே அவரைத் தனது கூடாரத்தில் ஒளித்துவைத்து தப்புவித்தார் என்கின்றார். 

மட்டுமல்ல, அவரை நெருக்கிய எதிரிகளை தேவன் அழித்து ஒழித்தார். இதனையே அவர் இன்றைய தியான வசனத்துக்கு முன்பாக இரண்டாம் வசனத்தில் கூறுகின்றார், "என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருங்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்." ( சங்கீதம் 27: 2) என்று. மட்டுமல்ல, தொடர்ந்து தேவன், "என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." என்று தாவீது தனது விசுவாசத்தை அறிக்கையிடுகின்றார். 

யோசேப்பின் வாழ்கையினைப் பாருங்கள், அவரது சொந்தக் சகோதரர்களே அவரைக் கொலை செய்ய முயன்றார்கள். பின்னர் அவரை இருபது வெள்ளிக்காசுக்கு விற்பனைசெய்தார்கள். எகிப்தில் போத்திபாரின் மனைவி அவருக்கு எதிரியாக இருந்து அவரைச் சிறைச்சாலைக் கைதியாக்கினாள். ஆனால் அவரைத்  தேவன் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, எகிப்தின் பிரதம மந்திரியாக உயர்த்தினார். 

நாமும்  தாவீதைப்போல, யோசேப்பைபோல  உறுதியான விசுவாசத்துடனும் தேவனுக்குமுன் உண்மையுடனும் இருப்போமானால் நமக்கும் அவர் இதுபோலச் செய்ய இன்றும் அவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். உலக வாழ்வில் நமக்குப் பல்வேறுவித தீங்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. தீராத நோய்கள், பிரச்சனைகள், துன்பங்கள், கடன்பாரங்கள் இவை நம்மை நெருக்கும் சூழ்நிலையில் நாமும் இன்றைய தியான வசனத்தில் அறிக்கையிட்டத் தாவீதைப்போல நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு ஜெபிக்கவேண்டியது அவசியம். 

"நான் தேவனின் கரத்தில் இருக்கிறேன், அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, இந்தக் கொடியத்  துன்பச்சூழ்நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றுவார். என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய இந்தப் பொல்லாத காரியங்கள் என்னை விழுங்கப்பார்க்கையில் அவற்றை அவர் மாற்றுவார். மட்டுமல்ல, மற்றவர்களுக்குமுன் அற்பமாகக் காணப்படும் என்னை அவர் கன்மலையின்மேல் உயர்த்துவார்." என்று விசுவாசத்துடன் கூறுவோம். 

ஆம் அன்பானவர்களே, அவரது கூடாரத்தின் மறைவில் அடைக்கலமாகச் சேர்ந்துகொள்வோம். தாவீதை அரசனாக உயர்த்திய தேவன், யோசேப்பை எகிப்தின் பிரதமராக உயர்த்திய தேவன் நம்மையும் உயர்த்த வல்லவராகவே இருக்கிறார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,532
'ஆதவன்' 💚ஏப்ரல் 17, 2025. 💚வியாழக்கிழமை 

"தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக் கடவோம்." (1 தெசலோனிக்கேயர் 5: 7, 8)

நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து எழுதும்போது அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நாம் எப்போது அவர் வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.

"தூங்குகின்றவர்கள்" என்று அவர் கூறும் வார்த்தை, கிறிஸ்துவின் வருகையினைக்குறித்து அலட்சியமாக இருபவர்களைக் குறிக்கின்றது. அதாவது அவரது வருகையினைக் குறித்து எந்த ஆர்வமுமில்லாமல் இருபதைக்  குறிக்கின்றது.  "வெறிகொள்ளுகிறவர்கள்" என்பது குடிவெறி கொண்டிருப்பதை மட்டுமல்ல; மாறாக, பாவச் சேற்றில் சிக்குண்டு, பாவத்தின்மீது நாட்டம்கொண்டு வாழ்வதைக் குறிக்கின்றது. 

இதனையே அவர், "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்" என்று குறிப்பிடுகின்றார். அதாவது இத்தகைய மனிதர்கள் இருளின் பிள்ளைகள். அவர்களில் ஒளி இல்லாததால் அவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் இரவாகவே இருக்கின்றது.  

தேவன் நம்மை இப்படி வாழ அழைக்கவில்லை. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள்; அந்த வியத்தகு ஒளியின் பிள்ளைகள். இதனையே அவர், "நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே." (1 தெசலோனிக்கேயர் 5: 5) என்கின்றார்.   இந்தப் "பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக் கடவோம்" என்கின்றார். 

அதாவது, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட ஒளியின் பிள்ளைகளாகிய நாம் அவரது வருகையினைக்குறித்து அலட்சியமில்லாமல், பாவத்தில் விழுந்துவிடாமல் தெளிவுள்ளவர்களாக கிறிஸ்துவின் ஒளியில் வாழவேண்டும் என்கின்றார்; மட்டுமல்ல,  கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல், சகோதர அன்புடன் நமது இரட்சிப்பை இழந்துபோகாமல்  வாழவேண்டும். 

மேலும், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மீட்படையவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். இருளின் மனநிலையோடு தூங்குபவர்களாக இருந்தாலும் விழித்திருப்பவர்களாக இருந்தாலும் நாம் அவரோடுகூட பிழைத்திருக்கவே அவர் விரும்புகின்றார். "நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே." (1 தெசலோனிக்கேயர் 5: 10)

எனவே விழித்திருக்கும் நாம் விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டு எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக இருப்பது மட்டுமல்ல, தூங்கிக்கொண்டிருக்கும் சக மனிதர்களை எழுப்பிவிட முயல்பவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம்.  

கிறிஸ்துவை நாம் உண்மையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அந்த அன்பை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டுமெனும் ஆர்வம் நமக்குள் இயல்பாகவே ஏற்படும். அந்த ஆர்வத்துடன் அன்போடு கிறிஸ்துவை நாம் அறிவிக்கும்போது தூங்குபவர்கள் விழிப்படைவார்கள். அப்படி மற்றவர்களை உணர்வூட்டும் பலத்தையும் ஞானத்தையும் நமக்கு அருளும்படி தேவனிடம் வேண்டுதல் செய்வோம்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,533
'ஆதவன்' 💚ஏப்ரல் 18, 2025. 💚வெள்ளிக்கிழமை  

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." ( ஏசாயா 53: 4)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 750 ஆண்டுகளுக்குமுன் ஏசாயா தீர்க்கத்தரிசிக்குத்  தேவன் கிறிஸ்துவின் பாடுகளை முன்னறிவித்துக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் பாடுகளை  ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல மிகத் தெளிவாக ஏசாயா கண்டார். இது எத்தனை பெரிய ஆசீர்வாதம் பாருங்கள். கிறிஸ்துவைக் குறித்த மிகத் துல்லியமான தீர்க்கதரிசனங்களை ஏசாயா கண்டார். ஏசாயா 53 ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்போது எப்படி இந்த மனிதன் கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் நேரில் பார்ப்பதுபோல 750 ஆண்டுகளுக்கு முன்னரே  கண்டு எழுதினார் என்பது நம்மை வியக்கவைக்கும். 

மட்டுமல்ல, இந்தத் தீர்க்கதரிசனமே கிறிஸ்துவின் தெய்வீகத்தை நமக்குப் புரியவைக்கும். கிறிஸ்து திடீரென உலகினில் தோன்றிய சாதாரண மனிதனல்ல, அவர் பிதாவாகிய தேவனால் மீட்புத் திட்டத்துக்காக முன்குறிக்கப்பட்ட தேவ குமாரன் என்பதனை இது நாம் புரியச் செய்யும். தொடர்ந்து ஏசாயா,  அவரை ஏன் பிதாவாகிய தேவன் உலகிற்கு அனுப்பினார் என்பதனை விளக்குகின்றார்.  அதாவது, "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." ( ஏசாயா 53: 6)

மனிதர்களாகிய நாம் வழிதப்பிப்போன ஆடுகளைப்போல பாவ வாழ்க்கையில் அவரவர் விருப்பத்துக்கு நடந்தோம். அந்தப் பாவத்தின் பாரங்கள் அனைத்தையும் தேவன் அவர்மேல் சுமத்தி நம்மைப் பாவத்திலிருந்து மீட்டார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மிருகங்களின் இரத்தமே பாவத்துக்கு பரிகாரமாகச் சிந்தப்பட்டது. ஆனால் அந்த மிருகங்களின் இரத்தம் பாவத்திலிருந்து மனிதர்களை முற்றிலும் மீட்கவில்லை. எனவே பாவமில்லாத கிறிஸ்துவின் இரத்தம் மனிதர்களது பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்பட்டது.  நகர வாசலுக்குப் புறம்பே அவர் பாடுபட்டார்; சிலுவையில் அறையப்பட்டார். 

"ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13: 11, 12) அதாவது அவர் ஒரு மிருகத்தைப்போல நகருக்கு வெளியே கொல்லப்பட்டார். 

அன்பானவர்களே, இந்தக் குறிப்பிட்ட  நாளில் ஒரு நாடகம்போல வெறுமனே ஆலயத்துக்குச் சென்று அழுது கூப்பாடுபோட்டு பின்னர் தொடர்ந்து நமது பாவ வாழ்க்கையிலேயே மூழ்கி இருப்போமானால் நாம் ஆக்கினைக்குத் தப்பமாட்டோம் என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆம், "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10: 29)

எனவே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். "அன்பான ஆண்டவரே, உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவிச் சுத்திகரியும். இதுவரை வழிதவறிய ஆட்டைப்போலத்  திரிந்து உமது பரிசுத்த இரத்தத்தை அவமதித்துவிட்டேன். என்னை மன்னியும். என்னைப் புதிய மனிதனாக மாற்றும். உமது இரட்சிப்பின் மாண்பினை நான் அனுபவிக்கச் செய்யும்." என மெய்யான மனஸ்தாபத்துடன் கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்பட மன்றாடுவோம். நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து  இதுவரை செய்த பாவங்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து மன்னிப்பை வேண்டுவோம். அப்போது, நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை நாம் அனுபவிக்கமுடியும். அதுவே இரட்சிப்பு அனுபவம். இந்த அனுபவத்தைத்  தந்து நம்மைத் தன்னுடையவர்கள் ஆக்கிடவே கிறிஸ்து உலகினில் வந்தார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,534
'ஆதவன்' 💚ஏப்ரல் 19, 2025. 💚சனிக்கிழமை 

"அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." ( ஏசாயா 53 :2, 3)

நேற்றைய வேதாகமத் தியானத்தில் நாம் பார்த்ததுபோல, ஏசாயா தீர்க்கத்தரிசி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்து கண்ட தரிசனத்தின் பகுதியே இன்றைய தியானமும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது உடல், ஆவி, ஆத்துமா அனைத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தார். வேதாகமத்தில், அவர் முற்றிலும் அழகுள்ளவர் என்று நாம் வாசிக்கின்றோம். "அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவர் என் சிநேகிதர்." ( உன்னதப்பாட்டு 5: 16)

ஆனால் இந்த முற்றிலும் அழகுள்ள நேசர் தனது அழகை நமக்காக இழந்தார். அவலட்சணமான தோற்றத்தை நமக்காக ஏற்றுக்கொண்டார். சில திருவிழா காலங்களில் பிச்சையெடுக்க சிலர் ஊனமுற்ற தங்கள் உறவினர்களை சாலைஓரங்களில் கிடத்தியிருப்பார்கள். நாம் அவர்களுக்கு தர்மம் கொடுத்தாலும் நின்று அவர்களைப் பார்க்கமாட்டோம். காரணம் அவர்களது ரூபம் பார்க்கத்தக்கதாக இருக்காது. ஆனால் அதே நேரம் ஒரு திரைப்பட நடிகரையோ நடிகையையோ பார்க்க நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, முகப்பொலிவு மனிதர்களுக்கு முக்கியமானது. அழகுவேறு, முகப்பொலிவு என்பது வேறு. ஒருவர் அழகாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை; ஆனால் அவரது முகப்பார்வை மனிதர்கள் பார்க்கதக்கவிதமாக இருக்கவேண்டும். பல அரசியல் தலைவர்கள் அழகுள்ளவர்களல்ல, ஆனால் மக்கள் அவர்களை விரும்புகின்றனர். காரணம் அவர்களது முகப்பொலிவு. 

அனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நமக்காகத் தனது  அழகு, முகப்பொலிவு இவற்றை இழந்தார்.  அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவரைக்கண்டபோது அவலட்சணமான பிச்சைக்காரர்களைக் கண்டு முகத்தைத் திருப்புவதுபோல  நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம் என்கின்றார் ஏசாயா. 

ஆனாலும் எல்லோரும் அவரை அப்படி  விட்டு விலகி விடவில்லை. அவரோடு சிலுவையடியில் அவரை அன்பு செய்தவர்கள் பலர் நின்றிருந்தனர். அவர்கள் அவரது அழகுக்காக அங்கு நிற்கவில்லை. மாறாக, அவர்மீதுகொண்ட அன்பினால் அங்கே நின்றுகொண்டிருந்தனர். 

ஒரு பத்திரிக்கைச் செய்தியைச் சில மாதங்களுக்குமுன் வாசித்தேன். ஒரு வாலிபன் அழகான ஒரு பெண்ணைக் காதலித்து வந்தான். ஆனால் எதிர்பாராத ஒரு தீவிபத்தில் சிக்கிய அந்தப்பெண்ணின் முகம் அவலட்சணமாக மாறிப்போனது. அதன்பின்னர் அவனது பெற்றோரும் உறவினர்களும் அழகான வேறொரு பெண்ணை அவனுக்கு மணமுடித்துவைக்க விரும்பினர்.  ஆனாலும் அவன் சம்மதிக்கவில்லை. அந்த முன்பு காதலித்த அவலட்சணமான தோற்றமாய் மாறிப்போன பெண்ணையே ஏற்றுக்கொண்டு மனைவியாக்கிக்கொண்டான். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே தேவன்  நமது வாழ்க்கையில் செய்யும் சில செயல்கள் நமக்கு அழகாகத் தெரியாமலிருக்கலாம்.  நாம் விரும்பத்தக்க செயல்களை நமது வாழ்வில் அவர் நிறைவேற்றாமலிருக்கலாம், ஆனாலும் நாம் அவரை  அசட்டைப்பண்ணாமலும் புறக்கணிக்காமலும் வாழ்வோம்.  அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொள்ளாமல் இருப்போம். 

காரணம் அந்த அவலட்சணமான, மனிதர்களால் புறக்கணிக்கப்பட்ட அவரது முகம்தான் மகிமையான ஒளியை உலகிற்குக் கொண்டுவந்தது. ஆனால் அவிசுவாசிகளுக்கு அந்த ஒளியின் மகிமை தெரியாது. இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் அந்த ஒளி மனிதர்களின் மனதில் ஒளிராதபடி மனத்தினைக் குருடாக்கினான் என்று வேதம் கூறுகின்றது.   "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2 கொரிந்தியர் 4: 4)

அவரிடம் ஆசீர்வாதங்களை மட்டுமே எதிர்பார்ப்பதுதான் அவரது அழகை மட்டும் பார்ப்பதைக் குறிக்கின்றது. நமக்காகவே தனது அழகையும் செளந்தரியத்தையும் அவர் இழந்ததையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். அவருக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழ்வதே அவரை அசட்டைபண்ணுவதைக் குறிக்கிறது;  பாவத்தில் தொடர்ந்து வாழ்வதே நம்முடைய முகங்களை அவரைவிட்டு மறைத்துக்கொள்வதைக் குறிக்கிறது. அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொள்ளாமலும் அசட்டைபண்ணாமலும் இருப்போம்.  அதனையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,535
'ஆதவன்' 💚ஏப்ரல் 20, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை 

"மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லை யென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." (1 கொரிந்தியர் 15: 13, 14)

உலக நீதிமான்கள், பரிசுத்தர்கள், இவர்களிலிருந்து கிறிஸ்துவை வேறுபடுத்திக்காட்டுவது அவரது உயிர்ப்பு. அவர் உயிர்த்தெழவில்லையானால்  அவரை நாம் கடவுள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இந்த உலகத்தில் பல நல்ல போதனைகளைக்கொடுத்த மனிதர்களைப்போல அவரும் நீதிபோதனை செய்து முடிந்துபோன மனிதராகவே இருந்திருப்பார். இதனையே அப்போஸ்தலரான் பவுல், கிறிஸ்து எழுந்திருக்கவில்லை யென்றால், எங்கள் பிரசங்கமும் வீண்,   உங்கள் விசுவாசமும் வீண் என்று கூறுகின்றார். 

ஆனால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வெறும் நம்பிக்கையாக நாம் கூறிக்கொள்வது  மட்டுமல்ல, நம்மில் அது உருவாக்கும் மாற்றத்தின்மூலம் உறுதிப்படுகின்றது. அதுவே மீட்பு அனுபவம். கிறிஸ்து இரத்தம் சிந்தி உருவாக்கிய மீட்பு அனுபவத்தை நாம் பெறும்போது நாம் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள் வருகின்றோம்; கிறிஸ்து அனுபவத்தைப் பெறுகின்றோம். ஆம், கிறிஸ்துவின் உயிர்ப்பு வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நமது ஆத்துமாவில் அது ஏற்படுத்தும் மாற்றம். அதன்மூலமே  அவரது உயிர்த்தெழுதல் உறுதிப்படுகின்றது.  

கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்குக் கூறும் உண்மை, இந்த உலக வாழ்க்கையின் பின்னர் முடிவில்லா நித்திய வாழ்வு நமக்கு உள்ளது. கிறிஸ்து உயிர்த்ததுபோல நாமும் உயிர்த்து அதனைப் பெற்றுக்கொள்வோம் என்பதாகும்.  "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." (1 கொரிந்தியர் 15: 16, 17) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

மேலும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்குக் கூறும் உண்மை, அவர் உயிர்த்தெழுந்து பிதாவையோடு இருப்பதுபோல அவரை விசுவாசிக்கும் நாமும் உயிர்த்தெழுந்து அவரைப்போல பிதாவோடு இணைந்திருப்போம் என்பதே. உலகத் தோற்றத்துக்குமுன்னே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவோடு இருந்தார். இந்த உலகத்தில் அவதரித்து, பாடுபட்டு மரித்து உயிர்த்தெழுந்து மகிமையடைந்தார். அந்த மகிமையை அவரை விசுவாசிக்கும் நாமும் காணவேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். எனவேதான் அவர் உலகத்திலிருக்கும்போது பின்வருமாறு ஜெபித்தார்:- 

"பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17: 24) ஆம், அவரை விசுவாசிக்கும் நாமும் இந்த உலகத்தில் அவர் அனுபவித்ததுபோல பாடுகளை அனுபவித்து மகிமையடையவேண்டும். மறுவுலகில் அவரது மகிமையைக் காணவேண்டும்.  இதுவே அவரது சித்தம். 

இப்படி நாம் பிதாவோடு இணைந்திருக்க வேண்டுமானால் நாம் பாவத்தை மேற்கொள்ளவேண்டும்; அதாவது நாம் பாவத்துக்கு மரித்தவர்களாக வேண்டும்.  கிறிஸ்துவின் ஆவி  நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் பாவத்துக்கு மரித்தவர்களாக மாறமுடியும். அப்படி நாம் பாவத்துக்கு மரிக்கும்போது நமது ஆவியானது உயிருள்ளதாகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8: 10) என்று கூறுகின்றார். 

இப்படியாக கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணத்துக்குள் நாம் வாழும்போது பாவம், ஆத்தும மரணம் இவைகளிலிருந்து விடுதலை பெறுகின்றோம். "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள் நாம் பாவமில்லாமல் வாழ்ந்து அவர் மரணத்தை ஜெயித்ததுபோல நாமும் ஜெயிக்கவேண்டும் என்பதே தேவ சித்தம். 

"இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8: 11)  உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஆவியை உடையவனே ஆவிக்குரிய கிறிஸ்தவன். வெறுமனே உயிர்ப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்வதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை நம்மில் அவரது ஆவி செயல்பட அனுமதிக்கவேண்டும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9) 

கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்பட்டு கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணத்துக்குள் நுழைந்திட வேண்டுவோம். அப்போதுதான் நாம் பாவத்தை வென்று அவரோடுகூட நித்திய ஜீவனைப் பெற்று மகிழமுடியும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,536
'ஆதவன்' 💚ஏப்ரல் 21, 2025. 💚திங்கள்கிழமை 

"லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17: 32)

லோத்தின் மனைவிக்கு நிகழ்ந்த பரிதாபகரமான நிலைமை நமக்கும்  வந்துவிடக்கூடாது என்று இன்றைய தியான வசனத்தில் நம்மை எச்சரிக்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்துப் பேசும்போது இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறுகின்றார்.  இயேசு கிறிஸ்து ஏன் லோத்துவின் மனைவியை நினைத்துகொள்ளச் சொல்கின்றார்?  பாவத்தினால் தேவனது கோபத்துக்கு உள்ளான சோதோமை தேவன் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழித்தபோது லோத்துவையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்ற தேவன் விரும்பியதால்  அவனைக்  குடும்பத்தோடு  அங்கிருந்து வெளியேறச் செய்தார். அப்போது தேவன் கூறிய ஒரே நிபந்தனை, "பின்னிட்டுப் பாராதே" என்பதுதான். 

ஆனால்  தனது வீடு, நிலபுலன்கள், கால்நடைகள் அனைத்தையும் விட்டுவிட்டுச் செல்லும்போது தேவன் அவற்றையெல்லாம் அழிப்பதை லோத்துவின் மனைவியால் சகிக்கமுடியவில்லை. அவள் தேவனது கட்டளையை மீறி அவற்றைத் திரும்பிப்பார்த்தாள். இதனால் தேவ கோபம் அவள்மேல் வந்தது. இதனை, "அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்." ( ஆதியாகமம் 19: 26) என்று நாம் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, தேவன் சோதோமை அழிப்பதற்கு முன்புவரை அங்கு வாழ்ந்த மக்கள் எதைக்குறித்தும் கவலையின்றி வாழ்ந்தனர். ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். ஆனால் திடீரென்று அவர்கள்மேல் அழிவு வந்தது. தனது இரண்டாம் வருகையின்போதும் இதுபோலவே நடக்கும் என்கிறார் இயேசு கிறிஸ்து. "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17: 28, 29) மனுஷகுமாரனின் வருகையின்போதும் இப்படியே நடக்கும்  என்கிறார் இயேசு கிறிஸ்து.

லோத்தின் மனைவி திரும்பிப்பார்த்தது அழிந்துபோகும் தனது உடைமைகளில் எதனையாவது தன்னால் மீட்கமுடியுமா? என்று எண்ணியதால்தான்.  எனவே, "பின்னிட்டுப் பாராதே" எனும் தேவனது கட்டளையை மீறித்  திரும்பிப்பார்த்தாள். இதனையே உவமையாக தொடர்ந்து இயேசு கிறிஸ்து,  "தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்." ( லுூக்கா 17: 33)  என்றார்.  

தொடர்ந்து, இதே பகுதியில் நாம் வாசிக்கும்போது, தனது வருகையினைக் குறித்து இயேசு கிறிஸ்து, லோத்துவின் மனைவியைப் போல உங்கள் செல்வத்தின்மேல் மட்டும் ஆர்வம்கொண்டு அவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாதிருங்கள் என்கின்றார். இதனையே அவர், "அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்." ( லுூக்கா 17: 31) என்கின்றார். அதாவது, கிறிஸ்துவின்மேலுள்ள அதே அன்பு நிலைமையில் குறைந்திடாமல் இருங்கள். என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழ்ந்தாலும் அதனை நாம் எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துக் கூறவிரும்புவது. அவர்மேலுள்ள அன்பில் குறைவுபடாமல் நாம் வாழவேண்டும் என்கின்றார். அவர் வருவது திருடன் வருவதைப்போன்ற  எதிர்பாராத நிகழ்வாக இருக்கும் என்று ஏற்கெனவே நமக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வருகைக்கு நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். உலகப் பொருட்களல்ல, தேவனே போதும் என அவரையே நாம் முன்னிட்டுப்பார்த்து ஆவிக்குரிய பயணத்தைத்  தொடரவேண்டும். 

தேவனது வார்த்தையினை மீறி பொருளாசையால் பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூணாக மாறிப்போன "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." என்று நம்மை எச்சரிக்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

வேதாகமத் தியானம் - எண்:- 1,537
'ஆதவன்' 💚ஏப்ரல் 22, 2025. 💚செவ்வாய்க்கிழமை 

"நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான். துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்." ( எசேக்கியேல் 18: 26, 27)

நாம் கொஞ்ச காலத்துக்கு மட்டுமல்ல,  மாறாக,  நமது வாழ்வின் இறுதிவரையில் முற்றுமுடிய நீதியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.   சில காலங்கள் மட்டுமே நீதியுள்ளவர்களாக, நல்லவர்களாக வாழ்ந்துவிட்டுப்  பின்னர் அநீதி செய்வோமானால் நாம் ஆத்தும மரணத்தைச் சந்திப்போம் என்று நம்மை எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நீதிக்கு உட்பட்டவர்களாக வாழ்ந்து பின்னர் நாம் பின்மாறிப்போவோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாக மாறிப்போவோம். இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்." (2 பேதுரு 2: 20, 21) என்கின்றார். 

இதற்கு மாறாக, துன்மார்க்கத்தில் வாழும் மனிதன் தனது துன்மார்க்கத்திலிருந்து மனம் மாறி நீதியுள்ள வாழ்கைக்குத் திரும்பினால் அவன் பிழைப்பான். ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுக்கு விலையேறப்பெற்றது. எனவே தேவன் ஒருவரும் கெட்டுபோய்விடக்கூடாது என்று விரும்புகின்றார். 

சிலர் செய்யும் கொடிய பாவங்களை நாம் பத்திரிகைகளில் வாசிக்கும்போது, ஏன் தேவன் இவர்களை அழித்து ஒழிக்காமல் இருக்கிறார் என எண்ணத்தோன்றும். ஆம் இத்தகைய துன்மார்க்கர்களும்  மனம்திரும்பவேண்டுமென்று தேவன் தனது வருகையையே தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறார். "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3: 9) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டவர்கள் என்றால் அந்த நிலையிலேயே தொடர்ந்து உண்மையாக வாழ்வோம். அவரை அறிந்தபின் அவரைவிட்டு விலகுவது யூதாசைப்போன்ற வாழ்க்கை. அதுபோல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு இவைகளை உதாசீனப்படுத்தி இதுவரை வாழ்ந்திருப்போமானால் அவரிடம் மன்னிப்பை வேண்டி மனம்திரும்புவோம். அவர் மன்னிக்கத் தயைமிகுந்தவராகவே இருக்கின்றார். எனவேதான் அவர் கூறுகின்றார், "துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்." என்று.

நமது வாழ்க்கையினை சீர்தூக்கிப்பார்ப்போம். நீதியுள்ள வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போமானால்  துன்பங்களைப் பாராமல் தொடர்ந்து நீதியுள்ள வாழ்க்கை வாழ நம்மையே ஒப்புக்கொடுப்போம். துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போமானால் மனம்திரும்பி கர்த்தரிடம் சேருவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,538
'ஆதவன்' 💚ஏப்ரல் 23, 2025. 💚புதன்கிழமை 

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." ( யோவான் 12: 24)

உலக அதிசயங்களில் ஒன்றாக எகிப்தில் உள்ள பிரமிடுகள் கருதப்படுகின்றன.  பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மரணமடைந்த மன்னர்கள், பெரிய பதவிகளில் இருந்தவர்களை அடக்கம் செய்த கல்லறைகளே இந்தப் பிரமிடுகள். இங்கு அடக்கம்செய்யப்பட்ட மனிதர்கள் உயிர்பெற்று எழுவார்கள் என எகிப்தியர்கள் நம்பியதால் அவர்கள் உயிர்பெற்று எழும்போது உண்ணுவதற்கான உணவுப்பொருட்களை ஜாடிகளில் அடைத்து இந்தப்  பிரமிடுகளில் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். 

இந்தப் பிரமிடுகளை ஆராய்ச்சி செய்ய விரும்பிய  ஆராய்ச்சியாளர்கள் இவற்றில் சில பிரமிடுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜாடிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோதுமை மணிகளைக் கண்டுபிடித்தனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்தக் கோதுமை விதைகள் கெட்டுப்போகாமல் இருந்தன. அவற்றை மண்ணில் விதைத்தபோது அவை முளைத்து எழுந்தன. ஆம் அன்பானவர்களே, மண்ணில் விழுந்து சாகாத கோதுமைமணி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தனித்தே இருக்கும். அதனால் எந்த பலனும் இல்லை.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமையினைப்போல  கோதுமைமணியான அவர்  மண்ணில் விழுந்து தன்னையே அழித்துக்கொண்டதால் இன்று அவரை விசுவாசித்து நித்திய ஜீவனை அடைந்தவர்களும், இப்போது இந்த உலகத்தில் கிறிஸ்து அனுபவத்துடன் வாழ்பவர்களும் கோடிக்கணக்கானபேர்களாக உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். 

இன்று நம்மையும் அவர் இந்த அனுபவத்துக்கே அழைக்கின்றார். அதாவது அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட கோதுமை மணியான நம்மில் சுயம் சாகவேண்டும் என்று கூறுகின்றார். நாம் வெறுமனே தன்னலத்தோடு  வாழ்ந்துகொண்டிருப்போமேயானால் நாம் எந்தப் பயனும் அற்றவர்களாகவே இருப்போம். ஆனால் நாம் கிறிஸ்துவுக்காக சுயத்தை இழப்போமென்றால் மிகுந்த பலனைக் கொடுப்பவர்களாக நாம் மாற முடியும். 

கிறிஸ்தவ உலகில் இப்படித் தங்களைக் கோதுமைமணிகளாக நிலத்தில் மடியச்செய்த பல பரிசுத்தவான்கள் உண்டு.  அப்போஸ்தலரான பவுல் ஒரு கோதுமை மணி. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கோதுமை மணிகள்தான். இன்னும் பெயர் தெரியாத பல விசுவாசிகள் இப்படித் தங்களை கோதுமைமணிகளாக அழித்துக்கொண்டுள்ளனர்.  இதனால்தான் கிறிஸ்தவம் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னரும் உலகினில் தழைத்துக்கொண்டிருக்கின்றது. முதல் கோதுமை மணியான நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விளைச்சலின் பலன்கள்தான் இது. 

ஆம் அன்பானவர்களே, நம்மால் பரிசுத்தவான்களைப்போல முற்றிலும் நம்மை இழக்க முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த அளவு சுயத்தை வெறுத்து கிறிஸ்துவுக்காக வாழ முயலுவோம். சுயத்தை வெறுப்பது என்பது உயிரை விடுவது என்று பொருளல்ல; மாறாக, உலக ஆசை இச்சைகளை முடிந்த அளவு விடுவது. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவரும் ஒரு கோதுமை மணிதான்.  நாம் எகிப்திய பிரமிடுகளுக்குள்  அப்படியே இருந்த கோதுமை மணிகளாக இருந்துவிடவேண்டுமா அல்லது நிலத்தில் மடிந்து முப்பதாக, அறுபதாக, நூறாகப் பலன்தரவேண்டுமா என்பதனை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். 

நாம் பயனுள்ள கோதுமைமணிகளாக வாழ முயலும்போது தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் பலம் நமக்குக் கிடைக்கும்.  "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12: 9) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

வேதாகமத் தியானம் - எண்:- 1,539
'ஆதவன்' 💚ஏப்ரல் 24, 2025. 💚வியாழக்கிழமை 

"உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17: 24, 25)

அத்தேனே நகரில் மார்ஸ் மேடையாருகில் நின்று அப்போஸ்தலரான பவுல் பிரசங்கம் செய்தபோது இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். 

இன்று சிலர் பவுல் அப்போஸ்தலர் கூறிய இந்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு நாம் தனியாக இருந்து தேவனை வழிபட்டால் போதும், ஆலயங்களுக்குச் செல்லத் தேவையில்லை என்று கூறிக்கொள்கின்றனர். ஒரு சகோதரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இப்படி அவர் என்னிடம் கூறியதையும் கேட்டேன். ஆனால் இந்த வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் ஆலயங்களுக்குச் செல்லவேண்டாம் என்று கூறவில்லை. மாறாக, ஆலயங்களுக்குச் சென்று வழிபடுமுன் நம் உள்ளமாகிய ஆலயம் தூய்மையாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.

ஆலயங்களில் மட்டுமே தேவன் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு ஆலயங்களிலும் ஆலய வளாகங்களிலும் வரும்போது மட்டும்  பக்தியோடும் பணிவோடும் இருந்துகொண்டு வெளியே சென்றபின் தாறுமாறாக வாழ்வது தவறு என்கின்றார். இதனையே அவர், "தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை" என்கின்றார். ஆலய கட்டடத்துக்குள் அவர் இல்லை, மாறாக அவர் மனிதர்களுக்குள்தான் இருக்கின்றார். நம் உள்ளமே பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்கின்றது எனவே அதனை முதலில் பரிசுத்தமாக நாம் காக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார். 

இதனையே அவர், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." (1 கொரிந்தியர் 3: 16,17) என்று கூறுகின்றார். அதாவது, கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களைவிட நமது உடலாகிய ஆலயத்தைப் பரிசுத்தமாக பாதுகாப்பது அவசியம். 

மேலும் இன்றைய தியான வசனத்தில் நாம், "எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை." என்றும் வாசிக்கின்றோம். அதாவது வெறும் காணிக்கைகளைக் கொடுப்பதால் மட்டும் தேவன் நம்மேல் அன்புள்ளவராக இருக்கமாட்டார். ஏனெனில் அவரே அனைத்தையும் படைத்தவர். நாம் அவருக்குக் கொடுத்துதான் அவர் நிறைவடையவேண்டும் என்று அவசியமில்லை. 

நாம் அவருக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டியது பாவமில்லாத பரிசுத்த சரீரத்தைத்தான். "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்" ( ரோமர் 12: 1) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆம் அன்பானவர்களே, ஆலயங்களுக்கு என ஓடி ஓடி உழைப்பதையல்ல, மாறாக நமது உடலாகிய ஆலயத்தை பரிசுத்தமான காப்பதையே தேவன் விரும்புகின்றார். அதுபோல பல ஆயிரங்களை காணிக்கையாகக் கொடுப்பதையல்ல, நமது உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாக அவருக்கு ஒப்புக்கொடுப்பதையே தேவன் பெரிதும் விரும்புகின்றார். 

மனிதர்களது மனம் அனைத்தையும் பணத்தின் அடிப்படையிலேயே கணிக்கிடும் குறுகிய மனம். ஆனால் தேவன் அப்படிப்பட்டவர் அல்ல எனும் உண்மை நமக்குப் புரியுமானால் மட்டுமே நம்மால் இத்தகைய குறுகிய எண்ணங்களிலிருந்து விடுபட்டு தேவனுக்கேற்ற மேலான ஆவிக்குரிய காரியங்களில் கவனம் செலுத்த முடியும். நமது குறுகிய மனநிலை மாறி, தேவஞானத்தையும் புத்தியையும் தேவன் நமக்கு அருளும்படி மன்றாடுவோம். அப்போதுதான்  தேவன் மேலான வழிகளில்  நம்மை நடத்துவார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,540
'ஆதவன்' 💚ஏப்ரல் 25, 2025. 💚வெள்ளிக்கிழமை 

"கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 33)

இந்த உலகம் சாட்சிகளின் அடிப்படையிலேயே எதனையும் ஏற்றுக்கொள்கின்றது. நீதிமன்றங்களில்கூட சாட்சிகளின் அடிப்படையிலேயே தீர்ப்பிடப்படுகின்றது. கொலைக்குற்றம், களவு, கற்பழிப்பு என்று எதற்கும் நிரூபிக்கும் சாட்சி தேவையாக இருக்கின்றது. அதுபோலவே கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கும் சாட்சி தேவையாக இருக்கின்றது. ஏனெனில் கிறிஸ்து உயிர்தெழுந்தாலும் மரணத்துக்கு முன்பு எல்லோரும் அவரைக் காணும் விதமாக உலகினில் நடமாடியதுபோல அவர் நடமாடவில்லை. 

இதனால் அவரைக் கொலைசெய்த யூதர்கள் அவர் உயிர்தெழுந்ததை நம்பவில்லை. ஆனால் அப்போஸ்தலர்களால் நடைபெற்ற வல்ல செயல்களை அவர்களால் மறுக்கமுடியவில்லை. பேதுருவும் யோவானும் ஒரு முடவனைக் குணமாக்கியபோது யூதர்களால் அவர்களை எதிர்த்துப் பேச முடியவில்லை. காரணம் உயிருள்ள சாட்சியாக அந்த முடவன் அங்கே நின்றுகொண்டிருந்தான். "சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது."
( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 14) என்று வாசிக்கின்றோம். 

அப்போஸ்தலரான பேதுருவும் இதர சீடர்களும் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் பயணித்திருக்கின்றனர். அவரது வல்லமையினைக் கண்களால் கண்டு அனுபவித்திருக்கின்றனர்.  இதனால்தான் அவர்,  "நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." (2 பேதுரு 1: 16) என்று எழுதுகின்றார். ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து உயிர்த்தது; இன்றும் ஜீவனுள்ளவராக நம்மோடு வாழ்வது, இவை கட்டுக்கதையல்ல. மாறாக நிஜமான அனுபவம். 

அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் அனுபவம் நமக்கு இருக்குமானால் இது கட்டுக்கதையல்ல என 100% உறுதியுடன் நம்மாலும் கூறமுடியும். நம்மால் சீடர்கள் செய்ததுபோன்ற வல்ல செயல்களை செய்ய இயலாவிட்டாலும் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியும். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மற்றவர்களிலிருந்து மாறுபட்ட ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்ததால் அவர்களை மற்றவர்கள்  கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். ஆம் அவர்களது வாழ்க்கை வித்தியாசமான வாழ்க்கையாக இருந்தது. எனவே, "முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 11: 26)

கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; நாமோ நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் பலத்த சாட்சிகளாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. சாதாரண உலக மக்களைப்போல நாம் அவர்களுக்கெதிராக போராடவேண்டிய அவசியமில்லை. கிறிஸ்துவோடு நாம் இணைந்திருக்கும் நமது வாழ்வே அவர்களுக்கு எதிரான போராட்டம்தான். அதுவே நமக்கு வெற்றியைத்தரும்.  

அன்று இஸ்ரவேல் மக்களைப்பார்த்து மோசே கூறினார், "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." ( யாத்திராகமம் 14: 13, 14) என்று.  மோசே கூறியதுபோன்ற செயலைச் செய்ய தேவன் இன்றும் வல்லவராகவே இருக்கின்றார்.

இன்றைய தியான வசனத்தில், "அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது." என்று கூறப்பட்டுள்ளது. நமது சுய பலமல்ல, மாறாகத் தேவ கிருபையே நம்மைச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழத்  துணைபுரியும், அந்தத் தேவ கிருபைக்காக மன்றாடுவோம். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ்வோம்; நமது வாழ்க்கையால் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,541
'ஆதவன்' 💚ஏப்ரல் 26, 2025. 💚சனிக்கிழமை 

"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4: 15)

மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுவது எளிது ஆனால் நாம் உபதேசம் பண்ணியதுபோல வாழ்வதுதான் கடினம். நம்மில் பலரும் ஊருக்கு உபதேசம் செய்பவர்களாகவே வாழ்கின்றனர். இந்த உலகினில் கிறிஸ்துவைத்தவிர நல்ல கருத்துக்களைக் கூறியவர்கள் எவரும் முற்றிலும்  நல்லவர்களல்ல. பரிசுத்தவான்கள் என நாம் புகழும் அனைவருமே முன்னாள் பாவிகள்தான். கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததால் அவரது கிருபையால் பாவங்கள் மன்னிக்கப்பட்டுப் புனிதமடைந்தவர்கள். 

மனிதர்களுடைய பலவீனமே அவர்களைப்  பாவத்தில் விழச்  செய்கின்றது.  பாவச் சூழ்நிலைகளே நம்மைப் பாவத்தில் விழச் செய்கின்றது. ஏனெனில் நல்ல கருத்துக்களையும் போதனைகளையும் நாம் கேட்டு நல்லவர்களாக வாழ எண்ணினாலும் சமுதாயத்தில் நம்மைப் பாவத்தில் விழத்தள்ளுகின்ற பல காரணிகள் உள்ளன. இதிலிருந்து நாம் உணர்ந்துகொள்வது, பாவத்திலிருந்து விடுபட நமது சுய முயற்சியால் முடியாது என்பதுதான். 

இன்றைய நவீன காலத்தில் பாவமானது மனிதர்களது விரல்நுனியில் இருக்கின்றது. உதாரணமாக, செல்போன்கள் நல்ல காரியத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இன்று இளைஞர்கள் இளம் பெண்கள் மட்டுமல்ல வயதானவர்கள்கூட செல்போன்களை அவர்கள் முயன்றாலும் விடுபடமுடியாமல் பாவ காரியங்களுக்கு அதிகமாகப் பயன்படுத்துவத்தைப் பார்க்கின்றோம். ஆம்,  ஒருவிதத்தில் மனிதர்களுக்கு செல்போன்கள் பலமல்ல, பலவீனம். 

ஆனால் இன்றைய தேவ வசனம் சொல்கின்றது, "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." என்று. அதாவது நமது பாவ பலவீனம் அவருக்குத் தெரியும். நாம் பாவத்திலிருந்து விடுபட போராடுவோமானால் அவர் அதனைக்குறித்துப் பரிதபிக்கின்றார். நம்மை விடுவிக்க உதவிடுவார். 

இயேசு கிறிஸ்துவைக்குறித்து இன்றைய தியான வசனம், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் என்று கூறுகின்றது. அதாவது நாம் அனுபவிக்கும் பாவச் சூழ்நிலைகள், சோதனைகள் அனைத்தும் அவருக்கும் இருந்தன. நம்மைப்போலவே அவர் பாவச் சூழ்நிலைகளால் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவம் செய்யவில்லை. அதனால் பாவமில்லாத பிரதான ஆசாரியராய் இருக்கின்றார். 

"குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?" ( லுூக்கா 6: 39) என்றார் இயேசு கிறிஸ்து. அதுபோலவே, பாவத்தில் பிறந்து பாவத்தில் உழன்றுகொண்டிருக்கும் ஒரு பாவி இன்னொரு பாவியை மீட்க முடியாது. பாவமில்லாத ஒருவரே பாவத்திலிருந்து மக்களை மீட்கமுடியும். ஆம், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவே நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க முடியும். அவரோடு ஐக்கியத்தில் நாம் வாழ்வோமானால் நாமும் அதுபோல பாவச்  சூழ்நிலைகளை மேற்கொள்ள அவர் நமக்கு உதவிடுவார். 

இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியாக, "ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4: 16) என்கிறார் எபிரேய நிருப ஆசிரியர். கிறிஸ்துவிடம் நாம் நெருங்கிச்செல்லப்  பயப்படவேண்டாம். அதனையே இந்த வசனம், "தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, அப்போது இந்த வசனம் கூறுவதுபோல நாம் அவரது இரக்கத்தையும் சகாயஞ்செய்யும் கிருபையினையும் அடைவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,542
'ஆதவன்' 💚ஏப்ரல் 27, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை 

"நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?"  ஏசாயா 48: 14)

தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இஸ்ரவேலர் பிற தெய்வங்களை வழிபட்டபோது தேவன் அவர்களை பாபிலோனிய ராஜாவுக்கு அடிமைகளாக்கினார். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக இருந்தனர். ஆனால், அந்த அடிமைகளான மக்களுக்குள்ளேயும் கர்த்தருக்கு உண்மையாக வாழ்ந்தவர்கள் பலர்  இருந்தனர். இன்றைய தியான வசனம்  கூறுகின்றது, "கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்று. ஆம், தானியேலும் அவரது நண்பர்களும் இதற்கு உதாரணம்.

அன்பானவர்களே, நாம் கர்த்தருக்கேற்றபடி உண்மையான வாழ்வு  வாழ்ந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை   கர்த்தருக்குச் சித்தமில்லாத இடங்களில் வாழும்படியான நிர்ப்பந்தமான சூழ்நிலையினை சிலவேளைகளில் நமது வாழ்வில் கொண்டுவந்துவிடும். சில உலக வேலைகள் கர்த்தருகேற்றபடி வாழ்வதற்கு மிகவும் இக்கட்டானவை. அத்தகைய வேலைகளில் இருந்துகொண்டு  நாம் உத்தமமாக வாழ்வது கடினம். உதாரணமாக, வழக்கறிஞர் தொழில், காவல்துறையில் வேலைபார்ப்பது போன்றவை இரட்சிப்பு அனுபவம் பெற்ற மக்களுக்கு கடினமான காரியம். அதாவது அவர்களுக்கு இந்தத் தொழில்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்வதைப் போன்று சிரமமான வேலைகள்.  

ஆனால் இன்றைய தியான வசனம், கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான் என்று கூறுகின்றது. அதாவது, நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக இருந்தால், இத்தகைய இக்கட்டான தொழில்களில் இருந்தாலும் நாம் கர்த்தருக்குச் சித்தமானத்தைச் செய்யமுடியும்; அவர் அதற்கான பலத்தை அவர் நமக்குத் தருவார்.

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது,  அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்று. கல்தேயர்கள் என்பது தெற்குத் மெசொப்பொத்தேமியாவில் முக்கிய இடம் பெற்ற ஒரு மக்கள்குழுவாகும்.  ஆபிரகாமின் பூர்வீகம் கல்த்தேய தேசம்தான். கல்தேயர்கள்  நியோ-பாபிலோனிய பேரரசின் ஆட்சியாளர்களாக உயர்ந்தவர்கள். வேதாகமத்தில் பாபிலோன், கல்தேயர் எனும் வார்த்தைகள் பொதுவாக பாபிலோனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்கலாம். இன்றைய தியான வசனம் கூறுகின்றது, கர்த்தருக்குச் சித்தமானவனின் கரம் கல்த்தேயர்கள்மேல் இருக்கும் என்று. 

அதாவது, நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக வாழும்போது நாம்  இருக்கும் சூழ்நிலைகள்  நமது ஆவிக்குரிய வாழ்கையினைப் பாதிக்காது. பாபிலோன் போன்ற அந்தச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தருக்குப் பிரியமானத்தைச் செய்து வெற்றி வாழ்க்கை வாழமுடியும். மட்டுமல்ல, அத்தகைய அடிமைச் சூழ்நிலையினை நாம் வெற்றிகொள்ளவும் முடியும். 

ஆம் அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக, கர்த்தருக்கு முன்னுரிமைகொடுத்து வாழ முயலவேண்டும். அப்படி வாழும்போது பாபிலோன் போன்ற எந்த முரண்பாடான, அடிமைச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தருக்குச் சித்தமானத்தைச் செய்வது மட்டுமல்ல, எதிர்மறைச் சூழ்நிலைகளையும் வெற்றிகொண்டவர்களாகவும்  வாழமுடியும். கிறிஸ்துவின் நறுமணத்தை நாம் அந்த மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வாழமுடியும். 

இதனால்தான் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." (2 கொரிந்தியர் 2: 14) என்று நமக்குத் தனது அனுபவம் மூலம் திடன்தருகின்றார் அப்போஸ்தலரான பவுல். கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ முயலுவோம். சூழ்நிலைகளை வெற்றியுடன் மேற்கொள்ளும் பலத்தை அவர் நமக்குத் தருவார்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,543
'ஆதவன்' 💚ஏப்ரல் 28, 2025. 💚திங்கள்கிழமை 

"கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?" ( ரோமர் 11: 34, 35)

இற்றைய தியான வசனம் நம்மிடம் மூன்று கேள்விகளைக் கேட்கின்றது.  இந்தக் கேள்விகளுக்கான பதில் "யாருமில்லை" என்பதுதான். அதாவது, கர்த்தருடைய சிந்தனையை அறிந்தவன் ஒருவனுமில்லை, அவருக்கு ஆலோசனைக் கூறத் தகுதியுள்ளவன் ஒருவனுமில்லை, அவருக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து அவரிடமிருந்து பதிலையோ நன்மையையோ பெற்றுக்கொள்ளலாம் என எண்ணி பெற்றுக்கொண்டவனும் இல்லை என்பதுதான். 

இன்று மனிதர்கள் பலரும் ஆலயங்களில் தேவனை வழிபாடு செய்வது பெரும்பாலும் தங்கள் சுய ஆசைகளை நிறைவேற்றிடவே. அதாவது, தங்கள் வாழக்கை மாற்றத்தை விரும்பாமல் தங்களுக்குள்ள பிரச்சனைகளில் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளவேண்டும் என ஜெபிப்பது,  அல்லது, "ஆண்டவரே, எனக்கு இன்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றது, நீர் அவற்றை எனக்குச் சாதகமாக இன்னபடி அதனை முடித்துத் தரவேண்டும்" என கடவுளுக்கே ஆலோசனை கூறுவது,  இவை தவிர, "நீர் எனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடுதலைக் கொடுத்து எனக்குச் சாதகமான காரியத்தைச் செய்தால் நான் உமக்கு இப்படிச் செய்வேன் என பொருத்தனை செய்வது.  

ஆம் அன்பானவர்களே, தங்களது வாழ்க்கை மாற்றத்தையோ, பரிசுத்தத்தையோ விரும்பாமல் வெறும் வெற்று ஆராதனையும் விண்ணப்பங்களும்தான் மனிதர்கள் செய்வது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து கூறுகின்றார், "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1)

அதாவது, முதலில்  உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள்; உலக ஆசைகளை நிறைவேற்றுவதற்காக  ஆராதனை செய்யாமல் புத்தியுள்ள ஆராதனை செய்யுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ரோமர் பன்னிரெண்டாம் அதிகாரம்  தனிக் கருத்தைக் கூறவில்லை. மாறாக, முந்தைய அதிகாரத்தில் கூறப்படக் கருத்தின் தொடர்ச்சியையே அது.  எனவேதான் அதன்  முதல் வசனம், "அப்படியிருக்க" என ஆரம்பிக்கின்றது. எனவே, அதற்குமுன் கூறபட்டக் கருத்துக்களோடு சேர்த்துதான் நாம் பொருள்கொள்ளவேண்டும். 

மேலும் பவுல் தொடர்ந்து கூறுகின்றார், உலக மக்கள் இப்படி தேவையில்லாத வெற்று ஆராதனை செய்பவர்களாக இருக்கட்டும் நீங்கள் அவர்களைப்போல வேஷம் போடாமல் முதலில் உங்கள் மனமானது புதிதாக முயற்சியெடுங்கள் என்கின்றார். "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12: 2)
 
ஆம் அன்பானவர்களே, சாதாரண உலக மதங்களைப் பின்பற்றும் மனிதர்களைப்போல நாம் இருக்கலாகாது. கர்த்தரை வழிபடும் நாம் நம்மை மாற்றிக்கொல்லாமல் கர்த்தருடைய சிந்தையை அறிய முயல்வதோ நமது எண்ணப்படி எல்லாவற்றையும் அவர் நமக்கு முடித்துத் தரவேண்டும் என அவருக்கு ஆலோசனை கூறுவதோ  நமக்குச் சாதகமாக காரியத்தை அவர் முடித்துத்தர கையூட்டுபோல காணிக்கைகளை  பொருத்தனை செய்வதோ சரியான வழிகளல்ல, மாறாக முதலில் நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம்; மற்றவற்றை தேவனே பார்த்துக்கொள்வார். 

தன்னை பரிசுத்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுக்காமல் கர்த்தருடைய சிந்தனையை அறிந்தவன் ஒருவனுமில்லை, அவருக்கு ஆலோசனைக் கூறத் தகுதியுள்ளவனும் இல்லை, அவருக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து அவரிடமிருந்து பதிலையோ நன்மையையோ பெற்றுக்கொள்ளலாம் என எண்ணிப்  பெற்றுக்கொண்டவனும் இல்லை.

வேதாகமத் தியானம் - எண்:- 1,544
'ஆதவன்' 💚ஏப்ரல் 29, 2025. 💚செவ்வாய்க்கிழமை 

"குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது." ( யோவான் 6: 40)

நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வினை நாம் அடைந்திட ஒரேவழி தன்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வதுதான் என்று இன்றைய தியான வசனம் மூலம் இயேசு கிறிஸ்து நமக்கு அறிவுறுத்துகின்றார்.  மட்டுமல்ல, இப்படி அவர்மேல் நாம் விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டும் என்பதே பிதாவாகிய தேவனின் சித்தமாகவும் இருக்கின்றது என்கின்றார். இயேசு கிறிஸ்துவும் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது பிதாவின் சித்தம் செய்பவராகவே வாழ்ந்தார். தான் பிதாவிடமிருந்து இந்த உலகுக்கு வந்ததை அவர் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் யூதர்கள் அவரை நம்பவில்லை. 

மட்டுமல்ல, மனிதர்களது வாழ்வு இந்த உலக வாழ்க்கையுடன் முடிந்துபோகும் ஒன்றல்ல, மாறாக இந்த உலக வாழ்க்கையின் பின்னர் நமக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உள்ளது. அதனை நாம் எப்படி அடைவது  என்பதனையும் இயேசு கிறிஸ்து யூதர்களிடம் கூறினார். "ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 8: 51) என்றார் அவர். 

அதாவது நித்திய வாழ்வை நாம் அடையவேண்டுமானால் முதலில் நாம் அவரை விசுவாசிக்கவேண்டும்; அவரது வார்த்தைகளைக் கைக்கொள்ளவேண்டும். அவரால் நாம் பரிசுத்தமாக்கப்பட வேண்டும். ஆம்,  "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 4: 3) 

நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பது எப்படி  தேவனுடைய சித்தமாயிருக்கிறதோ அதுபோல அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், அவனைக் கடைசிநாளில் அவர் எழுப்புவதும், கிறிஸ்துவை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.  இதனால்தான் இயேசு கிறிஸ்து, "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 6: 47) என்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாக மாறவேண்டும்.  அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்ளாமல் நாம் பரிசுத்தமாக முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து,  "அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்." ( யோவான் 6: 29)

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்வது என்பது வெறுமனே அவரது வல்ல செயல்களை நம்புவதல்ல; மாறாக, அவரால் நம்மைத் தூய்மைப்படுத்த முடியும், பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிக்க முடியும் என்று விசுவாசிப்பது. பாவம் செய்து பாவ வாழ்க்கை வாழும்போது நாம் பாவத்துக்கு அடிமையாக இருக்கின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8: 34) என்றார். இந்தப் பாவவாழ்க்கையிலிருந்து அவரால் நம்மை விடுவிக்கமுடியும் என விசுவாசிப்பதுதான் மேலான விசுவாசம். 

ஆம் அவரால்தான் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க முடியும். "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8: 36) இப்படி நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக்  கண்டு, அவரிடத்தில் விசுவாசம்கொண்டு வாழ்வதும் அதனால் நித்தியஜீவனை நாம் அடைவதும், அவர்களை அவர் கடைசிநாளில் எழுப்புவதும், கிறிஸ்துவை அனுப்பிய பிதாவின் சித்தமாயிருக்கிறது என்று இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

எனவே கிறிஸ்துவை நாம் விசுவாசிப்பது உண்மையானால் நம்மை நமது பாவங்களிலிருந்து அவர் கழுவித் தூய்மையாக்க அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது நாம் பாவங்களிலிருந்து விடுதலையாவது மட்டுமல்ல, பரிசுத்தமாகி நித்திய ஜீவனுக்கும் தகுதியுள்ளவர்களாவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,545
'ஆதவன்' 💚ஏப்ரல் 30, 2025. 💚புதன்கிழமை 

"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 35)

மனிதர்களது பொதுவான குணம் தங்களுக்குள் இருக்கும் தங்கள் இனத்தவரின் திறமை, பெருமைகளை அடையாளம் காண முடியாமல் இருப்பதும் அவர்களை அற்பமாக எண்ணுவதும்தான். இப்படியே யூதர்கள் இயேசு கிறிஸ்துவையும் எண்ணினர். எனவேதான்  இயேசு கிறிஸ்து,  "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்." ( மத்தேயு 13: 57) அதாவது வீட்டாரும், உறவினர்களும், ஊராரும் தங்களுக்குள் வாழும் மக்களது திறமைகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.

நமது வாழ்விலும் மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணி ஒதுக்கும்போது, நம்மை ஏளனமாகப் பேசும்போது  நாம் பொறுமையோடு இருக்கவேண்டியது அவசியம். அப்போது ஏற்றவேளையில் தேவன் நம்மை உயர்த்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

முதல்நாளில் எகிப்தியன் ஒருவன் எபிரேயன் ஒருவனோடு தகராறு செய்தபோது மோசே அந்த எபிரேயனுக்கு ஆதரவாக நின்று எகிப்தியனைக் கொன்று மண்ணில் புதைத்துவிட்டான். மறுநாள் இரண்டு எபிரேயர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதைக் கண்ட மோசே அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன?" (யாத்திராகமம் 2:13) என்று கேட்டான். அப்போது  அநியாயம் செய்தவன் மோசேயைப்பார்த்து, "உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்" என்று கேட்கின்றான்.

அன்பானவர்களே, மோசேக்கு மட்டுமல்ல, அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் பலரும் இத்தகைய கேள்விக்கணைகளைச் சந்தித்திருப்பார்கள். இயேசு கிறிஸ்துவைப் பார்த்தும் அவரை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இப்படித்தான் கேட்டனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவை மீட்பராகப் பார்க்காமல் மரியாள், யோசேப்பு இவர்களின் மகனாக மட்டுமே பார்த்தனர். எனவேதான் அவர்கள் நித்திய ஜீவனைக்குறித்து அவர் பேசியதை உணர்நதுகொள்ளாமல், அவரைப்பார்த்து:- 

"நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்." ( யோவான் 8: 52, 53)

ஆனால் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ஆம், புறக்கணித்த மக்களுக்குத் தலைவனாக  தேவன் அதே மோசேயை ஏற்படுத்தினார். அதுபோல புறக்கணித்த மக்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மீட்பரானார். 

அன்பானவர்களே, தேவன் நமக்கு ஏதாவது வாக்குறுதி அளித்து நம்மை நடத்தும்போது அதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். நமது குடும்பத்தினர், ஊரார் நம்மைப் பைத்தியக்காரனென்று எண்ணலாம். அதற்காக நாம் மனம் தளர்ந்திடாமல் தேவன் நமக்குத் தந்த வாக்குறுதியை  உறுதியாக விசுவாசித்து தேவனையே பற்றிக்கொண்டு வாழவேண்டியது அவசியம். 

"இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6: 3) என்று இயேசுவை மக்கள் பேசியதைப்போல நம்மையும்  நமது தாய் தகப்பன் தொழிலையும் பெயரையும் சொல்லி அற்பமாகப் பேசலாம். ஆனால் ஏற்றவேளையில் தேவன் நம்மை உயர்த்தும்போது மற்றவர்கள் ஆச்சரியத்தால் திகைப்பார்கள். 

"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." (1 பேதுரு 5: 6)

🍒Meditation verse - 1 கொரிந்தியர் 1: 18 / 1 Corinthians 1:18

 வேதாகமத் தியானம் - எண்:- 1,546

'ஆதவன்' 💚மே 01, 2025. 💚வியாழக்கிழமை 


"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." (1 கொரிந்தியர் 1: 18)

"இன்றைய நவீன உலகினில் எல்லாமே புதியனவாக உள்ளன. சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்குமுன் இருந்த பல பொருட்கள் இன்று இல்லாமல்போய் அவைகளுக்குப்பதில் நவீனமான பொருட்கள் உலகில் பரவலாக வந்துவிட்டன.  அப்படியானால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த காரியங்களும் எழுதிவைத்த எழுத்துக்களும் எப்படி இந்தக் காலத்துக்குப் பொருந்தும்?" இது நண்பர் ஒருவரிடம் நான் கிறிஸ்துவைப்பற்றி - அவரது சிலுவையினால் உண்டான மீட்பினைப்பற்றி எடுத்துக்கூறியபோது அவர் என்னிடம் கேட்டக்  கேள்வி.  

ஆம்  அன்பானவர்களே, இன்று பலரும் இப்படித்தான் எண்ணுகின்றனர். கிறிஸ்துவின் போதனைகள் இன்று கடைபிடிக்க இயலாதவை என்கின்றனர் பலர். இந்த நவீன உலகத்துக்குப் பொருந்தாத பைத்தியக்காரனாக நீ இவைகளை நம்பிக்கொண்டும் இவைகளைப்பற்றி எழுதிக்கொண்டும் இருக்கின்றாயே என்கின்றனர். 

சரி, சிலுவையைப்பற்றிய உபதேசம் என்பதுதான் என்ன? அது கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டான பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, நித்திய ஜீவன் இவைகளே.  இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது" என்று. அதாவது தங்களது பாவ வாழ்க்கையினைக்குறித்துக் கவலையில்லாமல் அதிலேயே தொடர்ந்து வாழ்பவர்களுக்கு கிறிஸ்துவின் இத்தகைய போதனைகள் பைத்தியமானவையாகவே இருக்கும். 

மேலும் கிறிஸ்துவின் சிலுவையின் வழி பஞ்சு மெத்தையில் நடப்பது போன்றதல்ல; மாறாக, அது கடினமான பாதை. அவர் நடந்ததுபோல் அந்தப் பாதையில் நடப்பதுதான் சிலுவையின் வழி. எனவேதான் இயேசு கிறிஸ்து, "தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." ( மத்தேயு 16: 24) என்றார். ஆனால் இன்று பல ஆசீர்வாதப் போதகர்கள் இதற்கு மாறான தவறான போதனையால் இலகுவான வழியை மக்களுக்குக் காட்டி பெரிய கூட்டத்தைத் தங்களுக்குப்பின் திரட்டுகின்றனர்.  

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." ( மத்தேயு 7: 13, 14) என்றார் இயேசு கிறிஸ்து. இன்று சிலுவை காட்டும் இந்த இடுக்கமான வழியை நாம் எடுத்துக்கூறும்போது அது மற்றவர்களுக்குப் பைத்தியமாக இருக்கின்றது. 

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து சீடத்துவ வாழ்க்கை வாழவே நம்மை அழைக்கின்றார். "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." ( லுூக்கா 14: 27) என்றார் அவர். ஆம், சிலுவை எனும் இடுக்கமான வழிதான் இரட்சிப்பின் வழி. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று இயேசு கிறிஸ்துவே கூறிவிட்டார். அந்தச் சிலரில் நாமும் ஒருவராக இருப்போம். ஏனெனில் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." 

சிலுவையின் போதனை தரும் பெலன்தான் என்ன? அது பாவத்தை மேற்கொள்ளும் பெலன். அந்தப்  பெலத்தைப்  பெற்றுக்கொண்டால்தான் நாம் நித்தியஜீவனுக்குப் பங்குள்ளவர்கள் ஆகமுடியும். 

இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3: 16) என்று. தேவனுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நாம் சிலுவை பற்றிய உபதேசத்தையும் விசுவாசிப்பவர்களாக இருப்போம். அது நமக்குப் பெலனையும் தரும்.  இல்லையானால் நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல கெட்டுப்போன பைத்தியக்காரர்களாகவே இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                 


Scripture Meditation – No. 1,546
AATHAVAN
💚 May 01, 2025 💚 Thursday

“For the preaching of the cross is to them that perish foolishness; but unto us which are saved it is the power of God.” —1 Corinthians 1:18 (KJV)

In today’s modern world, everything is becoming new. Many things that existed sixty or seventy years ago are now obsolete and have been replaced by modern alternatives. So, when I once shared about Christ and the redemption through His cross, a friend asked me, “How can the events and writings from two thousand years ago still be relevant today?”

Yes, beloved, many people today think the same way. They claim that the teachings of Christ are outdated and impractical for the modern world. Some even go so far as to call you a fool for believing in and writing about such things in this advanced era.

So, what is the preaching of the cross? It is the message of forgiveness of sins through the blood of Christ, deliverance from sin, and the promise of eternal life. Today’s meditation verse says:

“The preaching of the cross is to them that perish foolishness”—that is, to those who continue to live in sin without any concern, the teachings of Christ will seem foolish.

Furthermore, the way of the cross is not a path of ease, like walking on cotton. Rather, it is a hard and narrow road. Walking the way of the cross means walking the same path that Christ walked. That’s why Jesus said:

“If any man will come after me, let him deny himself, and take up his cross, and follow me.” —Matthew 16:24 (KJV)

However, today, many prosperity preachers offer a contrary message—an easier path—to attract large crowds for themselves, deviating from the true message of the cross. Jesus also said:

“Enter ye in at the strait gate: for wide is the gate, and broad is the way, that leadeth to destruction, and many there be which go in thereat: Because strait is the gate, and narrow is the way, which leadeth unto life, and few there be that find it.” —Matthew 7:13–14 (KJV)

So when we proclaim this narrow path of the cross today, it appears foolish to others. Dearly beloved, Jesus Christ calls us to live the life of a disciple. He said:

“And whosoever doth not bear his cross, and come after me, cannot be my disciple.” —Luke 14:27 (KJV)

Yes, the way of the cross—the narrow path—is the way of salvation. Jesus Himself said that few find it. Let us be among those few. For as today’s meditation verse affirms:

“Unto us which are saved it is the power of God.”

What is the power that the message of the cross gives? It is the power to overcome sin. Only when we receive that power can we partake in eternal life.

Jesus said: “For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.” —John 3:16 (KJV)

When we believe in Jesus Christ, the only begotten Son of God, we also believe in the preaching of the cross. That message will strengthen us. Otherwise, as the Scripture warns, we will remain among the foolish who perish.

God’s Message by: Bro. M. Geo Prakash   

Tuesday, April 29, 2025

🍒Meditation verse - அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 35 / Acts 7:35

 வேதாகமத் தியானம் - எண்:- 1,545

'ஆதவன்' 💚ஏப்ரல் 30, 2025. 💚புதன்கிழமை 


"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7: 35)

மனிதர்களது பொதுவான குணம் தங்களுக்குள் இருக்கும் தங்கள் இனத்தவரின் திறமை, பெருமைகளை அடையாளம் காண முடியாமல் இருப்பதும் அவர்களை அற்பமாக எண்ணுவதும்தான். இப்படியே யூதர்கள் இயேசு கிறிஸ்துவையும் எண்ணினர். எனவேதான்  இயேசு கிறிஸ்து,  "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்." ( மத்தேயு 13: 57) அதாவது வீட்டாரும், உறவினர்களும், ஊராரும் தங்களுக்குள் வாழும் மக்களது திறமைகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.

நமது வாழ்விலும் மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணி ஒதுக்கும்போது, நம்மை ஏளனமாகப் பேசும்போது  நாம் பொறுமையோடு இருக்கவேண்டியது அவசியம். அப்போது ஏற்றவேளையில் தேவன் நம்மை உயர்த்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

முதல்நாளில் எகிப்தியன் ஒருவன் எபிரேயன் ஒருவனோடு தகராறு செய்தபோது மோசே அந்த எபிரேயனுக்கு ஆதரவாக நின்று எகிப்தியனைக் கொன்று மண்ணில் புதைத்துவிட்டான். மறுநாள் இரண்டு எபிரேயர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதைக் கண்ட மோசே அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன?" (யாத்திராகமம் 2:13) என்று கேட்டான். அப்போது  அநியாயம் செய்தவன் மோசேயைப்பார்த்து, "உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்" என்று கேட்கின்றான்.

அன்பானவர்களே, மோசேக்கு மட்டுமல்ல, அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் பலரும் இத்தகைய கேள்விக்கணைகளைச் சந்தித்திருப்பார்கள். இயேசு கிறிஸ்துவைப் பார்த்தும் அவரை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இப்படித்தான் கேட்டனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவை மீட்பராகப் பார்க்காமல் மரியாள், யோசேப்பு இவர்களின் மகனாக மட்டுமே பார்த்தனர். எனவேதான் அவர்கள் நித்திய ஜீவனைக்குறித்து அவர் பேசியதை உணர்நதுகொள்ளாமல், அவரைப்பார்த்து:- 

"நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்." ( யோவான் 8: 52, 53)

ஆனால் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ஆம், புறக்கணித்த மக்களுக்குத் தலைவனாக  தேவன் அதே மோசேயை ஏற்படுத்தினார். அதுபோல புறக்கணித்த மக்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மீட்பரானார். 

அன்பானவர்களே, தேவன் நமக்கு ஏதாவது வாக்குறுதி அளித்து நம்மை நடத்தும்போது அதனை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். நமது குடும்பத்தினர், ஊரார் நம்மைப் பைத்தியக்காரனென்று எண்ணலாம். அதற்காக நாம் மனம் தளர்ந்திடாமல் தேவன் நமக்குத் தந்த வாக்குறுதியை  உறுதியாக விசுவாசித்து தேவனையே பற்றிக்கொண்டு வாழவேண்டியது அவசியம். 

"இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6: 3) என்று இயேசுவை மக்கள் பேசியதைப்போல நம்மையும்  நமது தாய் தகப்பன் தொழிலையும் பெயரையும் சொல்லி அற்பமாகப் பேசலாம். ஆனால் ஏற்றவேளையில் தேவன் நம்மை உயர்த்தும்போது மற்றவர்கள் ஆச்சரியத்தால் திகைப்பார்கள். 

"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." (1 பேதுரு 5: 6)

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                     

Scripture Meditation – No: 1,545
"AATHAVAN"
💚 April 30, 2025 💚 Wednesday

"This Moses whom they refused, saying, Who made thee a ruler and a judge? the same did God send to be a ruler and a deliverer by the hand of the angel which appeared to him in the bush." – Acts 7:35 (KJV)

It is a common human trait to fail to recognize the talents and greatness within those of our own community, often underestimating or disregarding them. The Jews treated Jesus Christ in this very way. That is why Jesus said,

"A prophet is not without honour, save in his own country, and in his own house." – Matthew 13:57 (KJV)

This means that family, relatives, and townspeople are often slow to acknowledge the abilities of people who live among them.

When others look down on us, reject us, or speak mockingly of us, it is essential that we remain patient. When God chooses to lift us up at the appointed time, no one can hinder it.

On the first day, when an Egyptian was fighting with a Hebrew, Moses stood up for the Hebrew and killed the Egyptian, hiding him in the sand. The next day, when two Hebrews were quarrelling, Moses confronted the wrongdoer and said: "Wherefore smitest thou thy fellow?" – Exodus 2:13 (KJV)

The wrongdoer replied, "Who made thee a prince and a judge over us?"

Beloved, not only Moses but many who have stood against injustice have faced such accusatory questions. The Jews, too, did not accept Jesus Christ and questioned Him similarly. They saw Him not as the Savior but merely as the son of Mary and Joseph. That is why, when He spoke about eternal life, they said:

"Now we know that thou hast a devil. Abraham is dead, and the prophets; and thou sayest, If a man keep my saying, he shall never taste of death. Art thou greater than our father Abraham, which is dead? and the prophets are dead: whom makest thou thyself?" – John 8:52–53 (KJV)

Yet in today’s meditation verse, we read: "This Moses whom they refused… the same did God send to be a ruler and a deliverer..."

Yes, the very Moses whom the people had rejected, God appointed as their leader. In the same way, Jesus Christ—whom the people had despised—was made the Redeemer and Lord for them.

Dearly beloved, when God gives us a promise and begins to lead us, others may not accept it. Our own family members or villagers may call us mad. But we must not lose heart. We must stand firm in faith and cling to the promise that God has given us.

Just as people said about Jesus: "Is not this the carpenter, the son of Mary, the brother of James, and Joses, and of Juda, and Simon? and are not his sisters here with us? And they were offended at him." – Mark 6:3 (KJV) Likewise, people may speak lowly of us based on our family background or profession. But when God's appointed time comes, He will lift us up, and others will be astonished.

"Humble yourselves therefore under the mighty hand of God, that he may exalt you in due time." – 1 Peter 5:6 (KJV)

Message by: Bro. M. Geo Prakash